சிறுகதைத் தொகுப்புகள் வழியாக நாவல் உலகத்திற்குள் பிரவேசித்த எழுத்தாளர் சோலை. சுந்தரபெருமாள் ‘செந்நெல்’, ‘தப்பாட்டம்’, ‘மரக்கால்’ போன்ற நாவல்களின் மூலம் கூடுதல் கவனிப்புக்குள்ளானவர். ‘தாண்டவபுரம்’ என்ற புதிய நாவலின் வழியாக வரலாற்று நாவலாசிரி யராக நம்முன் இருக்கிறார்.

எழுநூறுபக்க நாவல். மிகப் பெரிய நாவல். நல்ல காகிதத்தில் கச்சிதமான வடிவமைப்புடன், கவனிப்புக்குரிய அட்டை ஓவியத்துடன், புத்தகத் தயாரிப்பில் பாரதி புத்தகாலயத்தின் நல்ல நேர்த்தியும், பிரம்மாண்டமான உழைப்பும் தென்படுகிறது. நாவலாசிரியரின் தேடல் தீவிரமும், தயாரிப்பு முயற்சியின் உக்கிரமும் நன்றாகப் புலப்படுகிறது.

thandavapuram_370பறவைகள் குறித்த சித்தரிப்புகள், வயல் பரப்புகள், புல்வெளிகள், பூத்திருக்கிற பூக்களின் பருவம், நடக்கிற வெள்ளாமையின் வேலைப்பாடுகள் போன்றவை குறித்த பல விவரிப்பு கள் என்று வரலாற்று நாவல் அந்தக் காலத்துக்கே நம்மை இழுத்துச் சென்று விடுகிறது.

இளம் வயதுத் தோற்றமும், பழுத்த சிவஞானப் பேரறிவும் இணைந்த ஆளுடையாப் பிள்ளையின் நிதானமும், சாந்த அமைதிச் சுபாவமும் நன்கு சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அவருக்கான ஞானஒளிகாட்டியாக வருகிற பெரியப்பா சிவநாதவைபாடியார், ஆளுடையாப்பிள்ளையின் மனசையும் உடம்பையும் கவர்ந்த மனோன்மணி, ஒற்றன் மித்திரன், தேவதானக் கட்டளையின் அதிபர்களாக வருகிற பிள்ளை கள் என்று நூற்றுக்கும் மேலான பாத்திரங்கள் அவரவர் சுபாவத்தோடும் தனித்துவத் தோற்றத்துடன் நாவலுக்குள் உலவுகின்றனர். மதுரை ஒற்றன் அய்யங்கொண்டான், பாண்டிமாதேவியர், அமைச்சர் குலச்சிறையார், சேனாதிபதி ராஜகீர்த்தி, மன்னர் மாறவர் மனின் நோய்த்தன்மை எல்லாமே அதற்குரிய தனித்தன்மை யுடன் சித்தரிக்கப்பட்டிருக்கின்றனர். ஆளுடையாபிள்ளையின் திருமணம் நிகழ இருந்த வேளாளக் கிராமம் தீக்கிரையாகிற காட்சி மித்திரனின் தூரப்பார்வையில் புலப்படுத்தப்படுகிறது. மனோன்மணியின் பிரசவக் காட்சியும், அதற்கான இடச்சூழலும், பெண்களின் மனோ பாவமும் கண்முன்னால் வருகின்றன.

யாழ்ப்பாணரின் யாழிசையும், சூளாமணியாரின் பாவோசையும் இடையறாது நம்மைப் பின் தொடர்கிறது.

இப்படிப் பாராட்டி எழுத நிறைய இருக்கிறது. இருப்பினும் நாவலின் உள்ளடக்கமும், நோக்க மும் நம்மை கவலைப் படவைக்கிறது.

இந்த நாவல்  ஒருமுற்போக்கு நாவல்தானா என்ற கேள்வி எழுகிறது.

இந்த நாவல் சிவமதத்தின் மேன்மையையும், சிவபெருமான் - உமையவள் வழிபாட்டுப் பண்பாட்டு உன்னதத்தையும் பெருமைப்படுத்திக் கொண்டே நகர்கிறது. சிவபெருமானின் தாண்டவத் தோற்றம் முழுக்க ஆராதிக்கப்படுகிறது. ஆளுடையாப் பிள்ளையின் சேத்தி ராடனப் பயணம் துவங்கி, இயங்கி முடிவதுதான் மொத்த நாவல். சைவ வேளாள மக்களின் பக்கபலத்துடன் நடக்கிற இந்தச் சேத்திராடனப் பயணம், ஊர் ஊராக நகர்ந்து, மூடிக்கிடக்கிற சிவாலயங்களைத் திறந்து, சிவா கமப்படி வழிபாடு நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய் வது தான். நாவலின் முடிவில் பாண்டிய - சோழ அரசர்களின் ஆதரவைப் பெறுவதில் முழு நிறைவான வெற்றி பெற்று, சிவமதம் அரசமதமாக மாறுவதுடன் நாவல் நிறைவடைகிறது.

மக்கள் நலன் எதுவும் முன்னிலைப்படுத்தப்படாமல், மதநலன் மட்டுமே முன்னிலைப் படுத்துகிற இந்த நாவல், பிற மதங்கள் மீது வெறுப்பையும் துவேஷத்தையும் மூட்டுகிறது.

மதப்பற்று வேறு, மதவெறி என்பது வேறு. இறை நம்பிக்கையும் பேரன்பில் கனிந்த இதயமும் கொண்டு, ஒரு மதத்தைப் பின்பற்றி வாழ்வது, மதப்பற்று, நம்பிக்கைச் சார்ந்தது குற்றமில்லை.

மதத்தின் மீதான தீவிரப்பற்றால், தான் சார்ந்த மதத்தின் நலனுக்காக பிற மதத்தினரையும், பிற மதங்களையும், வெறுப்பதுவும், துவேஷிப்பதுவும், பகைமை பாராட்டுவதுவும் மத வெறியின் சுபாவம். இது நம்பிக்கை சார்ந்ததல்ல... ஆதிக்கம், அதிகாரம், ஆட்சியதிகாரம் சார்ந்தது, குற்றமானது.

இந்த நாவல் நெடுகிலும் மதவெறியே பயணப்படுகிறது. சமண மதத்திற்கும், பௌத்த மதத்திற்கும், பிராமண மதத்திற்கும் எதிரான பகைமை உணர்வு நாவல் நெடுகிலும் பீறிட்டுப் பாய்கிறது. வாக்கியத்துக்கு வாக்கியம் நீச அமணர்கள், பர பௌத்தர்கள் என்ற வசவுகள். எறும்புக்குக்கூட தீங்கிழைத் துவிடக்கூடாதே என்று மயில் தோகைக் கட்டோடு நடக்கிற சமணத் துறவிகளை கொலைகாரர்களாகவும், சதிகாரர்களாகவும், கொடூரமானவர்களாகவும் சித்தரிக்கிறது.

பாண்டிய மன்னர் மாறவர்மன் உடம்பெல்லாம் வெட்கை நோய். கொப்புளங்கள். அவரது நோயை ஆளுடையாப்பிள்ளையின் மூலிகை கலந்த “துண்ணூறு” குணப்படுத்துகிறது.

வருடக் கணக்கிலான நோய், நிமிடக் கணக்கில் தீர்ந்துபோக... அனைத்து சமணத் துறவி களையும் கழுவிலேற்றிக் கொல்லும்படி மன்னன் உத்தரவிடுவது போகிற போக்கில் உதிர்க் கப்படுகிறது.

சைவமதத்தின் வாதும் சூதும் கலந்த பந்தய ஏற்பாட்டுச் சதியின் மூலமாக சமணர்களைக் கழுவிலேற்றிக் கொன்ற சதி குறித்த வரலாற்றுத் தகவல் போகிற போக்கில் மறைக்கப்படுகிறது.

சிவமதத்தை உயர்த்திப்பிடிப்பதற்கு நாவல்முன் வைக்கிற காரணங்கள் நான்கு:

தமிழை ஆலயமொழியாக்கும் ஆகமவிதிப்படி ஆலய வழி பாடு, மண்ணின் பூர்வீக மக்க ளுக்குள் ஆதியில் வேர் பிடித்தது சிவமதம்-வைணவ மதம், ஆவு டைலிங்க வழிபாடு மூலம் இல்வாழ்க்கையை கௌரவப்படுத்துவது, தாந்திரீகப் பண்பாட்டின் மூலம் மூலிகைத் திருநீறு உட்பட சித்த வைத்தியம்.

தமிழ்நாடு தவிர்த்து பாரத தேசத்தின் பிற மாநிலங்களில் பரவுகிறபோது சிவமதம், தமிழை ஆலயமொழியாக்குமா? 

அந்த மக்களுக்கு சிவமதம் அந்நிய மதம்தானே? ஆவுடை லிங்க வழிபாடும், தாந்திரீகமும் சிவமதத்தின் கண்டுபிடிப்பல்ல. இனக்குழு மக்களின் வாழ்முறைப் பண்பாட்டிலிருந்து தன் வயப்படுத்திக் கொண்டது. இனக்குழு மக்களிடமிருந்த இயற்கை வழிபாட்டை இறைவழி பாடாக மாற்றியதுதான் சிவமதம். அவர்களிடமிருந்த மூலிகை வைத்தியத்தைத் தன்வயப் படுத்தி சுவடியாக்கியது சிவமதம்.

ஊர்ஊராகப் பயணப்பட்டு சிவாலயங்களைத் திறந்து பூஜை நடத்திய ஆளுடை யாப்பிள்ளையும், வேளாள, வைசிய மக்களின் ஆதரவையும் அரவணைப்பை யும் பெற்றுக் கொண்டாரே தவிர, பண்ணையடிமைகளாக சேற்றில் கால்வைத்து உலகுக் கெல்லாம் சோற்றைத் தந்த மண் ணின் மைந்தன்மீது அன்புமில் லை, அரவணைப்புமில்லை. ஆலயத் தமிழ்வழிபாடுமில்லை.

பூர்வீகக்குடிகளின் வம்சாவளி களான சேற்று மனிதர்களுக்கும் கறுப்புத் தமிழர்களுக்கும் சிவாலயக் கதவுகள் திறந்து வரவேற்க வில்லை என்ற பேருண்மையை நாவல் நினைவுபடுத்தாமல் மௌனமாக நகர்கிறது.

வேலையில்லாத காலத்தில் பண்ணையடிமைகளுக்கு கூடை பின்னுகிற தொழிற் கல்வி தந்து, பின்னப்பட்ட கூடைகளை விற்றுத்தருகிற சேவையையும் சமணப்பள்ளி செய்கிறது என்கிற உண்மையை போகிற போக்கில் உதிர்த்துவிட்டுப்போகிறது நாவல்.

பெரும்பான்மை அடித்தட்டு மக்களுக்கு வாழ்வுரிமையும், ஜாதி கடந்த சமத்துவ உரிமை யும், கல்விகற்கிற உரிமையும் சமணமடம் தந்தது என்கிற வர லாற்றுப் பேருண்மையைக் கண்டுகொள்ளாமல் நழுவுகிறது இந்த நாவல்.

தமிழின் மகுடமாக இன்றும் திகழ்கிற திருக்குறள், சமண பௌத்த தத்துவக் கொடை என் பது யாரும் மறந்துவிட முடியாத பேருண்மை. தமிழின் மிகப்பெரிய அணிகலன்களாக கருதப்படும் ஐம்பெரும் காப்பியங்கள் சமணர்கள் காலத்தில்தான் படைக்கப்பட்டன. தமிழுக்கு சமண பௌத்த மதத்தினரின் மகத்தான சேவைகள் கிட்டி யுள்ளன. சூத்திரசாதி மக்கள் மதச் சுரண்டலிலிருந்து மீட்கப்பட்டார்கள் சமணத்தால்.

வர்ணாசிரமம் என்ற மாயக்கயிறு சிவத்தையும் வைணவத்தையும் கட்டிப்போட்டது. அரியும் சிவனும் ஒண்ணாகி, அறியாதவன் வாயில் மண்ணாயிற்று.

அந்தக் கயிறை அறுத்ததால் தான், சமணத்தின் மீதும், பௌத்தத்தின் மீதும் சிவ - வைணவ மதங்களுக்குப் பகைமை ஏற்பட்டது என்ற வரலாற்றுப் பேருண்மையை இந்த வரலாற்று நாவல் மறக்கடிக்கப் பார்க்கிறது.

இந்த நாவலின் மொழி, மிகுந்த அலுப்பூட்டக்கூடியது. வாசிப்பு சுவாரஸ்யம் சுத்தமாக இல்லை. எழுநூறு பக்கத்தை வாசித்து முடிப்பதற்குள் மிகப் பெரும் சுமையாகிவிட்டது.

வர்ணாசிரமத்துக்கும், வேள்விகளுக்கும் எதிரான மக்கள் மதமாக திரண்டெழுந்து கால்நடைகளையும் வேளாண் மையையும் காப்பாற்றிய சமண, பௌத்தத்தின் முக்கியத்துவமிக்க வரலாற்றுப் பேருண்மையை மூடி மறைத்து சரித்திரப் பாடப் புத்தகம் இப்படிப் பேசும், “சைவ சமய மறுமலர்ச்சியால் தமிழகம் விடுதலைபெற்று, தமிழ் வளர்ந்தது. தேவாரம், திருவாசகம் திருவிளையாடற் புராணம் போன்ற தமிழ்நூல்கள் மலர்ந்தன”.

அதே பணியை ஒரு முற்போக்கு முகாமின் முன்னணி எழுத்தாளரும் நாவல் இலக்கியத்தின் மூலம் செய்திருப்பது துரதிருஷ்டவசமானது.

-மேலாண்மை பொன்னுச்சாமி

வெளியீடு: பாரதி புத்தகா லயம், 421, அண்ணா சாலை

Pin It