தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் கற்சிலைகளாகவும் சுடுமண் உருவங்களாகவும் பல்வேறு தெய்வங்கள் பரவலாக இடம் பெற்றுள்ளன. சில இடங்களில் வெறும் கற்களாகவும் செங்கல் வைத்துக் கட்டப்பட்ட பீடங்களாகவும் இத்தெய்வங்கள் காட்சி தருகின்றன.இத்தெய்வங்களைச் சூழ்ந்துள்ள பக்தி என்னும் திரையை விலக்கி விட்டுப் பார்த்தால், இவை உருவானது குறித்த கதைகளைக் கொண்டுள்ளன. அடிப்படையில் சைவ, வைணவ தெய்வங்களை மையமாகக் கொண்டு உருவான புராணக் கதைகளிலிருந்து இக்கதைகள் வேறுபட்டவை. இக்கதைகளை புராணம் என்று கூறுவதை விட பழமரபுக்கதை என்று கூறுவதே பொருத்தமாக அமையும். ஏனெனில் இவ்வுலகில் வாழ்ந்து மடிந்த உண்மையான மனிதர்களை மையமாகக் கொண்டே இவை தோன்றியுள்ளன.

இக்கதைகளில் கொலைக்கு ஆளாகிப் பின்னர் தெய்வமாக ஆக்கப்பட்டவர்களின் கதைகள் பரவலாக உள்ளன. இத்தெய்வங்களை ‘கொலையில் உதித்த தெய்வங்கள்’ என்று குறிப்பிடுவதே பொருத்தமானதாகும். இத்தெய்வங்களின் வரலாற்றை அறிந்து கொள்வதின் வாயிலாக தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றின் ஓர் இருண்ட பக்கத்தை நாம் புரிந்து கொள்ள முடியும். இந்நோக்கத்தின் அடிப்படையிலேயே இத்தொடர் தொடங்குகிறது. கொலையில் உதித்த தெய்வங்களை நாம் சந்திக்கும் முன் அவை வழிபடப்படுவதன் தொடர்பாக சில அடிப்படைச் செய்திகளை முன்னுரையாக அறிந்து கொள்வோம்.

இறந்தோர் வழிபாடு

வாழும்பொழுது வலிமையுடையவனாக வாழ்ந்த ஒருவன் இறந்த பின்னரும் ஆவி வடிவில் வலிமையுடையவனாக இருப்பான் என்ற நம்பிக்கையே இறந்தோர் வழிபாட்டின் அடிப்படையாகும். இறந்தோரின் கோபத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதும் அவர்களின் துணையைப் பெறுவதும் தான் இறந்தோர் வழிபாட்டின் நோக்கமாகயிருந்தன.

இதன் அடிப்படையிலேயே கடவுளர்கள் மனித உருவில் படைக்கப்பெற்றனர். இது குறித்து வில்டியூரெண்ட்.“முதலில் பலமான மனிதர்களையும் பிறகு சிறந்த மனிதர்களையும் கடவுளாகப் பாவிக்க அது அனுமதித்தது” என்கிறார். பலமான மனிதர்கள் என்பது வேட்டைச் சமூகத்தில் வேட்டையாடுவதிலும் மேய்ச்சல் சமூகத்திலும் வேளாண் சமூகத்திலும் போராற்றல் மிக்கவர்களையும் குறிப்பதாகும்.“பண்டை மக்கள் சிலரின் அகராதியில் கடவுள் என்பதைக் குறிக்கும் வார்த்தைக்கு இறந்த மனிதன் என்பதே பொருளாக இருந்திருக்கின்றது. எகோவா என்பதற்குப் பலம் வாய்ந்த மனிதன் என்று பொருள் அவன் பலம் வாய்ந்த குழுத் தலைவனாகவும் இருந்தான்”என்று வில்டியூரெண்ட் (1986:32) குறிப்பிடுகிறார். இவ்வாறு பலம் பொருந்திய மனிதர்களை வழிபடுவதை இறந்தோர் வழிபாடு அடிப்படையாகக் கொண்டிருந்தது அதே நேரத்தில் சாதாரண மனிதர்கள் இறந்து போனால் அவர்களை புறக்கணிக்கவில்லை.

இறந்தோர் வழிபாட்டில் கல்

இறந்தோர் வழிபாட்டில் இடம்பெறும் ஆவி என்பது கண்ணுக்குப் புலனாகாத ஒன்றாகவும் நிலையில்லாது சுற்றித்திரியும் தன்மை கொண்டதாகவும் கருதப்பட்டது. எனவே அதை ஓரிடத்தில் நிலைநிறுத்தும் அவசியம் ஏற்பட்டது. இதன் அடிப்படையில் வலுவான கல்லில் அதை உறையச் செய்தனர்.ஆவியை நிலை நிறுத்தி வைக்கும் இடமாக கல் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது குறித்து பின்வருமாறு விளக்கியுள்ளார். “புராதன மனிதர்களின் சமய உணர்வானது கடினத்தன்மை, முரட்டுத்தன்மை நிலைத்த தன்மை என்ற மூன்றும் இணைந்ததாகும். கம்பீரமான தோற்றமுடைய ஒரு பாறை அல்லது கருங்கல்லை விட உயரமானதும் மரியாதையைத் தூண்டுவதுமான வலிமை பெற்ற எதுவும் அச்சமூகத்தில் அன்று இல்லை. நிலையான ஒன்றைப் பாறை அவனுக்குக் காட்டுகிறது.பாறை அல்லது பெரும் கருங்கல்லானது வலிமை அசையாத உறுதியான நிலை பெரிய உருவம் விசித்திர வடிவம் என்பனவற்றைக் கொண்டது.

அதே நேரத்தில் அதற்கு மனிதத் தன்மை கிடையாது. வியப்பு, பயம், ஈர்ப்பாற்றல் ஆகிய அனைத்தையும் ஏற்படுத்தும் வடிவமாக பாறையும் கருங்கல்லும் அமைந்தன.அவன் வாழும் புனிதத்தன்மையற்ற இவ்வுலகிற்கப்பாற்பட்ட ஓர் உண்மையை ஓர் ஆற்றலை அதன் கம்பீரம் கடினத்தன்மை வடிவம் நிறம் ஆகியன காட்டுகின்றன”இவ்வாறு இறந்தோர் நினைவாக நிறுவப்படும் கற்கள் ஆவி குறித்து அவர்கள் கொண்டிருந்த கருத்திற்கு நேர் எதிராக இருந்தன. ஆவி என்பது தண்ணீர் கொதிநிலையையடைந்த பின்னர் தோன்றும் மென்மையான ஒன்று.இத்தகைய பண்பு கொண்ட ஆவியை இப்பண்புகளுக்கு நேர் எதிரான கல்லில் நிலைநிறுத்தச் செய்தனர் இதன் விளைவாக உலவும் தன்மை கொண்டதாக அவர்கள் நம்பிய ஒன்றிற்கு நிலைத்த வடிவத்தை வழங்கியுள்ளனர்.

இறந்தோர் நினைவாக மத்திய இந்தியாவில் உருவாக்கப்பட்ட கற்சின்னங்கள் குறித்து ஆய்வு செய்த கோல்பர் என்பவர் கூறும் செய்திகளை மிரசியா எலியட் தொகுத்துத் தந்துள்ளார். அவை வருமாறு1.    இத்தகைய நினைவுச் சின்னங்கள் அனைத்தும் இறந்தோர் வழிபாட்டுடன் தொடர்புடையவை. இறந்தவரின் ஆன்மாவை அமைதிப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டவை 2.வடிவத்தில் இவை வரலாற்றுக்கு முற்பட்ட ஐரோப்பாவின் கற்சின்னங்களுடன் ஒப்பிடத்தக்கவை.3.   இவை கல்லறைகளின் மேலோ அருகிலோ அமைக்கப்படவில்லை சற்றுத் தள்ளியே வைக்கப்பட்டன.

4.ஆனால் கொடூரமான மரணத்தால் (மின்னல் தாக்குதல் பாம்பு அல்லது புலிகடித்து) இறந்தோருக்கு அந்நிகழ்வு நடைபெற்ற இடத்திலேயே நினைவுக்கல் நடப்பட்டது.கொடூரமான சாவுகள் நிம்மதியற்ற கோபம் கொண்ட பழி வாங்கும் எண்ணம் கொண்ட ஆன்மாக்களை உருவாக்கும் என்ற நம்பிக்கையை மேற்கூறிய நான்காவது கருத்து உறுதி செய்கிறது.திடீரென்று நிகழும் மரணமானது இறந்தவரின் ஆன்மா அவருடைய ஆயுளின் மீதி நாட்களில் செய்திருக்க வேண்டியதை அவர் வாழ்ந்த சமூகத்தின் அருகிலேயே இருந்து செய்ய வேண்டுமென விரும்பும்மின்னல் தாக்கியோ பாம்பு கடித்தோ புலியால் தாக்குண்டோ ஒருவர் இறந்திருந்தால் ஒரு கற்குவியலை உருவாக்குவது கோண்ட் என்ற ஆதிவாசிகளின் பழக்கம். அவ்வழியே செல்வோர் அந்த ஆன்மாவின் நிம்மதிக்காக அக்கற்குவியலின் மீது ஒரு கல்லை எறிவர்.

இச்செய்திகளைக் கூறிவிட்டு கோண்ட் மற்றும் பில் என்ற ஆதிவாசிகள் இத்தகைய நினைவுச் சின்னங்களை யார் பொருட்டு எழுப்பினர் என்பது குறித்துப் பின்வரும் செய்திகளைக் குறிப்பிட்டுள்ளார்.“கொடூரமாக இறந்தோருக்கும், இனக்குழுத் தலைவர்களுக்கும், போர் வீரர்களுக்கும் மட்டுமே இத்தகைய நினைவுச்சின்னங்களை பில் இனத்தவர் ஏற்படுத்தினர்.இறந்துபோன ஆன்மா உயிருடன் இருந்த காலத்தில் வலிமையுடையதாக இருந்த காரணத்தால் இறந்த பின்னர் அமைதியடைய வேண்டுமென்பதற்காக இவையெழுப்பப்பட்டன.

”இயல்பான மரணத்திற்கு மாறாக கொடூரமான முறையில் இறந்தோர் வழிபாட்டிற்குரியவர்களாக மாறுவது குறித்த கோப்பர் குறிப்பிடும் மேற்கூறிய செய்திகளையொத்ததாக டைலர் கூறும் பின்வரும் கருத்து அமைந்துள்ளது.“ தமக்குரிய ஆயுள் நிறைவடையும் முன்பே கொடூரமான முறையில் இறந்துபோன ஆன்மாக்கள் தீயவை என்ற கருத்து பரவலாக இருந்து வந்திருக்கிறது. சமயங்களின் வரலாறு என்ற தம்முடைய நூலில் பியனரஸ் என்பவர் குறிப்பிடுவது போன்று அவை கொடூரமாக (இறந்த ஆன்மாக்கள்) விருப்பமின்றி அவர்களுடைய உடல்களிலிருந்து விரட்டப்பட்டதால் அவர்களுடைய புதிய வாழ்க்கையானது பழிவாங்கும் உணர்வுடனும் கோபமுடையதாகவும் தான் இருக்கும்” எனவே இத்தகைய ஆன்மாக்கள் உயிருள்ள மக்கள் வாழும் இடங்களைத் தவிர்த்து விட்டு இறந்தோர் ஒய்வெடுக்கும் இடங்களில் தான் உலவும் என்று மக்கள் நம்புவதில் வியப்பில்லை.

Pin It