அணுஉலைகளுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு வகை களில் செயல்பட்டு வரும் பூவுலகின் நண்பர்கள் குழு கூடங்குளம் மற்றும் கல்பாக்கம் அணுஉலைகள்  தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு பொதுநல மனுக்களை தாக்கல் செய்துள்ளது.

கூடங்குளத்துக்கு எதிரான வழக்கு :

ஜப்பானில் புகுஷிமா அணுஉலை விபத்தை தொடர்ந்து இந்திய அணுஉலைகளின் பாதுகாப்பு தன்மையை கண்டறிய ஓர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தன்னுடைய இடைகால அறிக்கையை  மே மாதம் தாக்கல் செய்யது. அதில் கூடங்குளம் அணுஉலையில் பாதுகாப்பு அம்சமாக அமைக்கப்பட வேண்டியவை என்று சிலவற்றை கூறியுள்ளது. மேலும் தன்னுடைய இறுதி அறிக்கையை ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்ய இருப்பதாகவும் கூறியுள்ளது. இந்திய அரசே தாமாக முன்வந்து கூடங்குளம் அணுஉலை பாதுகாப்பு  அம்சங்களை மறுஆய்வுக்கு உட்படுத்தியுள்ள நிலையில், மேலும் பல அம்சங்களை இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளது பூவுலகின் நண்பர்கள் குழு.

கூடங்குளத்தில் மொத்தமாக கட்டப்பட உள்ள 6 அணுஉலைகளில் 1 மற்றும் 2  அணுஉலைகளுக்கான சுற்றுச்சுழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை 2003 ஆம் ஆண்டு பெறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் அணுஉலைகள் கடல்சார் சுற்றுச்சுழல் மீது ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் பற்றி போதிய ஆய்வுகள் இடம்பெறவில்லை. மேலும் 3,4,5 மற்றும் 6 ஆகிய அணுஉலைகளுக்கு சுற்றுச்சுழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை 2009 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. இந்த அணுஉலைகளுக்கு அனுமதி அளித்த மத்திய அரசு, கடலோர ஒழுங்கு ஆணையத்தில் அங்கீகராம் பெறப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. எனவே  1 மற்றும் 2 அணுஉலைகளுக்கு இந்த ஆணையத்தில் அனுமதி கிடைத்துவிட்டதா என்பது கேள்வியாக உள்ளது. 

இந்த அனுமதி ஏன் முக்கியமானது என்றால், கடல் சார்ந்த சூழலுக்கு அணுஉலைகள் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை இந்த ஆணையம் தான் ஆய்வு செய்ய வேண்டும். 1 மற்றும் 2 அணுஉலைகளின் சுற்றுச்சுழல் மீதான தாக்கம் குறித்தான ஆய்வு அறிக்கையில் அணுஉலைகளில் இருந்து வெளியேறி கடலில் கலக்க இருக்கும் நீரின் வெப்பம் 7 டிகிரி செல்சியசுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பது மட்டுமே கூறப்பட்டுள்ளது. அதன்படி வெப்பம் மிகாமல் இருக்க என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது இந்த ஆய்வு அறிக்கையில் கூறப்படவில்லை. இப்படி அதிக வெப்ப நீர் தொடர்ந்து கடலுக்கு செல்லுத்தப்பட்டால் அது நிச்சயம் மீன்வளத்தை பாதிக்கும். மேலும் வெளியேறாமல் இருக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை பற்றி  இந்த அறிக்கையில் எதுவும் கூறப்படவில்லை. இந்த காரணங்களை அடிப்படையாக கொண்டு மேற்கூறிய பொதுநல வழக்கு பதிவாகியுள்ளது.

கல்பாக்கம் அணுஉலைக்கு எதிரான வழக்கு: 

2004-ம் ஆண்டு இந்தியாவை சுனாமி தாக்கியதை தொடர்ந்து தேசிய பேரீடர் மேலாண்மை சட்டம் 2005 கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தின் நோக்கம் சுனாமி போன்ற இயற்கை பேரிடர்கள் நேர்ந்தால் அவற்றை எவ்வாறு கையாளுவது, முன்தயாரிப்பு நடவடிக்கையாக என்ன திட்டங்கள் வகுப்பது போன்றவை ஆகும். மேலும் இச்சட்டதின் கீழாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பிரதமர் தலைமையிலும், மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் மாநில முதல்வர்கள் தலைமையிலும், மாவட்ட மேலாண்மை குழு மாவட்ட ஆட்சியர் தலைமையிலும் அமைக்கப்பட வேண்டும்.

2009-ம் ஆண்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அணுஉலைகளில் விபத்து நேர்ந்தால் அதனை எப்படி மேலாண்மை செய்வது என்பது குறித்தான திட்ட அறிக்கை (Management of Nuclear and Radiological Emergencies)   ஒன்றை வெளியிட்டது.   பல்வேறு முன்தயாரிப்பு முறைகள் பற்றி கூறியுள்ள இந்த திட்ட அறிக்கையில் அணுஉலை விபத்து நேருகின்ற போது இருக்க வேண்டிய மருத்துவ முன்தயாரிப்பு நிலை பற்றியும் கூறப்பட்டுள்ளது. இதன்படி அணுஉலை விபத்துக்கு பின் மக்கள் வெளியேற்றப்பட்டு மருத்துவ உதவி அளிக்க போதிய மருத்தவமனைகள் இருக்க வேண்டும். குறிப்பாக அணுஉலையில் இருந்து 16-கிலோமீட்டர் தொலைவில் நான்கு புறமும் மருத்துவமனைகள் இருக்க வேண்டும்.

இந்த மருத்துவமனைகளில் கதிர்வீச்சு பாதிப்புக்குள்ளான நபர்களுக்கு சிகிச்சை அளிக்க பயிற்சி பெற்ற மருத்துவர்கள் இருக்க வேண்டும். அவசரகால மருத்துவ குழு இருக்க வேண்டும். அணுகதிர் பாதிப்புகளை கண்டறிய கூடிய கருவிகள், ஆய்வுகூடங்கள் இருக்க வேண்டும் என்று திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பல மத்திய மாநில துறை வல்லுநர்கள் கலந்து ஆலோசனை செய்ததன் அடிப்படையில் இந்த திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி சம்பந்தப்பட்ட துறைகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி அவர்கள் நடவடிக்கை எடுப்பதற்கான இறுதி நாளாக டிசம்பர் 2010ல் இந்த திட்ட அறிக்கையில் குறிப்பிடப்படுள்ளது. 

இந்த திட்ட அறிக்கை வெளியாகி சுமார் இரண்டாண்டுகளுக்கு பின் கடந்த மார்ச் மாதம் பூவுலகு நண்பர்கள் குழு ஒன்று கல்பாக்கம் மற்றும் சுற்று பகுதியை ஆய்வு செய்தது. மேற்கூறிய திட்ட அறிக்கைப்படி எவ்வித முன்தயாரிப்பு நடவடிக்கையும் கல்பாக்க சுற்றுபுர பகுதியில் மேற்கொள்ளப்படவில்லை என்பது ஆய்வில் தெளிவானது. கல்பாக்கம் மிக அருகே கூவத்தூர் மற்றும் சதுரங்கப்பட்டினம் ஆகிய இடங்களில் மட்டுமே ஆரம்ப சுகாதர மையம் உள்ளது. இங்கும் காலை முதல் மதியம் வரை மட்டுமே மருந்துவர்கள் வருகின்றனர்.

பெரும்பாலும் மகப்பேறு தொடர்ப்பான சிகிச்சைகள் இங்கு அளிக்கப்படுகின்றன. அணுவிபத்து நேர்ந்தால் அதனை எதிர்கொள்ள கூடிய எந்தவித மருத்துவமனைகளும் மருத்துவர்களும் கல்பாக்க சுற்றுப்புற பகுதியில் இல்லை என்பதும் ஆய்வில் தெளிவானது. எனவே மேற்கூறிய திட்ட அறிக்கைப்படி போதிய மருத்துவ முன்தயாரிப்பு நடவடிக்கைகளை கல்பாக்க பகுதியில் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக மற்றொரு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் பல பொதுநல வழக்குகளில் வழக்காடி வரும் மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் பூவுலகின் நண்பர்கள் குழுக்காக வழக்காடி வருகிறார்.

Pin It