ஓவியர் இசக்கி அண்ணாச்சி நெல்லையில் காலமாகிவிட்டார். 1927 இல் பிறந்து 2010 ஜூன் 1 இல் மறைந்த இந்த 83 ஆண்டு வாழ்க்கையில் சுமார் 65 வருடங்களை ஓவியம்-புகைப்படம் என்றே வாழ்ந்து முடித்தவர் இசக்கி.

அவர் 1940 களில் முதல் தலைமுறைக் கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் நெருங்கிப் பழகியவர். திருநெல்வேலியின் முதல் கம்யூனிஸ்ட்டுகளில் ஒருவரான சிந்துபூந்துறை சண்முகம்பிள்ளை அண்ணாச்சி நெல்லை பப்ளிஷிங் ஹவுஸ் ஆரம்பித்து சோவியத் இலக்கியங்களையெல்லாம் மொழியாக்கம் செய்து பதிப்பித்தபோது அந்நூல்களுக்கெல்லாம் இசக்கி அண்ணாச்சிதான் அட்டைப்படம் வரைந்து கொடுத்தார்.

தொ.மு.சி. ரகுநாதன் நடத்திய “சாந்தி” இலக்கிய இதழில் ஓவியராகப் பணியாற்றினார்.

அவரது இறுதிக் காலம் வரை நெல்லையில் யார் என்ன கலை முயற்சியில் இறங்கினாலும் இசக்கி அண்ணாச்சியின் பங்களிப்பு அதில் இருந்தது.

திருநெல்வேலி நகரம் கடந்த 60 ஆண்டுகளில் அடைந்துள்ள மாற்றங்களை அவருடைய புகைப் படங்களில் அவர் ஆவணமாக விட்டுச் சென்றுள்ளார். நெல்லை வட்டார விவசாய வாழ்வின் கோலங்களாக அவருடைய பெரும் பகுதிப் புகைப்படங்கள் அமைந்துள்ளன.

தன் தோள்களில் கிடந்த பறையை கடைசி வரை அடித்து முழக்காமலே மௌனத்திலும் குறைந்த ஒளியிலுமாக வாழ்ந்து மறைந்த அக்கலைஞனுக்கு மௌனமாக நம் அஞ்சலியைப் படைக்கிறோம்.

Pin It