உன் விரல்களுக்கு
சொடுக்கெடுத்த நிமிஷங்களில்
என் மனம் சுளுக்கிக் கொண்டதை உணர்ந்தாயா?

கோடிக்கால் பூதமென குதிங்கால்
வலிக்கக் குதித்தாடிக் கூத்தடிக்கின்றது
உன்னையும் என்னையும்
நனைத்துப்போக வந்த பெருமழை
எங்கே நீ வரக்காணோமே?

மனம் முழுதும் ஒற்றை வார்த்தை
அலையடித்தவாறிருந்தது
நீ செவிமடுக்காத பொழுதொன்றில்
அந்த வார்த்தை அனாதையாய்
கரைந்த வண்ணம்
கரை ஒதுங்கிக் கிடக்கிறது.

குளம் நிறைந்த
பாசியாய்ப் படர்ந்து
என் நிறம் மாற்றுகிறாய்
தூர் வாரினாலும்
செழித்துக் கொண்டே இருக்கிறது
உன் நினைவுப்பாசி

கரை புரண்டு ஓடுகிறது
புது வெள்ளமெனக் கொண்டாடுகிறேன் நான்
கலங்கிய வெள்ளமென முகம் சுளிக்கிறாய் நீ
அதற்குப் பிறகு ஆற்றில் உப்புக்கரிக்கத் துவங்குகிறது

பிரியமானவர்களைப் பாதுகாப்பதைவிடச்
சிக்கலாகி விடுகிறது
அவர்கள் நினைவான பொருட்களைப் பாதுகாப்பது

நியான் விளக்கொளியில்
கவனிப்பாரற்று வீழ்ந்து கிடக்கிறது நிலா
பதறி எழுந்து பளிங்கு முகம் துடைத்துப் பார்க்கிறேன்
என் காதல்

சொல்லித்தொலையேண்டி என்கிறாய்
உன்னுள் நான் தொலைந்து
நெடுநாட்களாயிற்றென்பதை
அவதானிக்காமல்

நான் எழுதாத
எழுதியும் பிரசுரமாகாத
முதலும் முடிவுமான கவிதை நீ

கவிதைப் பூக்கள்
வாசமற்றுப் போகின்றன
நீ சுவாசிக்காத கணங்களில்

புயலாய்ப் பெருங்குரலெடுத்து அலறுகிறாய்
மழையாய் உன் குரலை எதிரொலிக்கிறேன்
நீராய்ப் பெருக்கெடுத்து ஓடத்துவங்குகின்றன
நம் பிரியங்கள்

உனக்கு அனுப்பலாமென்று
தேடுகையில்தான் உறைக்கிறது
என் முகவரி தொலைந்து போனது

இருத்தலைத் தொலைத்துவிட்டு
உன் வார்த்தைகளைப் பிடித்தபடி
மிதந்து கொண்டிருக்கிறேன்
பிரபஞ்ச வெளியெங்கும்

நான் உடைந்து சிதறுகிறேன்
என்னைச் சேகரி

நிறைந்தால் தளும்பாதாமே!
யார் சொன்னது?
நிறைந்து...... நிறைந்து
தளும்புகிறாய் என்னுள்
இடைவெளிகளற்று

கவனமாக உன்னைத்தவிர்த்து
எழுதிய கவிதையில் முற்றுப் புள்ளியாக வந்து
உன் இருத்தலைப் பதிவு செய்கிறாய்

Pin It