எப்போது வேண்டுமானாலும் தலையில் இடி(ந்து!) விழும் என்ற நிலையில் 700 மீட்டர் ஆழத்தில் 33 தொழிலாளர்கள் ஆக.5 ஆம் தேதியன்று சிக்கிக் கொண்டனர். சிலியின் சாண்டியாகோ நகரிலிருந்து மேற்கு நோக்கிச் சென்றால் 800 கி.மீ. தொலைவில் உள்ளது சான் ஜோஸ் சுரங்கம். தங்கம் மற்றும் தாமிரம் ஆகியவை இங்கு கிடைக்கின்றன. திடீரென்று வெளி யேறும் வழிகள் அடைக்கப்பட்டதால் இந்தத் தொழிலாளர்கள் அதற்குள் சிக்கினர்.

சுரங்கத்தொழில்தான் சிலி நாட்டிற்கு எக்கச்சக்கமாக வருமானத்தைத் தரக்கூடியது. கிட்டத்தட்ட நாட்டு வருமானத்தில் 40 விழுக்காடு இதிலிருந்து வருகிறது. சுரங்களிலிருந்து கனிமங்களை வெட்டி எடுக்கும் முறையில் ஏராளமான மாற்றங்கள் வேண்டும் என்று உலகளாவிய அளவில் கோரிக்கை ஏற்கெனவே முன் வைக்கப்பட்டுள்ளது. இதை மனதில் கொண்ட சிலி அரசு, தொழில் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பெரும் சேதம் ஏற்பட்டுவிடலாம் என்ற அச்சத்த்தில் உடனடியாகக் களத்தில் இறங்கியது.

அரசு இறங்குவதற்கு முன்பாக, சுரங்கத்தில் வழிகள் மூடப் பட்டுவிட்டன என்று கேள்விப்பட்டவுடன் பயந்து நடுங்கி உடை களை இயற்கை உபாதைகளால் நாறடித்துக் கொண்டது தனியார் நிர்வாகம். சம்பவ இடத்தைச் சுற்றி அனைத்துத்துறை வல்லுநர் களும் இருந்தனர். ஆனால் யாரும் எந்த வேலையையும் செய்யவில்லை. என்ன செய்வது என்று கூடிப் பேசவும் இல்லை. இன்றைய தினம் லாபம் எவ்வளவு வந்தது என்று நோட்டுகளை எண்ணிப் பார்ப்பதைத் தவிர வேறு வேலையே நிர்வாகங்களுக்குத் தெரிவதில்லை என்பது மீண்டும், மீண்டும் அம்பலமாகி வருகிறது.

தற்போதுள்ள ஜனாதிபதி செபாஸ்டியன் பினெராவுக்கு முன்பாக இருந்த அரசு ஓரளவிற்கு இடதுசாரிக் கொள்கைகளை அமல் படுத்தி இருந்தது. இதனால் சுரங்கத்துறையில் உள்ள பொதுத் துறை நிறுவனங்கள் வலுவாகியிருந்தன. அதில் கோடெல்கோ என்கிற தாமிர சுரங்க நிறுவனமும் ஒன்றாகும். இதன் தலைமைப் பொறுப்பில் ஆண்ட்ரூ சவுகாரெட் இருக்கிறார். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப்பணிகளுக்கு பொறுப்பேற்றுக் கொள் ளுங்கள் என்று அவரை ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.

அங்கு சென்றவுடன் இருந்த நிலைமையைப் பார்த்து அதிர்ச்சி யடைந்த அவர், இருந்த அனைவரையும் மூட்டை முடிச்சுகளோடு கிளம்புங்கள் என்று கூறிவிட்டார். அடுத்த அவர் செய்த வேலை என்னவென்றால், உள்ளே சிக்கியுள்ள சுரங்கத் தொழிலாளர்கள் எங்கேயிருக்கிறார்கள் என்பதைக் கண்டறிவதுதான். அதற்கான வல்லுநர்களை அழைத்தார். இப்படி ஒவ்வொரு கட்டமாக நிதான மாக அவர் முன்னேறினார். அவரோடு இணைந்து பணியாற்றிய குழுவினரில் பொதுத்துறை ஊழியர்கள் அதிகம்.

இணைந்த உழைக்கும் கரங்கள்

17 நாட்களுக்குப்பிறகுதான் உள்ளே சிக்கியிருந்த தொழி லாளர்களோடு முதன்முறையாக தொடர்பு ஏற்பட்டது. அப்போது தான் அரசு, மீட்புப் பணியாளர்கள், உறவினர்கள், சிலி மக்கள், ஏன்... உலக சமூகமே நிம்மதிப் பெருமூச்சு விட முடிந்தது. அடுத்த கணத்திலிருந்து அவர்கள் எப்படி வெளியே கொண்டு வருவது என்பது பற்றிய ஆலோசனைகள் துவங்கின. இருப்பதிலேயே சிறந்த கருவிகளைக் கொண்டு பணிகள் துரித வேகத்தில் நடைபெற்றன. சீனாவில் தயாரிக்கப்பட்ட பெரிய கிரேன் வந்திறங்கியது. ஒரே சமயத்தில் 400 டன் எடையை அனாயசமாகத் தூக்கி விடக்கூடியதாகும்.

தொழிலாளர்களுக்கே உரிய இயற்கையான தைரியத்தோடு அவர்கள் 17 நாட்களையும் அவர்கள் கழித்திருக்கிறார்கள். ஒரே ஒரு அறையில்தான் மீட்கப்படும்வரை இருந்தாக வேண்டும் என்றவுட னேயே நமது திட்ட ஆணையம் மாதிரியெல்லாம் குளறுபடி பண்ணாமல், மகத்தான ஒருங்கிணைப்பை தங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். 48 மணி நேரங்களுக்குத் தேவையான உணவு அவர்கள் வசம் இருந்திருக்கிறது. குறைந்தபட்சத் தேவையை உட்கொண்டு எவ்வளவு நாட்கள் தாக்குப்பிடிக்க வேண்டுமோ அவ்வளவு நாட்கள் இருந்து கொள்ள வேண் டும் என்பது அவர்களது முதல் முடிவாக இருந்தது.

ஒரு அமைச்சரவையே அவர்கள் உருவாக்கிக் கொண்டனர். ஒரு தொழிலாளி உடல்நலன், ஒருவர் உணவுக்கு என்று துறைகள் உருவாகின. பிரார்த்தனை நடத்தும் துறையை ஒருவர் எடுத்துக் கொண்டார். இக்கட்டான நிலையில் கரங்கள் ஒன்றிணைந்தன. கிட்டத்தட்ட ஒரு சமூக நலன் சார்ந்த ஒரு அரசாங்கத்தையே இந்த உழைக்கும் வர்க்கம் உருவாக்கி நம்முன்னால் நிறுத்திவிட்டது. 17வது நாளன்று குடைந்து கொண்டே சென்ற இயந்திரம் திரும்பி வரும்போது ஒரு காகிதம் அதில் இணைக்கப்பட்டிருந்தது. நாங்கள் அனைவரும் நன்றாக இருக்கிறோம் என்று எழுதி அனுப்பினார் கள் தொழிலாளர்கள். ஒரு நிமிடம் ஊசி விழுந்தால் கூட சத்தம் கேட்காது என்பார்களே அந்த அளவுக்கு அமைதி. அடுத்த கணம் "ஓ"...வென்று மகிழ்ச்சிக் குரல்கள்.

இதற்குப்பிறகுதான் அவர்களுக்குத் தேவையானவற்றை அனுப்பத் துவங்கினார்கள். அந்த அளவுக்கு தொழிலாள தோழர் கள் திட்டமிட்டிருந்தனர். 17 நாட்கள் கழித்துதான் குழாய் வழியாக அவர்களுக்குத் தேவையான விஷயங்களை அனுப்ப முடிந்தது. அவர்களுடைய உடல்நிலை பற்றி மருத்துவர் ஒருவர் பேசி அறிந்து கொண்டார். காத்திருங்கள், விரைவில் வெளியே வந்து விடலாம் என்று ஆறுதலான வார்த்தைகளை மீட்புக்குழு கூறினா லும், எப்போது என்று சொல்ல முடியவில்லை.

விபத்துக்கு முன்னதாக சுரங்கத்திற்குள் இருந்த தொழிலாளர் கள் இருபிரிவாக இருந்தனர். நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு பிரிவாகவும், ஒப்பந்தக்காரர்களால் வேலைக்கு அமர்த்தப்பட்டவர் கள் மற்றொரு பிரிவாகவும் இருந்தனர். துவக்கத்தில் ஒரு தயக்கம் ஏற்பட்டாலும் தாமதப்படுத்தாமல் அனைத்துத் தொழிலாளர்களும் ஒன்றாக இயங்குவது என்று முடிவெடுத்தனர்.

அரசின் மற்ற முயற்சிகள்

உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்கள் ஒருபுறம், மறுபுறத்தில் இடிபாடுகளை மேலும் ஏற்படுத்திவிடாமல் குடைந்து அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற முயற்சியில் உள்ளவர்கள் மறுபுறம். இடையில் தொழிலாளர்களின் உறவினர்கள். ஆனால் அரசு சில அசாதாரணமான நடவடிக்கைகளைச் செய்தது. அனைத்து குடும்பங்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டன. அவர்கள் அனைவருக்கும் தற்காலிக தங்கும் வசதிகள் தரப்பட்டன. மிகவும் கவுரமாக அவர்கள் நடத்தப்பட்டார்கள். குழந்தைகளுக்கு பள்ளிப் பாடங்களைக் கற்றுத்தரும் வசதியையே செய்து தந்துவிட்டனர்.

மீட்பு காண்டம்

பாறைகளைக் குடைந்து ஒரு பெரிய குழாயை உள்ளே செலுத்தி அதன் வழியாக தொழிலாளர்களைக் கொண்டு வருவது என்று முடிவெடுத்தார்கள். பல நாட்கள் குறிக்கப்பட்டு, வெவ்வேறு காரணங்களுக்காக தள்ளிப்போடப்பட்டது. இறுதியாக, 69வது நாளில் முதல் தொழிலாளி வெளியே வந்தார். பின் ஒவ்வொரு வராக 33 பேரும் பத்திரமாக மீட்டெடுக்கப்பட்டனர். இவர்களின் 32 பேர் சிலி நாட்டையும், ஒருவர் பொலிவியாவையும் சேர்ந்த வராவார். வெளியே வந்தவுடன் அவர்களை வரவேற்க சிலி ஜனாதி பதி செபாஸ்டின் பெனிரா காத்திருந்தார். சிலி தேசமே இந்த மீட்பின் வெற்றியைக் கொண்டாடியது.

சந்தில் சிந்து பாடினார்கள்

அவ்வளவு நாட்கள் வாய் பொத்தி மவுனமாக இருந்த வால்ஸ்ட்ரீட் ஜர்னல், இது முதலாளித்துவத்தின் வெற்றி என்றது. பாதுகாப்பு ஏற்பாடுகள் எதையுமே செய்யாமல், தொழிலாளர் களின் உயிர்களை பலி கொடுக்கத் துணிந்ததே தனியார் நிர்வாகத்தின் லாப வெறிதான். சிக்கல் என்றவுடன் மீட்புப்பணியில் உறுதியாக இறங்கி நின்றது சிலி நாட்டின் பொதுத்துறை ஊழியர்கள். முதலாளித்துவத்தின் தோல்வி என்று சொல்லக்கூடிய ஒரு சம்பவத்திற்கு உரிமை கொண்டாட வால்ஸ்டிரீட் ஆழம் பார்க்கிறது. இவ்வளவு நாட்கள் நடைபெற்ற மீட்புப்பணிகளில் சான் ஜோஸ் கனிம நிறுவனம் என்ன செய்தது என்று யாருக்குமே தெரியாது. அந்த அளவில்தான் அதன் செயல்பாடுகள் இருந்தன. மீட்புபணிகளில் மட்டுமல்ல, எஞ்சியிருக்கும் தொழிலாளர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பது பற்றியும் கவலைப்படவில்லை.

பிரச்சனையின் மறுபக்கம்

சிக்கலான விபத்து, மீட்புப்பணி என்று உலகத்தின் கவனமே இதை நோக்கி இருந்தநிலையில், அங்கு பணிபுரிந்து கொண் டிருந்த மற்ற தொழிலாளர்களின் நிலை மோசமானது. அவர் களுக்கு வேலையில்லாமல் போனது. நிறுவனம் அமர்த்திய 265 தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் அமர்த்திய 200 பேர் ஆகியோர் எப்போது மீண்டும் வேலைக்குச் செல்வோம் என்று வழிமேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருந்தார்கள். கையில் இருந்த சேமிப்புகள் கரைந்தன. கைக்கும், வாய்க்கும் என்று வாழ்ந்தாலும் தொழிலாளர்களின் நிலைமை நெருக்கடியில்தான் என்கிறார் சுரங்கத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவரான ஜேவியர் காஸ்டில்லோ.

வங்கிக்கு கடன் கேட்கச் சென்ற சில தொழிலாளர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. உங்கள் சுரங்கத்தைதான் மூடி விட்டார் களே... உங்களால் எப்படி கடனைத் திருப்பித்தர முடியும் என்று வங்கி நிர்வாகம் கேட்டது. கையைப் பிசைந்து கொண்டிருக் கிறார்கள் தொழிலாளர்கள். மீட்கப்பட்டவர்களுக்கு போகும் இடமெல்லாம் வரவேற்பு கிடைக்கிறது. ஜனாதிபதி மாளிகையில் வைத்து 33 பேருக்கும் விருது வழங்கியுள்ளார்கள். இந்த "தேனிலவு" முடிந்தபிறகு இவர்களின் உண்மையான பிரச்சனை யான `வேலை' என்பது முன்னுக்கு வரலாம் என்ற எதிர்பார்ப்பு உள் ளது. இனிமேல்தான் பிரச்சனையே துவங்குகிறது. அந்த மீட்புப் பணியும் இதே சிரத்தையோடு நடக்கட்டும்.

Pin It