வான் உயர்ந்த செல்வம் கொழிக்கும் மலைகள், வற்றாத ஜீவநதிகள், ஆயிரக்கணக்கான ஏக்கர் ஆப்பிள் தோட்டங்கள். பாதுகாப்பு அரணாக, இராணுவத்தையும், சுற்றுலாத் துறையில் அபரிமித வளர்ச்சியும் அடைந்துள்ள காஷ்மீர் ஒட்டு மொத்த இந்திய மக்களின் அனுதாபத்தை பெறக்கூடிய கண்ணீர் தேசமாக மாறியது எவ்வாறு? ஆண்ட, ஆளுகின்ற ஆட்சியாளர்களால் மாற்றப்பட்டது என்பதே, இந்த நூலின் ஒவ்வொரு வார்த்தையிலும் சொல்லப்படக்கூடிய செய்தியாக இருக்கிறது.

நாட்டையும், மக்களையும் துண்டாடக்ககூடிய கொடிய ஆயுதமாக இருக்கக்கூடிய இனவாத உணர்வை பத்திரிகைகள், எவ்வாறு சூசகமாக செயல்படுத்துகின்றன. குறிப்பாக காஷ்மீர் என்ற பகுதியை வைத்து, அந்தப் பகுதி குறித்து முக்கிய பிரமுகர்கள் சொல்லுகின்ற கருத்தை எப்படியெல்லாம் திரித்து தவறான, பிரிவினைக் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டுசேர்கின்றனர் என்பதில் இருந்து துவங்கும் இந்த புத்தகத்தின் வார்த்தைகள் வழிநெடுகிலும் ஏராளமான அதிர்ச்சிகளையும், கோபம் கொள்ளச் செய்யும் கருத்துக்களையும் பதிவு செய்கிறது.

மக்களை காக்க வேண்டிய காவல் படையினராலேயே மக்கள் பாதிக்கப்படுவதும், இளம்பெண்கள் மிருகத்தனமான வன்புணர்ச்சி கொடுமைக்கு ஆளாவதும் என பல்வேறு உண்மை சம்பவங்களையும், குறிப்பாக ஆஸியா ஜான், நிலோஃபர் ஜான் என்ற இரு பெண்கள் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டதும், அதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை, மெத்தனமாக செயல்பட்டதும், மக்கள் போராட்டத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டதும், சம்மந்தப்பட்டவர்களை பாதுகாக்க மருத்துவர்கள், மாநில காவல்துறை, மத்திய புலனாய்வுத்துறை, மத்திய மாநில அரசுகள் என ஒட்டுமொத்த அரசு எந்திரமே வரிந்துகட்டிக் கொண்டு நின்றது, என உண்மைச் சம்பவங்கள் பலவற்றை தைரியத்தோடு பேசுகிறது.

மேலும் இந்த பகுதியில் 2008ஆம் ஆண்டு கணக்கின்படி பத்து பேர் மட்டுமே வன்புணர்ச்சி கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர், என்று மாநில காவல்துறை அறிக்கை சொல்கிறது. ஆனால், 1994ஆம் ஆண்டு ஐ.நா. சபை கணக்கின்படி 882 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது. இப்படி பல அதிர்ச்சி தகவல்களையும் பதிவு செய்திருக்கிறது.

பல்வேறு கால இடைவெளிகளில் நடைபெற்றிருக்கக்கூடிய வரலாற்று சம்பவங்களையும், மன்னராட்சி காலத்தில் இருந்து இன்றுவரை காஷ்மீர் மக்களின் சுதந்திர உணர்வையும் இந்தியா, பாகிஸ்தான் என்று இரண்டு நாடுகள் உருவாக்கப்பட்ட பின்னர், இரண்டு நாடுகளும் காஷ்மீருக்காக சண்டையிட்டது. அமைதிக்காக இரண்டு நாடுகளும் சேர்ந்து செய்துகொண்ட சிம்லா ஒப்பந்தம், அந்த ஒப்பந்தங்களை இரண்டு நாடுகளுமே போட்டி போட்டிக்கொண்டு மீறியது. உலக அரசியலோடு காஷ்மீருக்கு இருக்கும் பங்கு என பல வரலாற்று நிகழ்வுகளையும் பதிவு செய்கிறது இந்நூல்.

மத உணர்வால் வார்த்தெடுக்கப்பட்ட பாஜக வின் ஆட்சி காலத்தில் காஷ்மீர் மீதான அரசின் நிலைபாடு, வாஜ்பாய் அவர்களின் மத உணர்வு, மத சார்பற்ற காங்கிரஸ் கட்சியின் ஆட்சி காலத்தில் காஷ்மீர் மீதான அதன் பார்வை, என பல வரலாற்று சம்பவங்களையும், கொடுமைகளையும் இந்த நூல் மிகத் தெளிவாக பதிவு செய்திருக்கின்றன. கடந்த கால வரலாற்றை அறிந்து கொள்ளவும், பத்திரிகைகளின் நிஜமுகத்தை புரிந்திடவும், இந்த நூல் பேருதவியாக இருக்கும்.

ஷோபியன், காஷ்மீரின் கண்ணீர் கதை

ஆசிரியர் – எஸ்.வி.ராஜதுரை,

வெளியீடு: விடியல் பதிப்பகம்,

88, இந்திரா கார்டன் 4வது வீதி,

உப்பிலிபாளையம் – அஞ்சல்,

கோவை – 15

விலை 80/-, பக். 157

Pin It