விழுப்புரம் பேருந்து நிலையத்தில் இறங்கியபோதே உடம்பு சுடத் தொடங்கியிருந்தது அவனுக்கு. இல்லை; இது காய்ச்சல் இல்லை. பயமோ அல்லது பதட்டமோஅல்லது அதுபோன்ற ஏதோ ஓர் உணர்வுக்குத் தான் ஆட்பட்டிருக்க வேண்டும். அதுதான் காய்ச்சல் போலப்படுகிறது என்று தோன்றியது.

சின்னதுரையும் குமரேசனும் கூவாகம் பேருந்து நிற்குமிடத்தை விசாரித்துக் கொண்டிருந்தனர். நடையில் பின் தங்கும் இவனைப் பார்த்து,

“என்னடா?” - என்று கேட்டான் சின்னதுரை.

காய்ச்சல் விவகாரத்தைச் சொன்னதும்,

“மாத்திரை எதாவது வாங்கிக்கணுமாடா?” என்றான் குமரேசன். இவன் மறுத்துத் தலையசைத்து,
‘அதிகமா ஒன்னும் இல்லை; பாத்துக்கலாம்” என்றான்.

விழுப்புரம் பேருந்து நிலையமே வண்ணமயமான தோற்றம் கொண்டுவிட்டதாய்த் தோன்றியது. அந்தி நேர மஞ்சள் விளக்கொளியில் சரசரக்கும் புடவைகளும் மல்லிகைப் பூவின் வாசனையும் வளையலோசையும் என தேவலோக ரூபம் கொண்டிருந்தது விழுப்புரம். எதிர்ப்பட்ட நான்கு முகங்களில் மூன்று பேரின் முகங்கள் திருநங்கையரின் முகங்களாக இருந்தன.

ஏதேதோ பேருந்துகளில் வந்து இறங்குவதும் ஏறுவதுமாக இருந்தார்கள் அவர்கள். அதீத ஒப்பனையும் கட்டைக் குரலும் இயல்புக்கு மாறான அங்க அசைவுகளுமாக தங்கள் பால்மாறிய தன்மையை அடையாளப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

“கூவாகத்துக்கு பெசல் பஸ் வுடுறானுவ சார்... இந்த எடத்துலதான் வந்து நிக்கும். கூட்டம் தான் எச்சா இருக்குது. எடம்புடிக்கிறது தான் கஷ்டம்” என்று நீட்டி முழக்கிய நடுத்தர வயது பயணி, “வேண்டுதலா சார்?” என்றபடி குமரேசன் முகத்தை ஆராய்ந்தான்.

தங்கள் கைகளில் இருந்த கேமரா பைகளைச் சுட்டிக்காட்டித் தாங்கள் பத்திரிகையாளர்கள் என்பதனை ஏதேதோ வார்த்தைகளில் அளந்து கொண்டிருந்தான் குமரேசன். வாய் பிளந்தபடி கேட்டுக் கொண்டிருந்த அந்த நடுத்தர வயதுக்காரன் இவர்களைக் கொஞ்சம் மரியாதை கலந்த பார்வையுடன் பார்க்கத் தொடங்கியிருந்தான்.

“இதெல்லாம் கூடவா சார் பேப்பர்ல எழுவுறீங்க? ஒம்போதுகள பத்தி எழுவுறத கூட படிக்கிறானுவளா சார்? எல்லாம் காலத்தோட கோலம் சார்..”

- என்றபடி ஏதேதோ பேசிக்கொண்டிருந்தான் அந்த நடுத்தர வயது.

குதுகுதுவென்று வந்தது இவனுக்கு. கால்கள் லேசாய் நடுங்கத் தொடங்கின. கொஞ்ச நேரம் எங்காவது உட்கார்ந்தால் தேவலை போலப்பட்டது.

சுற்றுமுற்றும் பார்த்தபோது பின் பக்கமாக இடுப்பளவுச் சுவர் எழுப்பப்பட்ட மூத்திரப்பிறை தான் கண்ணில்பட்டது. எங்கோ தலையை நிமிர்த்தி வேடிக்கை பார்த்தபடி இரண்டு ஆண்கள் இயற்கை அழைப்புக்குச் செவி சாய்த்துக் கொண்டிருந்தார்கள். மூத்திரம் வந்தால் எங்கே பெய்வது? என்ற வினாவை விவாதித்தபடி பேசிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள் பேருந்துக்குக் காத்திருந்த திருநங்கையர்.

ஏதோ ஒருஅருவெருப்பு உணர்வு படர அவர்களைப் பட்டும் படாமலும் வேடிக்கை பார்த்தான் இவன். ஏன்டா வந்தோமென்றிருந்தது இவனுக்கு. குமரேசனும் சின்னதுரையும் தங்கள் தொழில் நிமித்தம் வருகிறார்கள். தான் எதற்குச் சம்பந்தமில்லாமல் இவர்களோடு இணைந்து கொண்டோம் என்று தன்னையே நொந்து கொண்டான் அவன். வேடிக்கை பார்க்க நினைத்துப் புறப்பட்டு வந்தது தன் தவறுதான் என்று நினைத்தான்.

கூட்டத்திலிருந்த ஒரு திருநங்கை, இவன் வேடிக்கை பார்ப்பதைக் கவனித்து, உதட்டைச் சுழித்துப் புருவத்தை நெளித்து ஏதோ சேஷ்டை செய்தது. இவன் பதறிப் போய் பார்வையைத் திருப்பி வேறு பக்கம் பார்த்தான்.

“இவனுக்கு மட்டும் சீட் கெடச்சிட்டா பரவாயில்ல. பேக்கை இவன்கிட்ட கொடுத்துட்டு நாம நின்னுக்கலாம்” என்றான் குமரேசன்.

“ஜன்னல் வழியா சீட் போட்ற முடியுமா பார்ப்போம்” - சின்னதுரை.

நடுத்தர வயதான் சீட் பிடிப்பதைப் பற்றி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். குமரேசன் தலையைத் தலையை அசைத்துக் கேட்டுக் கொண்டிருந்தான்.

நீல வண்ணத்தில் ‘கூவாகம்’ என்று அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டிருந்த போர்டைத் தாங்கிய பஸ் திருப்பத்தில் எதிர்ப்பட்டதும் முருகேசனும் சின்னதுரையும் ஓடத் தொடங்கினர் இடம்பிடிக்க. திருவிழாவுக்காக விடப்பட்டிருந்த சிறப்புப் பேருந்து போலிருக்கிறது. அறிமுகமில்லாத வழித்தடத்தில் ஓடப்போகும் அந்நியத் தன்மையுடன் வந்து நின்றது அப்பேருந்து.

“சீ.. ஆளுங்க எறங்கவுட்டு ஏறுங்கய்யா... வழிய வுடுங்க... இப்டி இடிச்சிக்கினு நின்னா எப்புடியா எறங்குறது?” என்று கடுகடுத்தபடி இறங்கிப் போனான் ஒருவன்.

பஸ் ஜன்னல் வழியாக துண்டு, துணிப்பைகள் என்று எதையெதையோ எட்டிப் போட்டனர் சிலர். யாரோ ஒருவன் ஜன்னல் வழியே முயன்று தாவி ஏறி உள்ளே பாய்ந்தான்.

“வருசம்பூரா தான வசதியா போறிய... இன்னைக்கு ஒரு நாளாவது எங்களுக்கு எடம்விடப்புடாதா? அட ஆண்டவரே... ஆண்டவரே... கூத்தாண்டவரே...” என்றபடி இவன் பக்கத்தில் வந்து நின்று கூவிய திருநங்கையை முறைத்துப்பார்த்தபடி விலகி நின்றான் இவன்.

சின்னதுரை கசங்கிய சட்டையுடனும் வியர்த்த முகத்துடனும் வந்து பைகளை வாங்கிக் கொண்டு இவனைக் கூட்டிப்போனான். பேருந்தின் நடுவில் மூவர் அமரும் இருக்கையில் நடைவழிக்கு அருகில் இருக்கை பிடித்து அமர்ந்திருந்தான் குமரேசன். ஜன்னல் ஓர இருக்கையில் ஒரு பத்துவயதுச் சிறுமி அமர்ந்திருந்தாள். அவளுக்கு அடுத்ததாக எடுப்பான பல்லுடன் ஒருவன் அமர்ந்திருந்தான். குமரேசன் எழுந்து இவனுக்கு இடம்தந்து விலகி நின்றான். இவன் உட்காரும்போது சிநேகத்துடன் புன்னகைத்தான் எடுப்புப் பல்லன். பதிலுக்குச் சிரிப்பதா வேண்டாமா என்ற குழப்பத்துடன் உட்கார்ந்தான் இவன். இவனது மடியில் பைகளை வைத்துவிட்டு விலகி நின்றான் குமரேசன்.

பேருந்தின் உட்புறம் பார்வையை ஓடவிட்டான் இவன். பேருந்தில் முன்னும் பின்னும் எங்கும் எங்கும் திருநங்கையர் நிறைந்திருந்தனர். இன்று இரவு தொடங்கும் திருக்கல்யாணம் நிகழ்ச்சி, தேர், பிறகு தாலியறுப்பு வரை, மறுநாள் அதிகாலை வரை இவர்களோடுதான் இருக்க வேண்டும் என்பது நினைவுக்கு வந்தபோது பகீரென்றது இவனுக்கு. உடல்நிலையைக் காரணம்காட்டி, இப்பொழுதே இறங்கித் திரும்பி ஊருக்குப் போய்விடலாமா என்று தோன்றியது.

“இன்னிக்கு ஒருநா தான? கொஞ்சம் எங்களுக்கு எடம்விட்டா என்ன?”

என்ற கட்டைக்குரல் இவன் சிந்தனையைக் கலைத்தது.

bus_370அதீத ஒப்பனையுடனும் சரசரக்கும் புடவையுமாய் இவனை உரசிக் கொண்டு நின்ற திருநங்கையை ஏறிட்டுப் பார்த்தான் இவன். பதறி வலது பக்கம் சாய்ந்தான். இவனது உடல் முழுவதுமாய் தன் மேல் அழுத்த, பின் பக்கமாய்ச் சற்றே சாய்ந்து புன்னகையுடன் ஏற்றுக் கொண்டான் எடுப்புப் பல்லன். இவன் “சாரி... சாரி...” என்றபடி தன்மேல் சரிந்து நின்ற திருநங்கையை முறைத்தான்.

“ஏங்க... கொஞ்சம் தள்ளி உட்காந்து எடம் குடுக்க லாம் இல்ல? என்ன கொறஞ்சா போய்டு வீங்க? எங்க திருவிழாவுக்காக எங்கேங்கேர்ந்தோ வர்றோம். உள்ளூர்க்காரங்க கொஞ்சம் எடம் குடுத்தா என்னங்க?” என்றது அந்தத் திருநங்கை.

அதன்மொழியும் கொஞ்சலும் ஏங்க, என்னங்க, ங்க பதங்களை கிறக்கத்தோடு உச்சரிக்கும் தொனியும் எரிச்சல்படுத்த, யாராவது இந்த உரையாடலைக்  கவனிக்கிறார்களா என்று கவலைப்பட்ட படி ஏறிட்டுப் பார்த்தான் இவன். ஏதோ பேச்சுச் சுவாரஸ்யத்திவிருந்த குமரேசனும் சின்னதுரையும் தங்களது உரையாடலை அந்தரத்தில் தொங்கவிட்டு இவனைப் பார்த்தனர். இருவர் முகத்திலும் குறுஞ்சிரிப்புப் படர்ந்தது.

சின்னதுரை இவனைப் பார்த்துக் கண்ணடித்துச் சிரித்தான். அந்தக் கிண்டலை இரசிக்கிற மனநிலையில் இவன் இல்லை. முறைத்தான்.

“ஏம்பா...’ அதுதான் கேக்குதுல்ல. கொஞ்ச எடங்குடுத்தா என்னப்பா?” என்றான் சின்னதுரை கொஞ்ச என்பதை அழுத்திச் சொல்லி, தானே அதை ரசித்து வாய்விட்டுச் சிரித்தான் அவன். குமரேசனும் இளித்தபடி நின்றது இவனுக்கு மேலும் எரிச்சலைக் கிளப்பியது.

“நல்லா... எடுத்துச் சொல்லுங்க... ஏங்க கொஞ்சம் எடங்குடுங்க. ஒக்காந்துக்கிறேன்” என்றபடி இவனுடைய தோளைத் தொட்டு நெருக்கித் தள்ளியது அது.

“எடங்குடுப்பா...” என்றபடி சிரித்தான் சின்னதுரை. ஜன்னல் ஓரத்திலிருந்த சிறுமியைச் சற்றுத் தள்ளி உட்காரப் பணித்து, சிறிது இடம் தந்து நகர்ந்து உட்கார்ந்தான் எடுப்புப் பல்லன். வேறு வழியில்லை. நகர்ந்து உட்கார்ந்து இடமளித்தான் இவன்.

நெருக்கிக் கொண்டு உட்கார்ந்த திருநங்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்க முடியவில்லை.இதுவே உட்கார்ந்து வரட்டும் என்று இடம் விட்டு எழுந்து நிற்க முயன்றான் இவன்.

“ஏங்க... சித்த நேரந்தான்... அட்சஸ் பண்ணி ஒக்காருங்களேன்...” என்றது.

“பரவால்ல” என்றபடி எழுந்து நிற்க முயற்சித்தான்.

“வேணாங்க. நானே நின்னுக்கிறேன். எனக்காக நீங்க கஷ்டப்பட வேணாம்” என்றபடி முகம்பார்த்தது அது.

வேறு வழியில்லாமல் சகித்துக் கொண்டு அமர்ந்தான் இவன். இவனை ஆராய்வது போல பார்ப்பது தெரிந்து, எங்கோ சிரமப்பட்டு ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்க்கத் தொடங்கினான் இவன்.

பேருந்தில் இருந்த திருநங்கையர் குதூகலத்திலும் கொண்டாட்டத்திலும் இருப்பது தெரிந்தது. சிரிப்பும் கேலியும் வித்தியாசமான கைதட்டல் ஒலியும் அந்நிய உலகத்தைப்போல ஒரு தோற்றத்தை உருவாக்கியிருந்தது. வாடி போடி என்று அவர்களுக்குள் நீட்டி முழக்கி அழைத்துக் கொள்வதை வியப்புடன் பார்த்தபடி அமர்ந்திருந்தான் இவன். பக்கத்தில் இடம்பிடித்து நெருக்கிக் கொண்டு அமர்ந்திருந்த திருநங்கையின் பார்வையைத் தவிர்த்தபடி அமர்ந்திருந்தான்.

பேருந்து நகர்ந்து ஓடத் தொடங்கியது. அருகில் அமர்ந்திருந்த திருநங்கை மேலிருந்து மலினமாக சென்ட் வாசனை வீசியது. பாலியெஸ்டர் புடவை. இரு கைகளிலும் நிறைந்திருந்த கண்ணாடி வளையல்கள் ஒவ்வொருஅசைவிலும் சிணுங்கின. தலையில் குத்தியிருந்த ஹேர்பின்னை அடிக்கடி சரிசெய்து கொண்டிருந்தது அது. தலை நிறைய மல்லிகைப்பூ பூத்திருந்தது. சென்ட், மல்லிகை, வியர்வை என நெடி கலந்து குமட்டிக் கொண்டு வந்தது. எப்போடா இறங்குவோம் என்றிருந்தது இவனுக்கு.

கண்டக்டர் நெருங்கி வந்தார். மூவருக்கும் டிக்கெட் எடுக்க ரூபாய் நோட்டைக் கையில் எடுத்தான் இவன். இடம் சொல்லி ரூபாயை நீட்டியபடியே இருக்க பின் இருக்கைப் பயணிக்குச் சில்லறை தேடிக் கொடுத்துக் கொண்டிருந்தார் கண்டக்டர்.

“எங்க போறீங்க? கூத்தாண்டவர் கோயிலுக்கா?”- திருநங்கை இவன் பக்கமாகத் தலைதிருப்பிக் கேட்டது.

இவன் பதில் சொல்லவில்லை; சொல்ல விரும்பவில்லை.

“எனக்கும் சேத்து சீட்டு எடுங்களேன். கூத்தாண்டவரு அருளு உங்களுக்குக் கெடைக்கும்” - கையில் அபயமுத்திரை காட்டித் தலையில் கை வைக்க வந்தது. இவன் பதறித் தலையை விலக்கினான்.

“ஏ... சேர்த்துத்தான் எடுவேம்பா...” என்றான் குமரேசன்.

“உங்க பிரெண்டா.. எடுக்கச் சொல்லுங்க” என்றது அது. குமரேசனைப் பார்த்து.

“மூணு கூவாகம்” என்று இவன் கண்டக்டரிடம் அழுத்திச் சொன்னான்.

“எனக்கு எடுக்கலையா?” பரிதாபமாகக் கேட்டது.

குமரேசனின் முகக்குறிப்பில் அந்த மூவரில் தான்இல்லை என்பதைத் தெரிந்துகொண்டு, ஏமாற்றத்துடன் தன் முந்தானைக்குள் கை நுழைத்து ஜாக்கெட்டிலிருந்து ரூபாய்த்தாளை எடுத்தது. இவன் பார்வை அங்கு படிந்து மீளுவதைக் கண்டவுடன்,

“ஒரு கொட்டாங்குச்சி நெஞ்சுக்குள்ளே குத்துகின்றதே...
அது குத்திக் குத்தி இள நெஞ்சை முட்டுகின்றதே..”

என்று ஏதோ ஒரு திரைப்படப்பாடல் மெட்டில் இட்டுக்கட்டிப் பாடியது. பக்கத்திலிருந்த எடுப்புப் பல்லன் ஹி.. ஹி... என்று வாயைப் பொத்திக் கொண்டு சிரிப்பது கண்ணில் நிழலாடியது.

இவன் பதறிச் சில்லறையைச் சரி பார்ப்பது போல வேறுபக்கம் திரும்பிக் கொண்டான்.

டிக்கெட்டை வாங்கி ஜாக்கெட்டுக்குள் திணித்துக் கொண்டது. சின்னதுரை ஏதோ கேள்விகள் கேட்டான். அது கிண்டலும் கேலியுமாய் பதில் பேசியபடி வந்தது. பெயர் பாண்டியம்மாள் என்றது. மதுரையிலிருந்து வருவதாகச் சொன்னது.

“வருசத்துக்கு ஒருநா. எந்த வேலையிருந்தாலும் ஒரு பொட்டை... கூத்தாண்டவர் கோயிலுக்கு வந்து தாலிகட்டி ஆடிப்பாடி சந்தோசமா இருந்து காலையில் தாலி அறுத்து ஒப்பாரி பாடி அழுது தீத்துடணும். அதுகூடச் செய்யலன்னா அப்பறம் என்ன பொட்டை?” என்று சின்னதுரைக்கு எதிர் கேள்வி போட்டது.

“நீங்கள்ளா எவ்வளவு சாலியா பேசிட்டு வறிய? இவரு ஏன் உம்முனு இருக்காரு?” என்றது இவனைச் சுட்டிக்காட்டி -

“அவன் நல்லாப் பேசுவான். இன்னிக்கு அவனுக்குக் காய்ச்சல். அதான்..” என்றான் சின்னதுரை.

“காச்சலா?” என்றபடி திரும்பி இவன் கழுத்தில் கைவைத்துப் பார்த்தது. அதன் விரல்கள் பட்டதும் அருவருப்புடன் வலதுபக்கம் பல்லனின் பக்கம் சாய்ந்தான் இவன். இவன் விலகலைச் சட்டை செய்யாதபடி சின்னதுரையைப் பார்த்து,

“அட.. ஆமங்க... நெருப்பா மேலு சுடுது. ஏங்க டாக்டருக்கிட்ட கூட்டிட்டுப் போங்க... பாவம்” என்றது.

“டாக்டருக்கிட்ட வரமாட்டேன்ங்றான்..” என்றான் சின்னதுரை.

“அப்ப ஒரு மாத்திரயாவது வாங்கிக் குடுங்க. பாவம்ங்க... மேலு கொதிக்குது. அனாசினு, நோவால்சினு எதாவது..”

மாத்திரை பெயர்களை அடுக்கிச் சொன்னது.

சிரித்தான் சின்னதுரை.

“வாங்கவோம்.. வாங்குவோம்.. “என்றான்.

அக்கறையும் கருணையும் மிகுந்த அதன் பேச்சு இவன் மனதை ஏதோ செய்தது. முறுக்கிக் கொண்டு இடத்தை அடைத்துக் கொண்டிருந்த தனது உடலைத் தளர்த்தி, அது - பாண்டியம்மாள் - வசதியாக உட்கார இடம் கொடுத்தான்.

உடல் தளர்வில் என்ன பகிரப்பட்டதோ? எதைப்புரிந்து கொண்டதோ? அது இவன் பக்கமாகத் திரும்பி,

“எங்கிருந்து வர்றிய? படிக்கிறியளோ?” என்று கேட்டது கனிவான குரலில். இவன் எல்லாக் கேள்விகளுக்கும்’ ஒற்றை இரட்டை வார்த்தைகளில் பதில் சொன்னான்.

இயல்பான தன்மையுடன் தான் பதில் சொல்லவில்லை என்பதை உணர்ந்தேயிருந்தான். எவ்வளவு முயன்றும் இயல்பாகப் பேச முடியவில்லை. தன்னையே மனதுக்குள் திட்டிக் கொண்டான்.

“காச்சலோட எதுக்குப் பொறப்பட்டு வர்றிய? வீட்லயே ரெஸ்ட் எடுத்துருக்கலாமுல்ல?” என்றது அது.

இவனுக்கு மனசை என்னவோ செய்தது. அந்தத் திருநங்கையின் அன்பை ஏற்கும் தகுதி தன்னிடம் இல்லை என்று பட்டது இவனுக்கு. விட்டால் அழுதுவிடுவான் போல முகம் குழைவுற்றது. உதடுகள் ஒருவிதமாய்க் கோணித் துடித்தன.

(இந்தக் கதையைச் சொல்லும் கதை சொல்லியின் இடையீடு:இந்த இடத்திலிருந்து பாண்டியம்மாளை அவள், இவள் என்றே எழுதுமாறு என்னைப் பணித்திருக்கிறான் கதையை எழுத அனுமதி தந்த அவன். எனவே இனி பாண்டியம்மாள் அவள்..)

தயக்கமும் வெட்கமும் பிடுங்கித் தின்ன, பாண்டியம்மாளை ஏறிட்டுப் பார்த்து லேசாகப் புன்னகைத்தான். அவளும் புன்னiக்கிறாள்.

“பேப்பர்ல போடுறதுன்னா.. போட்டா புடிப்பீங்களா?”

இவனிடமிருந்து வெளிப்பட்ட கனிவைத் கவனித்த சின்னதுரை முந்திக் கொண்டு கேட்டான்:

“ஆமா. உன்னை ஒரு போட்டோ எடுத்துருவோமா பாண்டியம்மா?”

“இங்கயா? பஸ்லயா?”

“ஏன்? இப்பவும் எடுப்போம்... எறங்குன பிறகும் எடுப்போம்...” என்றபடி கேமரா பையை இவனிடமிருந்து கைநீட்டி வாங்கினான்.

பாண்டியம்மாளுக்கு வெட்கம் எங்கிருந்தோ வந்து படர்ந்துவிட்டது. தலையைத் திருத்திக் கொண்டு, “இவரையும் என்னையும் சேத்து எடுங்க” என்றாள்.

நாகரிகமாய் இவன் மீது பட்டும் படாமலும் சாய்ந்தபடி போட்டோவுக்குப் போஸ் கொடுப்பதை மிகவும் ரசித்தபடி எடுத்தான் சின்னதுரை. மறுப்பேதும் சொல்லாமல் லேசாய்ப் புன்னகைத்தபடி இவனும் போஸ் கொடுத்தான். போட்டோ ப்ளாஷ் பேருந்தில் எதிரொலிக்க திருநங்கையர்கள் ஓஹோ... என்றபடி கூச்சலிட்டுச் சிரித்தார்கள்.

பேருந்து ஏதோ ஒரு நிறுத்தத்தில் நின்றது. யாரோ சிலர் இறங்க, சிலர் ஏறினார்கள்.

பேருந்து நகர்ந்து ஓடத் தொடங்கிய சற்று நேரத்தில், பாண்டியம்மாள் அவஸ்தையாய் நெளிவதை உணர முடிந்தது இவனால். ஏறிட்டுப் பார்த்தான் இவன். பாண்டியம்மாளின் மீது தன் முழு உடலையும் சாய்த்தபடி நின்றிருந்தான் ஒருவன். அவனுக்குப் பின்னால் பாண்டியம்மாளைப் பார்த்து இளித்தபடி இன்னொருவன். இருவர் கண்களிலும் போதையும் காமமும் கசிந்து கொண்டிருந்தது.

பாண்டியம்மாள் முகம் சுளித்தபடி, “ச்.. ச்சு...” என்றபடி உச்சுக் கொட்டினாள். ஏதோ முனகினாள்; நெளிந்தாள். இவன் நிற்பவனை முறைத்தான். அவன் இவனைச் சட்டை செய்யவில்லை. மேலே சாய்வதும் உடலை இவள் மீது எருமையைப் போலத் தேய்ப்பதும் அப்போது ஆபாசமாய் முனகுவதுமாக மிருகமாயிருந்தான் அவன். அலிதானே.... யார் கேட்பார்கள் என்ற எண்ணமும் இதெல்லாம் நாம் செய்யாம வேற யாரு செய்யுறது என்ற பெருமை உணர்ச்சியும் அந்த முகத்தில் பதிந்துகிடந்தது.

“இந்தப் பக்கமா வந்து உட்காருறீங்களா?” என்று எழுந்து மாறி உட்கார்ந்தான் இவன். நன்றியுணர்ச்சியுடன் இவனிடத்தில் பாண்டியம்மாளும் அவளுடைய இடத்தில் இவனும் அமர்ந்தார்கள். எடுப்புப் பல்லனும் அந்தச் சிறுமியும் இன்னும் ஒடுங்கிப் பாண்டியம்மாளுக்கு இடம் தந்தனர்.

இந்த இடமாற்றம் நின்று கொண்டிருந்த அவனுக்கு உவப்பாக இருக்கவில்லை போல. இவனை முறைத்தான். அடுத்த இரண்டாவது நிறுத்தத்தில் எடுப்புப் பல்லனும் சிறுமியும் இறங்கினார்கள்.
ஜன்னல் ஓர இருக்கைக்கு தாவி அமர்ந்தாள் பாண்டியம்மாள். இவன் அடுத்து நகர்ந்தான். நின்ற அந்தப் போதைக்காரன் இவனையடுத்து அமர்ந்தான்.

நடுவில் அமர்ந்திருக்கும் இவனைச் சட்டை செய்யாமல் கையை நீட்டி, பாண்டியம்மாளின் கழுத்தில் கைவைத்து நிமிண்டினான் போதைக்காரன். தோளைப் பிசைந்தான்.

இவனுடைய கழுத்திலும், தோளிலும் போதைக்காரனின் வியர்வை கரங்கள்படிந்து நீண்டன. இவன் அவனை முறைத்தான் கையை லேசாய்த் தள்ளிவிட்டான்.

ம்கூம்... அந்தக் கரங்களின் மயிர்க்கால்களில் மலின காமப் போதை வழிந்தது. அது இவனது தள்ளலைப் பொருட்படுத்தவேயில்லை.

“ஹலோ... கையை அந்தப் பக்கமா வைங்க. ஏன் என் மேல அனாவசியமா இடிக்கிறீங்க?” -

முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு போதைக்காரனிடம் சொன்னான் இவன்.

சின்னதுரையும் குமரேசனும் சற்றுத் தள்ளி நின்றிருந்தவர்கள் என்ன என்பதைப் போலப் பார்த்தார்கள்.

போதைக்காரன் ஏற இறங்கப் பார்த்தான். “ஏ... மூடிக்கிட்டு ஒக்காருடா... பெரிய யோக்கிய மகரு இவன்..” இலவச இணைப்பாய் ஆண்குறி குறித்த ஒரு சொல்லையும் வாக்கியத்தில் ஒட்டி எறிந்தான்.

“ஏங்க .. கை மேல படுதுன்னுதான சொல்றாரு அவரு... தவறுதலா பட்டிடுச்சுனு சொல்லிட்டு விஷயத்தை முடிக்க வேண்டியதுதான... அதவிட்டுட்டு என்னத்துக்கு அனாவசியமா பேசுறீங்க?” சின்னதுரையும் குமரேசனும் சற்று முன்னால் வந்தார்கள்.

போதைக்காரன் பின்னால் பார்த்துக் குரல் கொடுத்தான்:

“டே மாப்ள... மூணு பேரு வந்திருக்கானுங்கடா.. ங்கோத்தா...நம்மகிட்டயேவா? ஊருல பஸ்ஸூ நிக்கும்போது இழுத்து சாத்திருவம்டா மாப்ள...”போதையில் வார்த்தைகள் குழறியது அவனுக்கு.
இவன் விக்கித்துப் போனான்.

“நீங்க ஒன்னும் பதில் பேசாதீங்க... குடிகார நாயி..” என்று கிசுகிசுத்தாள் பாண்டியம்மாள்.

இவன் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.போதைக்காரன் இவன் முகத்தை உற்றுப்பார்த்து ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தான். இவன் பதில் பேசவே இல்லை. இவனது சட்டையை இழுத்து இழுத்து, எதுவும் பேசவேண்டாம் என்று சைகை காட்டினாள் பாண்டியம்மாள்.

நான்கு நிறுத்தங்களுக்குப் பிறகு போதைக்காரனின் நிறுத்தத்தில் பேருந்து நின்றது. இவன் கையைப் பிடித்து இழுத்தான் போதைக்காரன்.

“எறங்கி வாங்கடா... ங்கோத்தா.. இன்னிக்கு நீங்களா நாங்களான்னு பாத்றனும்டா... வாங்கடா...”இவன் இருக்கையிலிருந்து எழுந்திருக்காமல் கையை விடுவித்துக் கொள்ள முயன்றான். சின்னதுரையும் குமரேசனும் சேர்ந்து கையை விடுவிக்க முயன்றார்கள்.

“போங்க சார்... போங்க சார்... இதப்போயி பெருசு பண்ணிக்கிட்டு..”என்றான் குமரேசன்.

பேருந்திலிருந்த யாரோ இரண்டுபேர், “விடுங்க தம்பி... வெளியூர் புள்ளங்க... விடுங்க விடுங்க...”என்றார்கள்.

கண்டக்டர் விசில் கொடுத்தார். பின்னிருந்து அவனை யாரோ இழுக்க, கீழிறங்கினான் அவன்.

ஆசுவாசப்பட்டு உட்கார்ந்தான் இவன். அருகில் குமரேசன் உட்கார்ந்து இவனுடைய கையைப் பிடித்து சைகையில் ஆறுதல் சொன்னான்.

பேருந்து நகர்ந்து ஓடத் தொடங்கியது.

பேருந்தின் ஜன்னல் வழியாகப் பாண்டியம்மாளின் தோளில் ஒரு அடி விழுந்தது. பாண்டியம்மாள் தடுமாறிய வேளையில் அந்த முரட்டுக் கரம், அவளுடைய தலைமுடியை அப்படியே கொத்ததாகப் பறித்து எடுத்துக் கொண்டது. சாதாரண கிராப்புத் தலையை அதுவரை மறைந்திருந்த விக் முடி மல்லிகைச் சரத்துடன் இழுத்த கரத்தோடு ஜன்னலுக்கு வெளியே பறந்தது.

கண நேரத்தில் என்ன நடந்தது என்றே ஒருவருக்கும் புரியவில்லை. பெண்ணுக்கான ஒப்படையுடனும் கிராப்புத் தலையுடனும் அவமானம். பிடிங்கித் தின்ன பாண்டியம்மாள் அமர்ந்திருந்தாள்.

கூந்தல் வளர்த்து அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு முழுமையாகப் பெண்ணாக மாறமுடியாத பாண்டியம்மாளைப் போன்ற திருநங்கைகள், கூத்தாண்டவர் விழா அன்று மட்டுமாவது ஒப்பனையிட்டுக் கொண்டு தங்கள் ஆசையைத் தீர்த்துக் கொள்ளுவது உண்டாம். நிலைகுலைந்து போயிருந்தாள் பாண்டியம்மாள்.

கண்கள் கலங்கியிருந்தன. உதடுகள் துடித்தபடி இருந்தன. அழுகை முட்டிக் கொண்டு நின்றது. பேருந்தில் இருந்த மற்ற திருநங்கைகள் என்ன நடந்தது என்பதைப்புரிந்து கொண்டுவிட்டனர்.

“கையைத் தட்டீருடி.. கையைத் தட்டீருடி..”

பேருந்தில் திருநங்கைகள் அலறிக் கத்தினார்கள்.

“தட்டீருடி... தட்டீரு..”

பாண்டியம்மாள் கலங்கிய கண்களுடன் நிமிர்ந்து பார்த்தாள்.

“தட்டீரு... தட்டீரு” குரல்கள் நெருக்கின.

வளையல்கள் நிறைக்கப்பட்டிருந்த தன் இரு கைகளையும் நீட்டி, ஒருமுறை உற்றுப் பார்த்தாள் பாண்டியம்மாள். அக்கரங்களை அப்படியே எதிர் இருக்கையின் கம்பி வளைவில் ஓங்கி அடிக்கத் தொடங்கினாள். வளையர்கள் உடைந்து சிதறின. சில அவளது கைகளில் குத்திக் கிழித்தன. ஐம்பதுக்கும் மேற்பட்ட வளையல்கள் சுக்கு நூறாய் உடைந்து சிதறின. திருநங்கைகள் எல்லோரும் பட் பட்டென்று கரங்களைத் தட்டி ஒலித்தனர்.

“அடுத்த வருச திருவிழாவுக்கு அவன் இருக்க மாட்டான்... பாருடி நீ... அந்தக் கூத்தாண்டவரு அவனுக்குக் கூலியக் குடுப்பாரு... ஆண்டவர் கோயிலுக்குப் போற பொட்டையை வம்பு இழுத்தவன் நாசமா போவான்.. கூத்தாண்டவா.. நீ கூலியக் கொடு” ஒரு தடித்த திருநங்கை ஆவேசம் வந்தவளைப் போலக் கூவினாள்.

இவன் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. லேசாய்த் திரும்பி பாண்டியம்மாளைப் பார்த்தான். தலையைக் கவிழ்ந்தபடி பாண்டியம்மாள் அமர்ந்திருந்தாள். பட்டாம்பூச்சியைப்போல படபடப்புடன் பேருந்தில் ஏறியதிலிருந்து தொணதொணத்துக் கொண்டிருந்த பாண்டியம்மாள் வாழ்க்கையை இழந்ததுபோல மலையளவு சோகத்துடனிருந்தாள். முகம் சூம்பிப் போயிருந்தது. கண்ணீர்த்துளியொன்று மூக்கு நுனியில் நின்று... “சிந்தப் போகிறேன்” என்று அறிவித்துக் கொண்டிருந்தது.

இந்த ஒருநாள் சந்தோஷமும் இப்படித் துக்கமாய்த் தொடங்கிவிட்டது அவளுக்கு. இவனைக் குற்ற உணர்வு பிடுங்கித் தின்னது. தன்னால்தானே எல்லாம்? தான்அவனை முறைக்காமல் இருந்திருந்தால் இது நடந்திருக்காதுதானே? மனசு கனத்தது இவனுக்கு.

கூவாகத்துக்கு ஒரு மைலுக்கு முன்னராகவே பேருந்தை நிறுத்தி ஆட்களை இறங்கச் சொன்னார் கண்டக்டர். பேருந்தில் நிறைந்திருந்த அமைதி கலைந்துகொண்டாட்டம் மீண்டும் தொற்ற இறங்கினர் திருநங்கையர்.

இறங்கும் போதுதான் கவனித்தான் பாண்டியம்மாள் தன் வலக்கையை வலது காலின் முட்டியில் தாங்கி தாங்கிப் பிடித்தபடி இறங்கினாள். போலியோ கால்களை நிதானத்துடன் நிலத்தில் படரவிட்டபடி இவர்களை ஏறிட்டுப் பார்த்தாள்.

இவன் மன்னிப்புக் கேட்டான்.

“ச்சே...ச்சே...அந்தத் தேவுடியாப் பய பண்ணதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க. அவனுக்கு நல்ல சாவு வராது. சந்தோஷமா வந்தேன். இப்ப ஒரு மூலையில் ஒக்காந்திருந்துட்டு எந்திரிச்சுப் போக வேண்டியதுதான். வாறேன்..” என்றபடி விடைபெற்று நடக்கத் தொடங்கினாள் பாண்டியம்மாள்.

பெண் உடையும் ஒப்பனையும் இருக்க, கிராப்புத் தலையுடன் போவது வித்தியாசமாகத்தான் பட்டது.

நகரத் தொடங்கியவள் ஒரு கணம் நின்று,

“சார்... பஸ்ஸுல போட்டா புடிச்சியளே... அத என்னோட அட்ரசுக்கு அனுப்ப முடியுமா?” என்றாள்.

“கண்டிப்பா அனுப்புறோம்” முன்னால் வந்தான் இவன்.

“அட்ரஸ்?”

பஸ் டிக்கெட்டின் பின்புறம் பாண்டியம்மாள் சொல்லச் சொல்ல எழுதிக் கொண்டான் சின்னதுரை.

சென்னையில் போட்டோக்களைப் பிரிண்ட் போட்டு, ஒரு சிறிய கடிதமும் எழுதி உறையிலிட்டு முகவரி தேடினான். சின்னதுரையிடமிருந்த பாண்டியம்மாளின் முகவரியை வாங்கிப் பார்த்தான்.
“பாண்டியராஜ், விறகுக்கடை சந்திரன் வீடு, சொக்கிகுளம், மதுரை” என்றிருந்தது.

கதவு இலக்கம் இல்லை; தெருப்பெயர் இல்லை. கிடைத்து விடுமா இந்தப் புகைப்படமும் கடிதமும்?

எப்படியாவது கிடைத்துவிட வேண்டும் என்று தோன்றியது இவனுக்கு.

Pin It