தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அன்றைய முகவை மாவட்ட  ஸ்தாபகத் தலைவர் தோழர் சிபி என்ற சி.பாலசுந்தரம்(வயது 63) 16.2.2012 அன்று ராஜபாளையத்தில் காலமானார். கடந்த தமுஎகச மாநில மாநாட்டை சிறப்புற விருதுநகரில் நடத்துவதற்கு முன்னணியிலிருந்து பாடுபாட்டார்.

1970ம் ஆண்டு தஞ்சாவூர் பெர்மனன்ட் பாங்கில் பணியாற்றிய சிபி தனது தொழிற்சங்க நடவடிக்கையால் பழிவாங்கப்பட்டு ராஜபாளையத்திற்கு மாற்றலாகி வந்தார். தோழர் எஸ்.ஏ.பி.யின் நெருங்கிய சகாவாகி தமுஎகசவைக் கட்டுவதிலும், தொழிற்சங்கம், மாணவர், வாலிபர், மாதர், எழுத்தாளர் சங்கங்களைக் கட்டுவதில் தீவிரமாகப் பணியாற்றினார். சாதாரணத் தொழிலாளி முதல் ஆலை முதலாளிகள் வரை அவர் மிகுந்த அன்போடும் பண்போடும் பழகி அனைவரையும் இயக்க வளர்ச்சிக்குப் பயன்படுத்தினார்.

C.B._250கி.ராஜநாராயணன் முதல் பல எழுத்தாளர்களை அழைத்து விருதுநகர் மாவட்டத் தோழர்களுக்கு இலக்கியப் பயிற்சி முகாம்களை நடத்தியவர். ஆண்டுதோறும் தோழர் ஆர்.டி.எஸ் உடன் இணைந்து ராஜபாளையத்தில் பிரம்மாண்டமான கலை இரவுகளை நடத்தியவர். மேலாண்மை பொன்னுச்சாமி, பாரதி கிருஷ்ணகுமார், எஸ்.கண்ணன், எ°.ராமகிருஷ்ணன் போன்ற தோழர்களை வளர்த்தெடுப்பதில் உதவியாக நின்றவர்.

இந்தியன் வங்கி ஊழியர்கள் சங்கத்தைக் கட்டுவதிலும் (பெஃபி) பெரும்பங்காற்றினார். தோழர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் மீது மிகுந்த அக்கறை செலுத்தி உதவியவர். சிறந்த ஓவியர்.

மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினராகப் பல ஆண்டுகள் செயல்பட்டவர். நாற்பதாண்டுகாலப் பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரர். தனது குடும்பத்தோடும் இயக்கம் முழுமைக்கும் ஆதரவாக இருந்தார். கட்சித் தலைவர்கள் பி.ராமமூர்த்தி, எம்.ஆர்.வெங்கட்ராமன், வி.பி.சிந்தன், ஏ.பாலசுப்பிரமணியம் போன்ற தலைவர்கள் யார் ராஜபாளையம் வந்தாலும் சி.பி.வீட்டில் உண்டு மகிழ்ந்து உரையாடிச் செல்வர்.

மறைந்த சி.பி.யின் அன்பு மனைவி கீதா, மகன்கள் ஆனந்த், ஸ்ரீகாந்த் ஆகியோருக்கு நூற்றுக்கணக்கானோர் கண்ணீர் வழிய ஆறுதல் கூறினர். 17.2.2012 நடைபெற்ற இறுதிச்சடங்கில் தோழர் கணேசன் தலைமையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன், எஸ்.ஏ.பி., எம்.என்.எஸ்.வெங்கட்ராமன், அ.சேகர், எஸ்.பாலசுப்பிரமணியன், சாமுவேல்ராஜ், எம்.அசோகன், சி.மாரிக்கனி, பாரதி கிருஷ்ணகுமார், லட்சுமிகாந்தன் ஆகியோர் பேசினர். நிறைவாக தமுஎகச மாநிலத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் இரங்கல் உரையாற்றினார்.

மாளாத சோகம் மனதைக் கவ்வியபோதும் அவர் விட்டுச் சென்ற பணிகளைத் தொடர கூட்டம் சபதமேற்றது.

Pin It