தூவிய இரையைக்
கொத்தித் தின்னும் ஆவலில்
தரையிறங்கி விட்டன
பறவைகள் இப்போதும்.

அலகிடையில்
எச்சில் வழியவிட்டபடி
ருசிக்கப் பழகி விட்டன
இரையின் இலக்கை உணராமல்.

தீனி கிடைத்த மகிழ்ச்சியில்
தலையசைத்துக்
கதைத்துக் கொண்டிருக்கின்றன,
வேடன் விரித்த வலையில்
விரல்கள் மாட்டிக்கொண்ட
விபரம் அறியாமல்.

அவர்கள் கதைகளில்
இல்லாதிருக்கலாம் ஒருவேளை
வேடன் வலையில்
வீழ்ந்த பறவைகளின் கதை.

மறைந்திருந்தே
பறவைகளின் எண்ணிக்கையை
ரசித்திருக்கும் வேடனின்
வஞ்சகச் சிரிப்பொலியை
அறிந்திருக்குமா பறவைகள்?

பிடி இறுகும் தருணத்தில்
தீனியின் சுவையைப் புறக்கணித்து
சிறகை விரிக்கும் ஆசை தலைதூக்கும்.
தவிப்புறும் அந்நாளில்

பறவைக் கூட்டம் ஒன்றுகூடி
வலையோடு பறந்த கதையை
அவைகளுக்குக்
கூறிவிடுங்கள் யாரேனும்.

Pin It