என். சி. பி. எச் புத்தக நிறுவனம் வெளியிட்டுள்ள மேலாண்மை பொன்னுச்சாமியின் புதிய நாவல் உயிர் நிலம் 300க்கும் மேற்பட்ட சிறுகதைகளும் 6 நாவல்களும் எழுதியுள்ள மேலாண்மையின் இந்த நாவல் இதுவரை தமிழ் இலக்கிய உலகம் பேசாத புதிய கருப்பொருளை பேசுகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் விதர்பா பகுதியில் தொடங்கி, ஆந்திரா, கர்நாடகா தமிழகம் என பரவிய விவசாயிகள் தற்கொலை பற்றி இந்த நாவல் பேசுகிறது. உலக மய, தாராளமய கொள்கைகளால் விவசாயம் சீரழிந்து, கடன் வலையில் சிக்கிய 2 லட்சம் விவசாயிகள் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்க்ள. மனச் சாட்சியை உலுக்கும் இந்த நிகழ்வுகள் தமிழ் இலக்கிய உலகில் எந்த பிரதிபலிப்பையும் ஏற்படுத்தவில்லை.

மேலாண்மை இந்த தற்கொலையில் ஒன்றை கருப்பொருளாக வைத்து உயிர் நிலத்தை உருவாக்கியுள்ளார். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு இந்நாவலைஅர்ப்பணித்துள்ளார்.

விவசாயிகள் பிரச்சனைகள் அனைத்தையும் அடி முதல் நுணி வரை அறிந்தவர் மேலாண்மை. கிராமப்புற விவசாயிகளை பல கோணங்களில் தன் படைப்புகளில் படம்பிடித்துக் காட்டியவர். அவரது கற்பனையில் சிக்காத எந்த ஒரு ஜீவனும் கிராமத்தில் இருக்க முடியாது என்றாலும் இந்த புதிய களத்தில் பல புதிய மனிதர்களை உலவ விட்டுள்ளார்.

பரமசிவம் ஒரு சிறு விவசாயி பாடுபட்டு முன்னேறும் ஒரு விவசாயி. மின்சார மோட்டார் மூலம் நீர் பாய்ச்சினால் பயிருக்கு ஆபத்து என கருதும் அப்பாவி. அவரது மனைவி காமாட்சி. தன் கணவன், பிள்ளைகள், தங்கள் வெள்ளாமை இதற்கு அப்பால் சிந்திக்க தெரியாத கிராமத்து மனுஷி. இவர்களின் இரண்டு மகன்கள் அழகேசன், முருகேசன், மூத்தவன் அய்யா வழியில் மரபு வழி விவசாயத்தை தொடர்பவன். இளையவன் நவீன விவசாயம் செய்ய விரும்புபவன்.

இந்த குடும்பத்தை மையப்படுத்தி கிராமத்து விவசாயி பாலய்யா நாயக்கர்; பல சரக்கு கடை அருஞ்சுணை வட்டிக்கு கடன் தரும் பழனிமலை. இரண்டு மகன்களின் காதலிகளாக (அல்லது கள்ளக் காதலிகளாக) வரும் ராஜாத்தி செண்பகம் ஆகியோரை கொண்டதுதான் நாவல்.

நவீன விவசாயம் செய்வற்கு நிலத்தை பிரித்து கேட்கிறான் இளையமகன். விவகாரம் பஞ்சாயத்திற்கு செல்வதை தடுத்த தானே முன்வந்து நிலத்தை கொடுக்கிறார் பரமசிவம். நவீன முறை விவசாயத்தில் ஈடுபடும் முருகேசன் முதலில் சிறிய கடன் வாங்கி, பிறகு சொசைட்டி கடன் வாங்கி இறுதியாக கந்து வட்டிக் காரனிடம் சிக்கி மானத்தை இழந்து அதிலிருந்து மீள முடியாமல் பூச்சி மருந்தை சாப்பிட்டு உயிர் விடுகிறான். ஒரு விவசாயி படிப்படியாக கடன் வலையில் சிக்குவதையும் உரக்கடை, கமிஷன் கடைக்காரர்கள் விவசாயிகளை எப்படி கொள்ளை அடிக்கிறார்கள் என்பதையும் நுணுக்கமாக மேலாண்மை பதிவு செய்துள்ளார்.

முருகேசனை சோப்பு, பவுடர் போடும் மேனாமினுக்கியாகவும், சாண்டியல்யனின் நாவல் படிக்கும் பொறுப்பற்றவனாகவும், நிலத்தை பிரித்துக் கேட்டு குடும்ப கௌரவத்தை சீர்குலைக்கும் வில்லனாகவும் சித்தரிப்பதால், பன்னாட்டுக் கம்பெனிகள் மீதும், அரசின் விவசாயிகள் விரோத கொள்கைகள் மீதும் கமிஷன் கடை இடைத் தரகர்கள் மீதும் வரவேண்டிய கோபம் திசை மாறி விடுகிறது.

நாவல் முழுவதும் பரவிக் கிடக்கும் பாலியல் வர்ணிப்புகள் தேவைதானா? வாசகனின் கற்பனைக்கு விட்டு விடாமல் விவரித்து எழுத வேண்டுமா?

ஒரே அர்த்தத்தில் பல சொற்களை போட்டு வர்ணிக்கும் மொழிநடை இந்த நாவலிலும் உள்ளது. மற்றபடி மேலாண்மையின் முத்திரை இந்நாவலில் பதிந்துள்ளது.

புதிய கரு புதிய நாவல்

வெளியீடு: நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், (பி) லிட்,

41-க்ஷ, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்

அம்பத்தூர்

சென்னை- 600098

விலை ரூ. 270/-

Pin It