மண் பொய் சொல்வதில்லை

மிதிக்கிறோம்

மரங்கள் பொய் சொல்வதில்லை

வெட்டுகிறோம்

மந்திரி பொய் சொல்கிறான்

மாலை போடுகிறோம்

. . . . .

எம். எல். ஏ. சட்டையில் பை வைத்தார்

எம். பி. சட்டையில் பைகள் வைத்தார்

மந்திரி பையையே சட்டையாகப் போட்டுக்கொண்டார்

. . இவை அன்று கவிஞர் கந்தர்வன் எழுதிய கவிதைகள். அவர் காலத்தில் அவர் கண்டதை இவ்விதம் பதிவு செய்தார். இன்று அவர் இருந்தால் என்ன பாடியிருப்பார் என்று யோசித்துப் பார்க்கிறோம்.

எம். எல். ஏ. சில ஊழல் செய்தார்

எம். பி. பல ஊழல் செய்தார்

ராஜாக்கள் ஊழல் செய்யவே மந்திரி ஆவார்

-என்று பாடியிருப்பார். ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் கீழ் நாடே ஊழலில் நாறிக் கொண்டிருக்கிறது. காமன் வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஊழல்,ஆதர்ஷ் சொசைட்டி ஊழல், எல்லாவற்றுக்கும் மேலாக 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று காங்கிரசின் கொடி பட்டொளி வீசிப்பறந்து கொண்டிருக்க, யோக்கியர் கட்சி எனப் பீத்தும் பாஜக ஆளும் கர்நாடகத்தின் வீச்சம் தேசமெங்கும் பரவிக் குடலைப் பிடுங்குகிறது. மூக்கைப் பொத்திக் கொண்டு கடந்துபோகப் பழகிவிட்ட இந்திய மக்களின் (சிவில் சமூகத்தின்)அசமந்தத்தை நம்பியே இத்தனை ஊழல்களும் இங்கே அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.

2ஜி அலைக்கற்றை ஊழல் என்பது இந்தியாவின் ஊழல் வரலாற்றில் இன்னொரு பக்கம் அல்ல. அளவு மாறுபாடு குண மாறுபாட்டுக்கு இட்டுச் செல்லுமல்லவா? 1,76000,00000000 (சைபர்கள் சரிதானா என்று பார்த்துக்கொள்ள வேண்டும். 1. 76 லட்சம் கோடி என்று சொல்வதை முழுசாக எழுதிப் பார்த்தால் தான் மலைப்பு உண்டாகிறது) ரூபாய்கள் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியுள்ள ஊழல் இது. ஆகவே வழக்கமான இந்திய ஊழல் என்று இதை விட முடியாது என மார்க்சிஸ்ட் கட்சி டிசம்பர் 5 முதல் 11 வரை ஊழலுக்கு எதிரான நாடு தழுவிய இயக்கம் நடத்திட அறைகூவல் விடுத்துள்ளது.

எல்லாம் சட்டப்படி முறையாகத்தான் நடந் துள்ளது என்று முதலில் நிமிர்ந்து சொன்னார்கள். மத்திய தணிக்கைக்குழு நாளும் ஒரு ஆதாரத்தைத் தூக்கிப் போட்டுக்கொண்டே இருக்க அப்புறம் தணிக்கைக் குழு என்பது இறுதித் தீர்ப்பு எழுதும் அமைப்பல்ல என்றார்கள். ராஜினாமா தேவை யில்லை என்றார்கள். பத்திரிகைகளும் எதிர்க் கட்சிகளும் நாறடித்ததில் ஒருவழியாக அமைச்சர் ஆ. ராசா ராசினாமாச் செய்துவிட்டார். ஆனால் இது முடிவல்ல. துவக்கம்தான். அவர் மட்டும் குற்றவாளி எனச் சொல்லித் தேசத்தை ஏமாற்ற அனுமதிக்க முடியாது. முந்தைய அமைச்சர்களின் பங்கு என்ன?அதிகாரிகளின் பங்கு என்ன? மத்திய அமைச்சரவையின் பங்கு என்ன? பிரதமரின் பங்கு என்ன? அவரவருக்குப் போன பங்கு என்ன? என எல்லாமே விசாரிக்கப்படவேண்டும் என எதிர்க் கட்சிகள் கோருகின்றன.

மார்க்சிஸ்ட்டுகள் இது மட்டும் போதாது என்கி றார்கள். இவர்களையெல்லாம் ஆட்டுவித்த கார்ப் பொரேட் நிறுவனங்கள் எவை எவை?அவை அடித்த கொள்ளை எவ்வளவு? அவர்களுக்கும் அதிகாரிகள் மந்திரிகளுக்கும் இடையில் தரகர் களாக வேலை பார்த்தவர்கள் யார் யார்? அவர் களின் பங்கு என்ன? வெளித்தொடர்புகள் என்ன? என்பது போன்ற அனைத்து அம்சங்களையும் விசாரிக்க வேண்டும். 2 ஜி அலைக்கற்றை உரிமை வழங்கப்பட்ட அத்தனை உரிமங்களையும் உடனடியாக ரத்து செய்து புதிய டெண்டர் விட வேண்டும் என்று கோருகிறார்கள்.

இந்த மெகா ஊழலின் விவரங்களுக்குள் நாம் போகவில்லை. அவை அன்றாடம் தினசரிகளில் வந்துகொண்டே இருக்கின்றன. ஊழல் நம் இந்திய வாழ்வின் ஓர் அங்கமாக மாறியிருப்பதும் இந்தியரில் மூவரில் இருவர் அறிந்தும் அறியாமலும் ஊழலுக்குத் துணையாக இருக்கிறார்கள் என்கிற புள்ளி விவரக் கணக்குகளும் இந்த ஊழலை ஆள் வோர் எவ்விதம் அணுகுகிறார்கள் என்பதும் தான் நாம் இங்கு கவலையுடன் பேச வேண்டியவை.

இன்று வலைத்தளங்களில்/பத்திரிகைகளில் ஊழல் குறித்துப் பல கோணங்களில் விவா தங்கள் நடைபெற்று வருகின்றன. அதில் வலுவாக முவைக்கப்படும் ஒரு வாதம்- இந்த லைசென்ஸ் ராஜ் இருக்கும்வரை ஊழலை ஒழிக்க முடியாது என்பது. முற்றிலுமாக இந்தியப் பொருளாதாரத்தை மூலதனங் களுக்கு (உள்ளூர் மற்றும் அந்நிய) திறந்து விட்டுவிட்டால் ஊழலுக்கு அவசியமில்லை. உரிமம்,ஒப்புதல்,கட்டுப்பாடுகள்,சட்டங்கள் என்று இருப்பதால்தானே அதிகாரிகளும் மந்திரிகளும் அதில் விளையாட முடிகிறது? என்பது இந்த வாதத்தின் விளக்கம். இது உலகமய ஏஜண்டுகளின் குரல் என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை. நேரடியாக மூலதனம் இந்திய மண்ணில் புகுந்து விளை யாடி அப்படியே கொள்ளை கொண்டுபோக அனுமதிக்கச்சொல்லும் வாதம் இது.

இன்னொரு வாதம் போஸ்ட்மேன் மணி யார்டருக்கு 2 ரூபாய் லஞ்சம் வாங்குவது-அரசு ஆஸ்பத்திரிகளில் வாட்ச்மேன் பத்து ரூபாய் வாங்குவது என எல்லாமே ஒன்றுதானே. வாங்கும் மனநிலைதான் நாம் எதிர்க்க வேண்டியது. லஞ்ச ஆதரவு மனநிலை நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்திருக்கிறது. நாம் எல்லோருமே குற்றவாளிகள்தானே. இந்த வாதம் 1.76 லட்சம் கோடி ஊழலையும் ஒண்ணரை ரூபாய் மணியார்டர் ஊழலையும் ஒன்றாக்கி எல் லாம் ஒன்றுதான் என்று நொங்கு தின்னவனையும் நோண்டித்தின்னவனையும் ஒரே சவுக்கால் அடிக்கிறது.

இன்னொரு புறம் ஆ.ராசா ஒரு தலித் என்பதால் தான் இந்த அளவுக்கு அவர்மீது தாக்குதல் வருகிறது என்று தமிழக முதல்வர் ஆரம்பித்து வைக்க அது ஒரு பக்கம் எரிந்து கொண்டிருக்கிறது. முரசொலி 17.11.10 இதழில் கலைஞர் கடிதத்தில் “ சூத்திரனுக்கு ஒரு நீதி - தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு ஒரு நீதி” என்று பாரதி கேட்டதுபோல் “ தனக்கொரு நீதி தஸ் யூக்களுக்கு ஒரு நீதி” என்ற மனு தர்மத்திற்கு தமிழகத்தில் மறு பிறவி கிடையாது என்று எழுதியிருக்கிறார். கலைஞர் எட்டடி பாய்ந்தால் ‘தமிழர் தலைவர்’ அய்யா கி.வீரமணி பதினாறு அடி பாய வேண் டுமே. கழகத் தோழர் களைத் திரட்டிக் கொண்டு சென்னை விமான நிலை யத்துக்கே போய்விட் டார். அமைச்சர் பத வியை விடமாட்டேன் என்று கடைசி வரைக்கும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்து விட்டு வேறு வழியின்றிக் கைவிட்ட அமைச்சர் ஆ. ராசாவை வரவேற்கத் தான் அய்யா விமான நிலையம் சென்றார்கள்.

அது பற்றி விடுதலை யில் வந்துள்ள செய்தி இது: “மானமிகு ஆ.இராசா அவர் களுக்கு தமிழர் தலைவர் தலைமையில் ‘தகத்தகாய’ வர வேற்பு- மாண்புமிகு மத்திய அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு ‘மானமிகு’வாக டில்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை காமராசர் முனையத்திற்கு நேற்றிரவு 8 மணிக்கு வருகை தந்தார் மானமிகு ஆ. இராசா அவர்கள். அவரைத் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து அன்பு தவழ வரவேற்றார்.” இந்தச் செய்தியோடு கடைசிப் பக்கத்தில் ‘அன்று அமைச்சர் இன்று ராஜா’ என்றொரு சிறப்புக் கட்டுரையும் வெளியாகி யுள்ளது. எது மானம் எது மாண்பு என்பது குறித் தெல்லாம் நாம் இங்கு விளக்கவில்லை. தமிழர் தலைவர் அவர்களின் நகைச்சுவை உணர்வு மற்றும் அவர் பண்ணும் காமெடி பற்றியும் நாம் ஒன்றும் சொல்லவில்லை. அதை வாசகர் யோசனைக்கே விட்டு விடுவோம்.

ராசாவை கோர்ட்டுக்கு இழுக்கும் சுப்பிரமணியசாமி பார்ப்பனர் என்பதாலும் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா ஆ.ராசாவைக் கைது செய்ய வேண்டும் என்று தினசரி அறிக்கை விட்டுக் கொண்டிருப்பதாலும் இப்படி ஒரு பிட்டை கலைஞர் போட்டு விட்டார். ஆனால் சுப்பிரமணிய சாமி கலைஞருக்குப் பதிலடி கொடுத்தார். “நான் ஜெயலலிதா மீதும் ராமகிருஷ்ண ஹெக்டே மீதும் கூட ஊழல் வழக்குப் போட்டேனே . அப்போது கலைஞர் என்னை என்ன சொன்னார்? என்னை அவர் வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்தார். நான் யாரென்று பார்க்காமல் வழக்குப் போடுகிறேன். பிரச்னை என் மனதில் இல்லை. “ என்று அடித்து விட்டார்.

ஒருவர் தலித் என்பதால் வஞ்சிக்கப் பட்டால் நாம் அதை ஏற்க முடியாது. அதில் ஒன்றும் குழப்பமில்லை. பார்ப்பன சார்புடைய தாக ஊடகங்கள் இருப்ப தென்பது ஆ.ராசாவுக்காக வந்த ஏற்பாடல்ல. உத்தப்புரத்திலும் காங் கியனூரிலும் தஸ்யூக் களையும் தஸ்யூக் களுக்காகக் குரல் கொடுத்தோரையும் உதைத்து உள்ளே தள் ளும் தமிழக முதல்வர் அவர்கள் ஆ.ராசாவை முன் வைத்தேனும் பதைப் புடன் தஸ்யூக்களுக் காகக் குரல் கொடுக் கிறாரே என்று நாம் ஆசுவாசப்படுவதா அல்லது நீங்களும் உங்க... என்று தலையில் அடித்துச் சிரிப்பதா?

மடியில் கனமில்லை என்றால் பயமில்லாமல் எந்த விசாரணைக்கும் தயார் என்று நாடாளுமன்றக் கூட்டுக்குழுவுக்கு முன் நிற்கலாமே?என்பதுதான் மக்கள் எழுப்பும் கேள்வி.

மக்கள் எவ்வளவோ பார்த்து விட்டார்கள். ஊழலையும் அதை மறைத்த தலைவர்களையும் காலந்தோறும் அவர்கள் பார்த்து வருகிறார்கள்.

“I would go to the length of giving the whole congress a decent burial, rather than put up with the corruption that is rampant. “ - Mahatma Gandhi May 1939

“இந்த அசிங்கமான ஊழல்களை மறைத்துக் கொண்டிருப்பதைவிட ஒட்டுமொத்தமாகக் காங்கிரஸ் கட்சிக்கே ஒரு கௌரவமான சவ அடக்கம் செய்து விடுவேன்” - மகாத்மா காந்தி 1939

1935 பிரிட்டிஷ் இந்தியாவின் சட்டப்படி 1937இல் அமைக்கப்பட்ட ஏழு காங்கிரஸ் மந்திரி சபைகளில் தலைவிரித்தாடிய ஊழலைக்கண்டு மனம் கொதித்துப்போய்க் காந்தி சொன்ன வார்த்தைகள்தாம் இவை. காங்கிரசார் காந்திஜி இருந்தபோதே கதைய ஆரம்பிச்சிட்டாங்க. ஊழல் பெருச்சாளிகளின் கூடாரமாக கங்கிரஸ் ஆகி விட்டதைக் கண்டு மனம் வெறுத்த காந்தி, தான் கொல்லப்படுவதற்கு முன் உயில் போல காங்கிர சாருக்கு எழுதிய கடிதத்தில் காங்கிரசைக் கலைத்து விட்டு மக்களுக்கு உண்மையாகவே சேவை செய்யும் லோக் சேவா சங் என்கிற புதிய அமைப் பைத் துவக்க வேண்டும் என்று எழுதினார். ஆனால் காந்தியின் உடம்போடு சேர்த்து அக்கடிதத்தையும் மறக்காமல் புதைத்துவிட்டனர் காங்கிரஸ் தலைவர்கள். மனசை உறுத்திக்கொண்டிருந்த ஒரு முள்ளும் 1948 ஜனவரி 30இல் அடக்கமாகிவிட புதிய சுதந்திர இந்தியாவின் முதல் ஊழலைச் சுமந்து வந்தார் வி. கே. கிருஷ்ண மேனன். 1948இல் அவர் லண்டனில் இந்தியத்தூதராக இருந்தார்.

காஷ்மீர் பிரச்னையில் ராணுவத்தலையீட்டுக்காக இந்திய ராணுவத்துக்கு ஜீப்புகள் வாங்கிய வகையில் அந்நியக் கம்பெனியோடு போட்ட ஒப்பந்தம் ஊழலுக்கான களமானது. அனந்தசயனம் அய்யங்கார் தலைமையில் விசாரணைக்கமிசன் போடப்பட்டது. ஒரு முழுமையான நீதிவிசாரணை தேவை என அக்குழு பரிந்துரைத்தது. எதிர்க் கட்சிகள் நீதிவிசாரணை தேவை என்று போர்க் கோலம் பூண்டு நின்றபோதும் ஆளும் காங்கிரஸ் தெனாவட்டாகக் கூறியது: “எங்களைப் பொருத்த வரை ஜீப் ஊழல் பிரச்னை ஒரு முடிந்துபோன கதை. எதிர்க்கட்சிகளுக்குத் திருப்தி இல்லை என்றால் அவர்கள் இதை ஒரு தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்திக்கொள்ளலாமே” என்று .

ஆகவே ஊழலைப் பூசி மெழுகுதல் என்பதும் 1948இலேயே ஆரம்பமாகிவிட்டது. நேருஜி காலத் தில் வெளிவந்த ஊழல்களாக முத்கல் வழக்கு(1951) புகழ்பெற்ற முந்திரா ஊழல்(1957-58) மாளவியா-சிராஜூதீன் ஊழல்(1963) பஞ்சாபில் காங். முதல்வர் பிரதாப்சிங் கைரோன் ஊழல் (1963) போன்றவற்றை வரலாறு குறிக்கிறது. இவை எதிலும் எவர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் பட்டதில்லை. 1962இல் நாட்டின் நிர்வாகத்தில் மலிந்துவிட்ட ஊழலை ஆய்வு செய்து அதை நீக்க வழி சொல்ல நியமிக்கப்பட்ட சந்தானம் கமிட்டி 1964இல் அறிக்கை தந்தது. கடந்த 16 ஆண்டுகளாகப் பதவியில் இருக்கும் அமைச்சர்கள், முதலமைச் சர்கள் பெரும்பாலானவர்கள் வருமானத்துக்கு அதிகமான சொத்துக்களைச் சேர்த்துச் சுகபோக வாழ்வில் திளைக்கிறார்கள் என்று அந்த அறிக்கை பட்டியலிட்டது. எந்த நடவடிக்கையும் யார் மீதும் இல்லை. பின்னர் இந்திராஜி பிரதமர் பொறுப்பை யும் கட்சித்தலைவர் பொறுப்பையும் ஒருசேர ஏற்று பணபலம் அரசியலில் விளையாடும் ஏற் பாட்டை ஸ்தாபனப்படுத்தி நிலைநிறுத்திச் சென்றார்.

நம் காலத்து ஊழல்களான போபர்ஸ் பீரங்கி ஊழல்,பிரான்சுடன் செய்துகொண்ட ஏர்பஸ் ஏ-320 ஊழல்,ஹர்ஷத் மேத்தா ஊழல்(1992) 65 கோடி ஹவாலா ஊழல், யூரியா ஊழல் மற்றும் தமிழ கத்தில் வீராணம் ஊழல்(சர்க்காரியா கமிசன்) என எத்தனை எத்தனை ஊழல்களை நடத்தி நம் ஆட்சி யாளர்கள் மக்களின் மனதில் அரசியல்ல இதெல் லாம் சகஜமப்பா என்று கூறுமளவுக்குப் பயிற்சி யளித்துத் தம் கறைபடிந்த வாழ்வைக் காத்திடத் தேவையான ஒரு சமூக உளவியலைக் கட்டமைத் துள்ளார்கள்.

எந்த ஊழலிலும் எந்தப் பெரும் புள்ளியும் தண்டிக்கப்பட்டதே இல்லை என்பதுதான் வேதனையான நம் ஊழல் வரலாறு.

இத்தோடு முடித்துக்கொண்டால் நாம் அம்புகளை மட்டும் பேசிவிட்டு எய்தவர்களை மறந்தவர்களாகி விடுவோம். இந்த ஊழல்கள் எல்லாவற்றுக்குப் பின்னாலும் இருப்பது இந்த நாட்டின் ஆளும் வர்க்கமும் அந்நிய மூலதனமும் என்பதை ஒருபோதும் மறக்கலாகாது. இந்த வர்க்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவை தானே காங்கிரசும் பாஜகவும் திமுகவும் மற்ற வலதுசாரி கட்சிகளும். ஆளும் வர்க்கத்துக்கு ஊழல் மலிந்த ஒரு கட்சிதான் வேண்டும். காங்கிரஸ் திடீ ரென்று யோக்கியமாக மாறிவிட்டால் பாஜகவைத் தூக்கி ஆட்சியில் வைக்கும். சட்டத்துக்கும் இயற்கை நியாயத்துக்கும் புறம்பான சுரண்டலையும் சொத்துக்குவியலையும் வாழ்முறையாகக் கொண் டுள்ள ஆளும் வர்க்கம் தனக்குச் சேவகம் செய்ய எப்படிப்பட்ட ஒரு அரசாங்கத்தை விரும்பும்? ஊழலிலும் அதை மூடி மறைப்பதிலும் 62 ஆண்டு காலம் பயிற்சி பெற்றுள்ள காங்கிரசே அந்த வர்க்கங்களின் முதல் சாய்ஸாக இருக்க முடியும். நாங்க ளும் குறைஞ்சவங்க இல்லே என்று பாஜக உள்ளிட்ட பிற கட்சிகள் நிரூபித்தால் அவர்கள் பக்கம் திரும்பும் இந்தச் சுரண்டும் வர்க்கங்கள் என்பதை உழைக்கும் மக்கள் பார்க்க வேண்டும்.

உள்நாட்டுப் பெருமுதலாளிகள் மட்டும் இந்த நாடகத்தில் இருந்தவரை ஊழலின் அளவு 100 கோடி 300 கோடி என்று போய்க்கொண்டிருந்தது. இப் போது பன்னாட்டுப் பகாசுரக்கம்பெனிகள் அரங்கில் நுழைந்துவிட்டபடியால் அது 1.76 லட்சம் கோடி ரூபாய் என்கிற எல்லைக்குப் போய் நிற்கிறது. இந்தப் பெரிய தொகையைக்கொண்டு எத்தனை பள்ளிக்கூடங்கள் கட்டலாம்?எத்தனை ஆஸ்பத்திரிகள் கட்டலாம்? இன்னும் எத்தனை ஊர்களுக்கு கிராமப்புற வேலை உறுதித்திட்டத்தை விரிவுபடுத்தலாம்?

ஊழல்களின் படையெடுப்பால் மரத்துப்போன நம் உணர்வுகளைப் புதுப்பிக்க வேண்டும். இவ்வளவு பெரிய ஊழல்-நாட்டையே தின்னும் அளவுக்குப் பெருவடிவம் கொண்டு எழுந்து நிற்கும்போது அதற்கு எதிராக சகல உண்மைகளும் வெளியே வரும் வரையிலும் விடாப்பிடியாகப் போராட உறுதி கொள்வதே இன்றைய தேவை.

Pin It