(மதுரை காமராசர் பல்கலைக் கழக பிஎச்.டி. பட்டத்திற்காக 2001-ஆம் ஆண்டு பேராசிரியர் ச.மாடசாமி "செம்மலர்ப் படைப்புகள் காட்டும் கிராமிய வாழ்வு" எனும் தலைப்பில் எழுதிச் சமர்ப்பித்த ஆய்வேட்டிலிருந்து ஒரு பகுதி இங்கே)

மக்களிடம் போராட்ட விதைகளைத் தூவுவது, போராட்டத்துக்காய் மக்களை ஒருங்கிணைப்பது, போராட்டத்தின் பலன்களைப் புரியவைப்பது போன்ற, லட்சியங்கள் முற்போக்கு இலக்கிய இதழான செம்மலருக்குண்டு. இருப்பினும், போராட்டம் குறித்த சரியான புரிதல் இல்லாமல் இந்த இலட்சியங்களை எட்ட முடியாது. போராட்டத்தைப் புரிந்து கொள்ள மக்களோடு வாழ வேண்டும்

செம்மலரின் முதல் இதழ், எழுத்தாளனின் கடமையை எடுத்துரைக்கும் போது "சமூக மாறுதல்களுக்குத் திரண்டெழும் வெகுஜனங்களின் போராட்ட அரங்குகளில் முன்னணித் தொண்டனாக எழுத்தாளன் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது. (மே, 1970. ப.7) இதன் பொருள், மக்கள் வாழ்க்கைப் போராட்டங்களை எழுத்தில் பதிவு செய்வதோடு எழுத்தாளனின் கடமை முடிந்து போய் விடவில்லை என்பதுவே. போராட்டங்களில் பங்கேற்றுக் கள அனுபவமும், கள அறிவும் பெறுவது, எழுதுவதை விடக்கூட மேலானதாகும். கள அனுபவம் எழுத்தாளனுக்கு இன்றியமையாதது என்பதைச் சொல்ல, லெனின் துணைவியார் க்ரூப்ஸ்கயாவின் கருத்தையும் செம்மலர் பிரசுரித்தது. க்ரூப்ஸ்கயா இளம் எழுத்தாளனுக்கு எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி கீழே தரப்பட்டுள்ளது.

"இலக்கியம் என்ற வீட்டில் இருந்து கொண்டு அதன் ஜன்னல் வழியாகத் தன்னைச் சுற்றி இருக்கின்ற எல்லாவற்றையும், அலட்சிய மனோபாவத்துடன் பார்க்கும் எழுத்தாளன் என்றுமே வளர முடியாது.... சாதாரணத் தொழிலாளிகளுடன் தொழிலாளியாக வேலை செய்யுங்கள். அவர்களுடைய வாழ்க்கையைப் பற்றியும், குடும்பச் சூழ்நிலைகளைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள். அப்பொழுது உண்மையான, கவிதைக்கான கருத்துக்கள் தானே வரும்" (ஆகஸ்ட், 1970. பக்.64)

மக்கள் போராட்டத்தை விவரிக்கும் கலைஞன் அப்போராட்டத்தில் பங்கேற்றவனாக இருத்தல் வேண்டும் என்பதையே மேலே காட்டிய கருத்துக்கள் விளக்குகின்றன. போராட்டத்தைப் புரிந்து கொள்ள மக்களைப் புரிந்து கொள்ள வேண்டும். மக்களோடு வாழ்வது, மக்களைப்புரிந்து கொள்வதற்காகவும், மக்களைக் கண்டு பிடிப்பதற்காகவுமே. மக்களைப்புரிந்து கொள்வதுவே முற்போக்கு இலக்கியப் படைப்பாளி பெற வேண்டிய அடிப்படைத் திறன் (ளமடைட) ஆகும். இக்கருத்தும் முதல் இதழிலேயே, மைதிலி சிவராமனால் வலியுறுத்தப்படுகிறது.

"உணர்வுப் பூர்வமாகச் சமுதாய மாற்றத்தை வேண்டி எழுதுகிற ஒவ்வொரு படைப்பாளியும், இந்தச் சமுதாய மாற்றத்தை உண்டு பண்ணக் கூடிய சக்தி வாய்ந்த மக்களைப் புரிந்து கொள்ள வேண்டும்" (மே, 1970. ப.19) இதைச் செம்மலர் வலியுறுத்துவதன் காரணம், மக்களைப்புரிந்து கொள்ளாதவன் போராட்டம், புரட்சி, சமூக மாற்றம் ஆகிய எவற்றையுமே புரிந்து கொள்ள இயலாது. ஒரு படைப்பாளி மக்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாவிடில் நம்பிக்கையைக் கைவிட்டு, விரக்தியைப் பற்றிக் கொள்ள நேரிடும். எனவே, எழுத்தாளன் களத்தின் நிற்க வேண்டும். மக்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று செம்மலர் கருதுகிறது.

படைப்புகளின் வழி புலப்படும் புரிதல்

போராட்டத்தைச் செம்மலர்ப் படைப்பாளிகள் எவ்வாறு புரிந்து கொண்டிருக்கிறார்கள்? ஆரம்பகாலப் படைப்புகள் சில, திரைப்படப் பாணியில் நிலப்பிரபுக்களையும், பண்ணையாளர்களையும் கொண்டு வந்து நிறுத்தி, மனிதர்களைப் பற்றியும், போராட்டம் பற்றியும் தங்கள் தெளிவற்ற அணுகுமுறைகளைப் புலப்படுத்தின. ஆனால், வெகுநுட்பமாகப் போராட்டத்தைப் புரிந்து கொண்ட படைப்புகள் பின்னர் தோன்றின. எடுத்துக்காட்டாக சுயம்புலிங்கம் எழுதிய பின்வரும் கவிதையைக் கூறலாம்.

மீட்சிக்காக

குழந்தை அழுகிறது

சத்தம்.

கரைச்சலில் நைபட்டு

சினந்து தெருவை அலற வைக்கிறது.

சிறு உயிரின்பசி

வீடு முழுவதும் விரிகிறது.

குழந்தை

வெக்கையைத் தாளமுடியாமல்

தன்னை நனைத்துக் கொள்கிறான்.

பசியிலிருந்தும்

கவிச்சையிலிருந்தும்

தன்னை விடுவித்துக் கொள்ள

படுக்கையை உதைக்கிறான்.

அந்தச் சின்னஞ்சிறு மனிதன்

மீட்சிக்காய்

பிரயாசைப்படுகிறான்.

பூமி

உதைவாங்குகிறது. (செம்மலர், செப்டம்பர், 1984)

தன் தேவையை உணர்ந்ததாலும், இருக்கிற நிலையை ஏற்றுக் கொள்ளாத மனநிலையினாலும் குழந்தையின் போராட்டம் தொடங்குகிறது. வாழ்வை முன்னுக்கு நகர்த்தத் தேவையான எதிர்ப்புணர்வு குழந்தையிடம் உள்ளது. சின்னக் குழந்தையிடம் அவ் எதிர்ப்புணர்வு அழுகைச் சத்தமாகவும், உதையாகவும் வெளிப்படுகின்றது. இந்தப் போராட்டத்தில் சின்னக் குழந்தையிடம் பெரிய பூமியே உதைவாங்க நேரிடுகிறது. போராட்டம் குறித்த சரியான விளக்கமாக இக்கவிதை உள்ளது.

வாழ்க்கைப் போராட்டம் அவ்வப்போது சமரசங்கள் செய்து ஓய்வெடுத்து, ஓய்வெடுத்துப் புறப்படுகிறது. சக்தியுடன் மீண்டும் எழ இந்த ஓய்வு தேவைதான். ஆனால், இந்த ஓய்வும் நிரந்தரமாய்ச் சாய்ந்து ஓய்வு கொள்வதற்கு அன்று. இறுதித் தீர்வும், வெற்றியும் போராட்டத்தின் கையில்தான் உள்ளன. இந்த நடப்பியலைச் செம்மலரின் கீழ்வரும் கவிதைகள் வலியுறுத்துகின்றன.

தலையணையை மாற்றிடின்

தலைவலி நீங்கிப் போமா?

சமரச மாரீசத்தால்

சமவாழ்வு பூத்திடுமா?

சமரே தீர்வென்றால்

சரித்திரத்தின் தீர்ப்பென்றால்

தீர்ப்பின் பயணத்தைத்

திசை திருப்ப யார் வல்லார்?

(துருவங்கள் கைகோர்த்து நடந்திடுமோ, செம்மலர், மே, 1980)

அழுகிய புண்ணை அறுக்காவிட்டால்

எலும்பே புரையாகும் அதை

அழகிய பட்டுத் துணியால் மூடினால்

எல்லாம் புழுவாகும் இது

எப்படிச் சரியாகும்?"

(இடையினம், ஆகஸ்ட், 1980)

போராட்டத்தின் உட்கருவையும், போராட்டத்தின் விளைவையும் இக்கவிதைகள் சரியாகப் புரிந்திருக்கின்றன.

-பேரா.ச.மாடசாமி 

Pin It