என் பவளமல்லிப் பாசறைக்கு....

கவரிக்குளத்தின் படித்துறையில்அமர்ந்து உன் நிழலாள் பேசுகிறேன். இதோ, படித்துறையில் கணுக்கால் வரை நனைத்துக் கொண்டிருக்கிறேன். என் பாதத்தைத் தொட்டுத் திரும்பும் தண்ணீரின் தெளிப்புகள் உனது ஊர் நோக்கிய வரவுகளையும், திரும்புதல்களையும் சொல்லிவிட்டுச் செல்கின்றன.பாதத்தைக் கடித்துத் துடித்துச் செல்லும் மீன்கள் கற்பனையில் உன் சீண்டல்களாக மாறி மனதைக் குறுகுறுக்க வைக்கின்றன.மாலைநேரக் காற்றில் மிதந்து வரும் மருதாணியின் வாசம் உன் தேகத்தின் வாசமோவென எனைத் திடுக்கென்று திரும்பிப் பார்க்க வைக்கின்றது.

என் செல்லமே, நீ எங்கே எப்படி இருக்கிறாய்? நலமா? உன் நினைவுகளில் எனக்கு பிரிவு நோய் தாக்கியிருக்கிறதுபோல. உடல் மெலிந்து போயிருக்கிறேன் என்று அனைவரும் சொல்கிறார்கள். வாழ்வியல் தேடலுக்காய் ஊர் விட்டு ஊர் சென்றிருக்கும் நீ ஊரும் ஊர் சார்ந்த விசயங்களையும் எத்தனை தூரம் இழந்திருக்கிறாய் தெரியுமா? என்ன செய்வது? நம்மைப் போன்ற ஏழைக்குடும்பங்களில் எல்லார் நிலையும் இதுவே. காதலையும், பிரியத்தையும், பாசத்தையும் தவணை முறையில்தான் செலுத்த முடிகின்றது. உன் குரல் மட்டுமே என் அறிமுகம். அந்த வசீகரக்குரல் நலமா? கவனமாகப் பார்த்துக் கொள். முதல் முறை உன் குரல் கேட்டபோது ஆயிரம் மின்னல்களின் ஆனந்தப் பிரவாகமாய், ஆனந்த ஆலாபணையாய் என்னுள் ஏதோ ஒன்று ஊற்றெடுத்தது.இதோ இப்போது அது பொங்கிப் பொங்கி தனக்கானதொரு பாதை அமைத்து வளைந்தும் நெளிந்தும் சிலிர்த்துக் கிளம்பியிருக்கிறது தண்ணீர்ச் சிங்கமாய்.

சொல்லுங்க?யாருங்க? ஆமாங்க.இவை மூன்றும்தான் நீ என்னுடன் பேசிய முதல் வார்த்தைகள். மிகத் தாமதமான ஒரு நாளிரவில் தொந்தரவு செய்து உனக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தேன்.வெட்கத்துடன் ஏற்றுக்கொண்ட நீ என்னை யாரென்று அறிய பெருவிருப்பம் காட்டினாய்.நான் பிறகு சொல்வதாகச் சொன்னதும் சரியென்று ஒப்புக்கொண்டாய். இன்று இரவு என் தூக்கம் தொலைந்தது. தோழி என்று குறுகுறுப்பும் தேடலும் கலந்து ஏக்கத்தோடு ஒலித்த உன் குரல் இன்னமும் என் செவிகளுக்குள் ரீங்காரமிடு கின்றது...

ஆறுதலுக்காய் அம்மாவின் மார்மீது சாய்ந்து கொள்ள ஆதுர்யத்துடன் தலைகோதி அணைத்துக் கொள்வாளே அது போல் உன் குரல் என்னை ஏகாந்த உலகத்துக்குள் கொண்டு சேர்க்கிறது.

“தென் மேற்குப் பருவக்காற்றாய் உன் குரல்-

யுகங்கள் பல கடந்திருந்தும் இளம் பருவம் மாறா துடிப்புடன் துறுதுறுக்கும் நீரலையாய் உன் குரல்-

மார்கழிக்குளிரின் தனிமைக்குக் கதகதப்புச் சூரியனாய் உன் குரல்-

எப்படியோ நல்ல பாடலொன்றிற்கு ஸ்ருதியாய் ஒத்துப் போன உன் குரல்”

காற்றில் தவழ்ந்து வரும் உன் வார்த்தைகளின் ஒலியளவு மட்டும் எப்படி கனகச்சிதமாய்ப் பொருந்திப் போனது? உன் வார்த்தைச் சிதறல்கள் மட்டும் எப்படி எழுதாமலே கவிதையாகப் பரிணாம மாற்றம் கொள்கின்றன?சூல் தரிக்காமல் பிரசவமாகும் அறிவியல் விந்தைதானோ?

இது வரை எனக்கு தோழியே கிடைக்கவில்லை என்று நீ சொன்னதும் என்னால் சிரிக்காம லிருக்க முடியவில்லை.என்னைப் பற்றி உனக்குத் தெரிந்த ‘கொஞ்சூண்டு’ தகவல்களை உன் நண்பனுக்குச் சொல்லி அவசர உதவி கேட்டிருக்கிறாய் என்று நீயே சொன்னபோது கொஞ்சம் பயம் வந்தது.

செல்லம், நீ நடந்த ஈரச்சாலைகளில் நானும் நடக்கிறேன் ஒரு நத்தையென. செவிகளில் வந்து விழும் இசை மட்டுமே போதும் அந்த இசை வாத்தியங்களைப் பார்க்கவேண்டியதில்லை என்று உள்மனம் சொன்னாலும் விழிகள் கேட்கவில்லை. பார்க்கிற அனைத்து உருவங்களிலும் உன் குரலைப் பொருத்திப் பார்க்கிறேன். அரூபமாய் எங்கும் நிறைந்திருக்கிறாய். சிவகணங்களுக்கு காவல் காக்கும் யாளிகளாய் உன் குரல் உன் உருவம் காத்து நிற்கிறது. வேலியெங்கும் படர்ந்து பூக்கும் மயில் மாணிக்கமாய் தெரியாத உன் உருவமும் தெரிந்த உன் குரலும் என்னில் இறுகப் பற்றிப் படர்கிறது.

எதிர்ச்சாரலில் முத்து முத்தாகத் தெறிக்கும் மழையின் முதல் துளியை நாக்கை நீட்டி உள் வாங்கி விழுங்கிச் சிலீரிடும் சரீரமாய் உன் குரல் எனை நனைத்துப் போகிறது. நயனங்கள் மூடி யிருக்கையில் நான் விழிக்கட்டும் என்றே உன் குரல் என் இமைகளின் மேல் சிம்மாசனமிட்டு அமர்ந் திருக்கிறது. கனம் தாளாமல் தவிக்கும் போது எப்படிவிழிக்க?

நீ நட்டு வைத்த மரக்கன்றுகள் சற்றே பெரிதாகி விட்டதாகவும் அதனடியில் அமர்ந்திருப்பதாகவும் ஒருமுறை சொன்னாய். செல்லம், அந்த மரத்திற்கு அருகே செல். என் பெயரையும் சேர்க்கச் சொல் உன் வருகைப் பதிவேட்டில்.

உரக்க வாசிக்கச் சொல் மரங்களை! காற்றின் மூலம் எனக்கும் வந்து சேரட்டும். மரங்கள் சருகு திர்க்கலாம்; மனங்கள் நினைவுதிர்க்குமா?

 உன் வார்த்தைச் சாம்ராஜ்யத்தில் நான் மகுடம் சூட்டிக் கொள்கிறேன் ஒரு மஹாராணியாய். மலர்ந்து சிரிக்கும் மலர்களின் அழகில் மயங்கி பறிக்க மனமில்லாமல் அதன் அருகில்முகத்தைக் கொண்டு சென்று மூக்கோடு வைத்து உரசி முத்த மிட முயல்கையில் அதன் மகரந்த்த் தூள்கள் முகம் முழுக்க அப்பிக் கொள்ளுமே...அப்படி உன் நினைவுத் துகள்கள் என் மனம் முழுக்கவும்.

ஓராயிரம் ஓட்டைகளை அடைக்கும் ஊசிக்குத் தன் ஓட்டையை அடைக்க முடியாதது போலே மனம் கிழிந்தே கிடக்கின்றது உன் நினைவுகள் குத்திக்கிழிப்பதால். ஆனாலுமிது சந்தோஷக் கிழியல்.

கடிதங்கள் மூலமாக வாழ்ந்துகொண்டிருக்கி றோம் இது கூட நன்றாகவே இருக்கிறது. குரலின் வழி அத்துணை பாவனைகளையும் கற்பனை செய்ய முடிகிறதே. அதிராத உன் குரல் என் அத்துணை செல்களையும் அதிரவைக்கிறதே எப்படியடா? உன் ஊரிலிருந்துவரும் நம் தூதுத் தோழி நேற்று சந்தித்தபோது சிலவிசயங்களைச் சொன்னாள்.

செல்லம் மனதைக் கொஞ்சம் திடமாக்கிக் கொள். இன்னும் சில விசயங்களையும் நான் உன்னோடு பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கு.

பள்ளிக்கூடத்தில் உனக்குக் கொடுத்த சைக் கிளை விற்று விட்டார்களாம். கேள்விப்பட்டதிலி ருந்து எனக்கு மனசே சரியில்லை. நீ ஓட்டிய சைக்கிளை வேறு யாரோ ஓட்டிப்போகிறார்கள் என்ற நினைவே காய்ச்சல்காரியின் வாய் போல் கசந்து வருகிறது. ஆனால் என்னடா செய்ய முடியும்? உன் தம்பிக்கு தீராத காய்ச்சலாம். உன் அம்மா அப்பாவுக்கும் இங்கு வேலையே கிடைப் பதில்லை. அவர்களுக்கு மட்டுமல்ல பொதுவா கவே இங்கு யாருக்குமே வேலையேயில்லை. நூறுநாள் வேலைத்திட்டம் என்று ஏதேதோ சொல் கிறார்கள். அது நடைமுறையில் பிரயோசனைப்பட வில்லை என்று ஊருக்குள் பேசிக்கொள்கிறார்கள்.

வயிற்றுக்கே வழியில்லை என்ற போது வைத் தியத்திற்கு எங்கே செலவு செய்வது? நம்ம ஊர் பெரியாஸ்பத்திரியில் கூட்டம் நிரம்பி வழியுதாம். காப்பீட்டுத்திட்டத்துக்குக் கிடைத்திருக்கிற அட்டையை அறுவை சிகிச்சை மாதிரியான பெரிய நோய்களுக்கு மட்டும்தான் பயன் படுத்த முடியு மாம். சின்ன நோய்க்கெல்லாம் பார்க்க முடியா தாம்.

நம்ம ஊர்ல இருக்கிறவங்க ஏகதேசம் எல்லா ருமே செலவுக்கே காசில்லை என்று அவர்கள் வீட்டில் நின்று கொண்டிருந்த வேம்பு, மா, புளி, பலாமரம் எல்லாவற்றையும் விற்றுவிட்டார்கள். நேற்றுதான் வெட்டி லாரியில் ஏற்றிப் போனார் கள். எல்லா வீட்டிலேயும் மரம் வெட்டப் பட்ட இடம் தழும்புகளாய் உறுத்துகிறது. ஊரே பச்சை மரம் அறுத்த வாசனை மட்டுமே நிரம்பி மொட்டையாய் காட்சிதருகிறது. மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டு விட்டதால் படபடக்கும் பறவை களின் சிறகோசைகளோ, குக்கூ ஒலிகளோ எதுவு மில்லை. ஊரே மவுனவிரதம் பூண்டது போல் வெறுமையாய் இருக்கிறது. இந்தநிலையில் நீ ஊருக்கு வராமலிருப்பதே நல்லது. இந்த ஊரின் இந்த நிமிட அலங்கோல நிலை பார்த்தால் உன் மென்மையான மனம் தாங்காது. ஏதோ கலவரம் நடந்ததுபோல யுத்தம் பூமிபோல அவலட்சணமாய் இந்த ஊரைப் புரட்டிப் போட்ட வறுமைக்கும் வறட்சிக்கும் ஒரு அழிவு வராதா?

போன வாரம் எங்கள் ஊரில் உமா அக்கா வுடைய கணவர் தற்கொலை செய்துவிட்டார். விவசாயத்துக்காக வாங்கிய கடன் வட்டி பெருகி கடன்காரர்கள் வீட்டு வாசலில் வந்து கேவலமாகத் திட்டி விட்டார்கள். மழையில்லாமல் பயிர்கள் எல்லாம் காய்ந்து விட்டது. மானம் போன பிறகு உயிர் எதற்கு என்று பூச்சி மருந்தைக் குடித்து விட்டார். பாவம்டா, நாலு வயதில் ஒரு பொண்ணு. மேலும் அந்த அக்கா வயித்துல ஏழு மாசம். அழுதபடியேயிருக்கிறாங்க. அவங்க வழ்க்கை என்ன ஆகப் போகிறதோ? தெரியலை.

எங்கள் வீட்டிலேயும் இப்ப பணக் கஷ்டம் தான்டா. மழையில்லை. ஆற்றில் கண்மாயில் தண்ணீரில்லை. வெள்ளாமை ஏதும் நடக்கலை. பட்டியில் அடைத்திருந்த ஆடுகள் எதுவுமில்லை. விலை பேசி வித்தாச்சு. நேற்று பக்கத்து டவுனி லிருந்து குருசாமினு ஒருத்தர் வந்தார். நீ இப்ப வேலைக்குப் போயிருக்கியே அது போலவே இங்கிருந்து பொம்பளைப்பிள்ளைகளைக் கூட்டிப் போகப் போறாங்களாம். ஏதோ சுமங்கலித் திட்டமாம். மூன்று வருஷம் அங்கேயே தங்கி வேலை செய்யணுமாம்.கடைசியில் தங்கத்தாலி தருவாங்களாம். என் பாட்டியும், அம்மாவும் போகச் சொல்றாங்க. கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு இப்படி ஏதாவது ஒரு ஊர்ல வேலையாம். தங்குவதற்கு ஹாஸ்டல் வசதி இருக்காம். தஞ்சாவூர், தூத்துக்குடி, கோவில்பட்டி, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருவண்ணாமலை இப்படி பல ஊர்களைச் சேர்ந்த பெண்கள் அங்கே தங்கியிருக்கிறார்களாம். பயப்படும்படியாய் எதுவு மிருக்காது தைரியமாய் அனுப்பி வையுங்க என்று சொல்லி எங்கள் பெற்றோரிடம் தலைக்கு 5000 ரூபாய் அட்வான்ஸ் கொடுத்துட்டுப் போயிருக் கார்.

செல்லம், நான் இங்கேயிருந்தால்கூட ஊரின் நிகழ்வுகளையும், உணர்வுகளையும் உனக்காக சேமித்து வைக்கலாம். அநேகமாக அடுத்தவாரம் எல்லோரும் போய்விடுவோம் என்று நினைக் கிறேன். இதுவரை சேமித்து வைத்தவைகளை உனக்கான கடிதங்களில் அனுப்பிக்கொண்டே இருக்கிறேன்.

ஆடி நோம்பிக்கு ஊஞ்சல் கட்டி விளையாடு வோமே அது போல் அந்த ஊர்களில் விளையாட முடியுமாடா? ஊரை விட்டுவிட்டு எங்கேயோ வேரறுந்து நிற்கப் போகிறோம் வேர் பிடிப்போமா? பட்டுப் போவோமா? ரொம்பப் பயமாயிருக்கிறது... எதிரேயிருக்கும் வாழ்க்கை?!

-     இப்படிக்கு, சுதா.

(பின் குறிப்பு: அங்கே சென்ற பிறகு முகவரி அனுப்பி வைக்கிறேன். அது வரை நீ எனக்குக் கடிதம் எழுத வேண்டாம். நாம் பேச செல்போன் கொடுத்து உதவிய பாலா அண்ணனுக்கு ஒரு நன்றி சொல்லிவிடு. இனிமேல் நீ அந்த ஃபோனுக்குக் கூப்பிட வேண்டாம்...)

Pin It