டிசம்பர் 25ஆம் தேதி அதிகாலை 6 மணிக்கு பழையபட்டினம் கிராமத்திலிருந்து போன் வந்தது தோழரே நம்ம மாலை போட்டா அவுங்க சிலையை அடிச்சு உடைக்கிறதா சொல்றாங்க அதுமட்டுமில்லை ஊரை சுத்தி நிறைய போலிஸ் போட்டிருக்காங்க என ஒரு தோழர் பேசினார். உடனே நமது போராட்டத்திற்கான ஏற்பாடுகள் விரைவுபடுத்தப்பட்டது மட்டுமல்ல ரகசியமாகவும் ஏற்பாடு செய்யப்பட்டது. விருத்தாசலத்தைச் சுற்றி உளவுத்துறை உலாவி வருகிறது. அச்சமயத்தில் தோழர் தினேனஸ, தீக்கதிர் நிருபர் சிவபாலனோடு ஊருக்குள் அனுப்பி வைத்தோம். நிலைமையை பார்த்தார்கள். மிக மோசமாக உள்ளது என தோழர் தினேஸ் சொல்கிறார்.

டி.ஒய்.எப்.ஐ அலுவலகத்தை நோக்கி வாகனங்களில் வருபவர்கள் அமைதியாகவும் கொடி இல்லாமலும் வர வேண்டும் என சொல்லப்பட்டது. உளவுத்துறை போலிஸ் எங்களிடம் தொடர்பு கொண்டு எந்த வழியா போறீங்க, எவ்வளவு பேர், எங்கிருந்து போறீங்க என விசாரிக்க ஆரம்பித்தனர். அந்த நேரத்தல் ஊரிலிருந்து போன் வந்தது. தோழரே ஊருக்குள் வர்ற வழி அனைத்திலும் போலிஸ் நிக்குது நீங்க வர்றத்துக்கு வழியே இல்லை. மக்கள் உங்களை எதிர்பார்த்து நிக்கிறாங்க. எனச் சொன்னார் ஊருக்கு பின்புறம் வழி உள்ளதா எனக் கேட்டவுடன் அது முந்திரிக்காடு அதுல வந்தா நான்கு கிலோ மீட்டர் நடந்து வரனும்னு சொன்னாங்க. அந்த வழிய காட்டறதுக்கு மூனு பேர் வரனும்னு சொன்னோம். நமது வாகனம் விருத்தாசலத்திலிருந்து மெல்ல நகர்ந்து கொடி இல்லாமல் கோஷம் இல்லாமல் வழியை மாற்றிச் சென்றோம். முந்திரிக்காடுகள் நிறைந்த ஊர்கள் வழியாக வாகனம் சென்றது. வாகனத்தை பாதி வழியில் நிறுத்தி விட்டு நாம் சிலைக்கு மாலை அணிவிக்க வேண்டும். இதுதான் நமது நோக்கம். ஊரைச்சுற்றி போலிஸ் நிக்குது. நாம இப்பப்போற பாதையில் கூட போலிஸ் இருக்கலாம். அதையும் மீறித்தான் போக வேண்டும். என சொன்னவுடன் தோழர்கள் அனைவரும் தோழரே நம்ம உயிர் போனாலும் நாம் முடிவு செய்த இடத்தை அடைவதுதான் நம் லட்சியம். என தோழர்கள் சொன்னார்கள்.

எங்களுக்கு முன்பு ஊர் இளைஞர்கள் சிலம்பரசன். சத்யராஜ், ராமர் ஆகிய மூனு பேரும் சென்று கொண்டிருக்க அவர்களின் அசைவிற்கு நாங்கள் நகர்ந்து சென்றோம். நான்கு கிலோ மீட்டர் கடந்து ஊரை ஒட்டிய வாய்க்காலில் அமர்ந்து எப்படி சிலைக்கு மாலை போடுவதென ஆலோசித்தோம். ஏனென்றால் எல்லையில் எப்படி இராணுவ வீரர்கள் நடந்து ரோந்து பணியில் இருப்பார்களோ அப்படி போலிஸ்காரர்கள் துப்பாக்கியோடு ஊரை வலம் வந்தனர். எங்களுக்கு கிடைத்த நேரத்தை பயன்படுத்தி நாங்கள் தயாரானோம். வேகமாக ஓடி சிலை அருகில் செல்ல வேண்டுமென முடிவு செய்து சிலையை நோக்கி ஓடினோம். முன்னூறுக்கும் மேற்பட்ட போலிஸார்கள் எங்களை சூழ்ந்தனர். அவர்களை தள்ளிக் கொண்டு சிலை அருகில் சென்றோம். இரண்டு மணி நேரம் போலிஸ்கிட்ட வாக்குவாதம் நடத்தினோம்.

பின்பு எங்களை கைது செய்தனர். இந்தப் போராட்டம் ஏன் தெரியுமா. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், பழையபட்டினம் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை போட தடை என 2009 டிசம்பர் 7ஆம் தேதி செய்தித்தாள்களில் பார்த்தோம். அதற்கு பிறகு அக்கிராமத்திற்கு தோழர்கள் சிவஞானம், சோமு, லெனின், தினேஸ், உடன் நானும் சென்று மக்களிடத்தில் கேட்டறிந்தோம். பின்பு டிசம்பர் 20ஆம் தேதி ஊர் கூட்டத்தை நடத்த வேண்டுமென முடிவு செய்து அக்கூட்டத்தை நடத்தினோம். கூட்டத்தில் டிசம்பர் 25 ஆம் தேதி வெண்மணி தியாகிகள் தினத்தை தீண்டாமை ஒழிப்பு தினமாக கடைபிடிக்க வேண்டுமென்றும் தீண்டாமை உள்ள பகுதியில் நேரடி களம் காணும் போராட்டம் நடத்த வேண்டுமென இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ் நாடு மாநிலக் குழு தீர்மானித்த அடிப்படையில் பழையபட்டினத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க மறுக்கப்படுவதையும் ஒரு வகையான தீண்டாமை என முடிவு எடுத்து அச்சிலைக்கு டிசம்பர் 25ஆம் தேதி மாலை அணிவிக்கும் போராட்டம் என அறிவித்து.

அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தோம். டிசம்பர் 24ஆம் தேதி விருத்தாசலம் வட்டாட்சியர்அலுவலகத்திலிருந்து சமாதானக் கூட்டத்திற்கு வருமாறு அழைப்பு வந்தது. அக்கூட்டத்திற்கு டி.ஒய்.எப்.ஐ தோழர்களும் ஊர் இளைஞர்களும் கலந்து கொண்டனர். அப்போது அந்த இளைஞர்கள் சொன்னாங்க நாங்க இப்பத்தான் பாய்ங்க முன்னாடி சேர்ல உட்காருறோம். அதுக்கு ரொம்ப நன்றி சொன்னாங்க. அப்பத்தான் எவ்வளவு கொடுமையை  அனுபவிக்கிறாங்கன்னு தெரிஞ்சுது. முத்தரப்பு பேச்சுவார்த்தை துவங்கி இரண்டு மணி நேரம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை போடக்கூடாது என டி.எஸ்.பி. ராஜசேகரனும், ஒருசில இஸ்லாமியர்களும் சொன்னாங்க. அம்பேத்கர் சிலை பொது இடத்தில் அமைந்துள்ளது. அது மட்டுமல்ல ஊராட்சி மன்றக் கூட்டத்தில் முறையாக தீர்மானம் போட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை வைத்த இரண்டு மாதத்திற்கு பிறகுதான் சில இஸ்லாமியர்கள் அம்பதேகர் சிலைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இச்சிலையை  எதிர்ப்பதற்கு காரணம் கேட்டால் எங்களுக்கு உருவ வழிபாடு இல்லை என சொன்ன உடனே கிராம தலித் இளைஞர்கள் அந்த சிலை என்ன மசூதிக்கு எதிரிலா வெச்சிருக்கிறோம். எனச் சொன்னார்கள். அதற்கு உங்கள் தலைவர் திருமாவளவனிடம் லெட்டர் வாங்கிட்டோம். அவரே அந்த சிலையை மாற்றி தலித் பகுதியில் வைக்கிறேன்னு சொல்லிட்டாரு.

அப்புறம் என்ன நீங்க அடம் புடிக்கிறீங்கன்னு கேட்டார். ஏன் இந்த சிலையை எடுக்க சொல்றாங்க தெரியுமா என தோழர் அமிர்தலிங்கம் சொன்னாரு. ஒரு இஸ்லாமியர் உள்ளாட்சி தேர்தலில் நிக்கும் போது தலித் மக்கள் ஓட்டு போடல. அதனாலதான் அந்த சிலையை எதிர்க்கிறார்கள். அது மட்டுமில்ல பத்து வருடத்திற்கு முன்னாடி நாங்கள் வீட்டுமனைப் பட்டா கேட்டு போராட்டம் நடத்தினோம். அப்ப அரசாங்கம் உங்க ஊர்ல நிலம் இருந்தா சொல்லுங்க. அப்போ அந்த பாய்கிட்ட இருந்த நிலம் காலனியை ஒட்டியிருந்தது.

அத கேட்டாங்க கொடுக்க ஒப்புக் கொண்டு அவர் லெட்டர் பேடுல லெட்டர் எழுதிக் கொடுத்தாரு. அதற்கு பிறகு அரசாங்கம் பட்டா போட்டு கொடுத்தாங்க. ஓட்டுப் போடலன்னு தெரிஞ்சவுடனே அந்த பட்டாக் கொடுத்தது தப்புனு சொல்லி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழங்கு நடத்தி வாறாரு.அம்பேத்கர் சிலையை எடுக்க இதுதான் காரணம். ஆண்டாண்டு காலமாய் நமக்கு அடிமையாய் இருந்த காலனி மக்கள் நம்மளை எதிர்க்க வந்துட்டாங்களே! என கோபப்படுறாங்க. தலித் மக்களிடத்தில் நிலம் இல்ல. அதனால நமக்கு அடங்கி இருப்பாங்கன்னு நெனைச்சாங்க. இந்த கொடுமைக்கு முடிவு கட்டுவதற்கு நாம் தயாரானோம்.

மீண்டும் அம்பேத்கர் சிலைக்கு ஐனவரி 26ந்தேதி மீண்டும் வருவோம் என அறிவித்தோம். அந்த அறிவிப்பை தொடர்ந்து அச்சிலையை காலனி பகுதிக்கு கொண்டு வரவேண்டும் என மும்மரமாக பணியாற்றியது விருத்தாசலம் காவல்துறையும் மற்றும் வருவாய் துறையும் அதை கேள்விபட்ட இளைஞர்களும், ஊர் மக்களும் முடிவு எடுத்து அம்பேத்கர் சிலையை இங்கிருந்து மாற்றாமல் இருப்பதற்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் அதற்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு  தொடுக்கலாம் என முடிவு செய்து வழக்கறிஞர் திருமூர்த்தியை தொடர்பு கொண்டு பேசினோம் வழக்கு போடலாம் என்று சொன்னார். உடனடியாக தோழர் அமிர்தலிங்கத்தை சென்னைக்கு அனுப்பி அம்பேத்கர் சிலை இடமாற்றம் கூடாது என வழக்கு தொடுத்தோம். ஐனவரி 20ந் தேதி அம்பேத்கர் சிலையை இடமாற்றக் கூடாது என உயர்நீதிமன்றம்  தடை உத்தரவு பிறப்பித்தது.

அதை அறிந்த போலிஸ் மற்றும் வருவாய் துறையினர் ஜனவரி 20ஆம் தேதி இரவோடு இரவாக அம்பேத்கர் சிலையை தலித் மக்கள் பகுதியில் 50 ஆண்டுகளாக குளமாக இருந்த அந்த குளத்தை மண்ணு போட்டு மூடி அதில் கொண்டு வந்து சிலையை வைத்தனர். அதை தடுக்க சென்ற ஊர்மக்களையும், இளைஞர்களையும் அடித்து அனுப்பி, தலித் மக்களின் வீட்டுக்கு வீடு போலிஸ் நிறுத்தப்பட்டது.அச்சமயத்தில்தான் சிலையை மாற்றி வைத்தனர் கோபப்பட்ட ஊர் மக்களும், இளைஞர்களும் நீதிமன்றத்தில் ஐனவரி 22ந் தேதி அம்பேத்கர் சிலையை இரவோடு இரவாக மாற்றியது கண்டித்து வழக்கு போட்டோம்.

ஜனவரி 25ஆம் தேதி 247 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அம்பேத்கர் சிலையை இருந்த இடத்தில் வைக்க வேண்டுமென மனு போட்டனர். சென்னை உயர்நீதிமன்றம் செல்வதற்காக பழையபட்டினம் கிராம மக்கள் 80க்கும் மேற்பட்டோர் வாகனத்தில் இரவு 11.50க்கு சென்னை நோக்கி வாகனம் புறப்பட்டார் போலிசார் மக்கள் வந்த வாகனத்தை வழிமறித்து எல்லாம் சென்னைக்கு போகாதீங்கன்னு மிரட்டினார்கள் அதை கேட்ட நானும் தினேசும், வக்கீல் சந்திரசேகரன், சோமு ஆகியோர் சென்று போலிசிடம் பேசினோம். 28ஆம் தேதி 70க்கும் மேற்பட்ட மக்கள் சென்னை  உயர்நீதி மன்றத்தில் சாட்சியம் அளித்தனர்.

சென்னை உயர்நீதி மன்றம் ஒரு கமிஷன் உருவாக்கியது அந்த கமிஷன் 30ஆம் தேதி பழையபட்டினம் வந்தது வழக்கறிஞர் திருமூர்த்தியும் வந்திருந்தார். அக்கமிஷன் விசாரித்து கொடுத்த அறிக்கையை உயர்நீதி மன்றத்தில் சமர்ப்பித்தனர். 11ஆம் தேதி சென்னை உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி கோகுலே, சசிதரன் ஆகியோர் அம்பேத்கர் சிலையை அதே இடத்தில் பிப்ரவரி மாதம் இறுதிக்குள் வைக்க வேண்டும் இவ்விழாவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடத்த வேண்டுமென உத்தரவு பிறப்பித்தனர். அது மட்டுமல்ல அம்பேத்கரை சாதி தலைவராகப் பார்ப்பது வேதனைக்குரியது என உயர்நீதிமன்றம் கூறியது.

மனுதாரர் அமிர்தலிங்கத்திற்கு ரூ.20,000 நஷ்டஈடு அரசாங்கம் வழங்க வேண்டும். அப்பணத்தை டி.எஸ்.பி. தாசில்தார், இன்ஸ்பெக்டர் ஆகியோர் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்ய வேண்டுமென உத்தரவு பிறப்பித்தார்.  இவ்வழக்கை சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் திரு, புருஷோத்தமன், திரு, திருமூர்த்தி, திரு, தியாகு ஆகியோர் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் உணர்வு பூர்வமாக வழக்கை வாதாடி வெற்றிபெறச் செய்துள்ளனர். இப்பிரச்சனையில் ஊர் மக்கள உறுதியாக நின்று போராடினார்கள். அவர்களின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றியாக பார்க்க வேண்டும்.

-என்.எஸ்.அசோகன்

Pin It