உலகம் முழுவதும் சுகாதாரம் என்பது மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறிவருகிறது. சுகாதாரம் மக்கள் வாழ்வின் அடிப்படை உரிமை என்று உலக அளவில் குரல்கள் வலுத்து வந்தாலும் இன்று வரை சோசலிச நாடுகளை தவிர மற்ற முதலாளித்துவ நாடுகளில் வாழும் பெரும் பகுதி மக்களுக்கு சுகாதாரம் என்பது எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது.

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பகுதி 4ல் அரசு தனது குடிமக்களின் ஊட்டச்சத்தின் அளவையும் வாழ்க்கை தரத்தையும் பொது சுகாதாரத்தையும் உயர்த்த வேண்டும் என்பதை தனது தலையாயக் கடமையாகக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் எழுதி வைக்கப்பட்டது முழுமையாக செயல்படுத்தப் படாமல் உள்ளது.

இதன் விளைவாக இந்தியாவில் உள்ள குடியிருப்புகளில் 72 சதமான வீடுகளுக்கு கழிவறை கிடையாது. 20 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடையாது. பிறக்கும் குழந்தைகள் 1 வயது எட்டுவதற்குள் லட்சத்தில் 58ம், 5 வயது எட்டுவதற்குள் லட்சத்தில் 85 குழந்தைகள் வீதம் ஆண்டுக்கு 6 லட்சம் குழந்தைகளும், கருவுற்று இருக்கும் தாய்மார்கள் பேறு காலத்தில் லட்சத்திற்கு 301 பேர் வீதம் ஆண்டுக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் தாய்மார்களும் சரியான ஊட்டச்சத்து இல்லாமலும், சரியான மருத்துவ வசதியும் சுகாதார வசதியும் இல்லாமலும் மரணிக்கும் துயரம் நிகழ்கிறது.

எய்ட்ஸ் நோயால் இறப்பவர்களைக் காட்டிலும் கொசுவால் இறப்பவர்களே இந்தியாவில் அதிகம். சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகள் ஆகியும் இத்தகைய அவல நிலை நாட்டில் நீடித்துக் கொண்டு இருப்பதற்கு என்ன காரணங்கள் என்கிற வினாக்களோடுகுழந்தை நல மருத்துவரும், தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு இயக்கத்தின் மாநிலத் தலைவருமான டாக்டர். ரெக்ஸ் சற்குணம் அவர்களிடம் ஒரு நேர்காணல்.

சந்திப்பு: வெங்கடேஷ், எம்.தாமு

தமிழகத்தில் பொது சுகாதாரம் எப்படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

உலகிலேயே அதிகளவில் தனியார்மயமாக்கப்பட்ட பொது சுகாதார அமைப்பை கொண்ட நாடு இந்தியா தான். இதற்குக் காரணம் ஆட்சியாளர்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வரும் தனியார் மயம் என்கிற நாசகரக் கொள்கை தான்.

பொது சுகாதாரம் என்றால் அது வெறும் மருத்துவம் சம்பந்தப்பட்டது மட்டும் கிடையாது. கழிப்பறை வசதிகள் கொண்ட அனைவருக்குமான தூய்மையான குடியிருப்புகள், தரமான கல்வி, வேலைவாய்ப்பு, தூய்மையான சுற்றுச்சூழல், பாதுகாக்கப்பட்ட குடிநீர் தண்ணீர் தேங்காத சாலைகள், அனைவருக்கும் தரமான அனைத்து நோய்களுக்குமான இலவச மருத்துவம் இவைகளை உள்ளடக்கியது தான் பொது சுகாதாரம்.

அனைத்து பகுதி மக்களுக்கும் முழுமையான சுகாதாரத்தை அளிக்க வேண்டும் என்றால் அரசு மருத்துவ மனைகளை அதிகரிக்கவும், மேம்படுத்திடவும் வேண்டும்.

தமிழகத்தில் 17 மருத்துவக் கல்லூரிகளும், 26 மாவட்ட தலைமை மருத்துவமனைகளும் உள்ளன. 1409 ஆரம்ப சுகாதார நிலையங்களும் 8682 துணை சுகாதார நிலையங்களும் உள்ளன. இவைகளில் மருத்துவர்களே இல்லாதவைகளும், நர்ஸ், வார்டுபாய், சுகாதார பணியாளர்களும் இல்லாதவைகளே பெருமளவு உள்ளன. 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் பலநூறு பேரூராட்சிகள், நகராட்சிகள் இவைகளில் வாழும் கிட்டத்தட்ட 7 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழகத்திற்கு மேற்கூறிய மருத்துவ வசதிகள் போதுமானதாக இல்லை என்பது ஒருபுறம் இருந்தாலும் தமிழக அரசோ இவைகளுக்காக ஒதுக்கப்படும் நிதியை வெட்டிச் சுருக்கி சுகாதாரத்தை அரசின் கடமையில் இருந்து கை கழுவுகிறது.

தமிழக அரசின் காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாட்டில் லாப நோக்கத்தோடு செயல்படுமா? சேவை நோக்கத்தோடு செயல்படுமா?

தனியார் மற்றும் கார்ப்பரேட் மருத்துவமனைகள் லாபத்தை மையமாக வைத்தே செயல்படும். அரசு மருத்துவமனைகள் சேவையை மையமாக வைத்து செயல்படும். குறிப்பாகக் கடந்த திமுக ஆட்சிகாலத்தில் சுகாதாரத்தை தனியார் வசம் ஒப்படைக்க எவ்வித தயக்கமும் காட்டியதில்லை. இந்த நோக்கத்தோடு தான் 2400 கோடி ரூபாய் மதிப்பிலான கலைஞர் காப்பீட்டு திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தால் பொதுமக்கள் பயன் பெற்றார்களோ இல்லையோ திட்டத்தை கொண்டு வந்தவர்களைச் சார்ந்தவர்களும் தனியார் மற்றும் கார்ப்பரேட் மருத்துவமனைகளும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனமும் தான் பெருமளவு பயன்பெற்றது. இந்த 2400 கோடியைக் கொண்டு அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த செலவு செய்து இருந்தால் அப்போலோ மருத்துவமனைக்கு நிகராக மாவட்டத்திற்கு ஒரு மருத்துவமனையை அமைத்திருக்கலாம். ஆனால் இதை கடந்த கால அரசு செய்யவில்லை. ஆகவே புதிய அரசு அறிவித்துள்ள காப்பீட்டுத் திட்டமும் கடந்த ஆட்சியின் பாதையைத்தான் பின்பற்றும் என்பதற்கு மாற்றுக் கருத்து கிடையாது. காப்பீட்டு திட்டம் என்பது மக்களை காக்கும் திட்டம் அல்ல. மாறாக தனியார் மற்றும் கார்ப்பரேட் மருத்துவமனைகளின் முதலாளிகளை காக்கும் திட்டம்.

அரசு மருத்துவமனைகளை அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும் வகையில் மேம்படுத்த நிதி இல்லை என்று அரசு கூறுவதில் உண்மை உள்ளதா?

அரசு கூறுவது முற்றிலும் பொய்யான ஏற்றுக்கொள்ள முடியாத வாதம் தமிழகத்தில் வாக்குகளை பெறுவதற்கும் வாக்காளர்களை கவர்வதற்கும் ஏராளமான இலவசங்களால் பலநூறு கோடி ரூபாய் விரயம் செய்யப்படுகிறது. அரசு நினைத்தால் மருத்துவத்தையும், மருத்துவமனைகளையும் மேம்படுத்த முடியும். காப்பீட்டுத் திட்டத்திற்கு ஒதுக்கப்படும் பல நூறுகோடி ரூபாய் மூலம் தனியார் மருத்துவமனைகள் லாபம் அடைவதற்கு பதிலாக நுளுஐ மற்றும் அரசு மருத்துவமனைகளில் மட்டும் தான் அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று அரசு உத்தரவு பிறப்பித்தால் லட்சக்கணக்கான நோயாளிகள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதின் மூலம் காப்பீட்டுத் திட்டத்தால் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் அரசு மருத்துவமனைக்கு வருவாய் கிடைக்கும் இந்த நிதியை வைத்து கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு நிகராக அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த முடியும். அதே நேரத்தில் அரசு மருத்துவமனையில் செய்ய முடியாத ஒரு சில சிகிச்சைகளை மட்டும் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் தனியார் மருத்துவமனைகளில் செய்திட அனுமதி வழங்கலாம்.

அரசு மருத்துவமனைகளில் கட்டண வார்டு உருவாக்கம் சரியானதா?

முற்றிலும் தவறானது. தாராளமயம், தனியார்மயம் என்கிற மக்கள் விரோத கொள்கையைத் தொடர்ந்து அரசு அமல்படுத்தி வருவதின் விளைவாகவே இது அரசு மருத்துவமனைகளில் கொள்கை அளவில் இரண்டு விதமான சிகிச்சை என்பதை ஏற்று கொள்ள முடியாது.

அரசு மருத்துவமனைக்கு வருகிற நோயாளிகள் அனைவரும் சமூகத்தில் ஏற்கனவே உழைப்பு ரீதியாக சுரண்டலுக்குள்ளாக்கப்பட்டவர்கள் ஆவர். அப்படி வருகிறவர்களிடம் உள்ள மிச்ச மீதியையும் சுரண்டுவது என்பது நியாயமற்ற செயலாகும். சொந்த வருவாயில் இருந்து மருத்துவத்திற்கு செலவிடும் நிலையில் மக்கள் தள்ளிவிடப்பட்டுள்ளதால் ஆண்டுக்கு கோடிக்கணக்கான மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே தள்ளப்படுகிறார்கள். ஒரு மனிதனுக்கு முழுமையான சுகாதாரத்தை பூர்த்தி செய்வது அரசின் கடமையாகும். ஆனால் தற்போது உள்ள அரசோ அக்கடமைகளில் இருந்து நழுவி பணம் இருந்தால் தான் நோயாளிகள் தன் உயிரை காப்பாற்றி கொள்ளலாம் என்கிற நிலைக்கு தள்ளிவிட்டுள்ளனர் என்பதற்கு உதாரணம் அரசு மருத்துமனைகளில் உருவாகியுள்ள கட்டண வார்டுகள்.

தமிழ்நாட்டில் பாம்புக்கடி மற்றும் நாய்க்கடி மருந்து இல்லாமல் ஏராளமான மக்கள் மடிந்து போகிறார்களே தடுக்க வழி கிடையாதா?

பாம்பு, நாய் கடித்தவுடன் மக்கள் இறப்பதற்கு இரண்டு காரணம் உள்ளன. முதலாவதாக போதுமான மருந்துகள் இல்லாமை. இரண்டாவது, பாதிக்கப்பட்டவருக்கு போக்குவரத்து வசதி, அருகாமையில் மருத்துவமனை இல்லாதது. இவைதான் உயிரிழப்புக்கு காரணங்கள் குறிப்பாக கிராமப்புறங்களில் தான் இத்தகைய உயிரிழப்புகள் அதிகமாக நடைபெறுகிறது. இவைகளை தடுக்க அரசு கிராமம் வாரியாக சுகாதார மையங்கள் ஏற்படுத்தி பாம்புக்கடி, நாய்க்கடி மருந்துகளை இருப்பில் வைத்துக் கொண்டால் இதன் மூலம் பெருமளவு உயிரிழப்புகளை தடுக்க முடியும். பாம்புக்கடி, நாய்க்கடி மருந்துகள் வாங்க போதிய நிதி சுகாதாரத் துறையிடம் இல்லை என்கிறார்கள் ஆட்சியாளர்கள். இப்படி கூறுவது சுத்த வடிகட்டிய பொய்யாகும். சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியை வெட்டி சுருக்கினால் எப்படி நிதி இருக்கும்?நூற்றாண்டுகளுக்கு மேலாக நோய்த் தடுப்பு மருந்துகளை தயாரித்து அளித்து வந்த சென்னை கிண்டி க்ஷஊழு-ஏடு குன்னூரில் உள்ள பாஸ்டர் நிறுவனம், இமாச்சல பிரதேசத்தில் உள்ள கௌசாலி போன்ற பொதுத்துறை நிறுவனங்களை அரசு மூடுவிழா நடத்த முயற்சித்த போது நாம் நடத்திய போராட்டத்தினால் கைவிடப்பட்டது. இத்தகைய நிறுவனங்களில் அரசு கூடுதல் நிதி ஒதுக்கி உற்பத்தியை துவக்கினால் பாம்புக் கடிக்கும், நாய்க் கடிக்கும் தேவையைவிட அதிகமான மருந்துகள் கிடைக்கும்.

தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாடு எப்படி உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் 68.6சதம் ஆரம்ப சுகாதார மையங்களில் ஒரு மருத்துவர் அல்லது, மருத்துவரே இல்லாத நிலையும் செவிலியர் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் இல்லாத நிலைதான் உள்ளது.

1188 ஆரம்ப சுகாதார மையங்களில் போதிய மின்சார வசதி, தண்ணீர் வசதி கிடையாது. இப்படி உள்ள சுகாதார நிலையங்களில் மக்களுக்கு தரமான சிகிச்சை கிடைக்கும் என்பதை எப்படி எதிர்பார்ப்பது.

தற்போதைய புதிய அரசு 24 மணிநேர செயல்பாடு கொண்ட சுகாதார நிலையங்களாக சென்னையில் உள்ளதைப்போல மாற்றப் போகிறோம் என்று அறிவித்துள்ளது. இவை வெறும் அறிவிப்புகளோடு இல்லாமல் சுகாதார மையங்களில் அடிப்படை தேவைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.

கிராம சுகாதார மையத்தில் பணிபுரியும் மருத்துவருக்கும், செவிலியர்களுக்கும் போதிய வசதி கொண்ட தங்கும் விடுதிகளை ஏற்படுத்தி தருவதன் மூலம் இரவு நேரங்களில் மட்டுமல்லாது பகல் நேரங்களிலும் இடர்ப்பாடு இல்லாமல் மருத்துவர்களும், செவிலியர்களும் பணிசெய்ய முடியும். இதனால் சரியான நேரத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும். அதே வேளையில் போதிய மருத்துவர்களையும், செவிலியர்களையும் சுழற்சி முறையில் பணியாற்றுவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும். படுக்கை வசதிகள், மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், சுகாதாரப் பணியாளர்கள், செவிலியர்கள், மருத்துவர்களை நோயாளிகளின் வருகைக்கு ஏற்றாற்போல் அதிகப்படுத்தினால் தரமான சிகிச்சை அளிக்கும் மையங்களாக சுகாதார மையங்கள் மாறும்.

அரசு மருத்துமனைகளில் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளை சரிசெய்ய என்ன செய்வது.

தமிழக சுகாதாரத் துறையால் ஏராளமான கட்டுமானப் பணிகள் நடைபெற்ற வண்ணம் உள்ளது. இவ்வேலைகளை தனியாரிடம் கொடுப்பதால் கட்டடம் போதுமான வசதி கொண்டதாக இல்லாமலும், தரமற்றதாகவும், ஊழல் நிறைந்ததாகவும் காணப்படுகிறது. அரசின் மூலம் கட்டட வேலைகள் நடைபெற்றால் தரமான கட்டடமாக மாறும். அதேபோல் சாலையில் உள்ள சாக்கடைகள் சரிவர பராமரிக்கப்படாததால் மருத்துவமனை அடைப்பு ஏற்பட்டு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகிறது. கழிப்பிடங்களில் தண்ணீர் பற்றாக்குறை, தூய்மையாக பராமரிக்க சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறை, மருத்துவக் கழிவு பொருளை தேக்கிவைப்பதற்கும் அவைகளை சுத்தப்படுத்துவதற்கும் தேவையான வசதிகள் இல்லாமல் அரசு மருத்துவமனைகளில் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகின்றன. இதற்கு முழுப் பொறுப்பு மருத்துவமனையின் உயர் பொறுப்புகளில் உள்ளவர்களையே சாரும்.

அரசு மருத்துவமனைக்கு ஒதுக்கப்படும் நிதியை சுகாதாரச் சீர்கேடுகளை சரிசெய்ய பயன்படுத்தாமல், நன்றாக உள்ள கட்டடங்களை, அறைகளை சரியில்லை என்று காரணம் காட்டி அப்பணியை காண்ட்ராக்ட் விட்டு நிதியை கொள்ளையடிக்கும் போக்கு நடந்தேறி வருகிறது. இவைகளை தடுப்பதற்கு மருத்துவமனை கமிட்டி சிறப்பான முறையில் செயல்பட வேண்டும். இக்கமிட்டிகள் செயல்படாதவைகளாகவே உள்ளன. காரணம் கமிட்டியில் உள்ளவர்கள் மருத்துவமனைகளில் உயர் பொறுப்புகளில் உள்ளவர்களும், ஆளும் கட்சியை சார்ந்தவர்களும் இருப்பதினால் செயல்படாமலும் கண்டும் காணாமலும் கமிட்டி உள்ளது.

இக்கமிட்டியில் மருத்துவர்கள் மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கொண்ட வல்லுநர் கமிட்டியாக மாற்றுகிறபோது தான் அரசு மருத்துவமனைகளில் ஏற்படுகின்ற பிரச்னைகள் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.

அதேபோல் வார்டுகளில் தலைமை டாக்டர்கள் வார்டை சுற்றிவருகிற போது நோயாளிகளின் உறவினர்களை வெளியே துரத்தாமல் அவர்களுடைய பிரச்னைகளையும் வார்டுகளில் அடிப்படை தேவை சம்பந்தமாக பேச அனுமதிக்க வேண்டும்.

சுகாதாரமாக மக்கள் வாழ்வதற்கு அரசு என்ன செய்ய வேண்டும்.

பலநோய்கள் உருவாவதற்கு திறந்த வெளிக் கழிப்பிடமும் சுகாதாரமற்ற குடிநீரும்தான் காரணமாக இருக்கிறது. இலவசமாக பேன், மிக்சி, கிரைண்டர் கொடுப்பதற்கு பதிலாக வீட்டுக்கு ஒரு கழிப்பிடம் அமைத்து தரலாம், சாலையில் தேங்கும் மழைநீர், சாக்கடை நீர் இவைகளில் உருவாகும் கொசு கடிப்பதால் பேதி, சீதபேதி, காலரா, மஞ்சள் காமாலை, டைபாய்டு, மலேரியா, டெங்கு காய்ச்சல், மூளைக் காய்ச்சல் போன்ற நோய்கள் உருவாகுகிறது. இத்தகைய நோய்களுக்கு காரணமாக உள்ள சாலையில் தேங்கும் நீர்களை சுத்தப்படுத்தலாம். அதேபோல் தரமான குடிநீர் கிடைக்கவும் அரசை வலியுறுத்த வேண்டும். அரசிடம் சுகாதாரமான வாழ்வை கேட்டுப் பெறுவது ஒவ்வொருவருடைய கடமையாகும்.

Pin It