சிறுகதை:

இராஜபாண்டிக்கு இருப்புக் கொள்ள இயல வில்லை. குட்டிபோட்ட பூனைபோல அங்கு மிங்கும் சுற்றினான். என்ன  செய்வதென்றே தெரியவில்லை. வீட்டிற்கும் விரைந்து சென்றான். ஏமாந்து திரும்பினான். அவன் எதிர்பார்த்த தபால் வரவில்லை.

அறுத்துப்போட்ட கீரையாய்ச் சுருங்கினான். தண்ணீரில்லா தக்காளியாய்த் துவண்டான். படபடப்பானான். பரபரப்பு முகத்தில் அப்பட்ட மாய்த் தெரிந்தது. அலுவலகம் சென்றான்.

“சார், எனக்கு தபால் வந்துச்சா சார்?”

“இல்லியே பாண்டி”

“மத்தவங்களுக்கெல்லாம் இன்டர்வியூ லெட் டர் வந்திருக்கு. எனக்கு மட்டும் வரல சார்.”

விசாரிப்புகள் தொடர்ந்தன. வாகனப் பொறுப் பாளரான பொறியாளரை அணுகினான்.

“நீங்க அஞ்சி பேரும் ஒரே நாளில் தான் அனுப்பு னீங்க. உனக்கு மட்டும் வரலன்னா அதிசயமா இருக்கு. ஆபிஸ்ல கேட்டுப் பாத்தியா?”

“வரலியாம் சார். வீட்லயும் பாத்திட்டேன். இல்ல சார்.” பரிதாபத்தோடு கூறினான்.

“இந்த கவர்மென்ட் இருக்கும் போதுதான் ரெக்ரூட்மென்ட் நடக்கும். அடுத்த வருசம் ஒரு வேளை ஆட்சி மாறிட்டா இதப்பத்தி பேசவே முடியாது. இதுதான் சார் கடைசி சான்ஸ். என் வாழ்க்கையே இதிலதான் அடங்கியிருக்கு.”

“ஒண்ணும் கவலப்படாத. எல்லாம் நல்ல படியா நடக்கும். போஸ்ட் ஆபீசில போய்க் கேட்டுப் பாரேன்.” - உதித்த யோசனையை கூறினார்.

தபால் அலுவலகமும் சென்று வந்தான். மீண்டும் ஏமாற்றம்.

துறைத்தலைவரிடமும், கல்லூரி முதல்வரிட மும் சென்று முறையிட்டான். கெஞ்சினான்.

“சார், நான் தான் முதல்ல அப்ளிகேசன் கொடுத் தேன். நம்ம டிபார்ட்மென்ட்லிருந்து அனுப்புன வங்க கூடத்தான் என் அப்ளிகேசனும் போயிருக்கு. அவுங்களுக்கு இன்டர்வியூ கார்டு வந்திட்டு. எனக்கு வரல சார். ரெஜிஸ்டர் ஆபீஸ்ல போன் பண்ணி உதவி செய்யுங்க சார்”

“நீயே நேரடியாய் போயி பாத்துக்கோ” இரு வரும் பல்கலைக்கழகம் பதிவாளரின் நெருங்கிய நண்பர்களாயிருந்தும் கைவிரித்தனர். நழுவி விட்டனர். இவர்களுக்காக இரவு பகல் பாராது, தூக்கம் கெட்டு வருடக்கணக்காக ஓட்டுநராகப் பயணித்திருக்கிறான். அவர்களின் சொகுசுக்கும் வசதிக்கும் தனது ஓட்டுநர் உழைப்பை உண்மை யாக அர்ப்பணித்திருக்கிறான்.

மனைவி சரண்யா ஒரு யோசனை தெரிவித்தாள்.

“தமிழ்ச்செல்வி மேடம் கிட்ட கேட்டுப் பாருங்க. நமக்கு எத்தனையோ உதவி பண்ணியிருக் காங்க. அவுங்க பி.எச்டி. படிக்கும்போது ரெஜிஸ்ட் டரோடு ஸ்டூடண்ட்”

“நீயே ஆபீஸ் டைப்பிஸ்ட் வேல முடிஞ்சதும் சாய்ந்தரம் அவுங்க வீட்ல துணி துவைக்கிற, பாத்திரம் கழுவுற, பிள்ளைகளைக் கவனிக்கிற வேல செய்யிற. அவுங்ககிட்டப் போய் எப்படிக் கேக்கிறது...”மருகினான் ராஜபாண்டி.

“மனுசங்கள்ல நல்லவங்களும் இருக்காங்க. நம்ம கஷ்டப்படும் போது மனுசங்க தானே கடவுள் ரூபத்தில் வந்து உதவுறாங்க. போன வருசம் சின்ன வனுக்கு நடுராத்திரியில குளிர்காய்ச்சல் வந்தப்ப, அவுங்க தானே இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து உதவி செஞ்சாங்க.”

சோர்வுற்றிருந்தவனை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றாள். இருவரும் தமிழ்ச் செல்வி முன் பவ்யமாக நின்றனர்.

“வாங்க சரண்யா. உட்காருங்க. நீங்களும் உட் காருங்க”. தான் தினக்கூலி டைப்பிஸ்ட்டாக இருந் தும் தன்னை அமரச் சொன்ன விரிவுரையாளர் தமிழ்ச்செல்வியின் பெருந்தன்மையின் முன் கூசி னர்.

“டிரைவர் வேலைக்கு இன்டர்வியூ வந்திருக்கு. இவருக்கு இன்டர்வியூ கார்டு வரவேயில்ல மேடம். ரெஜிஸ்டர் ஆபீஸ்ல கேட்டுப் பாருங் களேன் மேடம்”.

தமிழ்ச்செல்வி உடனடியாக காரியத்தில் இறங் கினாள். பதிவாளரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டாள். விவரம் தெரிவித்தார்.

பதிவாளர் தனது அலுவலகத்தில் நேரடியாகத் தானே கோப்புகளைப் பார்த்தார். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்களில் ராஜபாண்டி யன் பெயர் இல்லை என்ற அதிர்ச்சித் தகவலைத் கூறினார். மேலும், ராஜபாண்டியின் விண்ணப்பம் தாமதமாக வந்ததால் நிராகரிக்கப் பட்டு விட்ட தாகவும் கூறினார்.

ராஜ பாண்டி நிலை குலைந்தான். செய்தியை ஜீரணிக்க முடியவில்லை. சரண்யாவும் வாழ்க்கை யே முடிந்து விட்டதாகப் புலம்ப ஆரம்பித்தாள்.

“ஏற்கனவே ஆறு தடவ இன்டர்வியூக்குப் போயிருக்கேன் மேடம். ஒரு லட்சம் இரண்டு லட்சம்னு கொடுக்காததால கிடைக்கல. மொத்தம் இருபது வருசம் தினக்கூலி லேபராவே வேலை. அதிலயும் பதினஞ்சி வருசம் தினக்கூலி டிரைவரா இப்ப வரை வேல பாத்துக்கிட்டிருக்கேன் மேடம். இந்த பெர்மனென்ட் டிரைவர் வேல கிடைச்சா வாழ்க்கையை கடனில்லாம ஓட்டிருவேன் மேடம். இவளும் உங்க வீட்ல லீவு நாள்லயும், மற்ற நாள்ல சாய்ந்தரமும் சம்பளத்துக்காக  பாத்திரம் கழுவுற வேலய விட்ரலாம் மேடம்” ராஜபாண்டியின் கெஞ்சலுக்கு தமிழ்ச்செல்வி செவி சாய்த்தாள்.

“நாளைக்கி சென்னை போங்க. ரெஜிஸ்டிரார் கிட்ட நேரடியாப் பேசுங்க. நிலைமையைச் சொல் லுங்க. நானும் போனில அவர்கிட்ட பேசுறேன். ஏதாவது வழி பிறக்கும்” ஆறுதல் வார்த்தைகளால் சற்று நிம்மதியானார்கள் ராஜபாண்டியும் சரண்யா வும்.

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்திற் குட்பட்ட ஒரு அரசுக் கல்லூரியிலிருந்து ஓட்டுநர் பதவிக்கு முதன்முதலில் விண்ணப்பம் பூர்த்தி செய்து உயரதிகாரி, துறைத்தலைவர், முதல்வர் என உரிய வழிமுறையாகச் ஒரு விண்ணப்பம் சமர்ப்பித் தான் ராஜபாண்டி. அதை அலுவலகத்தில் கிடப் பில் போட்டனர். பத்து நாள் கழித்து மற்றவர்களின் விண்ணப்பங்களுடன் சேர்த்து சென்னைக்கு அனுப்பினர்.

விரைவுத் தபாலில் அனுப்பிய இவன் விண்ணப் பம் மட்டும் நாலாவது நாளில்தான் பல்கலைக் கழக பதிவாளர் அலுவலகத்தில் சேர்ந்தது.

திருச்சியிலிருந்து கிளம்பும் முன் தபால் அலுவல கத்தை அணுகினான். அது அங்கிருந்தே ஒருநாள் தாமதமாகத்தான் அனுப்பப்பட்டிருந்தது. அதற் கான பதிவு எண்ணையும் தேதியையும் குறித்துக் கொண்டான்.

women_370_copyசென்னை புறப்பட்டுவிட்டான். மறுநாள் மணிக் கணக்கில் காத்திருந்து பதிவாளரையும் துணை வேந்தரையும் பார்த்தான். அவர்களுக்கும் பல நாட்கள் ஓட்டுநராக இருந்ததாலும் தமிழ்ச்செல்வியின் தொலைபேசித் தகவலாலும் இவன் விசயமறிந் தான்.

“தபால் லேட்டுக்கு ஒண்ணும் செய்ய முடியா துப்பா. பாக்கலாம்” என்று பொதுவாகக் கூறி விட்டனர். வெம்பி வதங்கிவிட்டான்.

தலைமைத் தபால் அலுவலகத்திலிருந்து பல் கலைக்கழக கிளைத் தபால் அலுவலகம் மூலம் பதி வாளர் அலுவலகத்திற்கு விண்ணப்பம் வந்துசேர இரண்டு நாள் ஆகிவிட்டிருந்தது. விரைவுத் தபால் சேவை இவன் வாழ்வில் எதிர்மறை விதியாய் நடனமாடி நர்த்தனம் புரிந்தது.

திருச்சி திரும்பி விட்டான். சரண்யாவுடன் தமிழ்ச்செல்வியைச் சந்தித்தான். நடந்ததைக் கூறினான்.

“வர்ற திங்கக்கிழம இன்டர்வியூ மேடம். காலைல எட்டு மணிக்கே இன்டர்வியூவாம். சனி, ஞாயிறு ரெண்டு நாள் தான் இருக்கு. என்னால போக முடியாது. என் வாழ்க்கையே முடிஞ்சிடுச்சி” இயலாமையால் புலம்பினான். புழுங்கினான்.

“இன்னைக்கும் ரிஜிஸ்டிரார் கிட்ட பேசுறேன். நீங்க தைரியமாப் போங்க” எல்லாம் முடிந்துவிட்ட போதும் நம்பிக்கை கூறினாள் தமிழ்ச்செல்வி. அன்றிரவே பதிவாளரிடம் அரைமணி நேரமாய் ராஜபாண்டி விசயம் பற்றி பேசினாள். அவனது ஏழ்மை நிலை, சத்தியமான உழைப்பு, திறமை, இருபது வருட தினக்கூலி அனுபவம் பற்றி விளக் கினாள். கல்லூரி அலுவலக மற்றும் அஞ்சலகத் தாமதத்தின் நிஜத்தைப் புரிய வைத்தாள்.

ராஜபாண்டியும் சரண்யாவும் சோகத்தின் உச்சிக்கே சென்று விட்டனர். சாப்பிட முடிய வில்லை. சரியான தூக்கமில்லை. திங்கள் கிழமை காலை 8 மணி சென்னையில் பல்கலைக்கழக வளாகம். நேர்முகத் தேர்வு தொடங்கியிருந்தது. பல் வேறு கல்லூரிகளிலிருந்து எண்பதுக்கும் மேற்பட் டோர் குவிந்திருந்தனர்.

‘மூணே மூணு டிரைவர் போஸ்ட்டுக்கு இவ் வளவு கூட்டமா? எவன் எவன் பணம் கொடுத்திருக் கானோ? யாருக்குத்தான் கிடைக்கப் போகுதோ?’ வந்திருந்தவர்கள் மனதுக்குள் முனங்கினர்.
வரிசையாக பெயர்கள் வாசிக்கப்பட்டன. எட்டாவதாக ராஜபாண்டியின் பெயரும் அழைக் கப்பட்டது. உடனே தகவல் அலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்டது.

ராஜபாண்டியும் சரண்யாவும் மீண்டும் தமிழ்ச் செல்வியின் முன்னால்.

“நானே எதிர்பார்க்கல. ரொம்ப சந்தோசம். எல் லாம் அவன் செயல். உடனே கிளம்புங்க. இந்தாங்க சாவி. என் காரிலே போங்க” கேட்குமுன்பே கொடுத்து வள்ளலாய்ப் பிரகாசித்தாள். திருப்பு முனை ஏற்படுத்தித் தந்த தமிழ்ச் செல்வியைத் தெய் வமாய் மனதில் தொழுதாள். கைகூப்பி விடை பெற்றாள் சரண்யா.

புறவழிச்சாலையில் மூன்றரை மணி நேரத்தில் சீறிப்பாய்ந்து சென்னையை அடைந்தான். சரண்யா வும் உடன் சென்றாள்.

‘இவருக்கும் நாப்பது வயசுக்கும் மேல ஆகிடுச்சி. இந்த வேல கிடைக்கணும். மூத்த மகள் வயதுக்கு வந்துவிட்டாள். இளையவனை மெட்ரிக் குலேசன்ல சேக்கணும். நல்லாப் படிக்க வச்சி இஞ்ஜினியராக்கணும்’ -காரில் செல்லும்போது சரண்யாவின் மனசு அக்கினிச் சிறகுகளாய், கனவு களாய் விரிந்தது.

நேர்முகத் தேர்வு ஏதோ கடமைக்கென முடிந் தது.

“ஒரு வாரத்தில லிஸ்ட் வந்திருமாம். பணம் புகுந்து விளையாடுது” -பெரும்பாலானோர் பேசிக் கொண்டனர். ராஜபாண்டி மீண்டும் கலக்க மானான்.

சொல்லி வைத்தாற்போல் ஏழாவது நாளில் பணிக்குத் தேர்வானவர்கள் பட்டியல் வெளியிடப் பட்டது. புதிருக்கே புதிராய் இருந்தது. மூவரில் ராஜபாண்டியும் ஒருவன். மற்ற இருவரும் அடிப் படைத் தகுதியான பத்தாண்டு அனுபவமில்லாத வர்கள். அவர்கள் தலைமையிடமான சென்னையில் பல்கலைக்கழகத்தில் தற்காலிகப் பணியில் சேர்ந்து இரண்டே வருடங்கள்தான் ஆகியிருந்தன. நேர் முகத் தேர்வில் பங்கேற்றவர்களில் வயது, தகுதி, அனுபவங்களில் மூத்தவன் ராஜபாண்டிதான். முதன்மையானவனும் அவனே. அதனால்தான்,

“நல்லதுக்கும் காலமிருக்கு. ராஜ பாண்டிக்கு மட்டுமாவது மெரிட்ல வேல கிடைச்சிருக்கு. இத்தனை வருசம் கஷ்டப்பட்டு உழச்சதுக்கு விடிவு காலம் பிறந்திருக்கு” கல்லூரியில் இதுபோன்ற பேச்சுக்கள் ஆங்காங்கே காற்றில் கலந்து உருத் தெரியாமல் மறைந்து போயின.

ராஜபாண்டியும் சரண்யாவும் தமிழ்ச்செல்வி யின் வீட்டிற்கே வந்துவிட்டனர். கையிலுள்ள தட்டில் சாக்லேட்டும் லட்டுகளும். நன்றிப் பெருக் கில் வார்த்தைகள் எழவில்லை.

“எங்க வாழ்க்கையில ஒளி ஏத்திட்டீங்க மேடம். ரொம்ப நன்றி மேடம். உங்களுக்குத் தான் முதல்ல சுவீட்...” சரண்யா வார்த்தைகளைத் தேடித் தேடி பொறுக்கியெடுத்து விசுவாசம் காட்டினாள். கண் களிலிருந்து கண்ணிர்த் துளிகள் இரண்டு வெளி வந்து விட்டன.

“இதுக்கெல்லாம் அழக்கூடாது. ராஜ பாண்டிக்கு பெர்மனன்ட் வேல கிடைச்சிருக்கு. இன்னும் நாலஞ்சி வருசத்தில உனக்கும் வேலை கிடைக்கும். இனிமே டைப்பிஸ்ட் வேல மட்டும் தான் பாக்கணும். சாயந்தரம் எங்க வீட்டுல பாத்திரம் கழுவ, துணி துவைக்கிற வேலைக்கு வர வேண்டாம், வேற யாராவது இருந்தா சொல்லி விடு”

“நானே தொடர்ந்து வர்றேன் மேடம். நிலம அப்படியிருக்கு”

“என்ன சரண்யா, புதிர் போடுற...”

“ஆமா மேடம்...” -சரண்யா சொல்லச் சொல்ல தமிழ்ச்செல்விக்குத் திகைப்பாக இருந்தது.

“நாங்களும் பணம் கொடுத்துத்தான் இந்த வேலையை வாங்கினோம் மேடம். கெமிஸ்டிரி புரபசர் சார் மூலமா மேலிடத்துக்கு மூணு லட்சம் கொடுத்தோம். வேல கிடச்சதே பெரிசு. வெளியில ஏகப்பட்ட கடன் மேடம். உங்க வீட்டில வேல செஞ்சி சம்பளத்துல கொஞ்சம் கொஞ்சமா வட்டி யைக் கட்டலாம் மேடம்”

ராஜபாண்டியும் உள்ளுக்குள் சோகத்தை மறைத்து வெளியில் மகிழ்ச்சியின் வெளிப்பாடு கலந்த நிலையில் காணப்பட்டான்.

“எத்தனதான் திறம, தகுதி, அனுபவம் இருந்தா லும் எனக்கும் மறைமுகமாகத்தான் வேல கிடைச் சிருக்கு மேடம். இந்த விசயத்த மத்தவங்க கிட்ட சொல்ல வேணாம் மேடம். அவுங்க எனக்கு மெரிட்லதான கிடைச்சதுன்னு நினைச்சிக் கிட்டிருக் காங்க. நீங்க எங்களுக்கு எவ்வளவோ உதவி செஞ் சிரிக்கீங்க மேடம். இந்த நிலைமையில வார்த்த வரல மேடம்... ரொம்ப நன்றி மேடம்...” -ராஜ பாண்டியும் நெகிழ்ந்தான்.

லஞ்சம் எனும் கொடுமையால் ராஜபாண்டியின் குடும்பம் பட்ட துன்பங்களைக் கேட்க கேட்க தமிழ்ச் செல்விக்கு மயக்கம் வருவது போலிருந்தது.

Pin It