கடந்த சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை திரும்பிய திசை எங்கும் சிறகடித்து பறந்து கொண்டிருந்த சிட்டுக்குருவிகள் இன்று மனிதரை(?) விட்டு விலகிச் சென்றது ஏன்? நகர்ப்புறங்களில் அனைத்து வீடுகளிலும் கூடுகட்டி வாழ்ந்தவை இன்று மாயமானது ஏன்?

பெயர்க் காரணமும் வாழ்வியலும் 

உருவில் சிறியதாக இருப்பதாலேயே சிட்டுக் குருவி என்ற பெயர் வந்தது. சிட்டு போல பறந்தான் - என்ற சொல்லாடல் இவற்றிக்கு பறக்கும் திறனை கொண்டே உருவாகிறது எனலாம். HOUSE SPARROW என்றழைக்கப்படும் இவை சிறியதானாலும் தொன்மையான உலகப் பறவைகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சிற்சில வேறுபாடுகளுடன் உலகம் முழுக்க காணப்படுகின்றன.ஆண் பறவையின் தலை, முதுகு, வால், மேல் பகுதி சிறகுகள், பிடரி போன்றவை பழுப்பு கலந்த கருஞ்சாம்பல் நிறமும், மேல் முதுகும், இறக்கைகளும் கருப்பு பழுப்புக் கொண்ட ஆழ்ந்த பழுப்பு நிறத்துடன் காணப்படும். பெண் பறவையின் உடலின் மேல் பகுதியில் மஞ்சள் தோய்ந்த பழுப்புக் கோடுகளும், சாம்பல் தோய்ந்த உடலமைப்புடன் காணப்படும்.நமது சங்க இலக்கியங்கள் சிட்டுக் குருவியை மனையுறை குருவி என்று குறிப்பிட்டுள்ளன. மனிதர்கள் வாழும் வீடுகளில் கூடுகட்டி பயமின்றி வாழ்ந்த காரணத்தாலேயே மனையுறை குருவி என்று அழைக்கப்பட்டது.

ஊர்க் குருவி என்றும் மலையாளத்தில் அடைக்கலாங் குருவி என்றும் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றன. 16 செ.மீ அளவுள்ள சிறிய இந்தப் பறவையை காரலை லின்னேயல் என்ற அறிஞர் தான் முதல் முதலில் அடையாளப்படுத்தி, வகைப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்தியாவின் பறவையியல் அறிஞர் சலிம் அலி சிட்டுக்குருவிகளை பற்றி ஆய்வு செய்து அதனுடைய அழிவைச் சுட்டிக் காட்டினார். அவரைத் தொடர்ந்து வி.விஜயன் என்ற பறவையியலாளர் பற்றி தொடர்ந்து பல ஆய்வுக் கட்டுரைகளை ஆங்கிலத்தில் வெளியிட்டு அவற்றை காக்க தொடர் முயற்சிகள் எடுத்து வருகிறார்.இந்திய அளவில் சிட்டுக் குருவிகளை பற்றிய முனைவர். பட்ட ஆய்வுகள் ஏதும் இல்லாத நிலையில், கேரளத்தை சேர்ந்த தான்யா என்ற பெண்மணி தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வுக்கு இதை தேர்வு செய்து முழுமையான ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள். இவரது ஆய்வு முடிவில் மேலும் பல தகவல்கள் வெளிவர வாய்ப்புள்ளது.

உணவும், இருப்பிடமும்

சிட்டுக் குருவிகளின் முக்கிய உணவு தானியங்களே. நெல், சோளம், மக்காச் சேளம், பயிறு வகைகள், கோதுமை, புல்லரிசி போன்றவற்றை விரும்பி உண்கின்றன. கிராமப்புறங்களில் வீட்டுவாசலில் கட்டி தொங்கவிடப்படும் நெற்கதிர்களை மனிதர் பயமின்றி உண்கின்றன. வீட்டு வாசல்களில் காய வைக்கப்படும் அரிசியும் உணவாக அமைகிறது.இவை இனப்பெருக்க காலத்தில் மட்டுமே இணையாக இரை தேடித் திரிவதை காணலாம். மற்ற காலங்களில் ஆண், பெண் தனித்தனியே இரை தேடித் திரியும் வழக்கம் உடையது.நமது கிராமப்புறங்களில் உள்ள கூரை வீடுகள் சிட்டுக் குருவிகளுக்கு ஏற்ற உறைவிடமாகும். அதை தவிர்த்து நகர்ப்புறங்களில் அமைந்துள்ள மாடி வீடுகளில் உள்ள தாழ்வாரங்கள், பொந்துகள் போன்றவையும் ஏற்ற இடங்களாகும்.

இனப்பெருக்கம்

உணவு, இருப்பிடம் பொறுத்து ஆண்டுதோறும் இனப்பெருக்கம் செய்யும் இயல்புடையது சிட்டுக்குருவிகள். வாழை, தென்னை நார்கள் கொண்டு முறையான வடிவத்தில் இல்லாமல் கூடுகட்டுகின்றன. 3 முதல் 5 முட்டைகள் வரை வெண்மையான நிறத்தில் சிறு புள்ளிகளுடன் இடுகின்றன. 15 நாட்களில் குஞ்சுகள் வெளிவரத் தொடங்கும் என தெரிவிக்கும் பறவையியலாளர்கள். இது குறித்து ஆய்வுகள் தேவை என்றும் குறிப்பிடுகின்றனர். முட்டையை ஆண், பெண் இரண்டும் மாறி, மாறி அடைகாக்கின்றன.இனப்பெருக்க காலத்தின் போதும், புழு, பூச்சி, வண்டு போன்றவற்றை பிடித்து உண்பது தனது சக்தியை அதிகப்படுத்த என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் தனது குஞ்சுகளுக்கும் புழு, பூச்சி, வண்டுகளை உணவாக ஊட்டுகின்றன.

அழிவு

ஆண்டு முழுதும் இனப்பெருக்கம் செய்வதே சிட்டுக்குருவிகளுக்கு எதிரியாகியுள்ளது. ஆண்மையை அதிகப்படுத்தும் சக்தி இவைகளுக்கு இருப்பதாக கூறி சிட்டுக்குருவி லேகியம் விற்கப்படுகிறது. அறிவியல் உண்மை சிறிதும் இல்லாத இம்மாதிரியான கட்டுக்கதைகள் சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு காரணமாகிறது. காற்றோட்டமான அறை, தாழ்வாரம் என கட்டி வந்த நமது வீடுகள், நாகரிகமாக மாறிப் போனதால் பறவைகள் வாழ ஏற்ற இடமாக இல்லாமல் போனது.அலைபேசி கம்பத்தில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சினால் சிட்டுக்குருவிகள் உள்ளிட்ட பல பறவைகள் பாதிக்கப்படுவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனினும் மேலதிக ஆய்வுகள் தேவைப்படுகின்றன. இவை தவிர இதன் அழிவுக்கு முக்கிய காரணியாக விளங்குவது நாம் கணக்கின்றி கொட்டும் பூச்சிக்கொல்லி மருந்துகளே.

DDT என்ற பூச்சிக்கொல்லி மருந்து தானியங்களுக்கு தெளிப்பதால், அதனை உண்ணும் சிட்டுக் குருவிகள் இறக்க நேருகிறது. சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு முக்கிய காரணமாக இதையே பல பறவையியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். DDT என்ற பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கப்பட்ட தானியங்களை உண்ணும் சிட்டுக்குருவிகளின் முட்டை தோல் கடினத்தன்மை இன்றி. உடைந்து விடுவதால் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டு இனம் அழிவுக்குள்ளாகிறது.இவை தவிர நமது வீடுகளில் வாழும் பூனைகள், எலியை உணவாக்கி கொள்வது போல சிட்டுக்குருவியையும் உணவாக்கி கொள்வதாலும் அழிவுக்குள்ளாகின்றன.

அணில்களும், இதன் கூடுகளை தமது கூடுகளாக கைப்பற்றிக் கொள்கின்றன. மேலை நாடுகளில் வைரஸ் தாக்கத்தால் இவை இறந்துள்ளதாக பறவையியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். விவசாயமும், விவசாய நிலங்களும் குறைவதால் சிட்டுக் குருவிகளின் முக்கிய உணவான தானியங்கள் கிடைப்பது அரியதாவதாலும் இவை அழிகின்றன. காற்று மாசுபடுவதாலும் உடலும் கெட்டு சிட்டுக்கள் அழிகின்றன. இயந்திரமயமான வாழ்க்கையை விட்டு, எளிய வாழ்க்கை வாழும் போது மீண்டும் இப்பறவை நம்மிடம் திரும்பலாம். மனிதர்கள் இருக்கும் இடங்களில் பறவைகள் வாழும். மனிதத்தன்மை மறைந்து இயந்திர வாழ்க்கை வாழும் சென்னை போன்ற நகர மக்களுக்கு சிட்டுக்குருவிகள் தேவையா எனில் தேவைதான்.

காக்கையும், குருவியும் நம் சாதியென்போம் சிட்டுக்குருவிகளை காப்போம்....

(கட்டுரையாளர் முதுநிலை ஆய்வாளர் சலிம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம்)

Pin It