கிராமங்கள் இரவை ஒரு போர்வை போல எடுத்துப் போர்த்திக்கொள்ளும். மின்சார வசதி வராத காலத்தில் இரவைச் சந்திக்க சாயந்திர நேரத்திலேயே ஆயத்தங்கள் நடக்கும். அரிக்கேன் விளக்குகளைத் துடைத்து மண்ணெண்ணெய் ஊற்றுவார்கள். சிம்னி விளக்குகளைத் துடைத்து வைப்பார்கள். குத்துவிளக்கு, காமாட்சி விளக்கு போன்ற சீமைத்தண்ணி ஆகாத விளக்குகளுக்கு ஆமணக்குக் கொட்டையில் எடுக்கப்பட்ட விளக்கெண்ணையை ஊற்றி வைப்பார்கள். வீடுகளில் இதற்கென்றே மாடக்குழி இருக்கும்.

இத்தனை விளக்குகள் இருந்தாலும் இருளில் வரையப்பட்ட சின்னச் சின்ன ஒளிப்பூக்களாக இவை பூத்திருக்குமேயன்றி இருட்டை முழுமையாக விரட்டி விடாது. மின் விளக்குகள் வந்தபிறகுதான் இருட்டுப் போர்வையில் வெளிச்ச கிழிசல்கள் வெளிப்படையாகத் தெரிந்தன.

கிராமங்களில் இரவுகள் மிக நீண்டவை. பொழுது போக வழியின்றி ஊர் மந்தையில் உட்கார்ந்து கொண்டிருக்கும் கோடைக்கால இரவுகளில் மந்தைகளில் கூடும் மக்களின் வம்படிக் கதைகள் மவுனமாகக் கேட்டுக்கொண்டிருக்கும்.

ஊருக்கு எப்போதாவது வரும் போர்வை வியாபாரிகள் வந்தால் பொழுதுக்கு கொண்டாட்டம். அறுவடைக்காலங்களில்தான் போர்வை வியாபாரிகள் தஞ்சை மாவட்ட கிராமங்களுக்கு வருவார்கள். உள்ளுரில் எடுக்கப்பட்ட வாடகை சைக்கிளில் பெரிய துணி மூட்டை கட்டப்பட்டிருக்கும். மூட்டைக்கு மேல் இரட்டை கண் கொண்ட மண்ணெண்ணெய் காண்டா விளக்கு கட்டப்பட்டிருக்கும்.

போர்வை ஏலம் விடும் யாவாரிகள் சாயந்தரமே ஊரை ஒரு சுற்று சுற்றி வந்து தங்களது வருகையை முன்னறிவிப்பார்கள். பெரியவர்களைவிட குழந்தைகள் ரொம்பவும் கொண்டாட்ட மனநிலைக்கு வந்துவிடுவார்கள். இன்றைக்கு பொழுது போகும் என்ற சந்தோஷம் அவர்களுக்கு.

இரவு எட்டுமணிக்கு மேல் ஒவ்வொருவராக சாப்பிட்டுவிட்டு மந்தைக்கு வரத்துவங்குவர். போர்வை வியாபாரி ஒரு புதையலைக் கையாள்வதுபோல கவனமாக மூட்டையைப் பிரிப்பார். மொத்த மூட்டையையும் பிரித்து பரப்பிவிட மாட்டார். முதலில் கோடு போட்ட அண்ட்ராயரில்தான் ஏலம் துவங்கும். பணம் எல்லாம் கிடையாது. நெல் கணக்குதான். சிலர் எள், உளுந்து, கடலை என நவதானியங்களுக்கும் துணியை ஏலம் கேட்பர். யாவாரி டக்கென்று மனதுக்குள் கணக்கு போட்டுக்கொள்வார்.

டிராயரில் துவங்கும் ஏலம் துண்டு, வேட்டி, சேலை என்று ஒவ்வொன்றாக அரங்கேறும். குறைந்த ஏலத்திற்கு கேட்டால் கட்டாது என்று கூறிவிட்டு மடித்து உள்ளே வைத்துவிடுவார். வாங்குபவர்களில் சிலர், “கட்ட தான்யா கேட்டேன். கொடு, கட்டி பாப்போம். எல்லாம் கட்டும்” என்பார்கள்.

கடைசியில் ஜமுக்காளம், போர்வை என்று ஏலம் உச்சகட்டத்திற்கு போகும். சிலர் எக்குத்தப்பாக ஏலம் கேட்டுவிட்டு துணியைக் கொடுத்துவிட்டு போ அடுத்தமுறை வரும்போது நெல் அளக்கிறேன் என்பார்கள். சிலருக்கு மட்டும் யாவாரி ஒத்துக்கொள்வார். சிலரை வக்கில்லை என்றால் ஏன் ஏலம் எடுக்க வருகிறாய் என்று திட்டி அனுப்பிவிடுவார்கள்.

ஒவ்வொரு துணியையும் ஏலத்திற்கு விடும் முன் அதன் அருமை பெருமைகளை விளக்குவார் யாவாரி. சாயம் போகாது. கிழியாது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மங்காது என்று கருப்புப் போர்வைக்கு ரத்தினக் கம்பளம் அளவிற்கு பில்ட் அப் கொடுப்பார்.

ஏலம் முடிய இரவு 12, 1 மணி ஆகிவிடும். ஏலம் எடுத்தவர்களை விட வேடிக்கை பார்ப்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கும். ஒருவர் ஒரு துணியை பேசிமுடித்து வாங்கிய உடன், நான் போன வருஷம் இதே போர்வையைத்தான் வாங்கினேன். சரியில்லை என்று வாங்கிய வரை கலங்கவிடுவார்கள். விசாரித்தால் அவருடைய பரம் பரையிலேயே யாரும் ஏலம் எடுத் திருக்க மாட்டார்கள்.

விவசாயிகள் ஏலத்திற்குச் செல்லும் கதையும் உண்டு. நிலக் கடலை சாகுபடி செய்யும் விவ சாயிகள் நாலைந்து பேராகச் சேர்ந்து லாரி பிடித்து மூட்டைகளில் ஆலங்குடி மில்லுக்கு கொண்டு போவார்கள். தோலை உடைத்த பிறகு கடலையை மூட்டையாக அடுக்கி வைத்தி ருப்பார்கள். ஒவ்வொரு யாவாரி யாக வந்து விலை கேட்பார்கள். அடுத்தடுத்து வரும் யாவாரிகள் குறைத்துக் கொண்டேதான் வரு வார்கள். பதட்டமாக நின்று கொண்டிருக்கும் விவசாயிகள் முதலில் ஏலம் கேட்ட யாவாரியை தேடிப்போவார்கள். அவர் முதலில் கேட்ட விலையை விட குறைத்துக் கேட்பார். இதில் மறைந்து கிடக்கிற தந்திரங்கள் மண்ணை அறிந்த விவசாயிக்கு ஒருபோதும் புரியாது. கடலை விற்கப்போன அப்பா ஏதாவது வாங்கி வருவார் என்று குழந்தை கள் ஏங்கிக் கிடப்பார்கள். பெரும் பாலும் அப்பாக்கள் வாழைப் பழம்தான் வாங்கி வருவார்கள். ஒன்றும் கட்டவில்லை என்றும் இனிமேல் கடலை விவசாயம் செய்யப்போவதில்லை என்றும் புலம்பிக்கொண்டே இருப்பார் கள். ஆனால் அடுத்த பருவத்தில் கடலை சாகுபடி செய்யத்தான் செய்வார்கள். மண்ணும் மனமும் சும்மா இருக்க முடியாது அல்லவா?

பேருந்துகளில் துணி ஏலம் போடும் நவீன ஏல முறையும் நடப்பதுண்டு. சிங்கப்பூர் துணி என்றும், சில்பான் சேலை என்றும் ஏலம் விடுவார்கள். கேட்ட விலை கம்பெனிக்கு கட்டாது என்றும் கேட்ட அனைவருக்கும் சீப்பு என்று விநியோகிப்பார்கள். அடுத்த பொருளுக்கு ஆளுக்கொரு சோப்பு டப்பா கிடைக்கும். அடுத்து ஏலம் கேட்பவர்களுக்கு சென்ட் பாட்டில் என்ற அறிவிப்போடு ஏலத்தை துவக்குவர். சீப்பையும், சோப் டப்பாவையும் வாங்கியவர் சென்ட் பாட்டிலையும் எப்படியாவது அமுக்கிவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் தொகையைக் கூட்டுவார். அந்த நேரம் பார்த்து கம்பெனிக்கு கட்டாது இருந்தாலும் “அண்ணன் கேட்டதற்காக வைத்துக் கொள்ளுங்கள்” என்று மடித்துக் கொடுத்து விடுவார். கையில் காசிருந்தால் தப்பித்தார். இல்லையென்றால் தர்ம அடிதான். அப்போதுதான் தெரியும் பஸ்சில் இருப்பவர்களில் “பாதிப்பேர் கம்பெனி”யைச் சேர்ந்தவர்கள் என்று. அந்தத் துணி தண்ணீரைப் பார்த்த அடுத்த நிமிடமே சுருங்கி விடும். இந்த ஏமாற்றத்தின் வலி தொண்டைக் குழியில் உயிர்க்காற்று ஊசலாடும் கடைசி நிமிடத்தில்கூட வந்துபோகும்.

இப்படி எத்தனை ஏலமுறை இருந்தாலும் அமைச்சராக இருந்த பெரம்பலூர் ராசா அலைவரிசையை ஏலம் விட்டதை யாரும் மிஞ்ச முடியாது. முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்று அலைவரிசையை அள்ளி விட்டிருக்கிறார். பஸ் ஏலத்தில் முதலில் கேட்டவருக்கு சீப்பு, சோப்பு டப்பாதான் கிடைக்கும். இவர் விட்ட ஏலத்தில் கோடி கோடியாய் கொட்டியிருக்கிறது. ராசா கம்பெனி ஏலம் விட்டது அலைவரிசையை மட்டும் தானா? இந்த ஏமாற்றத்தின் வலி தேசத்திற்கு எவ்வளவு நாள் இருக்கும்...

Pin It