எனது கைபேசி சிணுங்கியது.

“ஹலோ, நான்தான்ப்பா அம்மு பேசுறேன்.”

“சொல்லு- அம்மு.”

“எனக்கு ஜுரம்பா, தலையெல்லாம் வலிக்குது, நீங்க எங்க இருக்கீங்க?”

“நான் கும்பகோணம் பஸ்டாண்டுல ஊருக்கு வர பஸ்சுக்காக நிற்கிறேன். உடனே பஸ் ஏறிடுவேன். சாயந்திரம் அஞ்சு மணிக்குள்ள வீட்டுக்கு வந்து விடுவேன். வந்தவுடன் நாம அலோபதி டாக்டரிடம் போகலாம்.” - நிறுத்தாமல் அப்படியே தொடர்கிறேன்.

 “நீ என்ன செய்யற பீரோவுல இருக்கிற ஹோமியோபதி மாத்திரைய எடுத்துச் சாப்பிடு தலைவலி குறையும். நான் அஞ்சு மணிக்குள் வந்துவிடுகிறேன். டாக்டரிடம் போகலாம்” என சொல்லி கைபேசியை அணைத்தேன்.

பேசியது எனது செல்ல மகள் அம்மு, 10ம் வகுப்பு பரீட்சை எழுதிவிட்டு ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறாள். ஹோமியோ மருந்தில் அவளுக்கு நம்பிக்கை இல்லை. எந்த சின்ன வியாதியாக இருந்தாலும் உடனே டாக்டரிடம் போக வேண்டும். மிக எளிமையாக, சிக்கனமாக, பக்கவிளைவுகள் இல்லாத மருந்து ஹோமியோ மருந்து. ஆனால் நம்பிக்கை இல்லை என்றால் என்ன செய்வது. நான் வீட்டிற்கு போவதற்குள்ளதாக அம்முக்கு ஜுரம் விட்டிருக்கும். நம்பிக்கை இருக்கு. பார்ப்போம்.

கும்பகோணம் பேருந்து நிலையத்தில் தஞ்சை செல்லும் பேருந்துக்காக காத்து நிற்கிறேன். இப்போது பகல் 3மணி. இப்ப பஸ் ஏறினால் 4.20 க்கு தஞ்சை போய்ச் சேரலாம். அங்கிருந்து டவுன் பஸ் ஏறினால் 5 மணிக்குள் வீட்டிற்கு போய் விடலாம். அம்மு ஒருவேளை ஹோமியோ மருந்து சாப்பிடாமல் இருந்தால் டாக்டரிடம் 5 மணிக்கு அழைத்துபோய் விடலாம். நான் மனதுக்குள் கணக்குப் போட்டுக் கொண்டே பஸ்சுக்காக காத்து இருந்தேன்.

அரசுப் போக்குவரத்து பேருந்து ஒன்று வந்தது. மிகவும் அறுதபழசு. தஞ்சை என போர்டு மாட்டி இருந்தது. முன்பக்க கண்ணாடியில் சுண்ணாம்பால் “எக்ஸ்பிரஸ்” என்று எழுதி இருந்தது. வண்டியில் ஏறி ஓட்டுநர் பின்புறம் இரு இருக்கைகள் விட்டு மூன்றாவது இருக்கையில் ஜன்னலோரம் அமர்ந்தேன். என்னோடு 15 நபர் கள் மட்டுமே ஏறினார்கள். 15 க்கும் மேற்பட்டவர்கள் பஸ்சில் ஏறாமல் நின்றனர். வேறு நல்ல பஸ்சுக்காக காத்திருப்பார்கள் போல உள்ளது. எனக்கு பின்னால் 40 வயது மதிக்கத்தக்க ஒல்லியான உருவம் உள்ள ஒருவர் குடிபோதையுடன் ஜன்னல் ஓரம் அமர்ந்தார். ஓட்டுநர் இருக்கைக்கு இடதுபுறம் பேண்ட்-சர்ட் அணிந்த ஒருவர் அமர்ந்தார். அலுவலகத்தில் பணிபுரிபவர் போல் இருந்தார். மற்ற இருக்கைகளில் இருக்கைக்கு ஒருவர், இருவராக அமர்ந்து இருந்த னர்.

பேருந்து புறப்படும் சமயம் மிகவும் குண்டான ஒரு உடம்பை தூக்கிக் கொண்டு, ஓடமுடியாமல் ஓடிவந்து பேருந்தில் ஏறி ஒல்லியான நபர் அமர்ந் திருந்த இருக்கையில் அப்பாடி... எனச் சொல்லி அமர்ந்தார். அவர் ஓடி வந்த களைப்பில் தொபுக் கடீர் என இருக்கையில் உட்கார்ந்தது சிரிப்பை வர வழைத்தாலும் பின்பு அவர்மீது பரிதாப உணர்வு எழுந்தது.

நடத்துநர் கழுத்தில் மாட்டியிருந்த எலக்ட்ரானிக் மிஷினுடன் “டிக்கெட், டிக்கெட்” என சொல்லி பேருந்தின் பின் பகுதியில் இருந்து கேட்க ஆரம்பித் தார். முதல் டிக்கெட்டே பிரச்சனையாக இருந்தது. டிக்கெட் கேட்டவர் 12 ரூ. 50 காசு கொடுத்து “தஞ்சை பழைய பேருந்து நிலையம் ஒரு டிக்கெட்” என கேட்டார். கண்டக்டர் காசை வாங்கி பார்த்து விட்டு “பழைய பஸ்டாண்ட் ஒரு டிக்கெட் 14ரூபாய்” என சொன்னார். அவரோ”எல்லா பஸ்ல யும் 12.50 தான் டிக்கெட். உங்க பஸ்ல மட்டும் என்ன 14 ரூபாய். நான் 12.50க்கு மேல் தரமாட் டேன்” எனக்கூற, கண்டக்டர், “இது எக்ஸ்பிரஸ் வண்டி. இதுல 14 ரூபாய் தான் டிக்கெட்” என சொல்ல பயணியோ பலமாகச் சிரித்து “இதுவே ஓட்ட வண்டி. தஞ்சாவூர் போய் சேருமோ, இல்ல நடுவிலே நிற்க போகிறதோ, தெரியல. இது எக்ஸ்பிரஸ்சாம்ல” என நக்கலாக சிரிக்க நடத்துனரோ என்ன செய்வது என தெரியாமல் பரிதாபமாக நின்றார். நான் தலையிட்டு “கண்டக்ட ரிடம் சண்டை போட்டு என்ன செய்வது? நாம நிர்வாகத்திடம்தான் சண்டை போடணும்” என சொல்லி பயணியை சமாதானப்படுத்தி டிக்கெட் எடுக்க வைத்தேன்.

அடுத்து குண்டு பயணியிடம் 14 ரூபாய் பெற்றுக் கொண்டு டிக்கெட் கொடுத்துவிட்டு ஒல்லியான பயணியிடம் “எங்க போகணும்?” என கேட்டார். பயணி “பாபநாசம் அரை டிக்கெட்” என கேட்டார். கண்டக்டர் அதிர்ச்சியுடன் “12 வயது சிறுவர் களுக்கு” அரை டிக்கெட் உனக்கு முழு டிக்கெட் தான்” என கூற ஒல்லி பயணியோ தடுமாற்றத்துடன் எழுந்து நின்று கையை தட்டி பயணிகளை பார்த்து “எல்லோரும் என்னைப் பாருங்கள். கண்டக்டர் அநியாயத்தைப் பாருங்கள்” என சத்தமாகப் பேசி னார். பயணிகள் அனைவரும் அவர் பக்கம் பார்வையைத் திருப்பினர். “நல்லா கேளுங்கள் சார் இந்த அநியாயத்தை. நான் இருபது கிலோ தான் இருப்பேன். எனக்கு முழு டிக்கெட் எடுக்க சொல் கிறார். இவரை பாருங்கள்” என குண்டு பயணியை கையை காட்டி “இவர் இருநூறு கிலோ இருப்பார் இவருக்கும் ஒரு டிக்கெட் எனக்கும் ஒரு டிக்கெட்டா என்ன அநியாயம் சார்” எனக்கூற அனைவரும் சிரித்தனர். குண்டு மனிதரோ தர்ம சங்கடத்தில் நெளிந்தார். நடத்துனரோ ‘இன்னைக்கு யார் முகத்தில் முழித்தேனோ தெரியல’ என தலையில் அடித்துக்கொண்டு “சார் காசை கொடுங்கள்” எனச் சொல்லி டிக்கெட் போட்டுவிட்டு நகர்ந்தார். பேருந்து மிக மெதுவாக சுமார் 30 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டு இருந்தது. பலர் எரிச்சல் அடைந்து முணுமுணுக்க ஆரம்பித்தனர். பேருந்து பாப நாசத்தை அடைந்தது. சிலர் இறங்கினர். சிலர் ஏறினர். பலர் பஸ்சை பார்த்துவிட்டு ஏறவில்லை.

அப்போது ஓட்டுநர் இடதுபக்க இருக்கையில் அமர்ந்து இருந்தவர் செல்போன் மணி அடித்தது. செல்லை எடுத்து சத்தமாக பேசினார். மனைவி யிடம் இருந்து போன் வந்ததாக தெரிந்தது. “என்னடி எழவு எடுத்தவளே நான் ராத்திரி சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வரமாட்டேன். சோத்துல தண்ணி ஊத்தி விடு. நிலைமையை பாத்தா விடிஞ்சிதான் தஞ்சா வூர் வந்து சேர்வேன் போல இருக்கு. ஒரு வீணா போன பஸ்சிலே வந்துகிட்டு இருக்கேன்” என கடுமையாக கூறி போனை ஆப் செய்தார். பஸ் ஒட்டுநர் மீது இருந்த கோபத்தை எல்லாம் தன் மனைவியிடம் காட்டியுள்ளார் ஓட்டுநர் அனைத் தையும் கேட்டுக்கொண்டு எதுவும் நடவாதது போல் பேருந்தை செலுத்திக் கொண்டிருந்தார். பேருந்து அய்யம்பேட்டையை கடந்துவிட்டது இதே வேகத்தில் போனால் நாலே முக்கா லுக்குதான் பழைய பேருந்து நிலையம் போய் சேரும்போல் உள்ளது. மனசும் உடலும் அலுப்பாக இருந்தது. எங்களை கடந்து நான்கு தனியார் பேருந்துகள் ஒன்றின்பின் ஒன்றாக கடந்து சென்றுவிட்டன. எரிச்சல் எரிச்சலாக இருந்தது.

அப்போது தான் அந்த சம்பவம் நடந்தது. எங்களுக்கு முன்னால் செங்கல் ஏற்றிய அரைபாடி லாரி ஒன்று புகையை சக்கியபடி சென்றுகொண்டு இருந்தது. எங்கள் பேருந்து அந்த லாரியை ஒரு வளைவில் முந்தி சென்றது. முந்தி செல்லும் போது லாரியை உரசிவிடுமோ என்ற அளவிற்கு பேருந்து நெருங்கி சென்று முந்தியது. பின்னால் லாரியை கவனித்தேன். ஓட்டுநர் லாரியை தடுமாற்றத்துடன் இடது பக்க வாய்க்காலுக்கு செல்லாமல் தடுமாறி ரோட்டிற்கு கொண்டு வந்தது தெரிந்தது. அப்பாடி லாரி தப்பித்தது என நினைத்து முன் பக்கம் கவனம் செலுத்தினேன். கொஞ்ச நேரம் கழித்து அதே லாரி கொஞ்சம் வேகம் எடுத்து பஸ்சை முந்தி சென்று கொஞ்ச தூரத்தில் நடுரோட்டில் பஸ்சை வழி மறித்து நின்றது. பேருந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். லாரியில் இருந்து குதித்த லாரி ஓட்டுநர் பஸ்சை நோக்கி கோபத்துடன் வருவது தெரிந்தது. பேருந்து ஓட்டுநர் பேருந்தில் இருந்து கீழே இறங்காமல் உட்கார்ந்து இருந்தார். லாரி ஓட்டுனரோ கடும் கோபத்துடன் கொச்சையான வார்த்தைகளால் மிக கடுமையாக திட்டினார். லாரி ஓட்டுநர் பஸ் ஓட்டுநரை பார்த்து “எனது லாரியை முந்தி செல்லும் போது ஹாரன் சத்தம் கொடுக்கா மல் நீ திடீரென முந்தி சென்றதால் நான் தடுமாறி வாய்க்காலில் லாரியுடன் கவிழ்ந்து இருப்பேன். நீ என்ன டிரைவர்” என சத்தமிட்டார். அனைத்தையும் கேட்டுக் கொண்ட பேருந்து ஓட்டுநர் கொஞ்சம் கூட கோபப்படாமல் லாரி டிரைவரை பார்த்து சொன்னார். “வச்சிகிட்டேவா நான் வஞ்சனை பண்ணுவேன்? இந்த பஸ்சிலே ஆரன் இல்லைய் யா, என்னை என்ன பண்ண சொல்றே?” என கேட்க அத்தனை கோபமும் லாரி டிரைவருக்கு எங்க போனது என்று தெரியவில்லை. பஸ்ஸில் ஆரன் இல்லை என்ற பதிலைக் கேட்டதும் சத்தம் போடு வதை விட்டுவிட்டு என்ன சொல்வது என்று புரியா மல் ஒரு நிமிடம் நின்று தூ என துப்பிவிட்டு லாரியில் ஏறி உட்கார்ந்து லாரியை செலுத்த ஆரம்பித்தார். ஏதும் நடவாததைபோல் பேருந்து டிரைவரும் பேருந்தை கிளப்பினார். இதையெல் லாம் பார்த்துக்கொண்டு இருந்த நான் டிரைவரை பார்த்து “என்ன சார் இதெல்லாம்” என்றேன். இதுவரை பொறுமையாய் இருந்தவர் மனதில் இருந்ததை எல்லாம் கொட்ட ஆரம்பித் தார். “பத்து வருடங்களுக்கு முன்பே காயலாங் கடைக்கு அனுப்ப வேண்டிய இந்த வண்டியை நாங்கள் ஒட்டுகிறோம். அதுவும் வெட்க மில்லாமல் எக்ஸ்பிரஸ் என்று வேறு சொல்லிக் கிட்டு. எத்தனை பயணிகள் எங்களை நேரடியாக திட்டுறாங்க கேவலமாக பேசுறாங்க. இந்த ஓட்டை பஸ்சை கொடுத்து ஒரு லிட்டருக்கு ஆறு கிலோ மீட்டர் ஓட்டணும். ஏறி நின்று ஆக்ஸி லேட்டரை மிதிச்சாலும் நாற்பது கிலோ மீட்டருக்கு மேலே போகாது. நிர்வாகத்திடம் நாங்க பேசினா உடனே மெமோ கொடுத்திடு வாங்க. வண்டியிலே எது இருந்தாலும் இல்லா விட்டாலும் நாங்க வண்டி எடுத்துகிட்டுத்தான் வரணும். வேறு வழியில்லை. நீங்க கேட்கலாம் இதயெல்லாம் சகிச்சிகிட்டு, ஏன் வேலை பார்க்கணும், நானும், கண்டக்டரும் சும்மா வேலைக்கு வரல. மனைவி, அம்மா இவங்க நகை, அப்பாவின் நிலம் எல்லாவற் றையும் அடகு வைத்து ஒன்றரை லட்சம், 2 லட்சம் என பணம் கொடுத்துவிட்டுத்தான் இந்த வேலைக்கு வந்து இருக்கோம். எங்களை நம்பி குடும்பம் இருக்கு. இன்னும் வேலை நிரந்தர மாகலை. எங்களுக்கும் எல்லா உணர்வுகளும் இருக்குசார். எவ்வளவு தான் கேவலப்படுவது. கடைசியாக நம்பிக்கை இருக்கு சார். எல்லாமும் மாறும் என்றார்.” பேசிக் கொண்டே வந்ததில் பழைய பேருந்து நிலையம் வந்துவிட்டது. அவரி டம் விடைப் பெற்று இறங்கினேன். மணியை பார்த்தேன். மணி ஐந்து. பொதுத் துறை எல்லாம் ஓட்டை உடைசலாகி வருகிறது.

செல்போன் சிணுங்கியது. “ஹலோ அப்பா நான் தான் அம்மு பேசுறேன்”. “சொல்லு அம்மு,” “ஜுரம் விட்டுடிச்சி அப்பா தலைவலியும் இல்லை”. “அப்படியா வீட்டிலேயே ரெஸ்ட் எடு. வரும்போது உனக்கு பிடிச்ச பிளம்கேக் வாங்கி கிட்டு வரேன்”. செல்போனை அணைத்தேன். நன்றி ஹோமியோபதிக்கு. 500 ரூபாய் டாக்டர் செலவு மிச்சம்.

Pin It