இராமநாதபுரத்து சேதுபதிகள்

சுண்டல் விற்றார்கள்

மெரீனா பீச்சில்

சுற்றுலாப் பயணிகளோடு

சுற்றிக்கொண்டு இருந்தார்கள்

பல்லவ மன்னர்கள்

மகாபலிபுரத்தில்

 

பாண்டிய மன்னர்களோ

பூ விற்றுக்கொண்டு இருந்தார்கள்

மதுரைப் பேருந்து நிலையத்தில்

பஞ்சாலைகளுக்கு படையெடுத்தார்கள்

திருப்பூரில் சேர மன்னர்கள்

தஞ்சை வரப்புகளில்

எலி பிடித்தார்கள் சோழ மன்னர்கள்!

 

மறுபக்கம்

குடும்பம் துறந்த

சித்தார்த்தன்

புத்தன் ஆனான்

நம்பி வந்த

யசோதரா

என்ன ஆனாள்?

 

 

அவதாரம்

வேலு நாச்சியாராய்

குதிரை மீது வந்தேன்

இராணி மங்கம்மாளாய்

வாளைச் சுழற்றினேன்

ஜான்சிராணியாய்

எதிரிகளைப் பந்தாடினேன்

குக்கர் சத்தம் கேட்டது

சமையலறைக்குள் ஓடினேன்.

 

மாற்று

கிராமத்து வீடுகளில்

ஹார்லிக்ஸ்

காம்ப்ளான் பாட்டில்கள்

ஒன்றில் உப்பும்

இன்னொன்றில் ஊறுகாயுமாக

 

மாற்றம்

ஊருக்குள் சென்ற

ஒற்றையடிப் பாதை

தார்ச்சாலையாக

மாறி இருந்தது

கரைக்கொடி படர்ந்த

கூரைவீடுகள்

ஆண்டெனாக்களை

சுமந்து நின்றன

கிளித்தட்டி விளையாடிய

பிள்ளைகள்

கிரிக்கெட் மட்டையோடு

திரிந்தார்கள்

பகலிலே நைட்டியணிந்து

தண்ணீர் பிடித்தனர்

இளம் பெண்கள்

இன்சாட் டூ பற்றியும்

இண்டர்நெட்டில் ரிசல்ட் பற்றியும்

பேசி மகிழ்ந்தார்கள்

டீக்கடைகளில்

தாழ்ந்த சாதி பிணத்தை

எங்கள் சாதியோடு

புதைப்பதா என்ற

சண்டை மட்டும்

நடந்துகொண்டே இருக்கிறது

எங்கள் ஊர் சுடுகாட்டில்.

 

தருணம்

எந்தக் கண்ணியிலிருந்து

அறுந்துகொள்வது

என்று தெரியாமலேயே

தொங்கிக் கொண்டிருக்கிறது

என் கழுத்துச் சங்கிலி

ரொம்ப நாளாகவே.

 

நிலைமை

ஆறு

குளம்

ஏரி

கண்மாய்

இவையாவும்

நீர் நிலைகள் என்றேன்

தண்ணீர் லாரி

சத்தம் கேட்டு

தெருவுக்கு ஓடினார்கள்

பிள்ளைகள்.

 

உழைக்கும் பெண்

கோப்புக்குள்

ஒவ்வொரு எழுத்தும்

குழந்தை

அழுவதாகவே தெரிகிறது.

 

நீதி

பாண்டி கோயிலுக்குச் சென்றால்

சரியாகி விடும் என்றார்கள்

சென்றாள்

முனியப்பன் கோவிலை

மூன்றுமுறை சுற்றிவா என்றார்கள்

சுற்றி வந்தாள்

காலையும் மாலையும்

காளிக்குத் தீபமிடு என்றார்கள்

தீபமிட்டாள்

கருப்பணசாமிக்கு

கிடாவெட்டு என்றார்கள்

வெட்டினாள்

அப்படியும்

அவளைப் பிடித்த

பேய் போகவே இல்லை

அப்புறம்தான் அவள்

நீதிமன்றம் சென்றாள்!

 

தாமிரபரணி

இரும்புத் தொப்பியணிந்த

உங்களில் எவருக்கேனும்

கல்லெறி வீச்சில்

காயம் பட்டதுண்டா?

தடியடி பிரயோகத்தில்

உங்களில் எவருக்கேனும்

முதுகெலும்பு

முறிந்ததுண்டா?

அடிவயிற்று உதையில்

உங்களில் எவருக்கேனும்

சிறுநீரோடு ரத்தம்

போனதுண்டா

சிதறிக்கிடந்த

செருப்புகளிலும்

சிந்திக்கிடந்த

ரத்தத் துணிகளிலும்

உங்களில் எவருக்கேனும்

சொந்தமுண்டா?

கைக்குழந்தை கூட

கலகம் செய்தது என்றா

ஆற்றில் வீசிக்

கொன்றீர்கள்?

அட! சவமூதிகளா!

ஆயுதம் தரித்த

தாண்டவ மூர்த்திகளா!

ஆடியதெல்லாம் நீங்கள்

வன்முறையாளர்கள் என்ற

பட்டம் சுமப்பது நாங்கள்!

(இந்தக் கவிதைகளை எழுதியவர் சிபிஎம் கட்சியின் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் தோழர் பாலபாரதி அவர்கள்.)

Pin It