இந்தியாவை இறுக்கும் புதிய நச்சுக்கொடியாக உருவெடுத்து வரும் மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் ஆக்கிரமிப்பை தடுக்க நடந்த தேசிய கருத்தரங்கில் நடைபெற்ற விவாதம் - ஒரு பார்வை.

மூன்றாம் உலக நாடுகளில் எல்லோரும் படிக்க ஆரம்பித்துவிட்டார்கள், கேள்வி கேட்கவும் எதிர்க்கவும் ஆரம்பித்துவி்ட்டார்கள். இனிமேல், இங்கு காலம் தள்ள முடியாது என்று வெள்ளைக்காரர்கள் காலனி நாடுகளை விட்டு வெளியேறி இருந்த நேரம். இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதி. எப்பொழுதுமே எதைச் செய்தாலும் தனக்கு என்ன லாபம் கிடைக்கும் என்ற முதலாளித்துவ கண்ணோட்டத்துடன் வெறிக்கும் மேலை ஆதிக்க நாடுகளுக்கு, மீண்டும் கை அரிக்க ஆரம்பித்திருந்தது. இந்த காலனி நாடுகளை இப்படி சுதந்திரமாக விட்டுவிட்டோமே என்று மூளையும் அரித்துக் கொண்டே இருந்தது. இனிமேல் இந்த நாடுகளை நேரடியாகச் சுரண்டிக் கொழுக்க வாய்ப்பில்லை.

சரி, வாசலை மூடிவிட்டால் என்ன, பின்வாசல் இருக்கிறதே என்று மறைமுக வழிகளைத் தேட ஆரம்பித்தன. புதிய வழி கண்டுபிடிக்க தங்களது அறிவியல் கூலிப்படையை ஏவிவிட்டன. அதன் பலனாக அவர்களுக்குக் கிடைத்ததே "பசுமைப் புரட்சி".

ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு ஆயுசு இருக்கிறதே. இதோ, வளங்களைச் சுரண்டிய அந்தப் புரட்சியும் 40 ஆண்டுகளுக்குப் பின், பெரிதாக பல்லிளித்து விட்டது. சை, இதிலும் விழித்துக் கொண்டு விட்டார்களே என்று தலையைச் சொரிய ஆரம்பித்த மேற்குலக முதலாளிகள், புதிய வழிமுறையை கண்டறிந்து விட்டார்கள். இதோ அதை நடைமுறைப்படுத்தவும் தயாராகிவிட்டார்கள். இதுவும் நம் சாப்பாட்டில் கை வைக்கும் விஷயம்தான். முதல்கட்டமாக அவர்கள் குறி வைத்திருப்பது, காலங்காலமாக நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டிருக்கும் கத்தரிக்காயை. இது சாதாரண கத்தரிக்காய் இல்லை. மரபணுவில் நச்சு புகுத்தப்பட்ட பி.டி. கத்தரிக்காய். விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் இந்த கத்தரிக்காய் நமக்கு என்ன தரப் போகிறது என்று உலக அறிஞர்கள் கூடி விவாதித்த கருத்தரங்கு தில்லியில் கடந்த மாதம் நடைபெற்றது. அங்கே என்ன நடந்தது...

2002ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பி.டி பருத்தி, ஒரு மரபணு மாற்றப்பட வணிகப்பயிர். பூச்சிக்கொல்லி நச்சை மரபணுக்களில் செயற்கையாகப் பொருத்தி உருவாக்கப்பட்ட பயிர். பெருவாரியான விவசாயிகளிடம் அலங்கார வார்த்தைகள் கூறி திணிக்கப்பட்ட இப்பயிரால் தேசம் முழுவதும் நம் விவசாயிகளும், அவர்தம் நிலமும், பயிரும், வேளாண் விலங்குகளும் பட்ட துயரங்களும், அதைத் தொடர்ந்த விவசாயிகளின் தற்கொலைகளும் நாம் அனைவரும் அறிந்ததே. விதர்பா மாவட்ட விவசாயிகளின் தற்கொலை உலகையே உலுக்கிய போதும், நம் நடுவண் அரசம் அதன் புதிய அதிகார அமைப்பான மரபணு மாற்று பொறியியல் அங்கீகாரக் குழுவும் (GEAC) , மான்சான்டோ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட பி.டி. கத்தரி எனும் மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காயை எந்தத் தடங்கலும் இன்றி விரைவில் அறிமுகப்படுத்த உள்ளன.

பி.டி. கத்தரிதான் உலகிலேயே முதல்முறையாக, இந்தியாவில் பயிரிடப்பட போகிற உணவுப்பயிர். அமெரிக்காவைச் சேர்ந்த மான்சான்டோ நிறுவன தொழில்நுட்பத்தில் உருவான இக்கத்தரியை ‘மேஹோ’ எனும், அதன் இந்திய கூட்டு நிறுவனம் சந்தைப்படுத்த உள்ளது. சந்தைப்படுத்துவதற்கான அனுமதியை பெறும் நிலையில் உள்ளது ‘மேஹோ’. இந்த அனுமதியை திரும்பப் பெறக் கோரியும், மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் அநாவசிய புகுத்தலை எதிர்த்தும் இந்தியாவெங்கும் பல்வேறு விவசாய அமைப்புகள், சுற்றுச்சூழல் அமைப்புகள், மருத்துவ அமைப்புகள், தன்னர்வத் தொண்டு நிறுவனங்கள் குரல் எழுப்பி வருகின்றன. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தும் போராடி வருகின்றன. இதை ஒட்டி ஹைதராபாத்தை மையாமாகக் கொண்ட Centre for Sustainable Agriculture, GreenPeace, Doctors for Biosafety & Peace இணைந்து ஒரு கருத்தரங்கை தில்லியில் நடத்தின. புதுதில்லி இந்திய பன்னாட்டு மையத்தில் ஜுலை 8, 9 தேதிகளில் நடந்த "மரபணு மாற்றப்பட்ட உணவுப் பயிர்களால் ஏற்படக் கூடிய நலப் பிரச்னைகள்" பற்றிய இந்த தேசிய கருத்தரங்கில் 40க்கும் மேற்பட்ட அறிஞர்கள் பேசினர்.

"இந்த மரபணு மாற்றுத் தொழில்நுட்பம் அடிப்படையிலேயே தவறானது; முற்றிலும் முரணானது. எந்த மரபணுவும் தனியாக ஒரு செயலைச் செய்வதில்லை, கூட்டாகத் தான் இயங்க முடியும்; வெட்டி ஒட்டி ஒன்றின் பண்பை மற்றொன்றில் புகுத்துவது எதிர்மறையான விளைவுகளைத் தரக் கூடும். இந்த Recombinant DNA Technologyயே தவறு" என்று பொட்டில் அடித்தாற் போல் கூறிய இங்கிலாந்து நாட்டின் கிங்க்ஸ் பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பம் மற்றும் மரபியல் பேராசிரியர் டாக்டர் மைக்கேல் ஆண்டனியோவின் ஆய்வுக் கட்டுரையுடன் துவங்கியது கருத்தரங்கு. மதிப்புமிக்க பல பன்னாட்டு மருத்துவ இதழ்களில் பல ஆய்வு கட்டுரைகள் எழுதியவர் இவர்.

மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கான எந்த அவசியமும் இல்லாதபோது, அரசுகள் அவசரப்படுவது ஏ ன் என்ற அவரது கேள்வி, பன்னாட்டு நிறுவனங்களுக்கு மண்டியிடும் நமது அரசின் மனோபாவத்தை வெளிச்சமிட்டுக் காட்டியது. அமெரிக்காவின் மரபணு மாற்றப்பட்ட Starlink சோளம் உருவாக்கிய நலக்கேடுகள், மரபணு மாற்றம் செய்த உருளைக்கிழங்கு புற்றுநோயை உருவாக்குவதற்கான வாய்ப்பு போன்ற ஆபத்துகளை அவரது கட்டுரை சுட்டிக்காட்டியது.

மரபணு மாற்றப்பட்ட பயிர்களால் எற்பட்ட ஒவ்வாமை, இரத்த அணுக்கள் குறைவு, மலட்டுத்தன்மை குறித்தும் மரபணு மாற்றப்பட்ட பயிர்களால் இதுவரை உலகெங்கும் உருவான நலப்பிரச்சனைகள் மற்றும் ஆய்வு முடிவுகள் அனைத்தையும் தொகுத்து வழங்கினர் இங்கிலாந்தின் எக்ஸிடர் பல்கலைக்கழக ஆய்வு மாணவியும், கிரீன்பீஸ் ஆய்வக மாணவியுமான ஆல்டைரேடோ.

மதிய அரங்கம் வாதப் பிரதிவாதங்களால் நிரம்பியிருந்தது. தெளிவு பெறவும் உதவியது. இந்திய உணவியல் நிறுவனத்தின தலைவரும் ICMR ஆய்வு குழுவின் முதன்மை உறுப்பினருமான டாக்டர் சசிகரண் "நம்முடைய தற்போதைய நச்சுத்தன்மை பற்றிய ஆய்வுகள் எப்படி உலகத் தரத்தில், அதாவது OECD, UNDP, Codex மற்றும் Cartagena Protocol on Biosafetyக்கு இணையாக உள்ளதென விளக்கினர். அப்போது Substantial Equiv-ellance மற்றும் NOAEL (No Observed Adversed Effect Level எனும் ஆய்வு நிலைப்பாடுகள் குறித்து அவையினர் இடையே பெருத்த விவாதம் ஏற்பட்டது. தனக்கு கொடுத்த சோதனை மாதிரிகளைக் கொண்டு நச்சுத்தன்மை பற்றி ஆய்வு செய்ததாகக் கூறிய அவர், முழுமையாக சோதனை செய்யப்பட்டு ஒரு புது உணவுப்பயிர் பஞ்சத்தைப் போக்க வருமென்றால், அதை வரவேற்பதில் தவறில்லையே?" என்று மரபணு மாற்றப்பட்ட பயிருக்கு ஆதரவாக தன் நிலைப்பாட்டை கூறினர். ‘அப்படிப்பட்ட பயிர்கள் இயற்கையிலேயே உள்ள நிலையில், அவற்றை பரவலாக்க மறுப்பது ஏன்?" என்று வந்தனா பிரசாத், கவிதா குருகந்தி பதில் கேள்வி எழுப்பினர். இதிலிருந்து தற்போதைய நச்சுத்தன்மை குறித்து மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் வெறும் 90 நாட்களில் முடிந்து விடுகின்றன என்பதும், Teratogeincity போன்ற ஆய்வுகள் நடைபெறுவதில்லை என்பதும் தெரியவந்தது.

அதற்குப் பின் பேசிய முன்னாள் C.C.M.B. நிறுவன இயக்குனரும், தற்போதைய GEAC பார்வையாளராக இருந்து வருபவரும், மரபணு பயிர்கள் வராமல் தடுக்கும் செயலில் ஈடுபட்டு வருபவருமான டாக்டர் புஷ்ப பார்கவா தற்போதைய GEAC Safety Guidelineல் உள்ள பல்வேறு குறைகளை சுட்டிக்காட்டினர். குறிப்பாக, ‘மரபணு பயிர்களின் நச்சுத்தன்மையை ஆய்வு செய்ய ஒரு தனி ஆய்வு நிறுவனம் அமைக்கப்பட வேண்டும். DNA finger printing and Protenomics ஆய்வுகள் செய்யப்படாமல் இருப்பதும் பெருங்கவலை அளிக்கிறது. அதற்கு அதிகம் செலவவாகும் என அரசு கூறுவது மக்கள்நலனை மண்டியிட வைத்து, தேவையில்லாமல் இப்பயிர்களை அனுமதிக்கத் தயாராகும் வேகத்தை உறுதிப்படுத்துகிறது. பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு வணிகம் செய்யவுள்ள பன்னாட்டு நிறுவனங்களால், சில ஆயிரம் ரூபாய் கட்டி இந்த சோதனை செய்து கொள்ள முடியாது என்று கூறுவது பத்தாம்பசலித்தனம். மேலும் புதிதாக 29 விதிகளை GEAC Safety Guidelineல் சேர்க்க வேண்டிய அவசியத்தை கூறி உச்சநீதி மன்றம் மூலம் விண்ணப்பித்திருப்பதை அவர் தெரிவித்தார்.

புஷ்ப பார்கவாவின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த புள்ளி விவரங்கள் அரங்கை உலுக்கின. ஒவ்வொரு மரபணு மாற்றப்பட்ட பயிரை நடுவதற்கு இடையேயும் குறைந்தபட்சம் 80 மீட்டர் இடைவெளிவிட வேண்டுமாம். அதிகபட்சமாக 4 ஏக்கர் நிலமே கொண்ட 84 சதவீத விவசாயிகள் நாட்டில் இருக்கிறார்கள். 80 மீட்டர் இடைவெளி விட்டால் வரப்பில் மட்டும் தான் அவன் பயிரிட முடியும். ஆப்பிரிக்காவில் உள்ள ஸாம்பியா என்ற சிறிய நாடு தனது தேவைக்காக சோளம் தேவைப்பட்டபோது, மரபணு மாற்றப்பட்டதோ, மாற்றப்படாததோ எங்களுக்கு சோளத்தைத் தரவேண்டாம். சோளமாவு மட்டும் கொடுத்தால் போதும் என்று இறையாண்மையுடன் கூறியுள்ளது. ஆனால் நம் நாடு 80 மில்லியன் டன் உணவு இருப்பை கையில் வைத்துக் கொண்டு, ஒரிசா புயல் பாதிப்புக்காக 20 டன் சோளமாவை பெற்றுக் கொண்டுள்ளது. நமது லட்சணம் என்ன என்பது இதிலிருந்து தெரிந்து விடும். நிணிகிசின் எந்த உறுப்பினரும் மக்கள் நலம் குறித்த அக்கறையுடனே இறையாண்மையுடனோ இல்லை. மீண்டும் மீண்டும் பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சாதகமாகச் செயல்படுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். இன்று கத்தரியை அனுமதித்தால், மொத்த உணவுப் பயிர் சந்தையும் பன்னாட்டு நிறுவனங்களின் பிடிக்குப் போய்விடும். IICT, CSIR, CCMB, NIN, ICMR என இந்திய அரசின் பல்வேறு உயர்நிலை ஆய்வு நிறுவனங்களும் பெரும் விஞ்ஞானிகளும் நாட்டில் இருக்கும் போதும்கூட, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் தொடர்பாக போதிய பரிசோதனைத் திட்டங்கள் வகுக்கப்படாமல் இருக்கின்றன. மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு சிவப்புக்கம்பளம் விரிப்பதற்கான தயாரிப்பே இதற்குக் காரணம் என்பது அவரது பேச்சில் இருந்து தெளிவாகப் புரிந்தது.

மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் அவசியமின்மையையும், பல்வேறு தளங்களில் ஏற்கனவே நாம் தவறவிட்ட நலப்பிரச்சினைகளையும் கவனப்படுத்தி பேசினார் டாக்டர் வந்தனா பிரசாத். தாய்பாலை விடுத்து புட்டிப்பால், சத்தான குழந்தை உணவை விடுத்து மருந்து-டானிக் மற்றும் தடுப்பு ஊசிகளின் பிடிகளில் நாம் சிக்கிக் கொண்டுவிட்டதால், இன்று 75 சதவீதக் குழந்தைகள் உடல் எடை குறைவுடன் இருக்கின்றன. வறுமையையும் ஊட்டசத்து குறைவையும் காட்டியே உலகில் அங்கீகாரம் பெறத் துடிக்கிறது மரபணு மாற்றுத் தொழில்நுட்பம். வறுமைக்கும், ஊட்டச்சத்து குறைவுக்கும் காரணம் பயிர்கள் அல்ல. ஊனமான அரசியலும், ஊழல் புரையோடிப் போன அதன் கொள்கைளும்தான். அதைச் சீரமைக்காமல் மீண்டும் அதே வறுமையைக் காரணம் காட்டி நுழையப் பார்க்கும் மரபணு மாற்றப்பட்ட பயிர் ‘கட்டியிருந்த கோவணத்தையும் களவாடும் நோக்கில்’ அமைந்துள்ளது.

இதற்கு சிறந்த உதாரணம் கண்களைப் பாதுகாப்பதற்காக என்ற பெயரில் சந்தைக்கு வரத் துடிக்கும் மரபணு மாற்றப்பட்ட தங்க அரிசி. அதிலுள்ள Pro Vitamin சத்து, ஒருவரது உடலுக்குத் தேவையான வைட்டமினை தர வேண்டும் என்றால், ஒரு நாளைக்கு 9 கி அரிசி சாப்பிட வேண்டும். கண்களை விற்று சித்திரம் வாங்குவது போல இருக்கிறது என்றார் அவர்.

இந்திய மருத்துவ மூலிகைகளில் மரபணு மாற்றுத் தொழில்நுட்பம் புகுத்தப்படுதல் குறித்து நடைபெற்ற அரங்கில், "பூவுலகின் நண்பர்கள்" மற்றும் தேசிய சித்த மருத்துவ மருந்தியல் தரநிர்ணய குழுமத்தின் உறுப்பினராக உள்ள நான் பங்கேற்றேன். பல்வேறு மூலிகைகளில் உள்ள உட்கூறுகளின் ஒருமித்த செயல்பாடை, மரபணு மாற்றப்பட்ட மூலிகைகள் ஒட்டுமொத்தமாக சிதைத்துவிடும். மூலிகையின் அடிப்படை அம்சங்களான சுவை, விரீயம், தன்மை என அனைத்தையும் மாற்றி, மாசுபடுத்தி மருத்துவ நலனை பாழ்படுத்த கூடும் என்ற கருத்தை அப்போது கவனப்படுத்தினேன். 

‘அந்த்ரா’ அமைப்பின் கால்நடை மருத்துவர் சாகரி ராம்தாஸ் பேசுகையில், நமது வேளாண் ஆதாரங்களில் ஒன்றான கால்நடைகளையும் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் பாதிக்கின்றன. பி.டி. பருத்திப் பயரின் எச்சங்களான இலை தழை, கொட்டைகளை சாப்பிட்ட ஆடு மாடுகள் ரத்தம் கக்கி செத்ததையும், தீவிர ஷிtக்ஷீமீssக்கு ஆளாக்கப்பட்டு, அதனால் றிணீக்ஷீtமீறீறீஷீsவீs எனும் நோயால் மடிந்ததையும் பிரேதப் பரிசோதனை ஆய்வுகளடன் தெரிவித்தார்.

பஞ்சாப் மாநிலத்தில் 2006-09 வரை ஒவ்வொரு டிசம்பர்-ஜனவரி மாதத்தில், அதாவது பி.டி. பருத்தி பயிரிட்ட பின்னர் விவசாயிகளிடம் ஏற்பட்ட நலப்பிரச்சைனைகளை அகில இந்திய ஆயுர்வேத மருத்துவ சம்மேளத் தலைவர் மருத்துவர் உதயகுமார், புள்ளி விவரங்களுடன் வெளியிட்டார். எதிர்பாராத ஒவ்வாமையால் அவதிப்பட்ட அந்த விவசாயிகள், மீண்டும் நிலம் பக்கமே போக முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டிருந்ததை அவரது ஆய்வு தெளிவாகக் கூறியது.

இப்படி மரபணு மாற்றுப் பயிர்கள் மனிதர்களிடமும் கால்நடைகளிலும் ஏற்படுத்தும், ஏற்படுத்தவுள்ள பிரச்சினைகளைப் பற்றி அறிந்து கொண்ட பின்னர், இக்கருத்தரங்கின் நட்சத்திரப் பேச்சாளர் பேராசியர் செரலினியின் பேச்சு மேலும் பல ஆதாரங்களை நறுக்குத் தெறித்தாற் போல முன்வைத்தது. பிரான்ஸைச் சேர்ந்த இந்த விஞ்ஞானி, ஐரோப்பாவில் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் இன்று வரை நுழையாமல் தடுத்து வருகிறார். 30 ஆண்டுகளாக உயிரி தொழில்நுட்பம் குறித்து ஆராய்ந்து வரும் இவர், மான்சான்டோ நிறுவனம் நம் நாட்டின் சமர்ப்பித்துள்ள பி.டி. கத்தரிக்கான சோதனை முடிவுகளை ஆராய்ந்து, அதன் ஓட்டைகளை நம் அரசுக்கு அறிவித்தவர்.

"5000 ஆண்டு பரிணாம வளர்ச்சியில் உருப்பெற்று வந்த ஒரு பயிரின் மரபணுவை வெட்டி ஒட்டி, புதிய பயிராக மாற்றுவதற்கு வெறும் 90 நாள் பரிசோதனை முடிவுகள் எப்படி போதுமானதாக இருக்கும்? மான்சான்டோ சமர்ப்பித்த ஆய்வு முடிவுகள் ‘சோடிக்கப்பட்டவை’, ‘போலியானவை’ அல்லது ‘தவறானவை’. மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் இந்திய மக்களின் ஒட்டுமொத்த நலனையும் உறிஞ்சப் போகின்றன. மரபணு மாற்றப்பட்ட பயிருக்கு அனுமதி அளிப்பது பெரிய மருத்துவ சந்தைக்கு பாதை அமைத்துத் தரும் வேலை. ஓவ்வாமை, புற்றுநோய், எதிர்பாற்றல் குறைவால் வரும் நோய்கள், மலட்டுத்தன்மை, குடல் நோய்கள், மருந்துகள் வேலை செய்யாத நிலைமை என பல பிரச்சனைகளை நாம் எதிர்நோக்க வேண்டியிருக்கும்" என்றார் செரலினி.

GEACக்கு அவரது ஆய்வறிக்கையை அனுப்பிய போது, அதன் உறுப்பினர்கள், அறிஞர்கள் அவரை தொடர்பு கொண்டு, அவர் சுட்டிக்காட்டும் தவறுகள் மான்சான்டாவின் சோதனை அறிக்கையில் எங்கு உள்ளன என்று மின்னஞ்சல் அனுப்பி கேட்டுள்ளனர். பக்கம் எண், பத்தி எண் குறிப்பிட்டு செரலினி பதில் அளித்துள்ளார். இதிலிருந்து ஒட்டுமொத்த மக்கள் நலனுக்கே உலைவைக்கப் போகும் இந்த ஆய்வை படித்துக்கூட பார்க்க முடியாத மேதாவிகளின் பிடியில் நம் மக்களும், அவர்களது உடல்நலமும் இருக்கும் அவல நிலையை உணர்ந்து கொள்ள முடிந்தது.

இப்படி அரசும், அரசின் கண்காணிப்பு அமைப்புமே பன்னாட்டு நிறுவனங்களின் கிளை நிறுவனங்களாக மாறிவிட்ட சூழ்நிலையில், மரபணு மாற்றப்பட்ட பயிர்களில் இருந்து தப்பிப்பதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. அது, அந்தக் கத்தரிக்காய்க்கு முறைப்படி அனுமதி அளிக்கக் கூடாது என்று வலுவாக எதிர்த்து குரல் கொடுப்பதுதான். இல்லையென்றால், முதலில் மரபணு மாற்றுப் பயிர்களுக்கு அடிமையாகும் நாம், பிறகு ஒட்டுமொத்தமாக மருத்துவமனைகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும், மேலை நாடுகளுக்கும் காலங்காலமாக அடிமையாக இருக்க வேண்டியதுதான்.

- மருத்துவர் ஜி. சிவராமன்

Pin It