கொலையில் உதித்த தெய்வங்கள் - 4

தூத்துக்குடி மாவட்டம் கழுகு மலைக்குத் தெற்கே 13 கி. மீ தொலைவிலுள்ள கிராமம் செட்டிகுறிச்சி. இங்குள்ள மள்ளர் சமூகத்தினர் அழகம்மை,அழகப்பன் என்ற தெய்வங்களை வழிபடுகின்றனர். இத்தெய்வங்களின் வரலாறு வருமாறு.

அழகப்பன் தேவர் இனத்தைச் சார்ந்தவர். அழகம்மை மள்ளர் இனம். இருவரும் சாதி மீறி திருமணம் செய்து கொண்டனர். அழகப்பனும் அவரது உறவினர்கள் எட்டு பேரும் கழுகு மலைக்கு அருகிலுள்ள புளியங்குடி என்னும் ஊரிலிருந்து களவு செய்வதற்காக தென்கிழக்கு நோக்கி வந்தார்கள். அப்போது களவு நடந்த இடத்தில் நிகழ்ந்த எதிர்த்தாக்குதலில் ஒவ்வொருவராக இறந்தனர். அப்போது அழகப்பனுக்கும் காயம் ஏற்பட்டது. காயத்தோடு செட்டிகுறிச்சி வந்து இங்குள்ள தூண்பாறைக்கருகில் வசித்து வந்தான்.

அப்போது ஊர்க்காரர்கள் அவரை ஊருக்கு வெளியிலுள்ள ஒரு தோப்பில் குடியிருக்குமாறு கூறினர். இத்தோப்பு ரத்னமுத்து நாடார் என்பவருக்குச் சொந்தமானதாகும். இந்நிலையில் ஆழமான காயத்தின் காரணமாக அழகப்பன் தன்னிடம் உள்ள ஐந்து பணத்தை ரத்னமுத்து நாடாரிடம் கொடுத்து, தம் உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கச் சொன்னான். சில தினங்களில் அழகப்பன் இறந்து விட்டான்.

இந்நிலையில் அழகப்பனின் இறுதிச் சடங்கிற்கு வந்த உறவினர்கள் அழகம்மையைப் புறக்கணித்தனர். அழகம்மையின் உறவினர்களும் அவளைக் கண்டு கொள்ளவில்லை.

இதனால் அழகம்மை, அழகப்பனோடு உடன்கட்டையேற முடிவு செய்தாள். அழகப்பனை எரித்த சிதையில் பாய்ந்து உயிர் துறந்தாள்.

இருவரது மறைவையடுத்து மறவர்கள் இருவரையும் மறந்தனர். ஆனால் புளியங்குடி கூசாலப்பட்டியைச் சேர்ந்த மள்ளர்கள் ஆண்டுதோறும் இங்கு வந்து வணங்குகின்றனர். கயத்தாறு செல்லும் வழியில் கிழக்கு நோக்கி இக்கோயில் அமைந்துள்ளது.
Pin It