அம்மா எல்லா பொருட்களையும் எடுத்து வைத்து விட்டாள். அப்பாவும் தயாராகி விட்டார் நானும் மகிழ்ச்சியாக இருந்தேன்.

“ஏங்க ஆட்டோ வந்துட்டுங்க. டி.வி. ஃபேன் எல்லாம் ஆஃப் பண்ணிடுங்க. கதவ நல்லா பூட்டுங்க” அம்மா பரபரத்தாள்.

“இந்த சென்னையில எப்ப என்ன நடக்கும்னு தெரியல. பயமாயிருக்கு” கவலையோடு முணுமுணுத்தாள்.

அப்பா இரு சக்கர வாகனத்தைத் தாழ்வாரத்தில் நிறுத்தினார். வீட்டுக் கதவை நன்றாகப் பூட்டிக் கொண்டார். பக்கத்து வீட்டுக்காரரிடம் சொல்லிவிட்டு ஆட்டோவை நோக்கி வந்தார்.

நான் ஏற்கனவே ஆட்டோவில் ஏறிவிட்டேன். ஆட்டோக்காரர் வழக்கமாக என்னை பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் செல்பவர் தான். அவர் என்னிடம் “காந்திராமா இன்னைக்கு குஷியாயிருக்க”

“ஆமா அங்கிள். எல்லா எக்சாமும் முடிஞ்சிருச்சில. ஐம்பது நாள் லீவு. ஜூன் மூணாந்தேதிதான் ஸ்கூல். அடுத்த வருசம் நான் தேர்டு ஸ்டாண்டர்டு போறேன்.

“இப்ப எந்த ஊருக்கு போற?”

“எங்க அய்யா ஊருக்கு டிரெய்ன்ல போறோம். மதுரைக்குப் பக்கத்துல இருக்கு.

“பிறகு எதுக்கு நோட்டும் புத்தகமும் கொண்டு போற?”

“இது டிராயிங் நோட்டு. அய்யா ஊர்ல போய் டிராயிங் வரைவேன். இந்தா பாருங்க அங்கிள். லாரி, ஏரோபிளேன், ஸ்கூட்டர் பொம்ம. அங்க போய் விளையாடுவேன்”. சந்தோசத்தில் பேசினேன்.

அப்பாவும் அம்மாவும் ஏறிக் கொள்ள ஆட்டோ புகைவண்டி நிலையத்தை நோக்கி விரைந்தது.

“சார் உங்க பையன் பேர் நல்லாயிருக்கு சார்”

“எனக்கு மகாத்மா காந்தி பிடிக்கும். ராமர் எங்க குலதெய்வம். அதனால ரெண்டையும் சேர்த்து காந்திராமன்னு வச்சோம்” அப்பா ஆட்டோக்காரருக்கு பதிலளித்தார் பெருமையாக.

நான் குறுக்கிட்டேன்:

“அம்மா, அய்யா ஊரில போயி அபாகஸ், ஹிந்தி, டான்ஸ் கிளாஸ் எல்லாம் இருக்கா துல்லம்மா”

“அந்த ஊரில அதெல்லாம் கிடையாது.”

“அப்பாட நான் தப்பிச்சேன். இனிமே எனக்கு அம்பது நாளும் ஜாலிதான்.”

“திரும்பி மெட்ராஸ் வந்த பிறகு இந்த லீவுல அபாகஸ், ஹிந்தி கிளாஸ்ல சேர்க்கக் கூடாது. சரின்னு சொல்லுப்பா”

“சரிடா”

எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியா யிருந்தது. மனப் பறவை ரெக்கை கட்டிப் பறந்தது. சந்தோசத்தில் துள்ளினேன். கிராமத்திற்கு வந்து சேர்ந்தோம். அய்யா என்னை நல்ல விதமாகக் கவனித்து வந்தார். கதைகள் பல கூறினார். நானும் முதலாவது படிக்கும் சித்தப்பா பொண்ணு தீப்தியும் உற்சாகமாகக் கதை கேட்டோம்.

 அய்யா வீட்டில் பசுக்கள், கோழிகள், நாய், பூனை எல்லாம் இருந்தன. அவைகளைத் தன்மை யாகக் வளர்த்து வந்தார் அய்யா.

“தீப்தி, இங்கே பாரேன். டாமிக்கு என்ன அடையாளம் தெரிஞ்சிரிச்சு. என்னப் பாத்து வாலாட்டுது பாரேன்.”

“ஆமா காந்தியண்ணா . இங்கே நாயும் பூனையும் கூட ஓண்ணா விளையாடுது.”

“தீப்தி இந்த பூனை ஏங் கால உரசுது பாரேன். மடியில வந்து உட்காருது. எனக்கு இத தூக்கி விளையாட ஆசை”

“வாங்கண்ணா, கோழிக்கு அரிசி போடு. நல்லா சாப்பிடும். இங்க பாரேன். இந்த கோழி முட்ட போட்டிருக்கு” நானும் தங்கையும் விளையாடினோம். நான் வரைந்த ஓவியங்களை அவளிடம் காண்பித்தேன். அவள் ஆச்சரியத்தில் வியந்து ரசித்தாள்.

பின்னொரு நாள் வயலுக்குச் சென்றோம். அய்யா எங்களுக்கு நீச்சல் பழகிக் கொடுத்தார். மிதிவண்டி டியூப்பை மூன்றாக மடித்து முதுகில் கட்டி விட்டார். நானும் தீப்தியும் ஒரு வாரத்திற்குள் நீச்சல் கற்றுக் கொண்டோம்.

அய்யா வயலில் மா, கொய்யா, பப்பாளி மரங்களும் பூச்செடிகள் பலவும் இருந்தன. அய்யா எங்களுக்கு பழங்களும் பூக்களும் பறித்துக் கொடுத்தார். நான் பரவசத்தில் மிதந்தேன்.

விடுமுறை நாட்கள் போவதே தெரிய வில்லை. ஒரு முறை தங்கை தீப்தி எனது அதிக மான முடியைப் பார்த்து கேலி செய்தாள். எனவே எனக்கு முடிவெட்ட வேண்டும் என்று தீர்மானித்தேன். இருந்தாலும் எனக்குக் கவலையா யிருந்தது.

அய்யா என்னை முடிவெட்ட அழைத்ததும் எனக்கு அழுகையாக வந்தது. கடந்த முறை சென்னையில் எனக்கு முடிவெட்டும் சம்பவத்தை நினைத்தேன். அன்று எனது அரைநாள் விடுமுறை பறிபோனது ஞாபகத்திற்கு வந்தது.

அன்று காலை எட்டரை மணிக்கே முடி திருத்தும் நிலையத்திற்கு வந்தேன். அப்பாவும் என்னுடன் ஒரு மணி நேரமாகக் காத்திருந்தார். நான் மட்டும் என்றால் ஓடி விடுவேனாம்.

கடைக்காரர் அப்பாவைவிடக் குறைந்த வயதுதான். அப்பா அவரை “நீங்க... வாங்க” என்று மரியாதையாக அழைத்தார்.

“அங்கிள் முடிவெட்டும்போது தலையை ஆட்டக்கூடாது. இல்லன்னா கத்தி பட்டு ரத்தம் வந்திடும்” - அப்பா பயமுறுத்தினார். முடி வெட்டும்போது கடைக்காரரும் அவ்வப்போது அதட்டினார்.

அதை நினைத்துத்தான் முடிவெட்ட வரமாட்டேன்னு அடம்பிடித்தேன்.

அய்யா என்னை அப்படியே கோழிக் குஞ்சைத் தூக்குவது போல் தூக்கி வந்தார். சித்தியும் அம்மாவும் கூடவே வந்தனர். அப்பாவும் என்னை சாந்தப்படுத்த முயன்றார்.

“என்னண்ணே முடிவெட்டுறதுக்கு இவ் வளவு பயப்படுறீங்க” தீப்தி பாப்பா கூட என்னை கேலியாகப் பேசியது. இந்த ஆர்ப்பாட்டம் அரை மணி நேரம் தொடர்ந்தது. முடிவெட்டும் நாவிதர் ஓரத்தில் கால்கடுக்க நின்று கொண்டிருந்தார். அவர் அரை மணிநேரம் முன்ன தாக வந்து எனக்கு முடிவெட்ட காத்துக் கொண்டிருந்தார்.

அய்யாவும் அதட்டல் போடவே நான் சிறிய பலகையில் உட்கார வைக்கப்பட்டேன். தள்ளி நின்ற முடிவெட்டுபவர் அருகில் வந்து முடி வெட்டத் தொடங்கினார்.

“ஏலே தர்மர் சீக்கிரம் வெட்டு” -சித்தி நாவிதரை விரட்டினாள்.

அப்பாவும், “பார்த்து வெட்டுப்பா தர்மர். பையன் பயந்த சுபாவம். அப்புறம் நாளைக்குக் காலைல வந்திருப்பா. எனக்கு முடி வெட்டணும்.”

“சரிங்க முதலாளி”

சித்தி அவரை “ஏலே” என்றதும், அப்பா வை அவர் “முதலாளி” என்று சொன்னதும் என்னை உறுத்தியது.

கிரீச், கிரீச் என்று முடிவெட்டும்போது எனக்குக் கூச்சமாக இருந்தது. புழு போல் நெளிந் தேன். ஆனால் நாவிதர் பக்குவமாகவும் நேர்த்தி யாகவும் தனது பணியைச் செய்து கொண்டிருந்தார்.

“அய்யா, கொஞ்சம் அசையாம இருங் கய்யா, அப்புறம் கத்தி பட்டுச்சுன்னா பெரிய முதலாளி என்ன சத்தம் போடுவாக” - அந்த 60 வயது நரைத்த முடிவெட்டுபவர் கூறினார்.

எல்லோரும் சமம்னு காந்தித்தாத்தா சொன்னாராம். அய்யா சொன்ன கதைகள் ஞாபகத்திற்கு வந்தன.

Pin It