காத்திருப்பு

சூரியன் உதிக்கிறான்

தாமரை மலர்கிறது

வண்டு தேனருந்த

மலர்கள் ஏங்குகிறது

நதிகள் சங்கமிக்க

கடல் காத்திருக்கிறது

 

 

மழை மண்ணை முத்தமிட

மரங்கள் பூரிப்படைகின்றன

இரவுப் பொழுதுகளில்

விண்மீன் நிலவுக்கு

சேதி அனுப்புகிறது

வெட்ட வெளியில்

கவிஞன் காத்திருக்கிறான்

வானிலிருந்து

வார்த்தைகள் வந்து விழுந்து

காகிதத்தை நிரப்பாதாவென்று.

 

நாளைய பொழுது........

பிறப்பு

வாழ்வு

இறப்பு

மழை

வெயில்

பனி

போகம்

ரோகம்

யோகம்

இயந்திரத்துடன் வேலை

செய்து  எந்திரன் ஆனேன்

நாளைய பொழுது

நல்ல பொழுதுதாகுமென்று

இன்றைய படுக்கையை

விரிக்கின்றேன்

கனவுலகம் வாரியணைத்து

அன்றைய களைப்பை

நீக்குகிறது.

 

சுவடு

கடற்கரையில் நண்பகலில்

யாரிருப்பார்கள்

கிளிஞ்சல் பொறுக்கும்

சிறுவர்களும்,

லீலைகளில் ஈடுபடும்

காதலர்களும் தவிர

கடலுக்கு இது மற்றுமொரு நாள்

அவ்வளவே

என்றைக்கு அலை

ஆழிப்பேரலையாகும்

யாருக்குத் தெரியும்

பிரளயத்தின் சுவடு

தெரியாமல்

சகஜமாக இருக்கிறது கடற்கரை

முத்துக்குளிக்கும் மனிதரும்

வாழ்வெனும் சாம்பல் மேட்டில்

புதையலைத் தேடும்

வெகு ஜனங்களும்

சுவடே இல்லை

சுனாமி தாக்கிய

சுவடே இல்லை

நாளையும் மற்றுமொரு  இன்றே

நாளையாவது நல்விடியலாகட்டும்

வெறுமைக் கனவுகள்

தகர்ந்து ஒழியட்டும்.

Pin It