பெரும் புகழ் பெற்ற மலையாள இலக்கியகர்த்தா தகழி சிவசங்கரன் பிள்ளையின் 100 -வது பிறந்த நாள்விழா கோட்டயத்தில் பொன்குன்னம் வர்க்கி அரங்கில் ஜூலை 18 அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

விழாவை கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் துவக்கி வைத்தார்.

தகழியின் நினைவைப் போற்றும் விதமாக புரோகமன கலா சாஹித்ய சங்கம் (முற்போக்குக் கலை இலக்கிய சங்கம்) மாநிலக்குழு சார்பில் தகழி நூற்றாண்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

நினைவுக் கருத்தரங்கை பேராசிரியர் எம்.கே.சானு துவக்கி வைத்தார். எளிய மனிதர்களின் வாழ்க்கையையும் வேதனைகளையும் தம் படைப்புகளில் தகழி சித்தரித்தார் என்றார் சானு.

தகழியின் நாவல்களை ஆய்வு செய்வதிலும், மதிப்பீடு செய்வதிலும் முற்போக்குக் கலை இலக்கிய சங்கம் முழுமையாக வெற்றி பெறவில்லை என்றார். நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த பேராசிரியர் எருமேலி பரமேஸ்வரன் பிள்ளை.

தகழியின் ‘தோட்டியின் மகன்’ நாவலில் கல்விக் காகத் தோட்டியின் மகன் நடத்துகிற போராட் டங்கள் இன்றைய நிகழ்காலத்தை நினைவூட்டு கின்றன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏவும் முன்னாள் கேரள கல்வித் துறை அமைச்சருமான எம்.ஏ.பேபி பேசுகையில் கூறினார். தோட்டியின் மகனை பள்ளியில் சேர்க்கும் போது ஏற்படுகிற கஷ்டங்களின், அவலங்களின் புதிய வடிவங்களைத்தான் இன்று நாம் சுயநிதிக் கல்வி நிறுவனங்களில் பார்க்கிறோம் என்றார். சமுதாயத்தின் மீதான எழுத்தாளரின் விமர்சனம் என்பது உணர்ச்சி கலந்த வாழ்க்கை தரிசனமே என்றார் அவர்.

மாநில அளவிலான தகழி நூற்றாண்டு விழாவைத் துவக்கிவைத்து முன்னாள் முதலமைச் சரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் பேசுகையில், நவீன கேரள உருவாக்கத்திற்கு மிக முக்கியப் பங்களிப்பு செய்தவர் தகழி என்றார். சாமானிய மனிதர்களின் ஜீவிதத்தையும் கஷ்டங்களையும் சித்தரித்தவர் தகழி என்றார் அவர்.

தன் படைப்புகளின் மூலமாக வர்க்கப் போராட்டத் தீப்பொறிகளைப் படரவிட்டு தகழி மிகப் பெரும் இயக்கத்தின் நாயகனாக மாறினார். இடதுசாரி இயக்கத்திற்கு தகழியின் எழுத்துகள் வலுவூட்டின என்றார் அச்சுதானந்தன்.

1930 களின் இரண்டாம் பகுதியில் வர்க்க, வெகுஜன ஸ்தாபனங்களும் வாழ்க்கை இலக்கிய இயக்கமும் செயல்பட ஆரம்பித்தன. தகழியும் கேசவதேவும் பொன்குன்னம் வர்க்கியும் வைக்கம் முகம்மது பஷீரும் உள்ளிட்ட படைப்பாளிகள் தான் எளிய மொழியிலான இலக்கியத்தை முன்னுக்குக் கொண்டுவந்தனர். ஸ்தாபன உணர்வு பெற்ற கொடியை உயர்த்திப் பிடித்தது வாழ்க்கை இலக்கிய இயக்கம். இந்த இயக்கத்தின் வளர்ச்சிக்கு தகழி வகித்த பங்கு மிகப் பெரிய தாகும். தகழியின் ‘தோட்டியின் மகன்’ நாவல் யதார்த்த உலகை பெரும் அதிர்வுக்குள்ளாக்கியது. இதற்கு எதிராக சமூகத்தில் சிலர் பிரச்சனை களை உருவாக்கினர்.

பணக்கார வர்க்கக் கதைகளுக்குப் பதிலாக உழைக்கும் மக்களின் வர்க்க உணர்வை தனது பாணியில் படைத்து வழங்கினார் தகழி. குட்டநாடு விவசாயத் தொழிலாளர்களின் வறுமை வாழ்க்கை யையும், அதற்கு எதிராக அவர்கள் ஸ்தாபன ரீதியாக ஒன்று திரண்டதையும் மிகவும் மனதைத் தொடும் விதத்தில் “ரண்டிடங்ஙழி” நாவலில் சித்தரித்தார். மண்ணில் உழைப்பவர்களே நாட்டுக்கு உணவளிக்கிறார்களென்றும், உழைப்பே உடைமையைப் படைக்கிறது என்றும் ரண்டிடங் ஙழியில் தெளிவாக்கினார்.

கவிதையில் சங்ஙம்புழையின் “வாழைக் குலை” சிருஷ்டித்த புரட்சியை எளிய மொழியிலான இலக்கியத்தில் தகழியின் ரண்டிடங்ஙழியும், தோட்டியின் மகனும் சேர்ந்து சிருஷ்டித்தது. தகழியின் இலக்கியங்களைக் குறித்த விவாதமானது அவரது காலகட்டத்தைப் பற்றி இன்றைய தலை முறையினருக்கு நினைவூட்ட உதவுகிறது என்றார் வி.எஸ்.அச்சுதானந்தன்.

-“தேசாபிமானி”யிலிருந்து

தமிழில்: தி.வ.

Pin It