உலகம் முழுவதும் உலகமயமான பொருளாதாரம் அல்லது புதிய பொருளாதாரம் சமுதாயத்தில் பல்வேறு வியத்தகு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. அது நாம் விரும்பியதாகவும் இருக்கலாம், நாம் விரும்பாததாகவும், எதிர்பார்த்ததாகவும், பெரும்பான்மை மக்களை சீரழிக்கக்கூடியதாகவும் இருக்கலாம்.அதே அளவிற்கு மாற்றங்களைக் கொண்டுவரக்கூடிய ஆற்றலும் சக்தியும் படைத்த ஒரு கருவிதான் அதிகாரப்பரவல் என்பது.

உலகமயமான பொருளாதாரமும், அதிகாரப்பரவலும் ஒரே நேரத்தில்தான் உலகத்தில் உருவாக்கப்பட்டன. ஆனால் உலகமயமான பொருளாதாரத்தையும் அதன் ஆற்றலையும், சக்தியையும் புரிந்து கொண்ட ஒரு குறிப்பிட்ட வர்க்கம் அதனைப் பயன்படுத்தி எல்லையில்லா அளவிற்கு செல்வத்தைக் குவித்து முதல்தர உலகக் குடிமகன்களாக மாறி, உலக மக்களை எல்லையில்லாத் துயரத்திற்கு ஆளாக்கிவிட்டனர். ஆனால் இந்த அதிகாரப்பரவல் என்பதும் சமூகமாற்றத்தைக் கொண்டுவரக்கூடிய எல்லையில்லா ஆற்றல் பெற்றதாகும். மக்களை அதிகாரப்படுத்தவும் குறிப்பாக நலிவடைந்த பிரிவினர், தாழ்த்தப்பட்ட பிரிவினர், பிற்படுத்தப்பட்ட பிரிவினர், ஒதுக்கப்பட்ட பிரிவினர், ஒடுக்கப்பட்ட பிரிவினர் என்று எல்லாத் தரப்பு மக்களையும் ஆளுமையிலும், வளர்ச்சியிலும், மேம்பாட்டிலும் பங்கேற்க வைத்து சமூகத்தில் எல்லாத்தரப்பு மக்களுக்கும் மேம்பாடு கொண்டு வருவதற்கும் சமூக மாற்றத்தைக் கொண்டு வருவதற்கும், சமூக நீதி வழங்குவதற்கும் வழிவகை செய்யும் கருவியாக இந்தப் புதிய உள்ளாட்சி அமைப்புகளை உருவாக்குவதுதான் இந்த அதிகாரப்பரவலின் அடிப்படையான நோக்கம்.

ஆனால் இந்த உலகமயமான பொருளாதாரத்தை பயன்படுத்திய அளவுக்கு இந்த அதிகாரப் பரவலை பயன்படுத்தவில்லை அல்லது பயன்படுத்த முடியவில்லை.

இதில் மிக முக்கியமாக இந்த அதிகாரப்பரவலால் உருவாக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளை தொழில்மயமான நாட்டில் உள்ள உள்ளாட்சிகளோடு ஒப்பிடக்கூடாது. அது முற்றிலுமாக நகர்மயமாக்கப்பட்ட வசதிகளுக்கான உள்ளாட்சிகளாக உருவாக்கப்பட்டு தொழில்மயமாவதற்கு உதவிட உருவாக்கப்பட்டு செயல்படும் அமைப்புகள். அது முற்றிலுமாக இந்தப் புதிய அதிகாரப்பரவலின் அடிப்படையான நோக்கங்களின் கட்டமைப்புக்குள் கொண்டுவர தேவையற்ற அமைப்புகள். எனவே இந்த அதிகாரப்பரவல் என்பது விவசாயம் சார்ந்து மக்கள் அதிக எண்ணிக்கையில் கிராமப்புறங்களில் வாழ்ந்து சமூகக் சிக்கல்களுக்கும் சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அதிக அளவில் சந்தித்து வரும் சமூகங்களுக்கும் வளர்ந்து வரும் நாடுகளுக்கும் மட்டும்தான் பொருந்தும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவேதான் ஏறத்தாழ 80 நாடுகளில் இந்தப் புதிய அதிகாரப் பரவலை ஓர் மக்கள் இயக்கம் போல் எடுத்துச் செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்த அதிகாரப்பரவலை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லத்தான் இந்த உள்ளாட்சி என்ற கருவியை பயன்படுத்த முனைந்தனர். எப்படி உலகமயமான பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்த உலக வர்த்தக அமைப்பு ஒன்றை உருவாக்கி, அதற்கு வரையறைகளை உருவாக்கினார்களோ, அதேபோல் இந்த அதிகாரப் பரவலை எடுத்துச் செல்ல இந்த உள்ளாட்சி அமைப்புகளை அர சியல் சட்டம் மூலமாகவும், சாதாரண நாடாளுமன்றச் சட்டங்கள் மூலமாகவும் மாநிலச் சட்டங்கள் மூல மாகவும், அமைச்சரவை முடிவுகள் மூலமாகவும் புதிய உள்ளாட்சி அமைப்புகளை உரு வாக்கி நடைமுறைப்படுத்த முயன்றனர். இந்த 80 நாடுகளில் உலகமயமான பொருளாதாரத்தை ஒரு குறிப்பிட்ட வர்க்கம் அதன் ஆற்றலை புரிந்து கொண்டு தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி உலக மக்களை, அரசுகளை ஏமாற்றி, எல்லைமீறிய லாபத்தைக் குவித்துக் கொண்டு அரசாங்கங்களை தங்கள் வசப்படுத்திக் கொண்டு இன்று உலகத்தில் கோலோச்சுகின்றது. ஆனால் இந்த அதிகாரப்பரவலினால் பயனடையும் கோடான கோடி நலிவடைந்த மக்கள், அதைப்புரிந்து கொண்டு அதனை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி தங்களை அதிகாரப்படுத்திக் கொண்டு ஆளுகையிலும் மேம்பாட்டுச் செயல்பாடுகளிலும் பங்கேற்று தங்கள் வாழ்க்கையை மாற்றியமைத்துக் கொள்ள வில்லை.

மக்கள் மேல் நம்பிக்கையும், பற்றும் வைத்திருக்கக் கூடிய ஒரு சில அரசாங்கங்கள் இந்த உள்ளாட்சியையும் இந்த உலகமயமான பொருளாதாரத்தையும் சாதாரண மக்களுக்கு பயன்படச் செய்து புதிய வரலாறு படைத்து வருகின்றன. அதற்கு தலை சிறந்த எடுத்துக்காட்டு சீனத்து பொருளாதாரம் மற்றும் அதன் உள்ளாட்சி, இந்தியா ஒருவேளை சீனத்து அணுகுமுறையைப் பின்பற்றி இருந்தால் ஏழைகளுக்கும், இந்த மக்களாட்சிக்கும் இவ்வளவு பெரிய அவமரியாதை நேர்ந்து இருக்காது. உலகமயமான புதிய பொருளாதாரக் கொள்கையை சீனாவும் பயன்படுத்தி அமெரிக்காவை கதிகலங்க வைத்துள்ளது. மேற்கத்திய நாடுகளை தங்களின் பொருள்கள் மூலம் நிரப்பியுள்ளது. அதேபோல் உள்ளாட்சியை வலுப்படுத்தி தரம் வாய்ந்த சேவைகளை தங்கள் நாட்டு எல்லாத்தரப்பு மக்களுக்கும் வழங்கி வருகின்றது.

இவ்வளவு ஆற்றல் பெற்ற இந்த புதிய உள்ளாட்சியை ஏன் ஏழைகள் பயன்படுத்தவில்லை. என்று யோசித்துப் பார்க்க வேண்டும். ஏழைகள் பயன்படுத்தவில்லை என்பதைவிட இந்த நாட்டில் இதுவரை அதிகாரத்தைப் பயன்படுத்தி கொழித்து வந்த ஒரு வர்க்கம் இந்த அதிகாரப் பரவலால் தங்களுக்கு ஏற்படும் இழப்பைக் கண்டு மிரண்டுபோய் அதிகாரப் பரவலுக்கு எதிர்ப்புச் சக்தியை மேல்நிலை அரசாங்கங்களின் மூலம் உருவாக்கி அதன் மூலம் ஏழைகள் பயன்படுத்த முடியாமலும், தொடர்ந்து தங்களிடமே வேறு வடிவத்தில் அதிகாரம் இருக்குமாறும் புதிய உத்திகளை உருவாக்கி செயல்பட்டுக் கொண்டிருப்பதால்தான் ஏழைகள் இந்த உள்ளாட்சியை பயன்படுத்த முடியவில்லை. கடந்த பதினைந்து ஆண்டுகாலமாக தொடர்ந்து உள்ளாட்சிகள் செயல்பட்டு வந்தாலும், அதன் அடிப்படைகள் என்னென்ன என்பதைப் பற்றி ஒரு விழிப்புணர்வு நம் ஏழைமக்களிடம் உருவாக்கப்பட வில்லை என்பதுதான் நாம் கண்ட நிதர்சனமான உண்மை. இன்றைய உள்ளாட்சி ஒரு சில மாநிலங்களைத் தவிர தள்ளாடித்தான் நடைபெற்றுக் கொண்டுள்ளது. ஏழைகளும், பெண்களும், தலித்துக்களும், உள்ளாட்சியில் போட்டியிட்டு தேர்தலில் வென்றாலும் அவர்களின் செயல்பாடுகளுக்கு உள்ள தடைகள் என்பது பெரியது. இந்தக் தடைகள் உடைக்கப் படவில்லையென்றால் புதிய உள்ளாட்சி என்பது வெற்றுக் காகிதத்தில்தான் இருக்கும். அது உலகத்தை ஏமாற்ற உதவிடலாமே தவிர ஏழைகளுக்குப் பயன்படாது.

எப்போது அடிப்படை ஆளுகை அலகாக உள்ள பஞ்சாயத்துக்கு கிராம மக்களுக்கான மேம்பாட்டுக்காகச் செலவிடும் தொகை அனைத்தும் வருகிறதோ, அன்றுதான் இந்த ஏழைகள் இந்த உள்ளாட்சியைப் பிடிப்பார்கள். அதேபோல் ஒவ்வொரு உள்ளாட்சியிலும், தலித் மேம்பாடு, பெண்கள் மேம்பாடு உள்ளடக்கிய வளர்ச்சித் திட்டம் ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை தயாரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறதோ. அன்றுதான் இந்த உள்ளாட்சியை ஏழைகள் பயன்படுத்துவார்கள் இன்று நம்மிடம் உள்ள உள்ளாட்சி ஒரு காகிதப்புலி என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். உண்மையில் அதற்கு ஆற்றல் உண்டுபண்ண வேண்டும் என்றால் அதற்குத் தேவை மிகப்பெரிய மக்கள் இயக்கம். இந்த புதிய உள்ளாட்சி வலுப்பெற்றால் உலகளாவிய பொருளாதாரத்தால் வரக்கூடிய அத்தனை தீங்குகளையும் நாம் முறியடித்து விடலாம்.

தமிழகத்தைப் பொருத்தவரையில் இன்றுவரை உள்ளாட்சி அமைப்புகள் வடிவத்தில்தான் இருக்கிறதேயின்றி உயிரில் அது செயல்பட முடியவில்லை. ஏனென்றால் அது இன்றும் அதிகாரிகள் கையில்தான் மாநில அரசுகள் கொடுத்து உள்ளாட்சியை மாநில அரசாங்கத்தின் முகவராகவே வைத்துக் கொண்டுள்ளது. இந்த நிலை மாற மக்கள் இயக்கம் வந்தலான்றி இதற்கு மாற்றம் வர வாய்ப்பில்லை. மக்கள் இயக்கம் என்று சொல்லும் போது நாம் தெளிவாக இருக்க வேண்டும். அது உழைக்கும் மக்களின் இயக்கம், ஏழைகளின் இயக்கம், பெண்களின் இயக்கம், ஒடுக்கப்பட்டவர்களின் இயக்கம், ஒதுக்கப்பட்டவர்களின் இயக்கம். உள்ளாட்சிக்கான மக்கள் இயக்கம் செயல்பட ஆரம்பிக்கும் போது உள்ளாட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவிக்கு வருகின்ற தலைவர்களுக்கு தலைமைத்துவம், ஆளுகை மற்றும் நிர்வாக பயிற்சி அளித்தால் தங்களின் ஆற்றலைப் பெருக்கி மாற்றத்திற்கு வித்திட முனைவார்கள். இன்றைய சமூக மறுமலர்ச்சிக்கு வித்திடும் அமைப்பாக இந்த பஞ்சாயத்துக்கள் மாறிட மாற்றத்திற்கான தலைவர்கள் உருவாக்கும் பயிற்சி என்பது இன்றியமையாதது.

அப்படிப்பட்ட பயிற்சியை இன்று நம்மிடம் இருக்கும் அரசு பயிற்சி நிறுவனம் செய்யுமா என்றால் நிச்சயமாகச் சொல்லலாம் அவை செய்யாது என்று ஒரு தீவிரவாதிக்கு கொடுக்கும் பயிற்சியை சற்று சிந்தித்துப்பார்த்தால் புரியும், எப்படி அவர்களை மனதளவில் மாற்றம் செய்து செயல்பட வைத்துள்ளார்கள் என்று. எனவே தலைமைத்துவப் பயிற்சி என்பது மாற்றத்தைக் கொண்டு வரும் பயிற்சி மாற்றுத் தலைமைக்கான பயிற்சி என்பது கூட்டுத்தலைமையை உருவாக்கும் பயிற்சி இதுதான் மக்களைத் திரட்டி ஆளுமையிலும் முன்னேற்றத்திலும் பங்கேற்கச் செய்யும் பயிற்சி, இதைத்தான் நாம் இன்று செய்தாக வேண்டும். இதற்கு அதிக அளவில் இளைஞர்களும், பெண்களும் உள்ளாட்சி தேர்தலில் பங்கேற்க வேண்டும். எனவே மக்களைத் திரட்டுதலும், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு தரமான பயிற்சியளிப்பதும், ஒளிவு மறைவின்றி சமூக மாற்றத்திற்கும், சமூக நீதிக்கும், பொருளாதார மேம்பாட்டிற்கும் பணி செய்திட இளைஞர் இயக்கம் உருவாக வேண்டும். அந்த இயக்கத்தை உருவாக்க நம் இளைஞர்கள் முன் வருவார்களா என்பது தான் இன்றைய கேள்வி..

Pin It