சென்ற மாதம் (ஜனவரி 2011) நடந்த இந்தியாவின் 98ஆவது அறிவியல் மாநாட்டைப் பற்றிய ஓர் ஆவணப்படம் எடுப்பதற்காக மாநாட்டு நிகழ்ச்சிகளைப் படம் பிடித்துக் கொண்டிருந்தேன். நோபல் பரிசு பெற்ற இந்திய விஞ்ஞானி வெங்கி (வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்) மாணவர்ச்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துக் கொண்டிருந்தார். அதில் ஒரு கேள்வி: “எல்லா உயிரினங்களுமே பூமியைப் பொறுத்தவரை கார்பனை அடிப்படையாகக் கொண்டுதான் உள்ளன. கார்பன் அல்லாத வேறு எதைக் கொண்டாவது உயிரினங்கள் பூமியில் தோன்றமுடியுமா?’’ (இந்தக் கேள்விக்குத்தான் மிகச்சிறந்த கேள்விக்கான பரிசையும் தந்தார்).

இக்கேள்விக்கான அவரின் பதில் இதுதான்: “பூமியைப் பொறுத்தவரை கார்பன்தான் அளவுக்கதிகமாக கிடைக்கிறது. கார்பனுக்கு அடுத்தபடியாகக் கிடைக்கும் சிலிக்கானைக் கொண்டுதான் கம்ப்யூட்டர்கள் உருவாக்கப்படுகின்றன. ஆனால், தற்போதைய சூழலில் பூமியில் சிலிக்கானைக் கொண்டு உயிரினங்கள் தோன்ற சாத்தியமில்லை. அப்படியே தோன்றினாலும், அது நாமறிந்த உயிராக இருக்குமா என்பது சந்தேகம்.’’ இறுதியில் அவர் நண்பர் நகைச்சுவையாகச் சொன்னதைக் குறிப்பிட்டார். “பின்னாளில் சிலிக்கானை அடிப்படையாகக் கொண்ட வாழ்வைத் தோற்றுவிக்கத்தான், தற்போதைய கார்பன் அடைப்படையிலான உயிரினங்கள் துண்டுகோலாக உள்ளன.’’

இவ்வாறு சொன்னதின் அர்த்தம், மனிதர்களாகிய நாம் எல்லொரும் கார்பனால் உருவாக்கப்பட்டவர்கள். ஆனால், நம்மைப் படிப்படியாக சிலிக்கானை அடிப்படையாகக் கொண்ட கம்ப்யூட்டர்கள் கோலொச்ச தொடங்கிவிட்டன என்பதுதான் அர்த்தம்.

மேற்சொன்னது, நகைச்சுவையாக இருந்தாலும், ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால் இதில் நடுங்க வைக்கும் உண்மைகளும் உண்டு.

நம் வாழ்வு, சிந்தனை, செயல் எல்லாமே நாளுக்கு நாள் தொழில்நுட்பத்தைச் சார்ந்தே இருப்பது கவலையளிப்பதாகத்தான் உள்ளது.

ஒரு மனிதனின் மனவளர்ச்சிக்கும், சிந்தனைத் திறனுக்கும் அடிப்படையாய் அமைவது அவனது சமூக வாழ்வு. இன்று தொழில்நுட்பமானது சமூக வாழ்வைக்கூட அபகரித்துக் கொண்டது. இன்றைய தலைமுறை, சமூக வாழ்வைக்கூட அதற்கான இணைய தளங்களில்தான் வாழ்கிறது. தங்களின் பிரபலங்களை, அவலங்களை, அசிங்கங்களைக்கூட அவர்கள் சமூக இணைய தளங்களில்தான் பகிர்ந்து கொள்கிறார்கள்.

“ஒவ்வொரு தொழில்நுட்பமும் கண்டுபிடிக்கப்படும்போது, முதலில் அதை சாத்தான்கள்தான் கையிலெடுத்துக் கொள்கின்றன. அப்போது தேவதைகளோ அதை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்தலாம் என்று விவாதித்துக் கொண்டிருக்கின்றன’’ என்று யாரோ சொல்லியிருப்பது உண்மைதானோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

பல நேரங்களில் முற்போக்கான சமூகச் சிந்தனை கொண்டவர்கள் நவீன தொழில்நுட்பங்களை இப்படித்தான் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சினிமாவைப் பொறுத்தவரை சென்ற இதழில் பார்த்ததுபோல், தொழில்நுட்பம் அதன் நுகர்தலில்தான் பாதிப்பு ஏற்படுத்தியதே தவிர, அதன் படைப்பில் பெருமளவு ஏற்படுத்தவில்லை என்பதுதான்.

சினிமாவின் சக்தியை உணர்ந்தவர்கள் அதைக் கையிலெடுக்க வேண்டும் என்று பல காலமாகச் சொல்லி வருகிறோம். மலிவான டிஜிட்டல் வீடியோ கேமராக்கள் வந்தவுடன் ஒரு சிலர் அதைக் கையிலெடுக்கவும் செய்தார்கள். ஆனால், அந்தக் கேமராக்களைக் கொண்டு அவர்கள் உருவாக்கியப் படைப்புகளைப் பார்க்கும்போது பல நேரங்களில் அவர்கள் ஏன்தான் அதைக் கையில் எடுத்தார்களோ என நினைக்கத் தோன்றுகிறது.

சினிமா சக்தி வாய்ந்த சாதனம் என்பது மட்டும்தான் அவர்களுக்குத் தெரியும். ஆனால், அந்தச் சக்தி எப்படிப்பட்டது, எப்படி வெளிக்கொணர்வது, ஒரு நல்ல கதையைச் சினிமாவாக எப்படி அந்த சக்தியைக் கொண்டு மாற்றுவது என்பது பற்றியெல்லாம் அவர்களுக்கு ஏதும் தெரிந்திருக்கவில்லை. 

சினிமாவின் தொழில்நுட்பம் பற்றிய அறிவு, சினிமாவின் இந்தச் சக்தியை அறிந்துகொள்ள மிகவும் உதவுகிறது.

சினிமாவின் தொழில்நுட்பம் என்று சொல்லும்பொழுது வேறொரு உலகை உருவாக்கும் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தைப் பற்றிச் சொல்லவில்லை. மாறாக, கதை சொல்லும்பொழுது, பார்வையாளன் மனதில், உணர்வில் சிறு சிறு சலனங்களை எப்படி உண்டாக்குவது என்பதை அறிவதுதான். அதை எப்படி இலகுவாக, மென்மையான கவிதை வரிகளைப் போல வெளிப்படுத்துவது என்பதுதான்.

ஒரு சினிமா கலைஞனுக்கு, சினிமாவின் தொழில்நுட்பம் பற்றிய அறிவு அவன் மூளையில் இருக்கக்கூடாது. மாறாக, அவன் உணர்வில் இருக்கவேண்டும். அப்போதுதான் சினிமா என்கின்ற மொழியை கதை சொல்ல கையில் எடுக்கும்போது, தொழில்நுட்பம் என்ற உளி கொண்டு அதற்கு அழகியலைச் சேர்க்க முடியும்.

சினிமாவில் அடிப்படை தொழில்நுட்பத்தைக் கண்ணுக்குத் தெரியாத அழகியலாய் உபயோகப்படுத்துவது என்பது எல்லைகளற்ற பணி.

சமீபத்தில் டெலிவிஷனில் வரும் ஒரு விளம்பரப் படம் பலரின் மனதைக் கொள்ளை கொண்டது. ஒரு வயதான, மிடுக்கான பாட்டி, தன் கணவன் முன்பு ஒரு சினிமாப் பாடலைச் சகல பாவங்களோடும், உணர்வுகளோடும், உடல் அசைவுகளோடும் பாடுகிறாள். அதை அவள் பேரன் சிறுவன் பார்த்து விடுகிறான். பாட்டிக்கு லேசான சங்கடம். சாப்பாடு மேiஜையில் எல்லொரும் இருக்க, சிறுவன் அந்தப் பாடலை முணுமுணுக்க, பாட்டியும் தாத்தாவும் அதிர்ச்சியடைய, பாட்டியிடம் சாக்லேட்டை லஞ்சமாகப் பெறுகிறான். அடுத்த காட்சியில், தெருவில் பாட்டியைப் போல் நடனமாடி ஐஸ்கிரீமை லஞ்சமாகப் பெறுகிறான். மீண்டும் வீட்டில் சிறுவன் பாடலை முணுமுணுக்கும்பொழுது, பாட்டி வெறுப்போடு சாக்லேட்டை பையிலிருந்து எடுக்க, சிறுவனின் அப்பா, பாட்டியிடம் (தன் அம்மாவிடம்) இந்தப் பாடல், ஆடல் விசயம் எல்லொருக்கும் தெரியும்’’ என்கிறார். உடனே பாட்டி முறைப்பாக சாக்லேட்டை மீண்டும் தன் கைப்பையில் போட, சிறுவன் வெறுத்துப்போய் வெளியேறுகிறான்.

ஒவ்வொரு முறையும் தொலைக்காட்சியில் இவ்விளம்பரம் வரும்போது அந்த சில நொடிகள் அதை லயித்துப் பார்ப்பேன். (இந்த விளம்பரப் படம் எதைப் பற்றியது என்று கேட்டால், பலர் முழிக்கலாம். இதுபோன்ற சுவையானக் கதையை விளம்பரத்தில் சொல்லும்போது விளம்பரத்துக்கான பொருள் மறக்கப்படுவது எப்போதுமே உள்ள ஆபத்து.)

அதேபோல், சமீபத்தில் வந்த ஒரு தமிழ்ப்படப் பாடலில், கதாநாயகி முட்டைக் கண்களோடு ஒரு கிராமத்துப் பெண்ணாக, பாவாடைத் தாவணியில், கையில் புத்தகங்களோடு நடந்து செல்வாள். அவளை விரும்பும் தாடிக்கார இளைஞன் சைக்கிளில் அவளைப் பார்த்துக்கொண்டே செல்வான். அவளும் பாடல் ஒலிக்கும் பின்னணியில் அடிக்கடி திரும்பி தன் முட்டைக் கண்களால் அவனைப் பார்ப்பாள். நெகிழ்ச்சியும் இதமும் கலந்த காட்சிகள் அவை.

இந்த நெகிழ்ச்சியான இதத்திற்கும் தொழில்நுட்பத்திற்கும் தொடர்பு உண்டா என்று கேட்டால், நிச்சயம் உண்டு என்பேன்.

இது போன்ற காட்சிகளால் கவரப்பட்டு அதேபோன்ற காட்சிகளைத் தங்கள் படத்தில் எடுத்த இயக்குநர்களை அறிவேன். ஆனால், அந்த நெகிழ்வும் இதமும் அந்தக் காட்சிகளில் இருக்காது. காரணம், காட்சியில் இழையோடும் அழகியலுக்கும் அதை எடுத்த இயக்குநரின் தொழில்நுட்ப அறிவுக்கும் உணர்வுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு.

சினிமா என்பதே காட்சிரீதியான சிந்தனை என பல முறை சொல்லியிருக்கிறேன். அதே சினிமாவை உருவாக்குவது என்பது காட்சிரீதியான சிந்தனையை முறைப்படுத்தப்பட்ட காட்சித் துண்டுகளாக உணர்ந்து, அவற்றை ஊனையும் உயிரையும் கொடுத்து பலரின் உதவியோடு கேமராவில் பதிவு செய்வது, பின்னர் அவற்றை துவக்கத்தில் உணர்ந்த காட்சிரீதியான சிந்தனைப்படி தொகுப்பது.

சினிமாவை ரசிப்பது, உருவாக்குவது என்பது தொடர்ச்சியான ஒரு செயல்பாடு. இந்த தொடர்ச்சியான செயல்பாட்டில் தொழில்நுட்பரீதியான சிந்தனை என்பது வளர்ந்துகொண்டே இருக்கும் ஒன்று.

சினிமாவின் வித்தகர்கள் என சொல்லப்படும் இயக்குநர்களுக்கு, தங்களின் தொடர்ந்த தொழில்நுட்ப ரீதியான சிந்தனையால் வளர்ந்துவரும் நவீன தொழில்நுட்பங்கள் அவர்களுக்கு வசியப்படுகிறது.

உலகப் புகழ்பெற்ற அமெரிக்க திரைப்பட இயக்குநரான பிரான்சிஸ் ஃபோர்டு கொப்போலா (திக்ஷீணீஸீநீவீள திஷீக்ஷீபீ சிஷீஜீஜீஷீறீணீ) தற்போது முழுக்க முழுக்க சுதந்திரமான திரைப்பட இயக்குநராக செயல்படுகிறார்.

அவரின் வளர்ந்து வரும் திராட்சை ரச மது தொழிற்சாலை அவருக்குக் கோடிகளைக் கொட்டுகிறது. சமீபத்திய அவரது படங்களெல்லாம் அவரின் சொந்த தயாரிப்புகளாகும். அவரின் சமீபத்திய படத்தின் தலைப்பு ‘ஜிஷ்வீஜ்வ ழிஷீஷ் ணீஸீபீ ஷிரஸீக்ஷீவீளமீ’. துருக்கியில் ஒரு முறை அவர் மதுவின் போதையில் இருந்தபோது அவருக்கு உண்டான கனவை அடிப்படையாகக் கொண்டது இப்படம். இப்படத்தில் ஒரு சிறு பகுதியை 3ஞி தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்தி எடுத்துள்ளார். அதை ஏதோ ஒரு வித்தைபோல் அல்லாமல், கதையின் தேவைக்காக அத்தொழில்நுட்பத்தை உபயோகித்துள்ளார். அவருடைய கனவெல்லாம், பெர்க்மெனை போன்று தன் சொந்த கதைகளை, கனவுகளை படமாக்குவதுதான். ஆனால், அவரின் 30ஆவது வயதிலேயே அவரின் ‘காட் ஃபாதர்’ படம் மாபெரும் வெற்றிப்பெற்றதன் காரணமாக அவரால் அவர் விரும்பியபடி செய்ய முடியவில்லை.

தன் 45 ஆண்டுகால சினிமா அனுபவத்திற்குப் பின், தன் திரைப்படத் தொழிலின் கோட்பாடாகச் சொல்வது இதைத்தான்:

 சொந்தமாகத் திரைக்கதையை எழுதி இயக்க வேண்டும்.

 தற்போது உபயோகத்தில் இருக்கும் மிக நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு அப்படத்தை உருவாக்க வேண்டும்.

 படத்திற்கான முதலீட்டைத் தானே செய்யவேண்டும்.

இதுபோன்றதொரு சூழலும் வரமும் எல்லா இயக்குநர்களுக்கும் அமையாது.

அவர் இன்றளவும் தன்னை சினிமாவின் மாணவராகவே கருதுகிறார். ஒவ்வொரு நாளும் சினிமா தனக்குப் புதிய விஷயங்களைக் கற்றுத் தருவதாகச் சொல்கிறார். தொழில்நுட்ப வளர்ச்சியை உன்னிப்பாகக் கவனிப்பவர். குருசோவா, போலன்ஸ்கி போன்ற இயக்குநர்களைச் சினிமாவின் மேதைகள் என்று கருதுபவர். தன் கதைகளையும் கனவுகளையும் சினிமாவில் சொல்வதற்கு எப்போதும் சரியான தொழில்நுட்பத்தைத் தேடுபவர். சினிமா மிக இளமையான கலையாக இருப்பதாலேயே புதிய விசயங்களை, புதிய தொழில்நுட்பங்களைத் தனக்குக் கற்றுத்தருவதாகச் சொல்கிறார்.

சினிமாவின் தொழில்நுட்பத்தைக் குறித்து மிக ஆழமான கருத்துகளை அடிக்கடி இளம் இயக்குநர்களோடும் சினிமா மாணவர்களோடும் பகிர்ந்து கொள்வதில் இவருக்கு அலாதி பிரியம்.

சினிமா ஒரு கலையாக இருந்து, பின் சந்தைப் பொருளாய் மாறியதில் இவருக்கு ரொம்பவே வருத்தம். அது குறித்து மிக அழகாகக் கூறுகிறார்:

“சினிமாவின் தொடக்க காலத்தில் யாருக்கும் சினிமா எடுக்கத் தெரியவில்லை. அசையும் பிம்பங்களும், ஓடும் ரயிலும், பறக்கும் பறவைகளும் மட்டுமே போதுமான மகிழ்ச்சியை அவர்களுக்குத் தந்தன. சினிமாவின் மொழி என்பதே தற்செயலாய், விபத்தாய் நிகழ்ந்த ஒன்று. என்ன செய்வதென்று தெரியாமல் சில இயக்குநர்கள் செய்த சோதனையின் விளைவாகவே சினிமா மொழி உருவானது. ஆனால், 15-20 ஆண்டுகளுக்குப் பின் சினிமா சந்தைப் பொருளாய் ஆனபோது இந்தச் சோதனை முயற்சிகள் நின்று போயின.’’

சினிமாவின் தொடக்க காலத்தைக் குறித்து மட்டும் கொப்போலா இப்படிச் சொன்னாலும், இது சினிமாவின் இரண்டாம் நூற்றாண்டிலும் உண்மையாகத்தான் உள்ளது.

சினிமாவின் வளர்ச்சியும், சினிமாவின் தொழில்நுட்ப வளர்ச்சியும் எப்போதெல்லாம் நிகழ்கிறது என்று உன்னிப்பாகப் பார்த்தால், அப்போதெல்லாம் சினிமாவில் சிலர் சோதனை முயற்சிகளை மேற்கொண்டிருப்பர்.

துணிச்சலான முயற்சிகளே வளர்ச்சிக்கு இட்டுச்செல்லும் என்பார்கள். இது வேறு எந்தக் கலைக்குப் பொருந்துகிறதோ இல்லையோ சினிமாவுக்கு நிச்சயமாகப் பொருந்தும்.

சினிமா சந்தைப் பொருளான பின்பு, தயாரிப்பாளர்கள்தான் பெரும்பாலும் எல்லாவற்றையும் முடிவு செய்கிறார்கள். அவர்களின் ஒரே நோக்கம் பணம் சம்பாதிப்பதுதான். அதற்கு இடையூறாக எதையும் அவர்கள் விரும்புவதில்லை. குறிப்பாக, சோதனை முயற்சிகளை விரும்புவதே இல்லை.

தயாரிப்பாளரிடமோ, தயாரிப்பு நிறுவனத்திடமோ சென்று நான் இதுவரை யாரும் செய்யாத ஒரு திரைப்படத்தை உருவாக்கப்போகிறேன் என்று சொல்லிப் பாருங்கள். அவர்கள் உங்களுக்கு வெளியே போகத்தான் வழி காட்டுவார்கள். அவர்களைப் பொறுத்தவரை ஓடுகின்ற படம், பணம் பண்ணுகின்ற படம் என்றால் ஏற்கனவே வந்து வெற்றி பெற்ற படத்தின் பாணியில் இருக்கவேண்டும் என்பதுதான்.

இதில் ஒரு விநோத முரண்பாடு உள்ளது. தொழில்நுட்ப ரீதியாக, நுகர்கின்ற முறைரீதியாக சினிமாவின் வளர்ச்சி மிகவேகமாக உள்ளது. ஆனால், கதை சொல்லும் பாணியில், கருப்பொருளைத் தேர்வு செய்யும் பாணியில் சினிமா இன்றும் பழைய சினிமாவாகவே உள்ளது. அத்திப் பூத்தாற்போல் அவ்வப்போது சிலர் எடுக்கும் துணிச்சலான முயற்சிகள்தான் சினிமாவை முன்னோக்கி எடுத்துச் செல்கின்றன.

ஒரு புதிய விஷயத்தைச் சினிமாவில் எப்படிச் சொல்வது என்று நாம் தவிக்க வேண்டும். அப்படி சொல்ல முடியாதபோது அதற்கான புதிய முறையை எப்படியாவது கண்டுபிடித்தாக வேண்டும். அப்படித்தான் சினிமாவை முன்னெடுத்துச் செல்கின்ற தொழில்நுட்பங்கள் உருவாகின்றன.

ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதம் வந்தால், அந்த ஆண்டுக்கான ஆஸ்கர் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்ட படங்களைத் தேடி, தேர்ந்தெடுத்துப் பார்ப்பேன்.

கடுமையான வேலைப் பளுவுக்கு மத்தியிலும் இந்த மாதம் ஆஸ்கருக்காகப் பரிந்துரைக்கப்பட்ட இரு படங்களைப் பார்த்தேன். இரண்டுமே மனநிறைவைத் தந்த படங்களாக இருந்தன. முதல் படம் கிங்ஸ் ஸ்பீச் . டாம் `ஹீப்பர் இயக்கிய இந்தப் படம் சரிந்து கொண்டிருந்த இங்கிலாந்து திரைப்படத் துறையைச் சற்று நிமிர்த்தியது என்று சொல்லலாம். உலகெங்கும் ஜனரஞ்சகமாகவும், விமர்சன ரீதியாகவும் புகழப்பட்ட படம். வரும் வாரம் நடைபெற இருக்கும் ஆஸ்கர் பரிசளிப்பு விழாவில் குறைந்தது நான்கைந்து ஆஸ்கர்களையாவது அள்ளிச் செல்லும் என எதிர்பார்க்கிறேன் (இதை அச்சில் நீங்கள் படிக்கும்போது அது நடந்து முடிந்த ஒன்றாக இருக்கும்).

சினிமாவில் தொழில்நுட்பம் என்பது சொல்ல வந்த புதிய விஷயத்தை, புதிய முறையில் சொல்வதற்கான போராட்டம் ஆகும். அது இப்படத்தில் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தில் க்ளோசப் காட்சிகள் மிகப்பிரமாதமாகச் சொல்ல வந்த விஷயத்தின் வீர்யத்தை வெளிக்கொணர்வதாக உள்ளன. படத்தின் கதை என்பது இதுதான்:

இங்கிலாந்து மன்னர் ஐந்தாம் ஜார்ஜின் இரண்டாவது மகன் ஆறாம் ஜார்ஜூக்கு சிறு வயதிலிருந்தே திக்கு வாய். தன் அண்ணன்தான் அடுத்த மன்னன், தான் மன்னராகப் போவதில்லை என்பதால் அது குறித்து பெரிதாகக் கவலைப்படவில்லை. ஆனால், சந்தர்ப்பவசத்தால் ஆறாம் ஜார்ஜ் மன்னனாக நேரிடும்பொழுது, திக்கு வாய் பெரிய பிரச்சினையாக உள்ளது. அவன் அன்பான மனைவியின் உதவியால், ஒரு புதிய பேச்சுக்கலை பயிற்சி நிபுணரைப் பார்க்கச் சம்மதிக்கிறான். படம் முழுவதும், மன்னருக்கும் பேச்சுக்கலைப் பயிற்றி நிபுணருக்கும் இடையேயான உறவைப் பற்றியது. இறுதியில் மன்னன் எப்படி தன் பிரச்சினையில் இருந்து மீண்டு, யுத்த காலத்தில் மக்களுக்கு பல அற்புத உரைகளை நிகழ்த்துகிறான் என்பதுதான் கதை.

படத்தின் துவக்கமே மன்னன் ஆறாம் ஜார்ஜின் பேச்சைக் கேட்க அமைதியாக காத்திருக்கிறது. மன்னன் முகத்தில் தீவிர சிந்தனை, குழப்பம். தன்னால் மைக் முன்னால் திக்காமல் பேச முடியுமா என்பதுதான் அது.

வைட் ஆங்கிள் லென்ஸில் எடுக்கப்பட்ட மன்னனின் முகம் மற்றும் மைக்கின் க்ளோசப்புகள் சினிமாவுக்குப் புதிய ஒன்று.

இறுதியில், மன்னனால் பேச முடியாதபோது, மன்னனின் க்ளோசப் முகத்தில் இயலாமையும், கோபமும் வெடிக்கின்றன. மனைவியின் க்ளோசப் முகத்தில் அமைதியாகக் கண்ணீர் வழிந்தோடுகிறது. படம் அங்கிருந்துதான் தொடங்குகிறது. படத்தின் இறுதியில் அதே க்ளோசப்புகளில் மன்னன் மக்களுக்கு நம்பிக்கைத் தரும் யுத்த கால உரையை அற்புதமாக நிகழ்த்துகிறான்.

இன்னொரு படம் பிளாக் ஸ்வான். டேரன் அஃரோனஸ்கி இயக்கிய இப்படம் தன் கலையில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஓர் இளம் பாலே நடனக்காரியைப் பற்றியது.

ஙிறீணீநீளீ ஷிஷ்ணீஸீ புகழ் பெற்ற பேலே நிகழ்ச்சி. அதில் இளவரசனின் காதலைப் பெற இரு பெண்கள் போட்டி போடுகின்றனர். ஒருத்தி வெள்ளை அன்னம், இன்னொருத்தி கருப்பு அன்னம். இரண்டு கதாபாத்திரங்களை ஒரே நடனக்காரி மாறி மாறி செய்ய வேண்டும். இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க பல நடிகைகளிடையே போட்டி. இந்தப் போட்டியில் கதாநாயகி எப்படி வெற்றிப் பெறுகிறாள், இறுதியில் அதற்காகத் தன்னையே தியாகம் செய்கிறாள் என்பதுதான் கதை.

இந்த வெற்றிக்காக அவள் கடந்து செல்லும் அனுபவங்கள் மெய் சிலிர்க்க வைக்கும். பல நேரங்களில் உண்மையா, அவளின் மனபிராந்தியா என்று குழம்ப வைக்கும் அளவில் அவளின் அர்ப்பணிப்பு.

அவளின் கற்பனைகளை, குழப்பமான மனபிராந்திகளைச் சினிமாவின் தொழில்நுட்பத்தால் மட்டுமே காண்பிக்க முடியும் எனும் அளவில் படத்தின் இயக்குநர் படம் பிடித்திருக்கிறார்.

படத்தில் கதாநாயகியாக நடித்த நடாலி போர்ட் மேன் ஏற்கனவே கடந்த சில மாதங்களில் இக்கதாபாத்திரத்திற்காக பல விருதுகளைப் பெற்றுள்ளார். இந்த ஆண்டின் ஆஸ்கர் விருது இவருக்குக் கிடைக்காமல் போனால் அது இந்த ஆண்டின் மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கும்.

நடாலி இப்படத்திற்காக எட்டு ஆண்டுகள் காத்திருந்து, ஒரு வருடம் தொடர்ந்து தினசரி ஐந்து மணி நேரம் பாலே நடனப் பயிற்சி பெற்று, கடும் உணவு கட்டுப்பாட்டில் உடலை வளையும் மூங்கிலாக மாற்றி இப்படத்தில் நடித்துள்ளார்.

ஒரு கலைஞனுக்குக் கலை என்பதே கடும் பயிற்சி, முழுமையான அர்ப்பணிப்பு என்பதுபோல் நடாலி இப்படத்தில் பணியாற்றியுள்ளார். எத்தனை சந்தைக்கான சினிமாவாக மாறினாலும், ஹாலிவுட்டில் இதுபோன்ற கலைஞர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

சினிமாவில் தொழில்நுட்பம் என்பது, அதை உருவாக்கும் கலைஞன் எடுக்கும் துணிச்சலான முயற்சியின் பாகமாக இருக்க வேண்டும். மாறாக, அதிநவீன உபகரணங்களோ, கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸோ அல்ல. தொடர்ந்து இது குறித்து வரும் இதழில் பார்ப்போம்.

- எம்.சிவகுமார்.

Pin It