விடிஞ்சா தைப்பிறப்பு. எல்லா மனுசர்களுக் குள்ளும் நேத்து வரையிலான வேத்துமைகள் மறந்த கனிவும் முகத்தில மலர்ச்சியும் கொண்டிருந்தது. நடு சாமத்துக்கு மேலாகியும் வீடுகளில் விளக்கு எரிஞ்சிக்கிட்டிருந்தது. வாசல்களுக்கு முன்னால் சின்னக் குழந்தைகள், கொமருகள், இளவட்டங் கள்ன்னு தரவாரியா கூடி கும்மாளமாக் கிடந்தாங்க.

ஊர் மந்தையில பத்துப் பன்னிரெண்டு பெரிசு கள் உட்கார்ந்து கனுப்புல்ச்செடி, வேப்பங்குலை, தும்பைச்செடி மூணையும் ஒவ்வொரு கைப்பிடி சேர்த்து நாத்துப் பயிரால் முடிஞ்சி வெள்ளாமை புஞ்சையில் பொலி கட்டுறதுக்காக ஆயத்தம் ஆகிக் கிட்டிருந்தாங்க.

“புளுகாண்டி மாமா தலைக்கோழி கூப்புட கிளம்பி காடுகளுக்குப் போனால் சரியா வரும். அந்நேரந்தண்டிக்கும் கதை ஒண்ணு போடும் கேட்டுக்கிட்டே வேலையைப் பார்ப்போம்.”

எல்லாரும் கதை வெச்சிருக்கிற ஆளுகள் தான்னாலும் புளுகாண்டி பெரிசுமாதிரி கதை விட முடியாது. வேலத்தளத்திலேயோ உட்கார்ந்து அலுப்பார்ற இடத்திலயோ கதை போடாம இருக்க மாட்டாரு. இந்தா ஆரம்பிச்சிட்டாரு!

“யானைத் தலத்தண்டி பெருங்காயம் போட்டு கீரை கடையுற ராசா மகனுக்கும் அரிசி களைஞ்ச தண்ணியிலயே ஆயிரங்கோட்டை நெல்லு விதைப் பாடாகிற ராசா மகளுக்கும் கல்யாணம் நிச்சய மாச்சாம்”

இது ஊரு உலகமெல்லாம் தெரிஞ்ச கதை தான்னாலும் புளுகாண்டி மாமன் வாயால எத்தனை வாட்டின்னாலும் அலுக்கமா கேட்டுக் கிட்டே இருக்கலாம். கதையை தெரியாத மாதிரி இருந்து ஆஹா ஓஹோன்னம்ன்னா கதையோட ருசிப்பே தனிதான்.

“சரி மேக்கொண்டு சொல்லும் மாமா!”

“ என்ன லொள்ளு மாமா! விளக்கெண்ணை! மத்த கதை மாதிரி தலைய தலைய ஆட்டுற கதை கிடையாது. பால்க்கடல்ல மந்திரகிரியை மத்தா நட்டி வாசுகிங்கிற பாம்பை கயிறா சுத்தி அமிர்தங் கிடைக்கிறதுக்காக கடைசல் போட்டாகன்னெல் லாம் கதைக்கிற சங்கதியில்லை. ஓண்ணுக்கு நூறா ஓசனை பண்ணனும். இப்பொ நம்ம வீட்டுல கீரை கடைஞ்சா எவ்வளவு பெருங் காயம் போடுவா? ஒரு உப்புக்கல் இம்புட்டு போடுவாளா? இவன் ஆனைத் தலத்தண்டி பெருங்காயம் போட்டான்னா எத்தனை அம்பாரம் கீரை வேண்டியிருக்கும் அதுக்கு சட்டி எம்மாம் பெரிசு. கடையுற மத்து எவ்வளவு பெரிசு வேணும் அதை விடு.

சாப்பாட்டு இலையில ஒரு ஓரமா கொஞ் சூண்டு வைக்கிறது கீரை. அதுக்கே இந்தப் பாடுன்னா மத்த கூட்டு பொரியலுக்கு காய்கறி வகைகள் எத்தனை ஏக்கர்ல அவனுக்கு விளை யணும். சோத்துக்கு நெல்லு எத்தனை பூமியில விளைஞ்சி வரணும் அப்படியாப் பட்ட செல்வேந் திரன் பொண்ணு வீட்டுக்காரன்.

மாப்பிள்ள வீட்டு மவராசன் பவுசு எப்ப டீன்னா அன்னா சமைக்கிற அரிசியை கழுவி கீழே கொட்டுற தண்ணி இருக்கே அதுலெ ஆயிரங் கோட்டை நெல்லு நாத்துப் பாவி அதை நடுகை போட்டு விளைஞ்சி கோட்டை கோட்டையா வீடு வந்து சேருமாம் இப்படி நித்தம் கழுவி ஊத்திக் கிட்டே இருந்தா எவ்வளவு சம்சாரித்தனம் நடக்கும்?

இதிலே இன்னும் கம்மாப் பாசனம் ஆத்துப் பாசனம் வேற இருக்கு. உள்ளி மொளகா காயி கனிக விளையுற தோட்டந்தொரவு தனியாக் கிடக்கு.

இப்படியாப்பட்ட சம்மந்தகாரங்க நடத்துற நிச்சயதார்த்துக்கு எம்புட்டு சாதி சனம் சொந்த பந்தம் வரும் (நிச்சயதார்த்தம் தான். கல்யாணத் தடபுடல் வேற இருக்கு.)

அத்தன கோடி சனங் களுக்கும் பொங்கி பொரிச் சுப் போடணும்ன்னா நிறைய விறகு வேணு மேன்னு கட்டை மாட்டு வண்டிகளப் பூட்டி போனா களாம். மொத வண்டி திருப்பதி கிட்டே போகுது. கடைசி வண்டி திருநெல்வேலிகிட்டே வந்துக்கிட்டிருக்கு.

அப்பொ அந்தப் பக்கமா ஒரு சம்சாரி கொஞ்ச ஆள்களை வெச்சி உழுதிட்டிருந்திருக்காரு. அவரு கேட்டிருக்காரு. ‘ஏனப்பா இந்த வண்டிகள் பூராம் எங்கே போகுது’, ஆன்னு கேட்கவும் அவங்களும் ஐயா ஐயா யானத்தலத்தண்டி பெருங்காயம் போட்டு கீரை கடையுற ராசாமகனுக்கும் அரிசி களைஞ்ச தண்ணியிலயே ஆயிரங்கோட்டை நெல்லு விதைப்பாடாகிற ராசா மகளுக்கும் கல்யா ணம் நிச்சயம் பண்றாக. அந்த விருந்துக்கு விறகு தேடிப் போறோம் ன்னாங்க.

“அப்படியா சேதி . நா வேணுன்னா ஏற்பாடு பண்ணுறேனுட்டுஅங்கே உழுதிட்டிருந்த ஆளுக கிட்டே ‘டேய் இன்னக்கி மதியத்துக்கு மேல ஓடிஞ்ச சாட்டைக் குச்சிகளைப் பூராவும் வண்டிகள்ல பாரமேத்துங்கடான்னார். மாடுகளை அதட்டி ஓட்டுற தார்க்குச்சி ஒரு சம்சாரி வீட்டுல தலைமுறைக்கு ஒடியாம கிடக்கும். அகஸ்மாத்தா எப்பவாவது ஒரு வாப்பினையில ஒடியறதுதான். இங்க என்னாடன்னா ஒடிய ஒடிய உழுது மதியத் துக்கு மேல ஒடிஞ்சதே இவ்ளோ வண்டியிலயும் பாரமேத்தலாம்ன்னா அங்கே எத்தனை கோடி சோடி மாடுக உழுதிட்டிருக்கணும்? எத்தனை கொள்ளை நிலமிருக்கணும்?

மதியத்துக்கு மேல ஒடிஞ்சது இவ்ளோன்னா மதியத்துக்குள்ள ஒடிஞ்சதை எங்கே போட்டு வச்சிருக்காரு நிதாசரியும் ஒடிஞ்சது எங்கெ கிடக்கோ? வண்டி பாரமேத்தி வந்துக்கிட்டிருந்தது.

அப்பொ குறுக்கே ஒரு காட்டாத்து வெள்ளம் கங்கு கரையில்லாம இரைச்சல் போட்டு ஓடிக் கிட்டிருந்தது. தண்ணியோட வேகத்துல பனைமரங் களெல்லாம் பிடுங்கி மிதந்து வந்தது. அவ் வளவுதான் மாடுக மிரண்டு போய் நின்றிருச்சி. கொஞ்சதூரத்துல ஒரு கிழவி அந்தத் தண்ணியை மறிச்சு தன்னோட நஞ்சைக்கு திருப்பி விட்டு மண்வெட்டியால ஒவ்வொரு குண்டுக்கும் வெட்டி விட்டு கொஞ்சங்கூட அலுப்பில்லாம பாய்ச்சிக் கிட்டிருந்தா. அப்பொ வண்டிக்காரங்க இறங்கிப் போயி கிழவிக்கிட்டே இந்த மாதரி நல்ல சோலிக்கு போற காரியம் நீங்கதான் தயவு பண்ணனும்ன்னு சொல்ல அந்தப்பாட்டி அப்படி யா சேதின்னுட்டு அங்கிருந்த தன் வேலைக் காரங்களைப் பாத்து அடேய் அந்த புளிச்ச நீர்ப் பானையில இருக்கிற பழைய சோத்தைப் போட்டு மடைய அடைங்கடா அப்படீன்னா. முதல் நாள் மீந்து போன பழைய சோத்த வெச்சே காட்டாத்து வெள்ளத்தை அணைப்போட்டு நிறுத்தலாம்ன்னா சாப்புட்ட சாப்பாடு எவ்வளவு பதவல் இருக்கும். கிழவி எவ்வளவு ஆளுகள வச்சி எம்புட்டு சம்சாரித் தனம் பண்ணுவா?

வண்டிகளெல்லாம் கிளம்பி கொஞ்ச தூரந் தான் போயிருக்கும். குறுக்கே ஒரு பெரிய ஆறு. நிறைய பால் இக்கரைக்கும் அக்கரைக்கும் வெளேர்ன்னு நொங்கும் நுரையுமா திட்டங் கெட்ட வேகத்துல போய்க்கிட்டிருந்தது. இதென்னடா தொறட்டு இது எங்கிருந்து வருதுன்னு தெரியலையே இதோட பூர்வாங்கம் என்னான்னு பாத்துட்டு வாடான்னு ஒருத்தனை அனுப்புனாங்க. அவன் மேற்கால போயி பாத்துட்டு வந்து சொன்னான் .

அண்ணே அண்ணே இது வேறொண் ணுமில்ல. அந்தப்பக்கம் ஒரு சம்சாரி இருக்காரு. அவரு வீட்டுக்கு திடீர்ன்னு கொஞ்சம் விருந்தாடிக வந்துட்டாகளாம். அவங்களுக்கு தேத்தண்ணி போடணும்ணு அவசரமா கொஞ்சம் பால் பீச்சு னாங்களாம். அப்படிப் பீச்சும் போது சிந்தனுது சிதறனது இப்படி வந்துக்கிட்டிருக்குதுன்னான்.

மாட்டுக் காம்பிலிருந்து சட்டிக்குப் பீச்சும் போது அங்குட்டும் இங்குட்டும் லேசா சிதறுமே அதுதான் ஆத்துநிறைய வருதாம். அப்பொ சட்டியில எவ்வளவு பீச்சியிருப்பான்.? அதுவும் அவசரத்துக்குப் பீச்சுனதாம்.

வழக்கம்போல கன்னுக்குட்டிய விட்டு எல்லா மாடுகள்லயும் பீச்ச ஆரம்பிச் சிட்டாங்கன்னா பால் சுனாமி வந்தாலும் வந்திரும் போலுக்கேன்னு எல்லாரும் வருத்தப்பட்டு உட்காந்திருந்தாங்க.

அந்நேரம் கிழக்கேயிருந்து ஒரு சம்சாரி கொஞ்சப் பேரோட வந்தாரு. வந்தவரு, என்னப்பா என்ன வெவரம் உங்க பயணம் தடையாகிப் போன விருத்தாந்தம் என்னான்னு கேட்டார். இவங்களும் ஆதியிலிருந்து நடந்த விபரமெல்லாம் எடுத்துச் சொன்னாங்க. “அடடே அப்படியா சேதி நிச்சய தார்த்த முகூர்த்தத்துக்குள்ள உங்களை அனுப்ப ஏற் பாடு பண்ணீருதேம்ன்னுட்டு “யார்ரா அங்கே டேய் நம்ம வீட்டுல போயி மச்சு வீட்டை திறந்துறாதீங்க முன்னாடியில இருக்கிற குச்சி வீட்டை திறந்து விடுங்க. .அந்த கண்ணு திறக்காத பூனைக் குட்டிகளெல்லாம் வந்து இந்தப் பாலை சாப்புட்டு போகட்டும்ன்னார்.

கண்ணு திறக்காததுன்னா அப்பொதான் ஈண்டு போட்ட குட்டிகள். அந்தக் குட்டிக வந்து சொன்ன மாதிரியே அவ்வளவு பாலையும் சொடக்கு போடுற நேரத்துல ஆத்தையே நக்கி தொடைச் சீருச்சிக. அப்பொ ஈண்டு போட்ட குட்டிகள் அவ் வளவுன்னா தாய்ப்பூனை எவ்வளவு இருக்கும்? அதுகளுக்கு பால் எவ்வளவு வேண்டியிருக்கும்? அதுக்கு எத்தனை மாடுகள் வெச்சிருக்கணும். அதுகளுக்கெல்லாம் கூளம் வேணும்ன்னா எவ் வளவு நிலத்துல விவசாயம் நடக்கணும். வீட்டுல செல்லம்மா ஒத்த பூனை வளக்கிறதுக்கு இத்தனை பூனைகள் வளர்க்கிறானே, அப்பொ காவலுக்கு எத்தனை நாய்கள் வெச்சிருப்பான்?

வண்டிகள் போய்க்கிட்டேயிருந்தது. அப்பொ திடீர்ன்னு பேய்க்காத்து வீசுனது. அது இருக்க இருக்க பெரிய்ய புயலா மாறி ஹோன்னு இரைச்சல் போட்டு வந்தது. அது என்னான்னு பாத்தா தெற்கே ஒரு சம்சாரி தன்னோட ஆளுகளை வச்சி களத்துல கருதடிச்சி தான்யத்தை கொம்மை தூத்தி விட்டிருக்காரு. முறத்துல தான்யத்தை கோதி மேல விசிறி விட்டு தான்யம் வேற கொம்மை வேறயா தூற்றி விடும் போது முறத்தோட வீச்சுல சொய்ங்ன்னு ஒரு காத்து வரும். அதை ஏகப்பட்ட வேலையாட்கள் கணக்கு வழக்கில்லாம களத்துல நின்னு தூத்தி விட்டதால அந்த காற்றுப் பூராவும் ஒண்ணு சேந்து புயலாமாறி அப்படி ரவ்வாளி போட்டு வந்தது. அப்படி வந்த அந்த புயலு தார்க்குச்சிகளை பாரமேத்தி திருப்பதிலிருந்து திருநெல்வேலி வரைக்கும் நிகூளமா வந்துக் கிட்டிருந்த மாட்டு வண்டிகளை ஒரு பந்து மாதிரி சுருட்டீருச்சாம். சுருட்டீ அக்கா தங்கச்சி ரெண்டு பேரு அந்தப் பக்கமா லாத்தலா வீட்டு வாசப்படி முன்னாடி உக்காந்து பேன் பாத்துக்கிட்டு இருந்திருக்காங்கா. அதுலெ தங்கச்சிக்காரி கண்ணுல போயி இந்தப் பந்து விழுந்திருச்சாம்.

அவசொன்னாளம் ‘யக்கா யக்கா கண்ணுல எதோ சின்னத்தூசி விழுந்திருச்சிக்கா ஆன்னாளாம். இங்குட்டு திரும்புடின்னு தங்கச்சிக்காரி மூஞ்சியைத் திருப்பி ப்பூன்னு ஊதிவிட்டா. ஆங் சரியாப் போச்சுக்கான்னு கண்ணை கசக்கிவிட்டுக் கிட்டாளாம். இப்பொ இவங்களோட புருசம்மாரு வர்றாங்க. இப்பேர்ப்பட்ட கைகாரிகளை வச்சி குடும்பம் நடத்துற இவங்க எப்பேர்க்கொத்த கில்லாடிகளாக இருப்பான். அவங்களோட கதை தனியா இருக்கு. இப்பொ இதுலெ வந்த ஆள்கள்ல யாரு பெரிசு?” கதையை முடிச்சார் புளுகாண்டித் தாத்தா.

“யோவ் மச்சான் இங்கெ பாரும் கிழக்கெ வெளிச்சத்தை, அடடா பளபளன்னு விடிஞ்சு போச்சே!” எல்லாரும் தடபுடலா எழுந்திருச்சி அவங்கவங்க கட்டி வச்ச பொலியை கக்கத்துல இடிக்கிக்கிட்டு மூலைக்கு ஒருத்தரா நடந்தாங்க.

“யோவ் புளுகாண்டி மச்சான் கதை போட்டு விடிய வச்சிட்டீரே சந்தேகமில்லாம நீர்தாம்யா பெரிசு...” - ஓடிக்கிட்டே சொன்னார் ஒழக்கு முத்தன் .

“அட இல்ல மாப்ளே. கதைக்குள்ளேயே அழிப்பான் இருக்கு. நிதானமா உக்காந்து யோசனை பண்ணிப்பாரும் ஓய்!”

எல்லாரும் அவக்குத்தவக்குன்னு நடையைக் கட்டுனாங்க. ஊருக்குள் எல்லா வாசல்களிலும் பொங்கல்பானை பொங்கி கிழக்கு முகமாக வழிந்த மகிழ்ச்சியில் குலவைச் சத்தங்கள் அடுத்தடுத்து கேட்டுக் கொண்டேயிருந்தன.

Pin It