புதிய ஜீவா எழுதிய “இன்று, இப்போது, என்னசெய்வது?” என்ற புத்தகம் தமிழக சமூகச் சூழலில் தொழிலாளர் வாழ்வு நிலையில் உள்ளதை உள்ளபடி கூற வந்த படைப்பு. வாசகர்களில் சிலருக்கு இங்கிதமில்லாமல் உபதேசம் செய்கிற புத்தகமாகப்படும். ஆனால் வாழ்க்கையே போராட்டமாக ஆனவர்களுக்கு, தங்களது மனச்சாட்சி பேசுவதாகவே உணர்வர். ஒரு தொழிலாளியாக வாழ்ந்த அனுபவங்களே இதில் நெஞ்சை தொடுகிற முறையில் சித்திரிக்கப்படுகின்றன. அப்பாவியாகவும், வாழ்வில் உயரவேண்டும் என்ற கனவுகளோடும், ஆலைத் தொழிலாளியாக வாழ்வை தொடங்கும் ஒருவரை யார், யார் எப்படியெல்லாம் ஏமாற்றுவார்கள் என்பதை அறிய இது போல் ஒரு படைப்பு தமிழில் இல்லை.

நல்லது, பாதுகாப்பானது என்று கருதுபவற்றைக் கூட அசந்தால் எதிர்விளைவுகளைக் கொண்டு வர பயன்படுத்த முடியும் என்ற ஞானம், வாழ்க்கையே போராட்டமாக ஆனவர்களுக்கு அவசியம் என்பதை இப்புத்தகத்தை படித்தவுடன் உணர்வர்.

சங்கம் என்ற அமைப்பு ஒரு தொழிலாளிக்கு வாழ்வை காக்கும் கவசம் என்பதை மறுக்க முடியாது. அந்த அமைப்பே அவனுக்கெதிராகப் பயன்படுத்தப்படும்போது என்ன செய்வது என்ற திகைப்பு ஒருவருக்கு வருவது இயல்பு. சரியாக அணுகவில்லையெனில் அந்தப் பாதுகாப்பு கவசமே கத்தியாக மாறி கழுத்தை அறுக்கும் என்ற உண்மையை துவக்கத்திலிருந்து, கடைசிப் பக்கம் வரை இழையோடவிட்டிருப்பது இந்தப் புத்தகத்தின் சிறப்பாகும். சங்கமெனும் கவசம், கத்தியாக மாறுகிற தருணங்களில் ஒரு தொழிலாளியின் பார்வை விசாலப்படாமல், தீர்வு சாத்தியமில்லை. இந்த உண்மையை நெஞ்சிலே தைக்கிற மாதிரி புதியஜீவா எளிய நடையிலே தந்துள்ளார். இந்த புத்தகத்தில் அவரைச் சுற்றி நிகழ்ந்தவற்றை உள்ளதை உள்ளபடியே கூறி வாசகனின் சிந்தனைக்கு ஊக்கமளிக்கிறார்.

குறுகிய பார்வையோடு சங்கத்தைப் பயன்படுத்த முயன்றால் என்ன நடக்கும் என்பதை காட்டிட அவர் கண்ட நிகழ்வுகளை கடுகளவு கற்பனை கூட கலக்காமல் கூறுவது, கவசமே கத்தியாக மாறியதால் விளையும் திகைப்பிலிருந்த மீள ஒருவனுக்கு கை கொடுக்கிறது. ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு என்பதைக் காட்டிட இந்த புத்தகத்தின் 9-வது பகுதி கூறுகிறது (பக்கம்-49). 11வது அத்தியாயத்தில், அல்ப புத்தியால் வரும் விளைவை காட்டிட ஓர் அனுபவத்தில் கண்டதைக் குறிப்பிடுகிறார். தனி நபரை நம்பி மோசம் போகாமல் இருக்க, அமைப்பின் மீது பற்று வைப்பதின் அவசியம் பற்றி ஓர் அத்தியாயம் கூறுகிறது. சுருக்கமாக தொழிற்சங்கம் சோசலிசத்தின் பள்ளியாக இருப்பதற்கு பதிலாக, காப்பிட்டலிசத்தை காக்கும் கோட்டையாக ஆவது எப்போது என்பதை ஆய்வு செய்ய இந்த அனுபவப் பெட்டகம் பெரிதும் உதவும்.

இதன் இன்னொரு சிறப்பு கம்யூனிச பூச்சாண்டியை கண்டு பயப்படுபவர்களும் புரிகிற முறையில் சிந்தனைமுறைக்கு வழிகாட்டியான மார்க்சிசம் எனும் இயக்க இயல் பொருள் முதல்வாத சிந்தனைக்கருவி விளக்கப்படுகிறது, இதில் வாசகனின் மனச்சாட்சியை உண்மை எது என்று கண்டறிய விட்டு விடுகிறார். `திருவள்ளுவர் வழியில் நட, பெரியார் வழியால் நட, அண்ணா வழியில் நட, கீதை காட்டிய பாதையில் போ, வேதத்தின் பாதையில் வேகமாகப் போ என்றெல்லாம் நிறையப் பேர் சொல்வார்கள். காந்தியின் அகிம்சை வழியில் நடைபோடு என்பார்கள். ஆனால் நாம் யார் சென்ற வழியிலும் நடக்க முடியாது என்பதே உண்மை, அப்படியானால் இந்த அறிஞர்களின் கருத்துகளுக்கு மதிப்பேயில்லை என்று சொல்கிறோமா?

அப்படியில்லை. கார்ல் மார்க்ஸ் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் குறிப்பிட்ட சிக்கலுக்குச் சொன்ன தீர்வு, அந்தச் சிக்கலுக்கு மட்டுமே பொருந்தும். அதுபோலத் தோற்றமளிக்கும் சிக்கல் ஒன்று நமது காலத்தில் தோன்றினால் உடனே கார்ல் மார்க்ஸ் தீர்வை நடைமுறைப்படுத்த முடியாது. ஆனால் கார்ல் மார்க்ஸ் எந்தச் சிந்தனை முறையைக் கடைப்பிடித்து அவர் அவர் காலத்திய பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டாரோ அதே சிந்தனை முறையைக் கடைப்பிடித்து நாமும் நமது காலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும். ஏனென்றால் அந்தச் சிந்தனைமுறை அறிவியல்பூர்வமானது. அதன் அடிப்படைகளை நாம் எடுத்துக் கொண்டு, அந்தச் சிந்தனைமுறையின் கண்களில் பார்த்து, இன்றையச் சிக்கல்களுக்கு நாமே சொந்தமாகத் தீர்வு காண முயற்சிக்கலாம். தீர்வு காண முடியும்' (பக்கம் 178) .

 மொத்தத்தில், தொழிற்சங்கம் பற்றியும், தொழிற்சங்க தலைவர்கள் பற்றியும், முதலாளித்துவ உற்பத்திமுறையின் கூறுகள் பற்றியும் கூட்டுப் புழுப் பார்வையை துறந்து, விரிந்த பார்வையை பெறுவதற்கு உதவுகிற படைப்பு. பொருளாதார சக்கரத்தை சுழற்றும் உழைப்பாளிகளின் அரசியல் தலையீடு இல்லையானால், போராட்டங்களும், எழுச்சிகளும் சுனாமி போல் எழுந்து மடியும் என்ற நிலை மாற இது போன்று ஆயிரக்கணக்கான படைப்புகள் தேவை! தேவை!

இன்று... இப்போது... என்ன செய்வது?

ஆசிரியர்: புதியஜீவா

பக்: 336, விலை ரூ.150

பாவை பப்ளிகேஷன்ஸ்,

142, ஜானி ஜான் கான் சாலை,

இராயப்பேட்டை, சென்னை-600 014

Pin It