எழுத்தாளர் அருணன் “காலந்தோறும் பிராமணியம்” என்ற தலைப்பில் ஐந்தாவது பாகத்தையும் எழுதி முடித்து அதுவும் வெளி வந்திருப்பது ஆசிரியருக்கு மாண்பு சேர்க்கும் மகிழ்ச்சியான சாதனையாகும்.

ஆய்வு நூல் எழுத ஏராளமான நூல்களைப் படித்து உள்வாங்கிக் கொண்டு, தான் எடுத்துக் கொண்ட பொருளுக்கு, கருத்துக்கு ஊனம் இல்லா வகையில், உண்மை சிதையா வகையில் எழுதி முடிக்கின்ற முயற்சி அவ்வளவு எளிதான காரியமல்ல.

ஐந்தாம் பாகத்தில் பிரிட்டனின் நேரடி ஆட்சிக்காலம் பற்றி அலசுவதோடு, அன்றைய அரசியல், பொருளாதார பின்புலத்தில் பிராமணியம் எப்படி தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முயன்றது என்பதையும், அன்றைய வரலாற்று நிகழ்வுகளின் ஊடே அலசி அலசி அம்பலத்துக்கு கொண்டு வந்திருப்பது அற்புதமான முயற்சி யாகும்.

உதாரணமாக, வங்கப் பிரிவினைபற்றி அவர் தரும் விளக்கம் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.

“வந்தே மாதரம்” என்ற கோஷம் வங்கப் பிரிவினையை எதிர்த்து வைக்கப்பட்ட கோஷம் என்றாலும், பிரிட்டிஷ் ஆட்சி உள்நோக்கோடு பிரிக்கப்பட்டு இருந்தாலும், அதன் விளைவாக முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு தனி மாநிலம் உருவாகி விடும் என்ற அச்சத்தில் நடந்த போராட்டம். முஸ்லிம்களை அந்நியப் படுத்துவதாக மட்டுமல்லாது, அவர்களை எதிர்த்து நடப்பதாக அமைந்துபோன போராட்டம். வங்கத்து பிராமணவாதிகள், முஸ்லிம் பெரும் பான்மையாகவும், இந்துக்கள் சிறுபான்மை யாகவும் இருக்கக்கூடிய ஒரு மாகாணத்தை ஏற்க முடியாது என்றார்கள். இந்திய தேசிய காங்கிரசும் படு தீவிரமாக வங்கப்பிரிவினையை எதிர்த்துப் போராடியது. முஸ்லிம்களின் மனநிலை பற்றி கவலைப்படாமல் “வந்தே மாதரம் - வங்கத்தாயை வணங்குகிறோம்” என்ற கோஷத்தை ஏற்றுக் கொண்டது. மகாகவி தாகூர்கூட முஸ்லிம் மக்களின் மன நிலையைக் கவனிக்கவில்லை.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராட்டம் என சொன்னாலும் முஸ்லிம் பெரும் பான்மையாகவும், இந்துக்கள் சிறுபான்மை யாகவும் ஆகிவிடும் ஒரு மாநிலத்தை ஏற்க மாட்டோம் என்பது தான் இதன் உள் நோக்கம். விளைவு ‘அகில இந்திய முஸ்லிம் லீக்’ பிறக்க வழி வகுத்து விட்டது. நூல் ஆசிரியர் இதை - வங்கப்பிரிவினை எதிர்ப்பு இயக்கம் இப்படியாக அரசியல் பிரிவினையாக கொண்டு வந்து சேர்த்தது என்கிறார்.

இஸ்லாமியர்கள் அல்லா ஒருவரைத் தவிர வேறு எதையும் வணங்காத ஏக தெய்வக் கோட்பாட் பாளர்கள். ஆனால் வங்க பிராமணியவாதிகளோ வங்கத்தாயை எல்லோரும் வணங்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள்.

அகில இந்திய முஸ்லிம் லீக் பிறப்பதற்கு இன்னொரு அடிப்படைக் காரணமும் இருந்தது.

‘காங்கிரசின் தேசியம் நடைமுறையில் பிரா மணியமாக இருந்தது. முஸ்லிம் மக்களையும் தங்களோடு இணைத்துக் கொண்டு சென்று ஏகாதிபத்திய ஆட்சியை எதிர்க்க வேண்டும் என்கிற எண்ணம் கிஞ்சிற்றும் இல்லை’ என்கிறார்.

வங்கப்பிரிவினையை எதிர்த்து கல்கத்தாவில் தீவிரவாத இயக்கம், புரட்சி இயக்கம் வெடித் தாலும் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடந்தாலும் இந்தப் போராட்டங்களால் முஸ்லிம் எதிர்ப்பு வாதமும், வங்கப்பிரிவு எதிர்ப்பு வாதமும், தேர்தலில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு எதிர்ப்பு வாதமும் இழையோடியது என்பது உண்மையே.

இந்தியாவில் காங்கிரஸ் உருவான ஆரம்ப வரலாறு பற்றி ஆசிரியர் குறிப்பிடுகிற போது, அது ஆரம்பத்தில், ஓர் ஆங்கிலேயர் ஹூயும் என்பவ ரால் உருவாக்கப்பட்டாலும் அது எப்படி பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக செயல்படும் அமைப்பாக மாறிப்போனது என்கிற வரலாற்று விசித்திரத்தை சுவைப்பட வர்ணிக்கிறார்.

“திலகர் பெருமான்”- “உதாரண புருஷர்” என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட பால கங்காதர திலகர் பற்றி அருணன் தரும் ஆதாரமான விளக்கங் கள் பலரை வியப்பில் ஆழ்த்தும். இன்னமும் திலகரைப் பற்றி மகாபுருஷர் என்று நினைப் போரும் உண்டு. காந்தியும், பாரதியும் கூட அப்படி நினைத்தவர்கள்தான்.

 ஆங்கிலேயர் ஆட்சி, “சம்மத வயதுச்சட்டம்” கொண்டு வந்தபோது திலகர் அதைக் கடுமையாக எதிர்த்த மனிதர் ஆவார். பெண் குழந்தைகளை ஐந்து வயது எட்டு வயது ஆவதற்கு முன்பாகவே திருமணம் நடத்தும் கொடிய முறை இருந்தது. கணவன் தன் மனைவி என்று இருக்கும் அவரோடு 10 வயதிலேயே உறவு கொள்ளலாம் என்று இருந்த கொடுமையை 12 வயதில்தான் உறவு கொள்ளலாம் (இதுவும் கொடுமைதான்) என்கிற சட்ட வடிவம் வருவதை திலகர் கடுமையாக எதிர்த்தார். பிராமணர்களிடமிருந்தும் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. இந்தச் சட்ட திருத்தத்துக்கு மதத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என்கிறார் திலகர். இது பெண்களின் நலத்தை நாடுகிற மனித நேய செயல் என்பதை திலகர் ஏற்கவில்லை. இந்தச் சட்டத்தை எதிர்த்து சமஸ்கிருத பண்டிதர்களை யெல்லாம் களத்தில் இறக்கி விட்டார்கள்.

சிவாஜி விழா என்பதை நடத்தி அதை திலகர் முழுக்க முழுக்க முஸ்லிம் எதிர்ப்பாக மாற்றிக் கொண்டார். அரசியலில் இந்து தெய்வ வழிபாட்டை கலக்கிற வேலையில் திலகர் தீவிர மாகவே செயல்பட்டார். விநாயகர் விழாவை முழுக்க முழுக்க அதற்காகவே பயன்படுத்திக் கொண்டார்.

திலகரின் போக்கு இந்திய அரசியலை இந்து அரசியலாக நடத்துகிற தெளிவான முயற்சி தென்பட்டது, இஸ்லாமியர்களுக்கு எதிரான தொனி ஏகமாகவே தெரிந்தது. ஆனால் இவர்தான் தேசிய தீவிரவாதி என்று அழைக்கப்பட்டவர். இதுபற்றி நூலாசிரியரின் கருத்து தெளிவாகவே உள்ளது.

சாவர்க்கரைத் தயார் செய்தவரும் திலகர்தான் என்பதைக் குறிப்பிட அருணன் தவறவில்லை. அந்த விவகாரங்களை விலாவாரியாகவே விளக்கு கிறார். சாவர்க்கரின் முழு விலாசத்தையும் தோலு ரித்துக் காட்டுவதில், மதவெறியின் உச்சத்தில் அவர் எவ்வாறெல்லாம் செயல்பட்டார் என்பதை அறிந்து கொள்ள இந்நூல் பயன்படுகிறது.

அருணன் இந்த நூலில் ஒரு தர்க்க ரீதியான கேள்வியைத் தொடுக்கிறார். சாவர்க்கர் இந்துக்களுக்கு இதுவே பிறந்த பூமி, இதுவே புண்ணிய புமி என்று மார் தட்டுகிறார். அவரது காலத்திலேயே இது இந்துக்களின் புண்ணிய பூமியாக இல்லாமல் போனது எப்படி என்றால் வேதங்கள் பாடப்பட்ட அந்த சிந்து நதி தீரம் இப்போது இந்தியாவில் இல்லை. பாகிஸ்தானில் உள்ளது. சிந்து-இந்துஸ்தானம் என்று 1923ல் பிரதமர் எழுதினார். 1947-லோ அந்த சிந்து இவர்களின் பூமியாக இல்லாமல் போனது. இப்போது இவர்களுக்கும் பிறந்த பூமி ஒன்று, புண்ணிய பூமி வேறொன்றாகிப் போனது. ஆகவே, இவர்களது தேச பக்தியையும் சந்தேகப்படலாமா? இவர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தலாமா? எனக் கேட்கிறார். காரணம் இவர்கள் இந்திய இஸ்லா மியர்களை இப்படித்தான் பார்க்கிறார்கள்.

பாகிஸ்தான் என்ற ஒரு நாடு உருவாவதற்கு பிரிட்டிஷார் மட்டும் காரணமல்ல, இந்தியாவில் இந்துத்துவவாதிகளின், இந்துத்துவா அமைப்பு களின், காங்கிரசிலேயே இருந்த ஒரு பகுதி தலைவர் களின் முஸ்லிம் எதிர்ப்பும் காரணம் என்பதை சுட்டிக்காட்ட அருணன் நூல் நெடுகிலும் ஏராள மான எடுத்துக்காட்டுகளை முன்வைக்கிறார். பிராமணத்துவம்தான் அடிப்படைக்காரணமாக இருந்தது என்றும் அறுதியிட்டுச் சொல்கிறார்.

 ‘ஜனநாயக லட்சியத்துக்கும், பாசிச லட்சியத் துக்கும் இடையே வேறுபாடில்லை. சுதந்திரம், மற்றும் நாசிசம் மற்றும் பாசிசம் இவை மூன்றும் ஒரே அளவு கொண்டதே’ என்பதுதான் சாவர்க்கரின் வேதம். ஹிட்லருக்கு யூதர்கள் எதிரிகள், சாவர்க் கருக்கு இஸ்லாமியர்கள் சத்ருக்கள். ஆகவேதான், ‘சகல அரசியலையும் இந்துமயப் படுத்துங்கள், இந்த பூமியை ராணுவப் படுத்துங்கள்’என்று முழக்கமிட்டார் சாவர்க்கர்.

காங்கிரஸ் எடுத்த சந்தர்ப்பவாத நிலையை பார்க்கிறபோது நமக்கு அதிர்ச்சி. தேர்தலில் இஸ்லாமியர்களுக்கும் இடஒதுக்கீடு என்பதை வெறுத்த காங்கிரஸ் தலைவர்களில் மிக முக்கிய மான ஒருவர் பண்டிட் மாளவியா. அதோடு ஸ்ரீஅனேக் என்பவரும் எதிர்த்தார். காங்கிரசி லிருந்து பிரிந்து காங்கிரஸ் தேசியக்கட்சி என்று ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டார்கள். இந்த நிலையில் காங்கிரசின் நிலைப்பாடு என்ன? முஸ்லிம் எதிர்ப்புக்கு முன்னிலை வகிக்கும் புதிய கட்சியாம் காங்கிரஸ் தேசிய கட்சி சார்பில் போட்டி யிடும் இடங்களில் காங்கிரஸ் வேட் பாளர்கள் போட்டியிடக்கூடாது என்று முடிவெடுத்தது. இந்திய அரசியலில் இந்துத்துவா சிந்தனை பெரிதும் ஊடுருவி இருந்தன என்பதை தேர்தல் முடிவுகள் காட்டின.

சுதந்திர போராட்டக் காலத்திலும் இந்திய முதலாளிகள் காங்கிரஸ் தலைவர் காந்திக்கும் பணம் கொடுத்தார்கள். அவரது பரம வைரி சாவர்க்கருக்கும் பணம் தந்தார்கள். இதில் முதன்மையானவர் பிர்லா.

இதுபற்றி அருணன் சொல்லும் கருத்து : இந்த இருதரப்பினரையும் பயன்படுத்திக் கொள்வது இந்திய முதலாளிகளின் உத்தி. அதற்கு மதக்கலவ ரங்கள் பற்றிய பெரிய கவலை ஏதும் இல்லை. வர்க்கப்போராட்டங்கள் தீவிரமாகி விடக்கூடாது என்பதே பெரிய கவலை என்பதுதான்.

இந்தியாவில் இன்றைய தற்கால சூழலும் அதுதான். இந்திய பெருமுதலாளிகள் காங்கிரசுக் கும் வாரி இறைக்கிறார்கள், பாரதிய ஜனதா கட்சிக்கும் கொட்டிக் கொடுக்கிறார்கள்.

ஜெர்மனியில் இட்லரை வளர்த்ததில் ஜெர்மானியில் இருந்த பெரும் முதலாளிகளும் முக்கிய காரணமாக இருந்தார்கள் என்பதும் வரலாறு சொல்லும் தகவல். சுதந்திர தினத்தைக் கொண்டாடக்கூடாது என்று சொன்னார் சாவர்க்கர். இந்து மகாசபை காரியக்கமிட்டியும் இப்படித்தான் முடிவெடுத்தது. ஆனால் இந்து மகா சபையின் தலைவர் சியாம பிரசாத் முகர்ஜி நேரு அமைச்சரவையில் ஒரு மந்திரியானார். சுதந்திர தினத்தைக் கொண்டாடக் கூடாது என்று சொன்னவர் மந்திரியானார். காங்கிரசில் வலதுசாரி பலம் கூடுதலாகவே இருந்தது. சர்தார் வல்லபாய் படேல், ராஜேந்திர பிரசாத், கோவிந்வல்லபந்த் போன்றோர் இந்து மகாசபையை காங்கிரசோடு சேர்த்துக் கொள்ள விரும்பியவர்கள்தான்.

சாவர்க்கரின் ஆலோசனையோடு, வழிக்காட்டு தலோடு, இந்துமத வெறியன் கோட்சே தேசப்பிதாவை சுட்டுக் கொன்றானே அதுபற்றி நூலாசிரியர் தத்துவ விசாரத்தில் நின்று கணிப்பு ஒன்று தருகிறார். தேசப்பிதாவைக் கொன்றது ஒரு தனிமனிதப் படுகொலை அல்ல, ஒரு கொடூரமான கோட்பாட்டின் கொலைகார வெளிப்பாடு என்கிறார். இப்போதும் மக்கள் மத்தியில் அந்தக் கொலை கேட்சே எனும் ஒரு கொடிய மனிதனால் நடந்த துயரம் என்ற கருத்துதான் விதைக்கப் பட்டுள்ளது. அதுவும் ஒரு கொள்கையின் வெளிப் பாடு என்பது மறைக்கப்படுகிறது. கோட்சே வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டவுடன், நீதிபதி தன் இருக்கையை விட்டு எழுந்தவுடன் சாவர்க்கர் விடுதலையானார் என்ற செய்தி கேட்டு மற்ற கைதிகள், கொலையில் ஈடுபட்ட கைதிகள் சாவர்க்கர் காலில் விழுந்தார்களாம். அகண்ட இந்துஸ்தான் ஹமாரே, கபி நா ஹோகா பாகிஸ்தான்- என்று கோஷம் கொடுத்தார் களாம். கோட்சே மீது இரக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர்களும் உண்டு என்று நினைக்கிற போது நெஞ்சம் வலிக்கிறது.

நூலின் 6வது அத்தியாயத்தில் “பிராமணியத் தின் இயங்குநிலை- சமுதாயத்தில்” என்ற தலைப் பில் பிராமணியம் என்கிற சமூக கட்டமைப்பு பல நூற்றாண்டுகளாக தொடர்வதின் காரணம் அது அரசு ரீதியாக மட்டுமல்லாது, சித்தாந்த ரீதியாக வும், சமூக ரீதியாகவும் இயங்கியது என்று துவங்கி பல வரலாற்று ஆசிரியர்களின் விவாதங்களை யெல்லாம் எடுத்துத் தந்து பிராமணியம் தன்னை எப்படி உயர்மட்டத் திலேயே தக்க வைத்துக் கொண்டது என்பதை விவரிக்கிறார்.

நிலம் சார்ந்த வாழ்வில் அவர்களின் ஆதிக்கம், பெண்கள் விசயத்தில் அவர்களுக்கிருந்த பிற் போக்குத்தனம், அவர்களால் மற்ற ஜாதியினர் பட்ட அவமானங்கள், கொடுமைகள், அடிமைத் தனம், ஆண்களின் பலாத்காரம், ராணா சங்கிராம் சிங் என்ற அரசன் இறந்தபோது அவருடன் 520 பெண்கள் உடன்கட்டை ஏறிய கொடுமைகள், இது பற்றியெல்லாம் டபிள்யு.ஜே வில்கின்ஸ் என்கிற வரலாற்று ஆசிரியர் நவீன இந்துத்துவம் என்ற நூலில் தந்துள்ள விவரங்களை அருணன் கோர்வைப்படுத்தித் தருகிறார். அவ்வாறே லூயி ரவுஸ்லெட் எனும் பிரெஞ்சுக்காரர் எழுதிய “இந்தியாவும் அதன் சுதேசி ராஜாக்களும்” என்ற நூலில் எழுதப்பட்டுள்ள விவரங்களை தருகிற போது பிராமணியத்தின் திறமையான இயங்குநிலையை அறிந்து கொள்ள முடிகிறது.

கல்வித்துறையில், உத்தியோகத்தில் நிலவிய பிராமணர்கள் ஆதிக்கம் பற்றியும், மற்ற சாதியினர் குறிப்பாக இஸ்லாமியர்கள் இந்தத் தளங்களில் எவ்வளவு பின்தங்கிப் போனார்கள் என்ற செய்திகளும் நிரம்பவே கிடைக்கின்றன. ஆங்கிலக் கல்வியின் வருகையால் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றியும் குறிப்பிடுகிறார், பத்திரிகைத் துறையிலும் அவர்கள் செல்வாக்கு அதிகமே.

இந்த அத்தியாயத்தின் கடைசிப் பகுதியில் ஆங்கிலேயர்கள் ஆட்சியில் கிடைத்த நவீனக்கல்வி பத்திரிகைகள் நடத்தும் அனுபவம் போன்ற வற்றையும் பிராமணியம் தாங்கள் செழிப்பதற் காகப் பயன்படுத்திக் கொண்டது என்பதை குறிப்பிட்ட ஆசிரியர் கீழ்க்கண்டவாறு முடிக் கிறார்:

“ஆங்கிலேயர்களின் நவீன கல்வி இருவிதமான அறிவு ஜீவிகளை உற்பத்தி செய்தது. பிராமணி யத்தை சமூக வாழ்வில் தூக்கிப் பிடிக்கும் தலைவர் களும் வந்தார்கள், அதை எதிர்த்து முறியடிக்கப் பார்த்த தலைவர்களும் வந்தார்கள்”- என்கிற ஆசிரியரின் கடைசி வரிகள் கனமான அர்த்தம் கொண்டது. பிராமணியத்தை எதிர்த்து முறியடிக்கப்பார்த்த தலைவர்களும் வந்தார்கள் என்கிறார்.

முறியடிக்கப்பார்த்த தலைவர்கள் என்பதன் பொருள், இன்னமும் முற்றாக முறியடிக்கவில்லை என்று சொல்லாமல் சொல்லுகிறது. பிராமணியம் விதைத்துவிட்ட சமூக அவலங்களும், அதன் தத்துவங்களும் இன்னமும் முற்றாக முறியடிக் கப்படவில்லை என்பது உண்மைதான். ஆம் அது இன்னமும் ஆளுமை செய்துக் கொண்டிருக்கிறது என்பதை யார் மறுக்க முடியும்?

அதனால்தான் எட்டாவது அத்தியாயத்தில் “சமூக சீர்திருத்த இயக்கம்” என்று தலைப்பிட்டு ஜோதிபா பூலே முதற்கொண்டு பிராமணியத்துக்கு எதிராக போராடிய, சமூக சீர்தருத்தத்துக்காக போராடிய ரானடே, அயோத்திதாசர், காந்தி, அம்பேத்கார், பெரியார், இஎம்எஸ், சிங்கார வேலர், பி.ராமமூர்த்தி, ஜீவா போன்றோர்களின் போராட்டங்களைப் பற்றி சுருக்கமாக, ஆனால் அழுத்தமாகத் தந்துள்ளார். நியாயமான, நடுநிலை யில் நின்று அவர்களின் கொள்கைகளை, போராட் டங்களை விளக்குகிறார்.

மார்க்சிய சிந்தனையை அடிநாதமாகக் கொண்ட எந்த இயக்கமும் பிராமணியத்துக்கு எதிரானதாகத்தான் இருக்க முடியும் என்கிற உண்மை அன்றே கிளர்ந்தெழுந்தது என்கிறார். இதைப் புரிந்து கொண்டதினால்தான் ஆர்எஸ்எஸ் தலைவர் குருஜி கோல்வார்க்கர் தங்களின் மூன்று எதிரிகளாக முஸ்லிம்கள், கிறித்துவர்கள், கம்யூனிஸ்டுகள் என்று சொன்னதையும் குறிப் பிட்டுள்ளார்.

அருணன், தீண்டப்படாதார் பற்றியும், அவர் களின் விடுதலைபற்றிய கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை, வழி காட்டுதல் பற்றியும் கட்சியின் அறிக்கையிலிருந்து எடுத்துக்காட்டுகிறார். ‘அதே நேரத்தில், தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றி அன்றே மிகச்சரியான கோட்பாட்டை வகுத்து பிராமணியத் தை மிரள வைத்த கம்யூனிஸ்ட் கட்சி, சூத்திரர்கள் அல்லது பிற்படுத்தப்பட்டோர் என்பவர்கள் பற்றிய ஒரு கணிப்புக்கு வரவில்லை, அதில் நிலப்பிரபுக் கள், முதலாளிகள் இருந்தார்கள் என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை இந்தியாவின் ஆகப்பெரிய மக்கள் தொகையினராகிய, அவர் களில் கோடிக்கணக்கான பாமர மக்கள், சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கி இருந்தார்கள் என்பது பற்றியும்.’ அத்தகைய ஆளும் வர்க்கமற்ற பிற்படுத்தப்பட்டோர் பற்றியும், கம்யூனிஸ்ட் இயக்கம் ஆரம்பத்திலிருந்தே பேசி யிருந்தால் பிராமணியம் மேலும் மிரண்டு போயிருக்கும் என்கிறார்.

காலங்காலமாக பிராமணியத்துக்கு இருந்த அச்சமே சூத்திரர்களும், பஞ்சமர்களும் ஒன்றுபட்டு விடக்கூடாது என்பதுதான். அப்படி ஒன்றுபடுவது காலத்தின் தேவையாக இருந்தது. இந்த நவீன காலத்தில், தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத்தப் பட்டோரும் ஒன்றுபட்டு போராடுவது அவசிய மாக இருக்கிறது. தாழ்த்தப்பட்டோரின் உரிமை களுக்காக பிற்படுத்தப்பட்டோரும் குரல் கொடுப் பதில் , அவர்களை சமமாக நடத்துவதில், உயர் சாதியில் பிறந்த முற்போக்கு சிந்தனையாளர் களும் இந்தப் போராட்டத்தில் இணைவதில் வர்க்க மற்றும் சமூக ரீதியாக வெகு மக்கள் ஒன்று திரளுவதில் விடிவெள்ளி பிறக்க வழி உண்டு. ‘வாழ்க்கை என்னவோ அதை நோக்கி ஓடிக் கொண்டு இருககிறது’ என்று ஆசிரியர் அருணன் முடிக்கிறார்.

இந்த நூலில் இன்னமும் ஏராளமான வியத்தகு விவரங்களைத் தருகிறார். தமிழக மக்கள் இவை களையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

நம் நாட்டு மக்கள் “வெள்ளைக்காரன் ஆட்சி இந்தியாவில் இருநூறு ஆண்டுகள் நடந்தது, நூற்றம்பது ஆண்டுகள் நடந்தது” என்பார்கள். இந்தியாவில் ஆங்கிலேயரின் நேரடியான ஆட்சிக்காலம் 1857-1946 வரைதான். அதாவது 90 ஆண்டுகள் வரைதான். இந்த தகவல்கூட எத்தனை பேருக்குத் தெரியும். 90 ஆணடுகால ஆட்சியே இந்தியாவை புரட்டிப் போட்டு விட்டது. அனைத்து அரசியல்வாதிகளும் கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் இந்நூலில் நிறையவே உண்டு.

வெளியீடு: வசந்தம் வெளியீட்டகம்

69/24ஏ, அனுமார் கோவில் படித்துறை,

சிம்மக்கல், மதுரை 625 001

விலை ரூ. 350.   பக்கங்கள்: 552.

Pin It