இம்முறை பார்க்க முயன்றும் பார்க்க வாய்க்காமல் போன படங்கள் மூன்று.ஒன்று ம.செந்தமிழன் இயக்கிய பாலை,  உச்சிதனை முகர்ந்தால் மற்றும் வெண்மணி.சிறிய தயாரிப்புகளுக்கு இடமளிக்காத இன்றைய திரைப்பட விநியோக ஏற்பாடுகளால் இப்படங்களைப் பார்க்க இயலாது போனது.தமிழ்தேசிய உணர்வாளர்களால் எடுக்கப்பட்டவை முதலிரு படங்களும் என்பதால் அவற்றைப் பார்ப்பதும் விமர்சிப்பதும் அவசியம் என்று கருதினோம்.பாலை படத்துக்கு ஆள் இல்லாததால் காட்சி ரத்து செய்யப்பட்டதாக  அறிவிக்கப்பட்டு ஏமாந்து திரும்பினோம். நிற்க. இப்போது மூன்று படங்கள் பற்றிப்பேசலாம்.

1.மயக்கம் என்ன

இயக்குநர் செல்வராகவனின் மயக்கம் என்ன வணிகரீதியாக வெற்றி பெற்று ஓடிக்கொண்டிருக்கும் படம்.காதல் கொண்டேன்,புதுப்பேட்டைக்குப் பிறகு அண்ணனும் தம்பியும் சேர்ந்து கொடுத்திருக்கும் படம்.வழக்கமாக செல்வராகவன் பழைய கே.பாலச்சந்தரைப்போல மண்ணில் ஒட்டாத ஆனால் ரொம்ப சீரியஸ்ஸான ஒரு பிரச்னையைச் சொல்வது போன்ற படங்களைக் கொடுப்பவர்.ஆண்-பென் உறவுச்சிக்கல்களே மையப்பொருளாக இருக்கும்.அதிரடியான காட்சிகளும் வசனங்களும்  தடாலடித் திருப்பங்களும் தீர்வுகளுமாகப் போகும் அவருடைய படங்கள்.அந்த பார்முலாப்படி எடுக்கப்பட்ட படம்தான் மயக்கம் என்னவும்.

நண்பனின் காதலியை (ஆனால் அவள் அவனைக் காதலிப்பதாகச் சொல்லலியே)க் காதலிக்க நேரும் ஒரு பெரும் மன உளைச்சலுடன் வாழ நேரும் இளைஞனாக தனுஷ் . பெரிய புகைப்படக்கலைஞனாக சர்வதேச விருது வாங்கும் கனவுகளுடன் தனுஷ் வாழ்வது இப்படத்தில் புதுசு .இடைவேளை வரை கட்டிறுக்கமான கதை ஓட்டம் செல்கிறது.இடைவேளைக்குப் பிறகு படம் பெரிய இழுவையாகப் போய் எதிர்பார்த்த முடிவுடன் எல்லாம் சுபமாக முடிகிறது.வழக்கமாக சோகத்தில் படத்தை முடிக்கும் செல்வராகவன் இப்படத்தில் சந்தோஷமான முடிவைக்கொடுத்துவிட்டதும் புதுசு அல்லவா என்கிறார்கள்.

தமிழில் நல்ல நடிகர்களில் முதல் வரிசையில் இருப்பவர் தனுஷ்.இந்தக் கதாபாத்திரத்துக்கு தன் நடிப்பால் நம்பகத்தன்மையைக் கொடுத்திருக்கிறார்.காட்டுக்குள் புகைப்படம் எடுக்கப்போகும் காட்சிகளில் அவரும் ராம்ஜியின் கேமராவும் ஜி.வி.பிரகாஷின் இசையும் இணைந்து மயக்கம் தருகிறார்கள்.காட்சிரூபமான இப்படத்தில் சுருக்கமான வார்த்தைகளில் அளவான தறித்த வசனம் மேலும் ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. தமிழக்க் காட்டுக்குள் ஆப்பிரிக்க யானையைப் படம் எடுத்துக் குமுதத்துக்கு அனுப்புவது சாமவேளையில் காட்டுக்குள் எடுத்த படங்கள் நல்ல சூரிய ஒளியோடு இருப்பது போன்ற கோளாறுகள் படத்தில் உண்டு.அது ரசிகர்களுக்கு உண்டாக்கப்படும் மயக்கத்தில் மறந்து போகிறது.

எந்நேரமும் தண்ணியடித்துக்கொண்டு கடற்கரையில் படுத்துக் கடல் நீரில் கால் நனைத்தபடி தூங்குகிற(!) (!) வித்தியாசமான (குடும்பங்களிலிருந்து பிறந்து வராத அந்தரத்தில் தொங்கும் இளைஞர்கள்) நண்பர்கள் உதவியுடன் தனுஷ் வெற்றி பெறுகிறார்.ரிச்சா காதலியாக மனைவியாக தன் பங்கை சரியாகச் செய்கிறார்.ஆம்பளைதானே அதனாலே வீக்கா இருக்கே என்பது போன்ற வசனங்கள் ஆங்காங்கே  கைதட்டல் பெறுகின்றன.

இன்றைய இளைஞர்களின் நாடித்துடிப்பைச் சரியாக புரிந்து கொண்டவர் என்று இப்பட்த்துக்காக செல்வராகவன் பலரால் பாராட்டப்படுகிறார்.தணியும் பொம்பளை விவகாரத்தில் ரொம்ப ‘சுதந்திரமாக’ (பெண்களும் கூட சுதந்திரமாக) இருப்பதாகக் காட்டுவதுதான் நாடித்துடிப்பா?நல்ல கூத்துத்தான்.ஆண் பெண் உறவு குறித்துப் பேசுவதை நாம் குறை கூறவில்லை.காலந்தோறும் இலக்கியங்கள் அன்னா கரீனா முதல் மோகமுள் வரை அதைப் பேசிக்கொண்டுதான் வருகின்றன.வாழ்வின் முக்கியமான பகுதி அது.ஆனால் அதற்குள்ளேயே முடக்கி விடுவதுதான் ஆபத்து.அதுவும் காட்சி ஊடகத்தின் சக்தி மிக்க மொழியில்.ஒரு கலைஞனின் வேட்கையையும் கதையின் ஒரு பகுதியாகச் சேர்த்ததற்காக செல்வராகவனைப் பாராட்டலாம்.

2.போராளி

சமுத்திரக்கனி சசிகுமார் கூட்டணியில் மற்றுமொரு வணிக வெற்றிப்படம் போராளி.கதை என்று பார்த்தால் சொத்துக்கு ஆசைப்பட்டு  ரெண்டாந்தாரக்காரியின் சதியால் அண்ணனைக் கொன்று மூத்த தாரத்து மகனைப் படிக்க வைக்காமல் பைத்தியமாக்கி கொடுமைசெய்ய அவன் ஓடும் வரை ஓடிப்பார்த்து முடியாமல் திருப்பிப் பழி வாங்கும் கதைதான்.ஆனால் சொன்ன விதத்தில் ரசிகர்களைக் கட்டிப்போட்டுவிடுகிறார்கள். வெகு யதார்த்தமான நடிப்பும் துள்ளிக்குதிக்கும் கிண்டலும் சமூக விமர்சனமும் படத்துக்குச் சுவையூட்டுகின்றன. பல படங்களில் நடித்திருந்தாலும் இப்படத்தில்தான் அய்யா கு.ஞானசம்பந்தன் பொருத்தமாக நடித்திருக்கிறார் எனலாம்.மத்தியதர வர்க்கத்து வீச்சமெடுத்த டீசண்ட் வாழ்க்கையை நாறடித்திருக்கிறார்கள் படத்தில்-ரசிக்கும்படியாக.

நம்பிக்கையூட்டும் வசனங்களும் வாழ்வின் அர்த்தம் குறித்து அவ்வப்போது தெறித்து விழும் கருத்துக்களுமாகப் படம் செல்வது குறிப்பிடத்தக்கது.சமூகத்தால் புறக்கணிக்கப்படும் மனப்பிறழ்வுக்காளானவர்கள் பற்றிய அரைமணி நேரக்காட்சிகள் தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான காட்சிகள் எனலாம். ரொம்ப மென்மையான காதல் படத்துக்கு அழகு சேர்க்கிறது.பிச்சைக்காரர்கள் ,பெண்கள் ,மநலம் குன்றியவர்கள் எனப் படம் முழுக்க ஒதுக்கப்பட்டவர்கள்,ஏழை எளிய மக்களே பிரதானப்படுத்தப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது.

சென்னை நகரத்துக் காட்சிகளில் கிடைக்கும் யதார்த்தம் கிராமத்துக் காட்சிகளில் கிடைக்கவில்லை.அவை சற்று மிகையாகவே காட்சிப்படுகின்றன. ஒரு தலித் பெண்மணி வீரத்துடன் போராடும் காட்சிகள் ஆவேசத்துடன் அமைந்துள்ளன.ஆனாலும் அவர்கள் மேல்சாதி ஆண்டைக்காக விசுவாசமாகப் போராடித்தான் சாகிறார்கள்.நல்லவர்களைக் காக்க்கப் போராடினார்கள் என்று சமாதானம் சொல்லிக்கொள்ளலாம்.

சுப்பிரமணியபுரம்,நாடோடிகள்,ஈசன்,போராளி என்று பெரிய குற்றம் சொல்லிவிட முடியாத படங்களைத் தொடர்ந்து வழங்கி வரும் இவ்விளைஞர்கள் தமிழ் சினிமாவில் நம்பிக்கையூட்டும் சக்திகள்.

3.ராஜபாட்டை

வெண்ணிலா கபடிக்குழுவையும் அழகர்சாமியின் குதிரையும் தந்த நம்ம சுசீந்திரன் இயக்கிய படம் என்பதால் ஆவலுடன் இப்படத்தைப் பார்க்கப் போனோம். போயிருக்கவே வேண்டாம். அடுத்த படத்தில் நல்ல கதையையும் தேர்வு செய்து இன்னும் திட்டமிட்ட உழைப்பையும்  மனதையும் செலுத்திக் கவனமுடன்  வேலை செய்யுங்கள் சுசி.வாழ்த்துக்கள்.

Pin It