கொலையில் உதித்த தெய்வங்கள் - 5

 தூத்துக்குடி மாவட்டத்திற்குத் தெற்கிலுள்ள ஒரு நடுத்தர நகரம் சாத்தான்குளம். இவ்வூரின் பெயரில் அமைந்த வட்டத்தின் தலைநகராகவும் இவ்வூர் விளங்குகிறது. இவ்வூரின் மையச் சாலைக்கு மேற்கில் ‘குத்துக்கல் தெரு’ என்ற பெயரிலான தெருவொன்றுள்ளது.

தென் வடலாக அமைந்துள்ள இத்தெருவிலிருந்து கிழக்கிலும், மேற்கிலும் பிரியும் இரு சந்துகள் சிறு நாற்சந்தியொன்றை இத்தெருவிற்கு வழங்கியுள்ளன. இச்சந்தியில் தெருவின் மேற்கில் புதைக்கப்பட்ட கல் ஒன்று பார்வையில் படும்படியுள்ளது. இக் கல்தான் ‘குத்துக்கல் தெரு’ என்ற பெயரை இத்தெருவிற்கு வழங்கியுள்ளது. எல்லைக் கல் போன்று காட்சி தரும் இக்கல் கொடூரமான கொலையொன்றின் தடயமாக காலத்தைக் கடந்து நிற்கிறது. இதை அறிய ஒரு நூற்றாண்டுக்குப் பின் நோக்கிப் பயணிக்க வேண்டும்.

சாத்தான் குளத்தையும் அதைச் சுற்றியுள்ள பன்னம்பாறை, நடுவக்குறிச்சி, தட்டார் மடம், நெருங்குளம் ஆகிய கிராமங்களையும் சாத்தன் சாம்பான் என்பவன் குறுநில மன்னனைப் போல் ஆண்டு வந்தான். ஏராளமான நிலபுலங்கள் இவனுக்கு உரிமையாக இருந்தன. சாத்தாங்குளம் என்ற ஊர்ப்பெயருக்குக் காரணமான குளம் சாத்தன்சாம்பான் பெயரால் அமைந்தது என்ற கருத்தும் உள்ளது. இளைஞனான இவனுக்குத் திருமணமாகவில்லை. குதிரையொன்றில் அமர்ந்து தன் பொறுப்பிலுள்ள கிராமங்களைப் பார்வையிடச் செல்வது இவனது வழக்கம்.

சாத்தன் குளத்தில் வளமான நிலையில் எட்டு வெள்ளாளர் குடும்பங்கள் வாழ்ந்து வந்தன. இதில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் சாத்தன் சாம்பானிடம் கணக்கராக வேலைபார்த்து வந்தார். இவரின் அழகான மகள் ஒருத்தி மீது சாத்தன் சாம்பானுக்கு ஆசை வந்துவிட்டது. ஒரு நாள் தன் கணக்கரை அழைத்து ‘இன்று இரவு உம் வீட்டுக்கு வருகிறேன் உம் மகளைக் குளித்துவிட்டு நல்ல சேலையுடுத்தி இருக்கச் செய்யும்’ என்று கூறி விட்டான்.

சாத்தன் சாம்பானின் ஆணையை ஏற்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் வீட்டிற்கு வந்த கணக்கர் தம் உறவுக்காரர்களிடம் இது குறித்துக் கூறினார். அவர்கள் அனைவரும் ஒன்று கூடி கலந்தாலோசித்தனர். இறுதியில் ஒரு முடிவெடுத்தனர்.

கணக்கரின் வீட்டிற்கு, சாம்பான் வரும் பாதையில் உள்ள நாற்சந்தி போன்ற பகுதியில் ஆழமாகக் குழிதோண்டி, மூங்கிலை நார் போல் கிழித்துச் செய்யப்பட்ட பிரம்பம்பாய் ஒன்றால் அதை மூடி, அதன் மேல் சிறிதளவு மண்ணைப்போட்டு இயல்பான தோற்றம் இருக்கும்படிப் பார்த்துக் கொண்டனர். குழிக்குச் சற்றுத் தள்ளி வலுவான பாராங்கற்கள் சிலவற்றையும் போட்டுவிட்டு வழக்கம்போல் தம் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கொண்டனர்.

இரவு சாத்தன் சாம்பான் குதிரையில் வரும்போது குதிரையின் எடைதாங்காமல் பிரம்பம்பாய் குதிரையுடனும் சாத்தனுடனும் குழிக்குள் சாய்ந்தது. அவன் தடுமாறி விழுவதற்குள் வேளாளர் தாம் சேகரித்து வைத்திருந்த பாறாங்கற்களை அவன் மீது வீசி குற்றுயிருடன் இருந்த அவன் மீதும், குதிரையின் மீதும் மண்ணைப் போட்டுப் பரப்பி குழியைப் பழைய நிலைக்குக் கொண்டு வந்து விட்டனர்.

எதுவும் நடக்காததுபோல் மறுநாள் இயல்பாக தத்தம் வேலையைப் பார்க்கத் தொடங்கினர். பின்னர் அவர்கள் கனவில் தோன்றிய சாத்தன் சாம்பான் தனக்குக் கல்நடும்படி வேண்டினான். அவர்களும் அதன் படி கல் நட்டினர். அது தான் ‘குத்துக்கல்’ என்ற பெயரில் இன்று காணப்படும் கல். கொலையைச் செய்த வேளாளர்கள் சாத்தனின் ஆவி குறித்த பயத்தால் அவனைப் புதைத்த இடத்தில் நட்டிய கல்லுக்குப் பால் ஊற்றி அவ்வப்போது வழிபட்டனர். பின் இது நின்று விட்டது.

பின்னர் சாத்தனின் உறவினர்கள் அவர்களது குலதெய்வமான அமராவதி அம்மனுக்கு நடத்தும் கொடை விழாவின் போது இக்குத்துக் கல்லுக்குப் படையல் இட்டு வழிபட்டுச் செல்லத் தொடங்கினர்.

சாத்தன் சாம்பான் குறித்த இக்கதை வடிவைக் கூறியவர்கள் வேளாளர் சமுகத்தைச் சேர்ந்தவர்கள். நாட்டார் வழக்காறுகள் குறித்த கள ஆய்வில், குறிப்பாக நாட்டார் தெய்வங்கள் குறித்த கள ஆய்வில் அத்தெய்வம் குறித்த கதையுடனும் வழிபாட்டு நிகழ்வுகளுடனும் தொடர்புடைய சாதியினர் அனைவரிடமும் தரவுகள் சேகரிக்க வேண்டும். அப்போதுதான் முழுமையான உண்மை வெளிப்படும். எனவே சாத்தன் சாம்பானைக் கொன்ற வேளாளர் தரப்பில் கேட்ட இக்கதை வடிவத்துடன் நின்று விடாமல் அவனது சுயசாதியினரிடம் வழங்கும் கதை வடிவைச் சேகரித்தபோது பல புதிய உண்மைகள் வெளிப்பட்டன..

மேலும் உதிக்கும்...

Pin It