புதுமைப்பெண் என்ற வார்த்தைக்கு அர்த்தம் சேர்த்தோர் பலர். தமிழகத்தில் அதற்கு பொருத்தமானவர் என்று அடையாளம் காட்டக்கூடியவர்களில் முதன்மையானவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. இவர் 1886ஆம் வருடம் ஜூலை 30ஆம் தேதி பிறந்தார். தந்தை எஸ்.நாராயணசாமி ஐயங்கார், தாயர் இசை வேளாளர் சமூகத்தை சேர்ந்த செல்லம்மாள். பெண்களை கல்விக்கு அனுப்பக்கூடாது என்ற சம்பிரதாயத்தை முதலில் உடைத்தவர் இவரது தந்தையே ஆவார். பருவமெய்தியதும் பள்ளிக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டபோது, வீட்டிலேயே கல்வி கற்றார். தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்றார். மேல் படிப்பிற்காக, புதுக்கோட்டை மகாராஜா கல்லூரியில் சேர முற்பட்டபோது ‘ஆண் மாணவர்களின் ஒழுக்கம் பாதிக்கப்படும் என்று அனுமதி மறுக்கப்பட்டது.

கல்லூரி நிர்வாகியான புதுக்கோட்டை மகாராஜா பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்ற முற்போக்கான கருத்துடன் கல்லூரியில் சேர்த்துக் கொண்டு கல்வி உதவித்தொகையும் அளித்தார். பின்னர் 1912ல் சென்னை மருத்துவக்கல்லூரியில் மருத்துவர் படிப்பை முடித்தார். 1914ல் டாக்டர். சந்திர ரெட்டியை மணந்தார். அவரை திருமணம் செய்ய, முத்துலெட்சுமி இட்ட கட்டளை ''என்னை சரிசமமாக நடத்தவேண்டும்'' என்பதுதான். அரசாங்க பிரசவ மற்றும் கண் மருத்துவமனையின் முதல் பெண் மருத்துவர் இவரே.       பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் பெண் சட்ட மன்ற உறுப்பினர் (சென்னை மாகாணம்) மாநில சமூக நலத்துறையில் முதல்தலைவரும் இவரே.

       சென்னை மாகாண சட்டமன்ற கவுன்சிலின் முதல் பெண் உதவித்தலைவர்.சட்டமன்ற கவுன்சிலின் உதவித் தலைவராக இருந்தபோது இவர் செய்த பணிகளில் முத்தாய்ப்பானது தேவதாசி ஒழிப்புச்சட்டமே, காங்கிரசுக்குள்ளேயே தேவதாசி முறை தேவை என்று சத்தியமூர்த்தி (காங்கிரஷ் தலைவர்) குழு வாதிட்டது. சத்திய மூர்த்தி தேவதாசிமுறை இல்லையென்றால் சமூக ஒழுக்கம் கெட்டுவிடும் என்றார். ஆவேசமடைந்த முத்துலெட்சுமி அப்படி என்றால் 'உங்கள் வீட்டுப்பெண்களை தேவதாசி ஆக்கலாமே' என்றார். வாயடைத்துப்போனார் சத்தியமூர்த்தி.1929ல் தேவதாசி ஒழிப்புச்சட்டம் அமலுக்கு வந்தது. இவரது முயற்சியால், பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது உயர்த்தப்பட்ட சட்டம் 1930ல் நிறைவேறியது. 8ஆம் வகுப்புவரை பெண்களுக்கு இலவசக்கல்வி சட்டத்திற்கு வித்திட்டவரும் இவரே (1930ல்) அபலைப்பெண்களின் மறுவாழ்விற்கு அவ்வை இல்லத்தை நிறுவியவரும் இவரே, இன்று யார் யாருக்கோ பத்மபூஷன் விருது வழங்கப்படும் சூழ்நிலையில் உண்மையிலேயே தகுதியான இவருக்கு 1956ல் பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. விருதுக்கு பெருமை சேர்ப்பதாக அமைந்தது.

Pin It