"1970-ஆம் ஆண்டு ஒரு இலக்கியப் பத்திரிகையின் தேவை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விவாதித்த சமயத்தில், அதற்கு ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்த வேண்டுமென்று கட்சி என்னைப் பணித்தது. எனக்கு அச்சமாக இருந்தது. 'பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள், நடத்துவோம்' என்று தோழர் கே.எம்.(கே.முத்தையா) எனக்கு உத்வேகம் கொடுத்தார்" - செம்மலரின் முதலாவது ஆசிரியர், நாவலாசிரியர் கு.சின்னப்ப பாரதி, செம்மலரின் வெள்ளிவிழா மாநாட்டில் பேசியது இது.

1964-இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிளவுப்பட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமான போது, அதுவரையும் நடத்தி வந்த "தாமரை" இலக்கிய இதழ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வசமாகிவிட்டதால் மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஓர் இலக்கிய ஏட்டின் தேவை முன்னுக்கு வந்தது. இவ்வாறுதான் 1970-ஆம் ஆண்டு மே மாதம் 80 பக்கங்களோடு 50 காசு விலையுடன் மதுரையிலிருந்து செம்மலர் வெளிவந்தது.

செம்மலர் துவங்கிய முதல் பத்தாண்டில் தமிழ் இலக்கிய உலகம் - அதாவது வணிக நோக்கை மட்டுமே முதன்மையாகக் கொண்ட இலக்கிய உலகம் - எப்படி இருந்தது? 1979ஆம் ஆண்டு ஜுனில் சென்னையில் நடைபெற்ற தமிழ் எழுத்தாளர்கள் சங்க மாநாட்டில் பிரபல எழுத்தாளர்கள் பேசிய பேச்சிலிருந்தே இந்தக் கேள்விக்கான விடையைக் காணலாம்.

"இலக்கியம் அடிமட்ட உணர்ச்சிகளைத் தூண்டிவிடக்கூடாது. பாலுணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டிருக்கக்கூடாது".

"எழுத்தாளர்கள் துரியோதனர்களாக மாறக்கூடாது".

"துச்சாதனன் ஒரு திரௌபதியின் துகிலைத்தான் உரித்தான். இன்றைய எழுத்தாளர்களோ எல்லா பெண்களையும் துகிலுரிக்கிறார்கள். இந்த அநியாயத்தை முறியடிக்க பெண்கள் படை திரள வேண்டும்".

இத்தகைய இலக்கியம்தான் அன்று பிரபல ஏடுகளில் ஆதிக்க இலக்கியமாக இருந்தது. இதுகண்டு எச்சரிக்கை செய்தார் ஒரு பிரபல எழுத்தாளர் - அவர் அகிலன்:

"தமிழ்நாட்டில் வெளிவரும் சிறு பத்திரிகைகளில் எழுதும் எழுத்தாளர்களின் எழுத்துக்களில் சிவப்பு மின்னுகிறது. இந்த இளம் சிவப்பு எழுத்தாளர்களின் கை ஒரு நாள் ஓங்கும்!"

(ஆதாரம் : செம்மலர் 1979 ஜூலை இதழ்)

"வாசகனுக்கும் இலக்கிய ஆசிரியனுக்கும் தொடர்பேதும் இல்லை; இலக்கிய ஆசிரியன் வாசனுக்கு அளிக்கக்கூடிய செய்தி ஏதுமில்லை" என்று க.நா.சு. எனச் சொல்லப்படும் க.நா.சுப்பிரமணியமும், தனது "சிந்தாநதி" நாவலின் சில புரிபடாத பகுதிகளைப் பற்றிக் கூறுகையில், "இன்றைக்குப் புரியாவிட்டால் நாளைக்குப் புரிகிறது. அட, கடைசிவரை புரியாமல் இருந்தால்தான் என்ன? இருந்து விட்டுப் போகட்டுமே....." - என்று, லா.ச.ரா. எனச்சொல்லப்படும் லா.ச. ராமாமிர்தமும் போன்று - வாசகனைப் பற்றி அக்கறைப்படாத எழுத்தாளர்கள், அவர்களைக் கொண்டாடுகிற ஏடுகள் என இருந்த அந்தச் சூழலில்தான் தன்னை ஒரு "முற்போக்கு இலக்கிய ஏடு" எனப் பிரகடனப்படுத்திக் கொண்டு தமிழ் இலக்கியக் களத்தில் பிரவேசித்தது செம்மலர். அது முதன்முறையாக வெளிவருவதற்குத் தேர்ந்தெடுத்துக் கொண்ட மாதம் கூட உலக உழைப்பாளி வர்க்கத்தின் மே மாதம்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு அந்த முதலாவது இதழில் எழுதியவர்கள் யார், யார் என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வப்பட்டு என்னிடம் சில வாசகர்கள் கேட்டதுண்டு. முதல் இதழில் எழுதியவர்கள் : கே.முத்தையா, ஐ.மாயாண்டி பாரதி, கு.சின்னப்ப பாரதி, டி.செல்வராஜ், மைதிலி சிவராமன், நெல்லைச் செல்வன், ச.மாதவன், தணிகைச் செல்வன், தமிழ்ச்செல்வன், முல்லைநடவரசு, சிவிகைக்கிழார், முரளீதரன்(மலையாளச் சிறுகதை தமிழாக்கம்) - இவர்கள்தான் முதல் இதழின் படைப்பாளிகள்.

இவர்களின் படைப்புகளோடும், இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், பி.டி.ரணதிவே, தமிழக அமைச்சர் இரா.நெடுஞ்செழியன், தமிழறிஞர் டாக்டர் மு.வரதராசனார், எழுத்தாளர் அகிலன் ஆகியோரின் வாழ்த்துரைகளோடும் முதல் இதழ் வெளிவந்தது. அப்புறம், இரண்டாவது இதழில், முதலாவது இதழில் எழுதியவர்களோடு மேலும் சிலர் எழுதினர். அவர்களில் முக்கியமாய் இருவர் ப.ரத்தினம், சி.ஞானபாரதி. மூன்றாவது இதழில் மேலும் சில எழுத்தாளர்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆ.சண்முகசுந்தரம், இரா.கதைப்பித்தன். தொடர்ந்து காஸ்யபன் எழுத வருகிறார்.

செம்மலரில் 1972ஆம் ஆண்டு "பரிசு" எனும் தனது முதலாவது சிறுகதையை எழுதினார் மேலாண்மை பொன்னுச்சாமி. 1974-ஆம் ஆண்டு "அகிலனின் சரித்திர இலக்கியம் எதைச் சித்தரிக்கிறது?" என்கிற தனது முதலாவது ஆய்வுக் கட்டுரையை எழுதினார் அருணன்.

1969 செப்டம்பர் முதல் தீக்கதிர் வார இதழுக்கு அரசியல் கார்ட்டூன்கள் வரைந்து கொண்டிருந்த நான், தீக்கதிர் ஆசிரியர் கே.முத்தையா, செம்மலரின் முதலாவது ஆசிரியர் கு.சின்னப்பாரதி ஆகிய தோழர்கள் மூலமாக செம்மலர்க்கு அரசியல் கார்ட்டூன், கதைப்படங்கள் கேலிச்சித்திரங்கள், அட்டைப்படம் வரைகிற ஓவியனாக வந்தேன். நான் வரைந்த படங்களோடும் முதலாவது இதழ் வெளிவந்தது. இவ்வாறு படங்களு வரைய நியமிக்கப்பட்ட எனக்கு பின்னர் செம்மலர்க்கு வரும் படைப்புகளைப் படித்துத் தேர்வு செய்யும் பொறுப்பும் தந்து அவர்கள் என்னைத் துணையாசிரியனாக்கினார்கள். செம்மலரோடு பிணைக்கப்பட்ட எனது பணி நாற்பது ஆண்டுகளைக் கடந்து தொடர்கிறது. கே.எம்., கு.சி.பா. தோழர்களை  இன்றும் நன்றியுணர்வோடு நினைத்துப் பார்க்கிறேன். தொடக்க கால முதலாவது ஆசிரியர் கு.சின்னப்ப பாரதியுடனும், பின்னர் நீண்டகால ஆசிரியராகப் பணியாற்றிய கே.முத்தையாவுடனும் இணைந்து பணியாற்றிய அனுபவங்கள் எனக்கு நிறைய உண்டு.

ஆறாம் வகுப்பு மட்டுமே படித்து, மண்ணோடும் மழையோடும் காற்று, வெயிலோடும் விவசாய வேலை செய்து கொண்டிருந்த நான்- சொந்த ஊரில் கட்சிப் பணியாற்றிக் கொண்டும் கட்சியின் தட்டிப் போர்டுகளில் அரசியல் கார்டூன்கள் வரைந்து கொண்டும் இருந்த நான் ஒரு பத்திரிகை கார்ட்டூனிஸ்ட்டாகவும் பத்திரிகையாளனாகவும் உயர்ந்ததற்கு அவர்களிடம் பெற்ற அனுபவங்கள் - முக்கியமாக கே.முத்தையா அவர்களிடம் பெற்ற அனுபவங்கள் - ஆலோசனைகள் உதவின.

செம்மலர்க்கு ஆரம்பம் முதல் பல ஆண்டுகளாக, உலோக எழுத்துக்களைக் கையினால் கோர்க்கும் மெட்டல் கம்போஸிங்தான். சதுரமான மரத்தட்டில் ஒவ்வோர் எழுத்துக்கும் தனித்தனி சதுரக்குழிகள் இருக்கும். தாளில் எழுதப்பட்ட கதை, கவிதை, கட்டுரை முதலானவற்றின் வாசக எழுத்துக்களைக் கூர்ந்து பார்த்தபடி, குழிகளில் உள்ள உலோக எழுத்துக்களை கம்பாஸிடர்கள் - கோழி இரைபொறுக்கும் வேகத்தில் எடுத்து வரிசைப்படுத்தி அடுக்குவார்கள். இந்த உலோக எழுத்துக்கள் கிலோ கணக்கில் எடைபோட்டு வாங்கப்படும்; தேய்ந்த பிறகு கிலோ கணக்கில் எடைப்போட்டு விற்கப்படும்! மீண்டும் மறுசுழற்சி செய்யப்பட்டு அவ்வெழுத்துக்கள் விற்பனைக்கு வரும்! இன்றுபோல் அன்று கம்ப்யூட்டர் வசதி இல்லை.

அவ்வாறு அடுக்கப்பட்ட உலோக எழுத்துக்கள் மற்றும் படம் பிளாக்குகள் இரும்புச் சட்டத்துக்குள் வைத்து வடிவமைக்கப்பட்டு பழைய மாடல் ரோட்டரி அச்சு இயந்திரத்தில் அச்சிடப்பட்டன. அன்று செம்மலர்க்கு ஆப்-செட் அச்சு இயந்திர வசதியெல்லாம் இல்லை. செம்மலர் அட்டைப்படம் கூட உலோகத் தகட்டில் 'பிளாக்' செய்யப்பட்டு 'டிரெடில்மிஷன்' என்று சொல்லப்படும் ஒரு சின்ன அச்சு இயந்திரத்தில்தான் பல வருடங்களாக அச்சிடப்பட்டு வந்தது.

ஆரம்பம் முதல் பல வருடங்களாக செம்மலர் அட்டையில் சமூக, அரசியல் நடப்புகள் குறித்த கேலிச் சித்திரங்கள், அரசியல் கார்ட்டூன்கள் வெளியிடப்பட்டு வந்தன. (அவை நான் வரைந்தவைதான்). பிறகு கலர் பின்னணியுடன் கருப்பு - வெள்ளைப் புகைப்படமாக டிரெடில் மிஷினில் அட்டைப்படம் அச்சிடப்பட்டு வந்தது. 1985 ஜுலையில் தான் முதன்முறையாக வெளியே ஒரு தனியார் கலர் ஆப்செட் அச்சகத்தில் செம்மலர்க்குப் பல வண்ண புகைப்படத்துடன் அட்டைப்படம் அச்சிடப்பட்டது.

அப்போது செம்மலரின் விலை ரூ.1.25.

நீண்டகாலமாக குமுதம் 'சைஸில்' வந்து கொண்டிருந்த செம்மலர் பிறகு 1995 செம்மலரில்தான் 'இந்தியா டூடே' சைஸ்-க்கு பெரிய அளவுக்கு மாறியது. இந்த அளவில் 48 பக்கங்களோடு வந்த செம்மலர் பிறகு 2009 ஜனவரி பொங்கல் சிறப்பிதழிலிருந்து 64 பக்கங்களாக வெளிவந்து கொண்டிருக்கிறது. பக்கங்களை அதிகரித்ததன் மூலம் கூடுதலான படைப்புகளுக்கும் படைப்பாளிகளுக்கும் இடமளிக்க முடிந்தது; வாசகர்களுக்கும் கூடுதல் படைப்புகளை வழங்க முடிந்தது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கமாக இன்று புதிய பரிணாமம் பெற்றுள்ள தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தாய் ஆக விளங்கும் பெருமையும் சிறப்பும் பெற்றது செம்மலர். 34 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் வந்து பங்கேற்ற 35 செம்மலர் எழுத்தாளர்களின் கூட்டம்தான் "தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்" எனும் அமைப்பினை தோற்றுவித்தது.

1974 நவம்பர் 24, 25 தேதிகளில் இதற்கான செம்மலர் எழுத்தாளர்கள் கூட்டம் மதுரையில் உள்ள திடீர் நகரில் தொழிலாளர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. செம்மலரில் வெளிவரும் படைப்புகள் பற்றியும், அதன் வளர்ச்சி பற்றியும், அன்றைய தமிழ் இலக்கியங்களின் நிலை பற்றியும் விவாதிக்கப்பட்டது. செம்மலர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இலக்கிய ஏடு என்பதால் இயல்பாகவே அதன் தலைவர்கள் ஏ.பாலசுப்பிரமணியம், எம்.ஆர்.வெங்கட்ராமன், ஏ.நல்லசிவன், என்.சங்கரய்யா, செம்மலர் ஆசிரியர் கே.முத்தையா ஆகியோர் வருகை தந்து உரையாற்றி ஆலோசனைகள் கூறி வழிகாட்டினர்.

இக்கூட்டத்தில்தான், முதலாவது தமுஎச கொள்கை அறிக்கை தயாரிப்பதற்காக 14 பேர் கொண்ட அமைப்புக்குழு தேர்வு செய்யப்பட்டது. 1975 ஜூலை 12, 13 தேதிகளில் மதுரையில் நடைபெற்ற தமுஎச-வின் முதலாவது அமைப்பு மாநாட்டில், அந்த செம்மலர் எழுத்தாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற எழுத்தாளர்கள்தான் தமுஎசவின் முதலாவது மாநிலக்குழுவாகத் தேர்வு செய்யப்பட்டனர். செம்மலர் ஆசிரியர்தான் (கே.முத்தையா) இவ்வமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். எனவே, இன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கமாகப் பரிணமித்துள்ள தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தாய் செம்மலர் என்பது ஒரு வரலாறு.

1975 முதல் 77 வரை இந்தியா முழுவதும் மத்திய காங்கிரஸ் அரசு திணித்தது எமர்ஜென்ஸி ரூல் எனும் அவசர நிலை ஆட்சியை ஜனநாயகம் முடக்கப்பட்டது. எழுத்துரிமை, பேச்சுரிமை, பத்திரிகைச் சுதந்திரம் பறிக்கப்பட்டன. சுதந்திரம், உரிமை, ஜனநாயகம், சர்வாதிகாரம், போராட்டம், பஞ்சம், வறுமை முதலானவை பற்றியெல்லாம் பத்திரிகைகளில் எழுத முடியாத அந்தச் சொற்களைக் கூட பயன்படுத்த முடியாது. அப்படி தணிக்கை அமல் நடத்தப்பட்டது. அந்த அரைப்பாசிச ஆட்சியைப் பற்றி மென்மையாகக் கூட விமர்சிக்க முடியாது. தீக்கதிர், தினகரன், தினமணி, இண்டியன் எக்ஸ்பிரஸ், முரசொலி ஆகிய பத்திரிகைகள் கடும் தணிக்கைக்கு இலக்காயின. இவற்றில் கொடூரமான தணிக்கை தீர்க்கதிர்க்குத்தான். பாரதியார் பாடலை முரசொலியில் கூட போடலாம்; ஆனால் தீக்கதிர் போட்டுவிட முடியாது. தணிக்கை அதிகாரிதான் சூப்பர் எடிட்டர்! எந்தச் செய்தியும் - எந்த விஷயமும் அந்த 'சூப்பர்'க்கு அனுப்பாமல் - அவர் பார்க்காமல் - அவர் படிக்காமல் - அவர் கை வைக்காமல் பத்திரிகையில் பிரசுரித்துவிட முடியாது!

இலக்கியப் பத்திரிகையாகிய செம்மலர் மீது தணிக்கை கடுமையாகப் பாயவில்லையென்றாலும் சுதந்திரமாய் எழுத முடியாத ஒரு நெருக்கடியில் சிக்கியிருந்தது செம்மலர். தணிக்கை அதிகாரம் தொடர்ந்து மிரட்டிக் கொண்டிருந்தது. இந்திராவின் 20 அம்சத்திட்டத்தை செம்மலரில் வெளியிட வேண்டுமென்று தந்திரமாய்க் கூறியபோது அதற்கு இணங்கவில்லை செம்மலர். ஒவ்வொரு மாதமும் வெளியானவுடன் செம்மலர் ஒரு பிரதி தணிக்கை அதிகாரியின் பார்வைக்கு வந்துவிட வேண்டுமென கட்டாயப்படுத்தப்பட்டது. வெண்மணி தியாகிகள் படம் கூட தணிக்கை அதிகாரி தேர்ந்தெடுத்து அனுமதித்ததைத்தான் அச்சிட முடிந்தது. கடும் தணிக்கைக்குள் செம்மலரும் சிக்கிவிடக்கூடாதென சுய தணிக்கையுடன் செயல்பட வேண்டிய நிலைமை.

சென்னையில் 1995 மார்ச் 27 அன்று செம்மலர் 25-ஆம் ஆண்டு நிறைவு வெள்ளிவிழாக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. தீக்கதிர் - செம்மலர் ஏடுகளின் பொது மேலாளர் ஏ.அப்துல் வஹாப் தலைமையில் நடைபெற்ற அவ்விழாவில் எழுத்தாளர்களும் வாசகர்களும் ஏராளமானோர் பங்கேற்றனர். மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் என்.சங்கரய்யா, மதிமுக தலைவர் வைகோ, இயக்குநர் பாலுமகேந்திரா, சு.சமுத்திரம், கவிஞர் ஈரோடு தமிழன்பன், எழுத்தாளர் மாலன், "தாமரை" ஆசிரியர் மகேந்திரன், உ.வாசுகி, எஸ்.ஏ.பெருமாள், ச.செந்தில்நாதன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். சு.வெங்கடேசனும், ஸ்ரீரசாவும் வாழ்த்துக்கவிதைகள் வாசித்தனர். நிறைவாகத் தொகுப்புரை வழங்கினார் அருணன்.

செம்மலர் மனிதநேயத்திற்காக, மக்களின் ஒற்றுமைக்காக, முற்போக்குக் கொள்கைக்காகப் பாடுபடும் பத்திரிகையென்றும், பெண்மைக்கு உயர்வு தருகிறதென்றும், செம்மலர் 25 ஆண்டுக்காலமாக நெஞ்சில் உரத்தோடும் நேர்மைத் திறத்தோடும் செயல்பட்டு வருகிறதென்றும், செம்மலர் 25 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறதென்றால் அதற்குப் பின்னால் ஒரு லட்சிய இயக்கம் - வீரம் செறிந்த வரலாற்றைக் கொண்டிருக்கிற ஓர் இயக்கம் இருக்கிறதென்றும், இது வெள்ளிவிழா மட்டுமல்ல ஒரு வெற்றி விழாவும் கூட என்றும் அவர்கள் செம்மலரின் சிறப்புகளை உணர்ச்சித் ததும்ப எடுத்துக் கூறி வாழ்த்தினர். செம்மலர் வெள்ளிவிழா மலரை என்.சங்கரய்யா வெளியிட, முதல் பிரதியை சு.சமுத்திரம் பெற்றுக் கொண்டார். கே.முத்தையா, கு.சின்னப்ப பாரதி, நான் (தி.வரதராசன்) ஆகிய மூவரும் சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டோம்.

செம்மலர் தோன்றிய காலத்தில் - 1970களில் தமிழ்க் கவிதையுலகில் புதுக்கவிதை புதிய வீச்சுடன் பிரவேசித்தது. மரபுக் கவிதையின் இலக்கணத்தை மீறிய - சந்தங்களைப் புறந்தள்ளிய - இந்த வடிவத்திற்கு ஒரு பக்கம் கடும் எதிர்ப்பும் மற்றொரு பக்கம் உற்சாகமான வரவேற்பும் இருந்தது. இரண்டில் எது சிறந்தது என்பது பத்திரிகைகளிலும், இலக்கிய நிகழ்வுகளிலும் சூடான விவாதப் பொருளானது. படிமம், குறியீடு, கூடார்த்தம் என்று பாலுணர்ச்சியை முதன்மையாகக் கொண்ட பிராய்டிஸத்தையும் வாழ்க்கையின் மீதான நிராசையையும் நம்பிக்கை வறட்சியையும் புதுக்கவிதையில் ஒரு தரப்பினர் எழுதிக் கொண்டிருக்க, மற்றொரு தரப்பினர் புதுக்கவிதை வடிவத்தில் வாழ்வின் மீதான நம்பிக்கையையும் முற்போக்கான சிந்தனைகளையும் எழுதினர்.

மரபுக்கவிதையா? புதுக்கவிதையா?  - எனும் வடிவச் சர்ச்சை செம்மலரிலும் எதிரொலித்தது.  செம்மலர் இந்த இரண்டு வடிவங்களையும் வரவேற்றது. ஆனால் அவை மக்களுக்கான சிறந்த உள்ளடக்கமும் மனதைத் தொடும் கவித்துவமும் கொண்டவையாக இருக்க வேண்டும் என்றது. இன்றும் இதே நிலைதான். இலக்கியத் தத்துவக் களத்தில் செம்மலர் சரியான - அழுத்தமான- வலுவான வாதங்களை முன் வைத்திருக்கிறது. இருத்தலியல், அமைப்பியல், சர்சியலிசம், பின் நவீனத்துவம் போன்ற இஸங்கள் தமிழ் இலக்கியத்தில் புகுந்து ஆதிக்கம் செலுத்துவதை செம்மலர் தொடக்க காலம் முதலே எதிர்த்துச் சமர்புரிந்து வருகிறது. இலக்கியத்தில் மனிதநேயத்தைக் கூடமறுதலிக்கிற இத்தகைய இஸங்கள் வாசகர் களத்தில் வெற்றிபெறவில்லை என்பதே உண்மை!

மனிதவாழ்வை - சமூக வாழ்வை உண்மையும் உணர்வுமாகச் சித்தரித்துக் காட்டுகிற - நல்லதொரு எதிர்காலத்தின் மீது நம்பிக்கை கொள்ளச் செய்கிற-யதார்த்தவாதப் படைப்புகளே இன்று வெற்றி பெற்றுள்ளன; விரிந்த வாசகர் பரப்புக்குச் சென்றடைந்துள்ளன. எல்லாருக்கும் புரிகிற மொழியிலான இத்தகைய யதார்த்தவாதப் படைப்புகளே ஜனநாயகத் தன்மை கொண்டதும் கூட. இதில் செம்மலரின் பங்களிப்பு மகத்தானதாகும். சோவியத் வீழ்ச்சிக்கும் சோசலிசத்தின் பின்னடைவுக்கும் பிறகு சோசலிச யதார்த்தவாதம் காலாவதியாகிவிட்டது என்று இலக்கியக் களத்தில் ஒரு கருத்து எழுந்தபோது அந்தக் கூற்றை மறுத்து சரியாக வாதிட்டது செம்மலர்.

செம்மலர், இளம்படைப்பாளிகளின் சிறுகதை, கவிதைகளை வெளியிட்டு அவர்களின் படைப்பு ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் ஊக்கப்படுத்துகிறது. அவ்வாறு வளர்ந்த எழுத்தாளர்கள் பலர் உண்டு. செம்மலர், இளம் எழுத்தாளர்களுக்கு ஒரு பயிற்சிக் களமாகவும் விளங்குகிறது. செம்மலரின் அடுத்தகட்ட வளர்ச்சிக்காக 9 பேர் கொண்டதாக ஆசிரியர்க்குழு கடந்த ஆண்டு அக்டோபரில் விரிவுபடுத்தப்பட்டது. அவர்கள் எஸ்.ஏ.பெருமாள் (ஆசிரியர்), ச.தமிழ்ச்செல்வன் (பொறுப்பாசிரியர்), அருணன், மதுக்கூர் இராமலிங்கம், தி.வரதராசன், மேலாண்மை பொன்னுச்சாமி, இரா.நாகராஜன், சு.வெங்கடேசன், உதயசங்கர். இதழின் வடிவமைப்பாளராக மாரீஸ்.

இந்த நாற்பதாம் ஆண்டு நிறைவு விழா வேளையில் அன்று செம்மலர் வெள்ளிவிழாவில் மார்க்சிஸ்ட் தலைவரும் சிறந்த இலக்கிய விமர்சகருமான என்.சங்கரய்யா அவர்கள் விடுத்த ஒரு வேண்டுகோளை இங்குக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்: "இன்று செம்மலருக்கு என்ன தேவை? இன்றுள்ள விற்பனை அளவு போதாது என்று கருதுகிறேன். அது இன்றைக்கு இருப்பதைக் காட்டிலும் பல மடங்கு வாசகர்களைச் சம்பாதிக்க வேண்டும்."

செம்மலரில் வெளிவந்த தொடர் நாவல்கள்

உலைக்களம் - கே.முத்தையா

விளைநிலம் - கே.முத்தையா

தாகம் - கு.சின்னப்பபாரதி

நீயா, நானா? - ஜானகி காந்தன்

அணைக்கட்டிலிருந்து சுரங்கம் வரை - ஜானகி காந்தன்

மூலதனம் - டி.செல்வராஜ்

கண்கள் - ராஜம் கிருஷ்ணன்

சத்திய ஆவேசம் - சு.சமுத்திரம்

ஓரடி முன்னால் - எஸ்.மணிவண்ணன்

இனி - மேலாண்மை பொன்னுச்சாமி

சரயூ - அருணன்

ஆனந்தாஸ்ரமம் - அருணன்

 

Pin It