வறுமைக் கோட்டின் அளவை நிர்ணயம் செய்து திட்டக் கமிஷன் தன்னுடைய வாக்குமூலத்தை உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்தது குறித்த செய்தி, ஊடகங்களில் வெளிவந்தவுடன் அது அநேகமாக அனைவராலும் கண்டிக்கப்பட்டது. ஒரு சிலர் ரூ. 32க்கான வரைவோலையை திட்டக்குழுவின் துணைத்தலைவருக்கு அனுப்பி அதனைக் கொண்டு வாழ்க்கையை நடத்திக் காட்டுமாறு சவால் விடுத்ததாகக் கூட செய்திகள் வெளியாகின. இதனைப் படித்தவுடன் அவரிடம் இது குறித்து கேள்வி கேட்டால் என்ன பதில் கிடைக்கும் என்று கற்பனை செய்தபோது, அதில் விரிந்த இந்திய சாமான்யனின் கேள்விகளும் அலுவாலியாவின் பதில்களும் இதோ...

இந்திய சாமான்யன்: உங்க கணக்குப்படி ஒருத்தர் ஒரு நாளைக்கு பருப்புக்குன்னு ரூ. 1.02 செலவு செய்யலாம். அப்படின்னா வெறும் 12.5 கிராம் துவரம்பருப்பு தான் வாங்க முடியும்?

மான்டெக் சிங் அலுவாலியா: நான் சமத்துவம் நம்ம நாட்டுல இருக்கணும்னு விரும்பறவன். ஒரு நாளைக்கு நானும் என்னைப் போன்றவர்களும் 12.5 கிராம் தங்கம் வாங்கறோம். அதே அளவு ஏதாவது ஒரு பொருள இந்த நாட்டு மக்களும் வாங்கணும்ல. தங்கமும் துவரம்பருப்பும் ஒரே கலர்லதான இருக்கு. என்ன, நான் நினைச்சது சரிதான.

சாமான்யன்: அது சரி (?), காய்கறிக்குன்னு ரூ.1.95 ஒதுக்கியிருக்கீங்க. கேன்சர் நோய் வராம பாத்துக்கனும்னா ஒரு மனுஷன் குறைஞ்சது ஒரு நாளைக்கு இரண்டு கிண்ணம் அளவாவது காய்கறிகள சாப்பிடணும்னு சொல்றாங்க. ஆனா இன்னைக்கு காயெல்லாம் கிலோ 35 ரூபாய்க்கு மேல, நீங்க சொல்ற காசுக்கு வெறும் 55.71 கிராம் காய்தான கிடைக்கும்.

அலுவாலியா: அடடா, ஏங்க உங்க உடம்பு இருந்தாதான கேன்சர் செல் அதுல உயிர் வாழ முடியும். நீங்களே துல்லியமா 55.71 கிராம் தான் கிடைக்கும்னு சொல்றீங்க என்ன 2 கத்திரிக்கா இல்லேன்னா 4 வெண்டக்கா கிடைக்குமா? அப்புறம் எப்படிங்க கான்சர் செல் உயிர் வாழும்? (மனதிற்குள் - இப்படி சாப்பிட்டா சீக்கிரமே செத்துடுவோங்கறது கூட தெரிஞ்சுக்காத முட்டாளுங்களுக்கு இதுவே ஜாஸ்தி).

சாமான்யன்: சரி, பாலுக்கு ரூ.2.33ம், சமையல் எண்ணெய்க்கு ரூ.1.55ம் சொல்லியிருக்கீங்க. பால் லிட்டர் 29 ரூபாய். வெறும் 80.34 மில்லி பால் வாங்கி குடிக்கலாம். இன்னைக்கு எண்ணெய் விலைய பாத்தா மலிவா இருக்கிற சமையல் எண்ணெய் கூட ஒரு டேபிள் ஸ்பூன்தான் கிடைக்கும். இதச் சாப்பிட்டா நம்ம உடம்புக்கு தேவையான கால்சியம், விட்டமின்- ஏ, கொழுப்பு, புரதம்கிற சத்துக்களெல்லாம் எப்படி கிடைக்கும்?அலுவாலியா: அளவுக்கு மிஞ்சினா அமிர்தமும் நஞ்சுன்னு உங்களுக்கு தெரியாதா? அதிகமான பால், தயிர், எண்ணெய் சாப்பிட்டா கொழுப்பு ஜாஸ்தியாயி ஹார்ட் அட்டாக் வருதுன்னு டாக்டர்ங்க சொல்றாங்க. அதனாலதான் உங்க எல்லோரோட உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க நாங்க இந்த நூதன வழிமுறைய கண்டுபிடிச்சிருக்கோம்.

சாமான்யன்: - இப்ப இதுக்கு பதில் சொல்லுங்க 44 பைசாக்கு என்ன பழத்தை வாங்க முடியும். வாழப்பழ தோலுகூட கிடைக்காது.

அலுவாலியா: செலவ குறைக்கணும்னு நாங்க அதாங்க நம்ம அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள்லாம் - சிக்கன நடவடிக்கைகள கடைப்பிடிக்கறபோது பழம் சாப்பிடணும்னு நீங்க நினைக்கிறது ஊதாரித்தனமா தெரியல.

சாமான்யன்: - சிக்கனம்னு சொல்லிட்டு ஏரோப்ளென்ல ‘கால்நடை வகுப்பிலயா’ பயணம் செய்யறீங்க என மனதிற்குள் முணுமுணுத்துக் கொள்கிறார். ஆமாம், ஆரோக்கியத்துக்குன்னு மாசத்துக்கு ரூ.39.70 ஓதுக்கியிருக்கீங்க. இன்னிக்கு சளி, காய்ச்சல்னு எங்க தெருவுல இருக்கற டாக்டர்கிட்ட போனாலே அவர் ஒரு ஊசியப்போட்டு மருந்து எழுதிக் கொடுத்திட்டு 50 ரூபா கேக்கறாரு. நீங்க சொல்ற 39.70 வச்சுகிட்டு டாக்டர்கிட்டயே போக முடியாது. அப்புறம் எங்க மருந்து மாத்திர எல்லாம் வாங்குறது?அலுவாலியா: அட, ஒரு தடவ சொன்னா உங்களுக்கு புரியாதா? நாங்க தாராள மனசோட சொல்லியிருக்கற ரூபாயக் கொண்டு உணவுக்கு செலவு செஞ்சீங்கன்னா உங்களுக்கு நோயே வராது. (தாழ்ந்த குரலில் சொல்கிறார் - பசியாலயும், பட்டினியாலும் செத்துப்போயிடறபோது வியாதி எப்படி வரும்கிறத கூட புரிஞ்சிக்கிற மாட்டீங்கறாங்களெனு அங்கலாய்த்துக் கொள்கிறார்.)சமான்யன்: - கல்விக்குன்னு ரூ.29.60 ஒதுக்கியிருக்கீங்க. இத வச்சு ஒரு மாசத்துக்கு 2 நோட்டுதான் வாங்க முடியும் அப்புறம் எங்க பை, பேனா- பென்சில், அதபோட்டு வைக்க டப்பா இதயெல்லாம் வாங்கறது?அலுவாலியா: குழந்தைகள மூட்ட சுமக்கறவங்களா ஆக்கக்கூடாதுன்னு அரசும் சூஊநுசுகூ யும் சொல்லிட்டு வர்றத மறந்துட்டீங்களா? அப்புறம் 2 நோட்டுக்கு எதுக்கு பை? நோட்டையே வாங்காம விட்டுட்டோம்னா பேனா, பென்சில், அத போட்டு வைக்க டப்பான்னு எதையும் வாங்க வேண்டாமே? எப்படி நாங்க புத்திசாலித்தனமா ஒரே கல்லுல குழந்தைங்க, அவங்க அம்மா அப்பாவோட பாரத்தை குறைச்சுட்டோம்.

சாமான்யன்: - செருப்புக்குன்னு ஒரு மாசத்துக்கு ஒம்பது ரூபா அறுபது காசு கொடுத்திருக்கீங்க .

அலுவாலியா: என்ன நீங்க, ஒரே குத்தமா சொல்லிகிட்டு இருக்கீங்க. ஒரு நாளக்கி ரூ.9.60ன்னா ஒரு வருஷத்துக்கு நூத்திப்பதினஞ்சு ரூபா இருபது காசு. டீவில நீங்க செருப்பு விளம்பரத்த பாக்கிறதே இல்லையா? ஒரு ஜோடி ஹவாய் செருப்போ அல்லது பிரான்ட் ஆபீஸ் செருப்பையோ வாங்கினீங்கன்னா அது தேயவே தேயாதாம். அப்புறம் நீங்க கண்டபடி அங்க இங்கன்னு சுத்தாம நீங்க உண்டு உங்க வீடுண்டுன்னு இருந்தா செருப்பே தேவைப்படாது. அப்ப வருஷத்துக்கு உங்களுக்கு இந்த பணம் மிச்சம்தான.

சாமான்யன்: - சரிய்யா செருப்பு வேண்டாம். ஆனா, போட்டுக்க துணி வேணும்ல.

அலுவாலியா: என்னய்யா நீங்க இன்னிக்கு நம்ம டீவி சேனல்கள்லாம் ஃபேஷன் ஷோ நிகழ்ச்சிகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தர்றாங்க. அதுக்குன்னு ஒரு தனி சேனலே வந்துருச்சே. சாமான்யன்: - அது எப்படிங்க 61 ரூபா 30 பைசாவ வச்சுகிட்டு ஃபேஷனா டிரஸ் போட முடியும்.

அலுவாலியா: - நம்ம நாட்டு மக்கள் எல்லாம் நாகரிகமா இருக்க வேண்டாமா? ஃபேஷன் ஷோல வர்றவங்க போடற டிரஸ்ஸெல்லாம் அங்கங்க கிழிஞ்சி தொங்கிகிட்டு இருக்குதுல்ல. அது மாதிரி வாங்கிப் போட இது போதாதா?இப்படியெல்லாம் நாட்டு மக்கள் சிக்கனமா இருக்க தேவையான கொள்கைகள நம்ம இந்திய அரசு செயல்படுத்தியதாலதான் நம்ம நாட்டுல போன வருஷம் 52 ஆ இருந்த டாலர் பில்லியனர்களோட எண்ணிக்கை இந்த வருஷம் 69 ஆக அதிகரிச்சிருக்கு. இவங்களோட ஒட்டுமொத்த சொத்தோட மதிப்பு, நம்ம நாட்டோட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 30 சதமாகும். இதுக்கெல்லாம் காரணமா இருக்கிற நம்ம பிரதமர், நிதியமைச்சர். தொழில்துறை அமைச்சர். வணிகத்துறை அமைச்சர், உள்துறை அமைச்சர் - ஏன் ஒட்டுமொத்த காபினட்டையுமே பாராட்டணும் பாராட்டுகிறபோது நம் ‘இளவரசரை’மறந்துறாதீங்க.வறுமைய ஒழிப்போம்னாங்க இந்திரா காந்தி. நாங்க இப்ப வறியவர்கள அகற்றிகிட்டு இருக்கோம். இதுதான் எங்க கொள்கைங்கறத இப்பவாவது புரிஞ்சுக்கோங்க.

விழி பிதுங்கி நின்றார் நமது இந்திய சாமான்யன்.

(கற்பனையை விரியச் செய்த பீப்பிள்ஸ் டெமாக்ரசியில் வெளியான ஜி.மம்தா அவர்களது கட்டுரைக்கு நன்றி)

Pin It