எடத்தக் கண்டுபுடுச்சு வந்துட்டானுக பாவிக. குதிரையும் கும்மாள முமா வாசலே அதிருது. பாட்டிக்கும் பேத்திக்கும் கையும் ஓடல. காலும் ஓடல. தண்ணி கொண்டு வரச் சொல்ற மந்திரியின் மிரட்டல்ல ஈரக்குலை நடுங்குது. வீட்டுக்குள்ள புகுந்துருவாங்களோன்னு பயம்புடுச்சு ஆட்டுது. சும்மாயிருந்தா கதைக்காகுமா. அடுப்புக்கரியக் கொழச்சு வேக வேகமாகப் பூசுரா. பொட்டுயெடம் பாக்கில்லாம. கிழவியும் பூசி விடுறா. மூட்டைத் துணிக்குள்ளருந்த நைஞ்சுபோன சேலையயெடுத்து தாறுமாறா சுத்திக்கிறா. கண்ணாடியில ‘அழகு’ பார்த்த இவளுக்கே வாந்தியெடுக்க வருது. அழுது வடுஞ்ச எடங்கல்ல திரும்பவும் பூசிக்கிறா.

கீழ கெடந்த செம்புல தண்ணிய மோண்டவ குல தெய்வத்த வேண்டிக் கிட்டு வெளிக்கிளம்புரா. அஞ்சு லெட்சுமியும் கொஞ்சி விளையாடுமுனு நெனைச்ச ராசாவுக்கு உடம்பெல்லாம் பத்திக்கிட்டு எரியுது வெறு வாய நர நரனு மென்னுக்கிட்டு மந்திரிய மெறக்கிறான். மந்திரியின் மூத்திரம் நடுங்குன தொடை வழியாத் தரைய நனைக்கிது. எப்படியோ தப்பு நடந்து போச்சு. மகாராஜாங்குற மந்திரியின் குரல்ல மரண பயணம் கவ்வுது.

நீட்டிய செம்போட ஒன்னுந்தெரியா வெஞ்சிரிக்கிக் கணக்கா நின்னவள ஆத்திரம் தாங்காம எட்டி உதைக்கிறான் ராசா. உதைக்கும் போது சிந்துன தண்ணியில இருந்துருக்கு. அவருக்கு கண்டம். தண்ணி பட்ட மேனியெல்லாம் பொன்னா மின்னுது. அழகு மயிலப் பார்த்து அசந்து போன ராசா சிறை யெடுத்துப் பறந்துட்டான்.

கடந்த இரவில் பாட்டி சொன்ன கதை மனசக் கொடஞ்செடுக்குது. வீடே சூனியமாகித் தவிக்கிது. பனங்காயாட்டம் வீங்கிக் கெடக்கு அம்மாவின் அழுத முகம். பாட்டியெங்க. பாட்டியெங்கங்குற கவிதாக்குட்டியின் கேள்விக்கு யாரிடமும் பதிலில்லை. அப்பா மட்டும்தான் கொஞ்சம் நிதானத் தோடு திரிகிறார்.

கொல்லையெல்லாம் காஞ்சு கெடந்த பொழுதொன்றில்தான் பாட்டி யெங்கள் வீடடைந்தது. அன்று மாலை, கடலைக் கொல்லை வரப்பில் ஏறும் போதே கவிதாக்குட்டி ஓடிவந்தாள். “... ண்ணே... ண்ணே... வா.... பாரு.... ம்மாச்சி வந்திருடுச்சி.” புத்தக மூட்டையை கொக்கரையில் தொக்கிய கையோடு அம்மாவிடம் விசாரித்தேன். ஆருக்குத் தெரியும். வந்தவாக்குல குத்துக்கல்லாட்டம் குந்திடுச்சுனு சொன்ன அம்மா, சந்தையிலிருந்து திரும்பிய அப்பாவிடம்தாம் நீட்டி முழக்கியது.

எங்கள் வீடு ஒரு கடவும், தோட்டமொரு கடவுமாகப் பிரிந்து கிடந்தது. பெரும் தொல்லை யாக இருந்தது. காலடிகள் போட்டுத் தந்த ஒத்தை யடிப் பாதையைத் தவிர கொல்லைக்கான வழிப் போக்கிற்கு வழியேதுமில்லை. இதனால் விளை கிறதெல்லாம் கொல்லையிலுள்ள கொட்டைகை யில் தான் தஞ்சமடையும். கொட்டைகையோரம் குந்தியிருந்த குதிர்கள் பெரும் பெரும் பூதங்களாக மிரட்டும் தரிசாகக் கிடக்கும் கோடையில்தான் வியாபாரிகள் வண்டிகளோடு வந்து எடை போட்டுச் செல்வார்கள். சமையலுக்குக்கூட கொல்லையிலேயே அவியலாகும் நெல் மில்லி லிருந்து வீட்டுக்கு அரிசியும், தோட்டத்துக்கு தவிடு மாகப் பிரிந்து செல்லும். இரவு சாப்பாடும், தூக்கத்தையும் தவிர மற்றயெல்லாமே கொல்லை யில்தான். தானியங்களுக்காகவும், தறியடித்துக் கிடக்கும் ஆடு மாடுகளுக்காகவும் இரவுகளிலும் கொல்லையிலேயே கட்டிலைப் போட்டுத் தங்கி விடுவார் அப்பா.

கொட்டகை முன்பாக நாற்கர வடிவில் நின்றன வேப்ப மரங்கள். ஒன்றோடொன்று பின்னிக் கிடக்குமவைகளை எட்ட நின்று இரவில் பார்த்தால் மணிக்குன்றெனத் தோன்றும். செட்டியாரிடம் தாத்தா நிலத்தை வாங்கும் போதே நான்கும் தலைகூடா நின்றதாக அப்பா பெருமையடிப்பார். இதற்கு மேலும் விட்டு வைத்தால் பொந்து விழுந்து விடுமென வரும் வியாபாரிகளிடம் அடுத்த வருடம் பார்க்கலாமென்பதே வருடந் தோறுமான பதிலாக இருக்கும். பவுர்ணமியிலும் கரும் கும்மெனயிருக்கும் மரத்தடியில் கல்யாணங் களுக்கு பந்தல் போடாமல் பரிமாறலாம். குளம் குட்டைகளெதிலும், இறக்கிவிடாத எங்கள் வீட்டு எருமைகள் மரத்தடி நிழலில் கொழு கொழு வென வளரும். அந்தியானலும் விறகுக் கட்டோடு வீட்டுக்கும், காலையில் பழைய சோத்தோடு கொல்லைக்குமென அம்மா பாடு தினமும் தொங்கோட்டம்தான். தோட்டத்தி லும் கூட்டிப் பெருக்கிய கையோடு எட்டு மணிக்கெல்லாம் கூலியாட்களோடு கொல்லை யிலிறங்கியாக வேண்டும். தவறினால் அப்பா வின் முகத்தில் ஒருபடி சோளத்தை வறுத்து விடலாம். ஒரு கட்டத்தில் குடும்பம் முழுவதும் கொல்லைக்குப் பெயர்ந்தது. அம்மாவின் அலைச்சலைக் கழித்து வேலையைப் பெருக்கும் பொருட்டே இது நடந்தது. ஊர்ப்பசங்களோடு கூடித் திரிந்த எனது பால்யம் வேரோடு பிடுங்கப் பட்டதை எவரும் கண்டுணரவில்லை. நானில் லாத விளையாட்டில் செல்லத்தம்பிப் பயல் வச்சதுதான் சட்டமென்ற வருத்தம் அடிக்கடி வந்து போகும்.

வாரமொருமுறை வீடு செல்லும் அம்மா கூட்டிப் பெருக்கிய கையோடு ஊர்சங்கதிகளையும் சுமந்துவரும். என் கனவுகள் கானல் நீரான பொழுதொன்றில் பாட்டியின் வரவும் நேர்ந்தது. தாத்தா பாட்டிகளை, பிறக்கு முன்னே இழந்திருந்த எங்களுக்கு அன்று முதல் புதுவுலகம் திறந்தது.

அம்மாவின் கூட்டுமாறால் வேப்ப மரத்தடி யில் பொட்டு தூசு தும்பட்டை தங்காது. பழம் பொறுக்கும் காலங்களில் குருவி பிதுக்கிய கூடுகளை நீக்கி விட்டு அப்படியே அள்ளிவிடலாம். அப்படி சேகரித்துக் கொண்டிருந்த ஒரு மதியத்தில் உச்சிவெயிலைக் கிழித்துக் கொண்டு வேகுவே கென வந்ததொரு கிழவி, மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க மரத்தடியில் இளைப்பாறியது. ஆடு களுக்குத் தண்ணீர் வைக்க எழுந்து போன அம்மா திரும்ப வந்த போது கிழவி தட்டுக் கூடையில் பழங்களை நிரப்பியிருந்தது. உற்றுப் பார்த்த அம்மா கூழுக்கட்டியொன்றை செம்புக்குள் கரைத்தபடி நீட்டியதும் மறு பேச்சில்லாமல் மொடக் மொடக்கெனக் குடித்து விட்டு மீண்டும் வேலையில் மூழ்கிவிட்டது.

கிழவி வந்த கதையைக் கேட்கக் கேட்க அப்பாவுக்கு சந்தேகம் வலுத்தது. ஒத்தை வீட்டுல ரவைக்கு களவாண்டு போகத் திட்ட மோயென மிரட்டியும், மசியாத கிழவிக்காக இரவு முழுவதும் காவலிருந்தோம். அயர்ந்து தூங்கி விட்ட அதி காலையில் சலக் புலக்கென்ற சத்தம் எழுப்பி விட்டது. பெருக்கிய வாசலில் சாணியைக் கரைத்து சீராகத் தெளித்துக் கொண்டிருந்தது கிழவி. அன்று முதல் எங்கள் செல்லப்பாட்டி.

அம்மாவுக்காக நாள் முழுவதும் வேலைகள் வரிசைகட்டி நிற்கும். ஒரே நேரத்தில் நான்கைந்து வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தாலும் வரிசை நீண்டுகொண்டேயிருக்கும். இவ்வளவு செய்கிறாளேயென அப்பாவுக்கு ஈவு இரக்கமே இருக்காது. அந்த வேலை அப்படியே கெடக்கு, இது இப்படியே கெடக்கு என பட்டனை அழுத்தி எந்திரத்தை இயக்குவதைப் போல சதா நிமிண்டிக் கொண்டேயிருப்பார். அப்பாவுக்கு உழவு, வரப்பு வெட்டு எனப் பெரு வேலைகள் மட்டும்தான். சில்லறை வேலைகளைத் தொட்டுக் கூடப் பார்க்க மாட்டார். தங்கச்சாமி டீக்கடை யிலேயே பொழுதன்னைக்கும் சீட்டாடிக் கழிப் பார். கேட்டால் நெல்லை வியாபாரியப் பார்க்கப் போனேன். மிளகாய் வியாபாரி வரச் சொன்னா ருனு புளுகுவார். ஆத்திரம் வந்து அம்மா திட்ட ஆரம்பித்தால் உம்மெனயிருந்தே சமாளித்து விடுவார்.

“வக்கன மட்டும் பேசுனியே! தரிசுல கெடக்குற மாட்டக்கூடவா பேத்துக் கட்டக் கூடாது? ஒன்னைக் கட்டிக்கிட்ட நாளையிலிலேருந்து என்ன சொகத்தைக் கண்டேன். ஒரு நல்லது கெட்டது உண்டா. சொந்தஞ்சோலீனு போயி சத்த குந்த வக்க முடியுதா. ஒஞ்சதுரத்துல புத்து மொளக்க. கையில கட்ட மொளக்க. எனக்கு மட்டும்உடம்பு இரும் பாலயா அடிச்சிருக்கு. ஒன்னச் சொல்லிக் குத்த மில்லை. கொண்டாந்து தள்ளிப் போன எங்கப் பனச் சொல்லணும்.”

அழுதழுது திட்டிக் கொண்டேயிருந்தாலும் வேலையை மட்டும் நிறுத்தாது. மற்றவர்கள் முன்னிலையில், எங்க தம்பியவுக அப்பாவுக்கு என்ன கொறைச்சல்னு பெருமையும் பேசும்.

பாட்டியின் வருகையால் அம்மாவுக்கு றெக்கை முளைத்தது. சொந்தம் சோலினு ஊர் சுற்றவும் கிளம்பிவிட்டது. மாமா வீட்டில் இரவு தங்கி வருமளவிற்கு அதன் சுதந்திரம் விரிந்தது. திரும்ப வந்து வீட்டைப் பார்க்கும் அம்மாவின் விழிகளில் ஆச்சர்யம் பிதுங்கும். அந்தந்தப் பொருளை அங்கங்கயே வைத்து அச்சுப் பிறழாமல் பராமரிக்கும் பாட்டியின் கைப்பக்குவம் அம்மா வை வெட்கப்பட வைக்கும். இப்படி அனைவரின் மனதிலும் சிம்மாசனம் போட்டுவிட்ட பாட்டியை எப்படி மறப்பது?

நண்டுக் குழம்பைத் தவிர வேற கவுச்சியெதும் பாட்டிக்குப் பிடிக்காது. வாரச்சந்தையில் குழம்புக்கு எது வாங்கினாலும் துணையாக நண்டும் வந்து சேரும். சதைகளையெல்லாம் எங்களுக்கு நோண்டிக் கொடுத்து விட்டு வெ றுங் குழம்பை ஊற்றித்தான் சாப்பிடும். பாட்டியின் கொடங்கையில் அப்படியொரு சொர்க்கம் குடி கொண்டிருக்கும். எங்கள் பக்கம் தான் ஒருக்களிக்க வேண்டுமெனப் பிடிவாதம் பிடிக்கும். கவிதாக் குட்டியையும், என்னையும் இரு கைகளாலும் அணைத்துப் படுத்தவாறே, கதைகளால் தூங்க வைக்கும். பசங்களோடு விளையாட முடியாத வருத்தத்தைப் பாட்டியின் கதைகள் தான் துடைத்தெடுக்கும்.

ஊருக்குள்ளிருந்தவரை அம்மாவின் குழம்பு ருசிக்கு பங்காளி வீடெல்லாம் கிரங்கிக் கிடக்கும். “ஓங் கொழம்பில்லாம அந்த மனுசனுக்கு சோறு எறங்க மாட்டேங்குது.” என வரிசைக் கட்டி நிற்கும். வெஞ்சனக் கிண்ணிகளுக்காகவே குழம்பை கொஞ்சம் தாராளமாக வைக்கும். அப்பா மட்டும் நொட்டாங்கு சொல்லாமல் சாப்பிட மாட்டார்.

“கூறு கெட்ட வளுக. நா வைக்கிற மொளகு தண்ணிக்கே வரிசையில நிப்பாளுக. இது வக்கிறதப் பாத்தா சட்டியோடல்ல தூக்கிட்டு ஓடுவாளுக” பாட்டியின் சமையலை அம்மா இப்படிப் பெருமை பேசும்.

தீபாவளியன்று ஆட்டுக்கறி எடுத்து வந்திருந்தார் அப்பா. கிணற்றடிப் பலாமரத்தில் பிடுங்கி வந்த மூசை துண்டுகளாக்கிக் கொண்டிருந் தது பாட்டி. கடந்த மஞ்சு விரட்டன்று நடந்த கதையை பாட்டியிடம் விளக்கும் போதே அம்மா வின் முகம் வெளிறியது.

அன்று வைத்த கறிக்குழம்பும், முந்தைய நாள் வைத்த சாம்பாரும் தனித்தனி ஏனத்தில் இருந்தது. ஏதோ மறதியில் இரண்டும் ஒன்றாகக் கலந்து விட்டது. சரக்கடித்துவிட்டு வந்த அப்பாவுக்கு காய்களை ஒதுக்கிய கவனத்தோடு எலும்பில்லாத கறித்துண்டங்களைப் போட்டு குழம்பையும் ஊற்றியது. ஒரு உருண்டையை வாயில் வைத்தவர் என்னயிதுயென முறைத்தார். வழுக்கிக் கொண்டு போன புன்னகையை வழுக்கட்டாயமாக வர வழைத்து நடந்ததை விளக்கியவளின் முகம் கறியும் சோறுமாக வழிந்தது. அப்படியும் ஆத்திரம் தீரா மல் குழம்புச் சட்டியும் நொறுங்கியது.

இன்னிக்குப் பாருயென மூசத்துண்டுகளை கொதித்துக் கொண்டிருந்த கறிக்குழம்பில் போட்டுக் கிண்டியது பாட்டி. இப்போதும் தயக்கத்துடன் பரிமாறியது அம்மா. ஈரல் துண்டு மாதிரியிருக்குயென அரைப் போதையில் ருசித்துத் தின்றவரின் கண்கள் சொருகிக் கிடந்தன. இப்படி அயிரை மீனுக்கும் சுரைக்காய்க்கும், நண்டுக் குழம்பிற்கும் மரவள்ளிக் கிழங்கிற்குமென பாட்டி யின் சேர்மானங்களில் ஆச்சர்யமும் சுவையும் கூடியிருக்கும்.

அந்தச் சனிக்கிழமை விடிந்து வெகுநேர மாகி யும் பனிமூட்டம் விலக மறுத்தது. மழை பெய்ந் தோய்ந்ததைப் போல மரங்கள் சொட்டிக் கொண்டி ருந்தன. விஷப்பனி மிளகாய்ச் செடிக் காகாதெனச் சலித்துக் கொண்டே அப்பா, அசுவினி விழுந்த செடிகளுக்கு பனிப்பதத்தில் தெளிப் பதற்காக பூச்சி மருந்து மாவோடு கொல்லை யிலிறங்கினார். சிறிய துண்டொன்றால் கொங்காணி கட்டிய தலை யோடு கவிதாக்குட்டியை வெளிக்கிருக்க அழைத்துச் சென்றது பாட்டி, புல் நுனிப் பனித் துளியை நான் எத்தியெத்தி விளை யாடிக் கொண் டிருந்தேன்.

சுள்ளென வெயிலடித்துப் பனிவிலகவும் அந்த ஆளின் வரவும் சரியாக இருந்தது. வந்த கையோடு பாட்டியைப் போட்டு நச்சரிக்க ஆரம்பித்தார். “கௌம்பு போவோம்”

பதிலேதும் பேசாத பாட்டி கூட்டுமாறு கட்டுவதிலேயே குறியாக இருந்தது. முதல் நாள் கைக்கடங்காத கூட்டுமாறோடு கட்டுத்தறியில் நின்ற கவிதாக்குட்டியைத் தூக்கிக் கொஞ்சியது. “கட்டுதறி கூடுறளவுக்கு வளந்திட்டியளளோ” உச்சி முகர்ந்த பாட்டி மறுநாள் கைக்கடக்கமான கூட்டு மாறு செய்து தருவதாக உறுதியளித்திருந்தது. பழுத்து விழுந்த தென்னையோலைகளைப் பிடுங்கி தோகைகளையும் கட்டையான அடிப்பகுதியையும் அரிவாள் மணையால் நீக்கிக் கொண்டிருந்தது.

“சொல்லிக்கிட்டேயிருக்கேன் பேசாம இருக்கே. கௌம்பு போகணும்.”

நிமிர்ந்து பார்க்காத பாட்டியின் இறுக்கமும், அந்த ஆளின் நச்சரிப்பும் நீண்டு கொண்டேயிருந்தது கட்டுத்தறியைப் போட்டு வழக்கத்துக்கு மாறான வேகத்துடன் பரட்பரட்டெனக் கட்டிக் கொண்டி ருந்தது அம்மா. பொறுமையிழந்த அந்த ஆள் அம்மாவிடம் வந்தார். “நீங்களாச்சும் சொல் லுங்க. எவ்வளவு நேரமாகக் கெஞ்சிக் கிட்டிருக்கிறது.”

“நான் என்ன சொல்றது... வந்தா கூட்டிக்கிட்டுப் போங்க”

அம்மாவை முறைத்துவிட்டு வந்தவர், எதற் கும் மசியாதவளின் காலடியில் நெடுஞ்சாங்கிடை யாக விழுந்தார். “என்ன மன்னிச் சுரும்மா. அவ பேச்சக் கேட்டுத் திட்டிட்டேன். அவளுந்தேன் வந் திருக்கா. நீ திட்டுவியோனு பயந்துக்குட்டு ரோட் டுலயே நிக்கிறா.”

“............. ...............”

“நீயில்லாம புள்ளையெல்லாம் பஞ்சத்துக் கடிப்பட்ட கணக்காத் திரியுது. ஆயா எங்க, ஆய எங்கனு உசர எடுக்குதுக”

பாட்டியின் கண்களிலிருந்து இரண்டு சொட்டு அரிவாள் மணையில் வெட்டுப்பட்டு விழுந்தது. சின்னக் கூட்டுமாறைக் கண்ட சந்தேசத்தில் பாட்டி யின் கழுத்தில் விழுந்து ஊஞ்சலாடினாள் கவிதாக் குட்டி. மேலும் கண்ணீர் ஒழுகியது.

இங்கு வரும் போது வைத்திருந்த பையோ டும், அம்மா கொடுத்தனுப்பிய தானிய மூட்டை யோடும் வாசலில் நின்ற பாட்டி, சுமையை இறக்கி விட்டு மறுபடி மறுபடி எங்கள் முகங்களை முத்த மிட்டு நெட்டி முறித்தது. மரவள்ளித்தூர் ஒன்றைப் பிடுங்கி வந்த அப்பா கிழங்கை முறித்து நார் போட்டுக் கட்டிக் கொடுத்தார். அடிக்கடி வரப் போக இருக்கணுமென்று வழியனுப்பிய அம்மா வின் முகத்தை முந்தானை மூடியிருந்தது.

முதல் நாள் சொன்ன கதையில் தப்பித்து வழி தவறி நடுக்காட்டுக்கு வந்து விட்ட அப்பெண்ணை யார் கூட்டி வரப் போகிறார்கள் என்ற குழப்பம் என் மண்டையை உடைத்தது. இன்னக்கி மட்டுமாவது தங்கி கதையை முடித்து விட்டுப் போகக்கூடாதா என்றிருந்தது.

வெகு நேரமாகியும் தண்ணீர் வைக்க வராத தால் அம்மாவையோ, பாட்டியையோ எதிர் பார்த்துக் கத்திக் கொண்டிருந்தன தரிசில் கட்டிக் கிடந்த வெள்ளாடுகள் மூன்றும்.

Pin It