இரவீந்திரநாத் தாகூர், தனது பாடல்களைக் கவனம் செய்ததே சுசித்ராமித்ராவின் இனிய குரலாற் பாடப்படுவதற்கே என்பது போலிருக்கும்! அவர் பாடுகையில், பாடுகிற அவருக்கும் - கேட்டுக் கொண்டிருக்கிற ரசிகர்களுக்கும் நாத அலைகளில் மிதக்கும் பாடல்வரிகளைத் தவிர வேறு எதுவும் துளிகூடப் பிரக்ஞையில் பதிவதே இல்லை. சுசித்ராவினுடைய வசீகரக் குரலின் சிறகுகளில் அவை தொற்றிப் பறந்து மாயங்களை விளைவிக்கும். தாகூரின் இசைப்பாடல்களை முன்னெடுத்துச் சென்ற மகத்தான இசைக் கலைஞர்களுள் சுசித்ராவும் ஒருவர், தாகூரின் இசைதான் தன்னுடைய மிக வலிமைமிக்க விருப்பம் என்று எப்போதுமே கூறிவந்திருப்பவர் அவர். அது மட்டுமே “எனது ஒரே மதம்” என்பது அவரின் கூற்று. தாகூரின் 150வது பிறந்த ஆண்டின்போது, அவரது பாடல்களைப் பாடுவதில் ஆகச்சிறந்த பாடகராகப் போற்றிக் கொண்டாடப்பட்ட சுசித்ரா, தனது இறுதி மூச்சைத் தன் 86-வது வயதில் விட வேண்டுமென விதிக்கப் பட்டிருந்தது மிகமிக வலி மிகுந்ததொரு துயரச் சுமையாகும்.

இந்தியக் குடியரசுத் தலைவரும், மேற்குவங்க முதல்வரும் தமது இரங்கல் செய்தி களில் சுசித்ராவின் மேன்மைமிக்க படைப்பாளுமை குறித்த புகழ் மாலைகளைச் சூடி புகழஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.

“நீண்ட காலமாக, வங்காளி களிடையே மட்டுமின்றி, இந்தியா முழுவதிலும் - உலகெங்கிலும்கூட, இரவீந்திர சங்கீதத்தின் மூலம் ரசிகர் களைக் கட்டிப் போட்டிருந்தவர் சுசித்ரா. அந்த சங்கீதத்தின் ஆன்மாவிற்கு, தனக்கே யுரிய தனித்தன்மை மிக்க ஒரு பாணியில் தூலமான வடிவொன்றைத் தருவதற்கு அவரால் முடிந்தது. மேற்குவங்க மாநிலத்தினுடைய கலாச்சார நட வடிக்கைகளில் மிக மதிப்புயர்ந்த ஆலோ சனைகளைப் பல சந்தர்ப்பங்களில் அவர் வழங்கி வந்திருக்கிறார்.” என்று அந்த மாநிலத்தின் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்ஜி பதிவு செய்திருக்கிறார்.

இது எவ்வாறிருப்பினும், அரசியல் தலைவர்களின் வார்த்தைகளிலோ, தங்க ளுடைய இறுதிமரியாதையைச் செலுத்து முகத்தான் கண்ணீர் சிந்தியுள்ள பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் கண்ணீர்த்துளிகளிலோ வங்காளி கலாச் சார சித்திரத்தில் சுசித்ராவின் இடம் இன்னதுதான் என ஒருவர் மதிப்பிட்டு விட இயலாது. படித்த வங்காளிக் குடும்பம் ஒவ்வொன்றின் வீட்டிலும் இசைத்தட்டுகள், ஒலிநாடாக்கள் மற்றும் குறுந் தகடுகளின் வடிவில் நீக்கமற நிறைந்திருப்பவர் அவர். வங்க மொழி பேசுகிற மக்கள் அனைவருடையவுமான ஒன்றி ணைந்த கலாச்சார ரீதியான ஆன்மாவிலிருந்து எத்தகைய ஒரு பிரிக்க முடியாத சக்தி அவர் என்பதை ஒருவர் புரிந்து கொள்ளமுடியும். அவரைப் பற்றிய இந்தப் பரந்து விரிந்த அம்சம்தான், தாகூரின் இசைப்பாடல்களோடு பிரித்தெடுக்க இயலாத அளவிற்கு நெருக்கமாக அவரைப் பிணைத்திருப்ப தாக அமைந்திருக்கிறது. வங்காளத்தினுடைய இரவீந்திர சங்கீதத்தைப் பற்றி ஒருவர் எப்போது நினைக்கிறாரோ, அப்போதே சுசித்ராமித்ராவையும் சேர்த்தே நினைத்தாக வேண்டியவராகிறார் அவர்.

சுசித்ராவினுடைய அசாதாரணமான வாழ்க்கை, 1924-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ம் நாளன்று அசாதாரணமான ஒரு வகையில் துவங்கியிருக்கிறது: ஒரு விடுமுறை காலப் பயணத்திலிருந்து அவருடைய பெற்றோர் திரும்பிக் கொண்டி ருக்கையில், பீகார் மாநிலம் கூஜ்கந்தி என்ற ஊரில், ஓடும் ரயிலில் நிகழ்ந்த குறைப்பிரசவத்தில் பிறந்தவர்தான் சுசித்ரா. சௌரீந்திர மோகன் முகோபாத்யாய், ஸ்வர்ணலதா - ஆகிய தம்பதிகளின் நான்காவது குழந்தையான சுசித்ரா, இசையும் - கலாச்சாரமும் கலந்த ஒரு சூழலில் வளர்ந்து ஆளானவர். அவரது தந்தை வெற்றிகரமான ஒரு வழக்கறிஞர்; இருப் பினும் கலைகளிற் தேர்ச்சி பெறுவதையே தனது இலக்காகக் கொண்டிருந்தவர். அவரே ஓர் எழுத்தாளர்; ஒரு கவிஞர்; மேலும் சில இசைத்தட்டு நிறுவனங்கட்குப் பாடலா சிரியருங்கூட. சுசித்ராவினுடைய மிகப்பழைய “மலரும் நினைவுகளில்” ஒன்று : நகரத்தின் மீது அந்திமாலைப் பொழுதின் பொன்னிருள் கவிந்துகொண்டிருந்த வேளையில் அவரின் தாயார் ஆர்கான் வாசித்துக் கொண்டே பாடியவாறு இருந்ததான ஒரு காட்சிதான்!

 சுசித்ராவின் மூத்த சகோதரர்களைப் போலவே, இவரும் படைப்பாக்கத் திறன் மிகுந்த கலைகளில் தேர்ச்சியடைய வேண்டும் என்பதைத் தனது இலக்காகக் கொண்டிருந்தவரே. ஆனாலும் அனைத்தையும்விட அவரை மிக வலிமையாக ஈர்த்ததென்னவோ இசை மட்டுமே. மிக இளம் வயதிலேயே அவர் அதில் வெளிப் படுத்திய திறமையைக் கண்டு குடும்ப நண்பரும் - வரலாற்றுப் புகழ்பெற்ற இசைக் கலைஞருமான பங்கஜ்குமார் மல்லிக், சுசிதராவை உற்சாகப் படுத்தினார்; தானே ஆசிரியராகவுமிருந்து அவருக்குச் சிறிது பயிற்சியும் கொடுத்திருக்கிறார்.

இதைத்தொடர்ந்து, தனது படிப்பிற்காக பெத்யூன் பள்ளிக்குச் சென்ற சமயம், புகழ்மிக்க ஒரு பாடகரான அனிதா சென்-னினுடைய வழிகாட்டு தலின் கீழ் தொடர்ந்து பாடிக்கொண்டுதானிருந் தார். ஆனாலுங்கூட, 1941ம் ஆண்டு, சாந்தி நிகேதனில் விஸ்வபாரதி நிலைய இசைத்துறைப் பிரிவாகிய சங்கீத பவனில் பயிலுவதற்கான உதவித் தொகையை அவர் பெற்றபோதுதான் முறைப் படியான அவரது இசைப்பயிற்சி தொடங்கியது.

சாந்தி நிகேதனில் ரவீந்திர சங்கீதத்தையும், செவ்வியல் இசையையும் மட்டும் அவர் கற்றுக் கொள்ளவில்லை; தபலா உள்ளிட்ட இசைக் கருவிகள் வாசிப்பதிலும் தேர்ச்சிபெற்று வந்தார். அங்கு அவருக்கு ஆசிரியர்களாக வாய்த்தவர்களுள் வரலாற்றுப்புகழ் மிக்க சாந்திதேவ் கோஷ் மற்றும் சைலஜா ரஞ்ஜன் மஜும்தார் போன்றோரும் அடங்குவார்கள்.

எப்படியிருப்பினும், சுசித்ராவினுடைய வாழ்க்கை முடியும் வரையிலுங்கூட தீராத மனக் குறையாய் நிலைத்து விட்டிருந்த ஒரு வருத்தம் மட்டும் இருக்கவே செய்தது: மகாகவி தாகூரை ஒருமுறைகூட நேரில் கண்டுபேசுவதற்கான வாய்ப்பு ஒரு போதும் அவருக்குக் கிடைக்கவே யில்லை. சங்கீத் பவனில் அவர் பயிற்சிக்காகச் சேருவதற்கு 20 நாட்களுக்கு முன்பு, 1941-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதியே தாகூர் இயற்கை எய்தி விட்டிருந்தார். சாந்தி நிகேதனில் இசை கற்றுக் கொண்டிருக்கும்போதே, 1943-ல் தனித் தேர்வராக பள்ளியிறுதித் தேர்வை அவர் நிறைவு செய்தார். தொடர்ந்து வங்காளி இலக்கியத்தில் இளங்கலைப் பட்டப் படிப்பிற்குரிய வகுப்புகளில் பயிலுவதற் காகக் கல்கத்தா ஸ்காட்டிஷ் தேவாலயக் கல்லூரி யில் பதிவு செய்தார்.

பக்கத்திற்கு ஒன்றாக இரு பாடல்களைப் பதிவு செய்து 78 ஆர்பிஎம் (சுஞஆ) இசைத்தட்டு வடிவில் சுசித்ராவின் முதல் இசைத்தொகுப்பை 1945-ல் அவர் வெளியிட்டார். இந்த வெளியீட்டிற்குக் கிடைத்த மக்கள் வரவேற்பு முன்னுதாரணமற்ற ஒன்றாக அமைந்தது. அதோடு, அடுத்து வந்த ஓர் ஐம்பதாண்டு காலவெளியில் நீடித்திருந்த மகோன் னதமான ஓர் இசைப்பதிவுப் பணியின் துவக்கத் தையும் அது குறித்தது. இந்தப் பணியின்போது ரவீந்திர சங்கீதத்தை மட்டுமின்றி, த்விஜேந்திரலால் ராய், தாகூரின் நாட்டிய நாடகங்களுக்கான பாடல்கள் மற்றும் நவீன இசைப்பாடல்கள் உட்பட பலவற்றையும் அவர் விரிவாகக் கற்றறிந்து வெளிப்படுத்தவும் செய்தார்.

ஆனால், அவருடைய மேதைமையின் உண்மை யான வெளிப்பாட்டை இரவீந்திர சங்கீதத்தில்தான் கண்டறிய முடிந்தது. அவருடைய இசைத்தல்களின் போது சாகித்தியம், மெட்டு மற்றும் தத்துவம் ஆகிய மூன்றினுடையவுமான ஆழமான ஒன்றி ணைவு - தாகூரின் பாடல்களை வடிவமைத்தது எதுவோ அது குறித்த மிக ஆழ்ந்த ஒரு புரிதலை வெளிப்படுத்திக் காட்டுவனவாக அவை அமைந் தன. ஒரு தூய்மைவாதி என்னும் வகையில் ஒரு பாடலின் உட்பொருளாக இருக்கும். தாகூரின் தொலைநோக்குப் பார்வைக்கு மாறாக எந்தவித சமரசத்தையும் ஒருபோதும் அவர் செய்த தில்லை. அப்பாடலின் ஸ்வரக் குறிப்புகளை விட்டு ஒரு போதும் அவர் விலகித் தன்னிச்சைப்படி சென்றது மில்லை. ஆனால், அந்தப் பாடலைக் குறித்த அவரின் சொந்தப்புரிதலும், அதைப்பயிலுதலும் தான் அப்பாடலுக்கு ஓர் உயிர்க்களையைத் தருவதற்கு அவரால் முடிந்ததற்கான காரணங்கள். “ஒரு பாடலின் இசைக்குறிப்புகளை வடிவமும் - கட்டமைப்பும் கொண்ட ஒரு வெறும் சிலை என்பதாக நாம் கற்பித்துக்கொண்டு பார்த்தோம் என்றால், சுசித்ரா மித்ரா அதைப் பாடுகையில் அந்தச் சிலைக்கு உயிர்வந்துவிட்டது போலிருக்கும்...” என்கிறார் மற்றொரு புகழ்பெற்ற இரவீந்திர சங்கீத இசைக்கலைஞரான ஸ்வாகத லக்ஷ்மி. அவர் மேலும் கூறுகிறார் : “சுசித்ரா மித்ரா எனக்கு இரவீந்திர சங்கீதத்தின் ஒரு பகுதி. அதை எப்படிப் பாடவேண்டுமென்று எனக்குக் காட்டி யவர் அவர்தான். என்னுடைய சொந்தக் கலை, அவருடைய கலை அடித்தளத்தின் மீதுதான் நிலை கொண்டிருக்கிறது. அவர் இருந்திராமற் போயிருக் கும் பட்சத்தில், இங்கே ஸ்வாகதலக்ஷ்மி என்றொரு கலைஞர் இருந்திருக்கவே முடியாது.”

சுசித்ராவின் குரல் வளமானது : மிக வலிமை யானதுங்கூட. கவர்ந்திழுக்கும் வசீகரம் ததும்ப, நம்ப முடியாத அளவிற்கு மிக உயர்ந்த எல்லை களில் சஞ்சரித்து, மனக்கண் முன் பாடலின் படிமங் களையும், உணர்ச்சிகளையும் கொணர்ந்து நிறுத்தக் கூடிய வல்லமை படைத்தது அவரின் குரல். தயக்க மேதுமின்றி துணிவுடனும் சுதந்திரமாகவும் பாடப் படுவது அவரின் இசைப்பாணி. “ஓயிபுஜ்ஹி கல்பைசஹி”யில் நார் வெஸ்டரின் வசீகர அழகை யும், வலிமையையும் மந்திரத்தால் வரவழைத்தாற் போல் நம்முன்னே கொணர்ந்து நிறுத்துவார். அதேபோன்று இலகுவான விதத்தில், பிரயாசை ஏதுமின்றி, நெல்வயற்பரப்பில் தன்னந்தனியே நின்றுகொண்டிருக்கும் ஒரு கிராமத்துப் பெண் ணின் கள்ளங்கபடமற்ற ஆன்மாவின் அழகையும் நமக்குக் கொண்டுவந்துசேர்ப்பார். தாகூரின் தேச பக்திப் பாடல்களை அவர் இசைக்கும் விதத்தால் கேட்போர் கண்ணீர் சிந்துவர்.

“நான் பாடுவதற்கு உட்காரும் போது, (எந்தப் பாடலைப் பாடுகிறேனோ) அந்தப்பாடலின் மொத்த உருவத்தையும் என் மனக்கண்களின் முன்னால் மிதப்பதாகப் பார்க்க முடியும்...” - சுசித்ரா இப்படிக் கூறியதுண்டு. ஒரு பாடலின் உள்ளுறை சாரத்தை அப்படியே கிரகித்துக்கொள்ள முடிந்த அவரின் இந்தத்திறன் காரணமாகத்தான் அவரது இசையைக் கேட்கிற ஒவ்வொரு முறையும் அது ஒரு தனிச்சிறப்பானதோர் அனுபவமாக அமைந்தது.

சங்கீத் பவனின் முதல்வரான ஸ்வஸ்திகா முகோபாத்யாய், “சுசித்ராஜியின் கருத்தில், இசை என்பது ரசிகர்களின் காதுகளுக்கு மட்டுமான ஒன்று அல்ல என்பது அவரது நம்பிக்கை. அவர்களுடைய இருப்பின் மையப்புள்ளியைத் தொடுவதாக அது அமைய வேண்டும். அதனால்தான் அவரது பாடலைக் கேட்கும்போது பலரும் மெய் மறந்து போகிறார்கள்...” - என்கிறார்.

விஸ்வபாரதியில் தனது இசைக்கல்வியை நிறைவுசெய்த பின்பு, சுசித்ரா 1946-ம் ஆண்டில் கல்கத்தாவிற்குத் திரும்பி வந்து தனது ‘ரவிதீர்த்தா’ எனும் சொந்தப் பள்ளியை இசைக் கலைஞர் த்விஜேன் சௌதுரியுடன் சேர்ந்து நிறுவினார். அவரது அரசியல் சார்புகளைப் பொறுத்தவரை எப்போதுமே ஓர் இடதுசாரியாகத்தான் இருந்திருக் கிறார். இந்தக் காலகட்டத்தில் அவர் தான் உறுப்பி னராக இருந்த இந்திய மக்கள் நாடக மன்றத்தின் (‘இப்டா’) நடவடிக்கைகளிலும், மக்கள் நாடக இயக்கத்திலும் மேலதிகமான முறையில் ஈடுபடத் துவங்கியிருந்தார். ஊர்வலங்களிலும் - பேரணிகளி லும் பங்கேற்று அவர் நடை போடுவார் ; அப்போ தெல்லாம் அவருடைய வசீகரமான குரல் ஒலிபெருக்கிகளின் உதவியின்றியே திறந்த வெளியில் காற்றில் மிதந்து ரீங்கரிக்கும் ; உடன் வரும் மற்ற செயற்பாட்டாளர்களை இவரது குரலே வழிநடத்தும் ; அவர்கள் அணிவகுத்து நடைபோடுவார்கள்!

1948-ல் தனது சக செயற்பாட்டாளரான துருவ மித்ராவைத் திருமணம் செய்துகொண்டார். 1950-ம் ஆண்டு குணால் என்ற அவரது மகன் பிறந்தான். சில ஆண்டுகள் கழித்து, பிறந்து சில நாட்களில் தாயை இழந்து தவித்த குழந்தையான, சகோதரியின் மகளைத் தத்து எடுத்துக்கொண்டார்.

சுசித்ரா, பன்முகத் திறன்கள் படைத்த ஓர் ஆளுமை. இசைத்துறையில் அவரே ஒரு வாழும் நிறுவனமாக இருந்த அதே சமயம், அவர் ஒரு சமூகச் செயற்பாட்டாளரும் ஆவார். மேடையி லும், திரையிலும் அவர் ஒரு நடிகை. இந்தியா விலும், வெளிநாடுகளிலும் நிகழ்த்தப்பட்ட ஏராள மான இசை நாடகங்களிலும், இசை நிகழ்ச்சி களிலும் அவரே இயக்குநர் ; ஓர் எழுத்தாளர், ஓர் ஆசிரியர். பல கலாச்சார நிலையங்களிலும், அகாடமிகளிலும் அவர் ஒரு மிக முக்கியமான பிரமுகர். கல்கத்தா இரவீந்திரபாரதி பல்கலைக் கழகத்தில் ஓர் ஆசிரியராக, புகழ்வாய்ந்த சாதனை யாளர் என்ற முறையில் சிறப்பான பணியிடத்தைப் பெற்றிருந்தவர். அவரது மாணவர்களுள் புகழ் மிக்க இசைக் கலைஞர்களான பூர்வா தாம், பிரமிதா மல்லிக், ரோமா மண்டல், அக்னிவா பானர்ஜி மற்றும் சுதேஷ்ணா கோஷ் ஆகியோரும் உள்ளடங் குவர். சுசித்ராவின் இசை மரபை முன்னெடுத்துச் செல்லுகிறவர்கள் இவர்கள். இவர் விஸ்வ பாரதியின் இசை நிர்வாகக் குழுவில் மிக செல்வாக்கு படைத்த ஓர் உறுப்பினருமாவார்.

சாந்தி நிகேதனில் பயிற்சி பெறும்போது அவர் கற்றுகொண்டவற்றுள் பதிக், மண்பாண்டங்கள் புனைதல், பொம்மைகள் செய்தல் ஆகியவை அடங்கும். இந்தக் கடைசித் திறன் அவருக்கு மிகப் பிரியமான ஒரு பொழுதுபோக்காக அவரது வாழ் நாளின் இறுதிவரையிலும் தொடர்ந்து நீடித் திருந்தது. அவரே குறிப்பிட்டுச்சொல்ல விரும்பி யதைப்போல, அவரது வாழ்க்கை, ‘மிக நன்றாக வாழப்பட்ட வாழ்க்கை’ எனலாம். அவர் பெற்றுள்ள உயரிய சிறப்புக் கௌரவங்கள் மற்றும் எண்ணற்ற விருதுகளின் வரிசையைக் கணக்கில் கொண்டோமெனில் அவருடையது ‘இசை நிறை வாழ்க்கை’தான்.

1973-ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது ; 1986-ல் சங்கீத நாடக அகாடமி விருது ; ஹெச்எம்வி - நிறுவனத் தின் தங்க இசைத்தட்டு விருது ஆகியற்றையும் பெற்றுள்ளார். அவருக்கு ரவீந்திர பாரதி பல்கலைக் கழகம், பர்துவான் மற்றும் ஜாதவ்பூர் பல்கலைக் கழகங்கள் ஆகியவை கௌரவ டாக்டர் பட்டங்களை வழங்கிச் சிறப்பித்துள்ளன. 2001-ம் ஆண்டில் கல்கத்தாவின் ஷெரீஃபாக அவர் பதவி வகித்திருந் தார்.

கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவர் பொது மேடைகளில் இசைநிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்பதை நிறுத்திவிட்டிருந்தார். எனினும் இசைத்துறை சார்ந்த பிரச்சனைகளுடன் தன்னை அணுகக் கூடியவர்களுக்காகவும், மாணவர்களுக்காகவும் எப்போதுமே நேரம் ஒதுக்கித்தர அவரால் முடிந்தது.

“இரவீந்திர சங்கீதம் தொடர்பாக எந்தப் பிரச்சனை நமக்கு இருந்தாலும் சரி ; நேராக நாம் அவரிடம் போக வேண்டியதுதான். அவரிடம் நமது கேள்விகள் அனைத்திற்கும் பதில்கள் இருக்கும். காரணம் - இரவீந்திரநாத் தாகூரின் படைப்புகளை அவ்வளவு நன்றாக அவர் புரிந்து உள்வாங்கி வைத்திருந்தவர். அவரைப் போல் மற்றொருவர் அவருக்குப் பின் கிடையாது. இனி மீளவும் ஒரு போதும் அவரைப்போன்று வேறொருவர் வரப் போவதுமில்லை...” என்கிறார் ஸ்வஸ்திகா முகோபாத்யாய்.

நன்றி : ‘ஃப்ரண்ட் லைன்’

ஜனவரி 28, 2011.

ஆங்கிலத்தில்: சன்ரித் சங்கர் சட்டோபாத்யாய்

தமிழில் : கமலாலயன்

Pin It