மலையும் மலைசார்ந்த இடமும்
வேட்டுப் புழுதியால்
விழுங்கப் பட்டன;

காடும் காடுசார்ந்த இடமும்
நீர்வளம் இன்றிக்
காய்ந்து போனது;

வயலும் வயல்சார்ந்த இடமும்
உழவரின் வறுமையால்
வெறுமை பூண்டது;

கடலும் கடல்சார்ந்த இடமும்
பணக்கார விடுதிகளின்
பரப்புள் ஒடுங்கின;

தமிழக உலாவில்
குறிஞ்சிக் கபிலரும்
முல்லை நப்பூதனாரும்
மருதம் ஓரம்போகியாரும்
நெய்தல் நக்கண்ணையாரும்
பாலை பெருங்கடுங்கோவும்
திகைத்துப் போயினர்;
நில வரைவியல் நீர்த்தது கண்டு.

யாதும் ஊரே
யாவையும் ஒரே நிலமே
ஐவகை நிலமும்
ஒன்றாய் ஆனதால்
புதிய இலக்கணம்
புகன்றனர் இப்படி...

தமிழ்நிலம் என்பது
மனையும் மனைசார்ந்த இடமும்
என்று!

   - பழனி.சோ.முத்து மாணிக்கம்

Pin It