“ஒரு ஊரை அழிச்சா நாடு நல்லா இருக்கும் என்று சொன்னால் ஒரு ஊரை அழிக்கலாம், ஒரு குடும்பத்தை அழித்தால் ஒரு ஊர் நல்லா இருக்கும்னா ஒரு குடும்பத்தை அழிக்கலாம்” என்ற பழமொழி நம் அனைவரிடமும் பிரபலமான ஒன்று. ஆனால் இந்த பழமொழியையும் மேலே குறிப்பிட்டுள்ள நேருவின் வார்த்தைகளையும் இன்று மறுபரிசீலனை செய்ய வேண்டுடிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. ஏனெனில், வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் தேசம் முழுவதும் அரசால் பலஆயிரக்கனக்கான மக்கள் கட்டாய இடப்பெயர்ச்சி செய்யப்பட்டு உள்நாட்டு அகதிகளாக மாற்றப்பட்டுள்ளனர், தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. வளர்ச்சி திட்டங்கள் காரணமாக அரசால் நடத்தப்படும் கட்டாய இடப்பெயர்ச்சி மாபெரும் சமூக பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது. சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம், எல்லோருக்கும் சம உரிமை இருக்கிறது என்று இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் கூறுகையில், கட்டாயமாக நடத்தப்படும் இந்த இடப்பெயர்ச்சி மனித உரிமை மீறலாக கருதப்பட வேண்டும் என்ற விவாதம் எழுந்துள்ளது. மறுபுறத்தில் இந்த வளர்ச்சித் திட்டங்கள் யாருக்கு பயன்படுகிறது, யாரை பாதிக்கிறது என்று விவாதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இந்த விவாதங்களை முன்னெடுத்து செல்லும் விதமாக, குடிசை மக்கள் வாழ்வுரிமை இயக்கம் உருவாக்கியுள்ள “யாருக்காக சிங்காரச் சென்னை?” என்ற ஆவனப்படம் அமைந் திருக்கிறது.

சென்னையில் நடைபெற்றுள்ள வளர்ச்சித் திட்டங்கள் அதோடு சேர்ந்து நடைபெற்ற கட்டாய இடப்பெயர்ச்சி எந்த பகுதி மக்களை பாத்திருக் கிறது, இடப்பெயர்ச்சியால் முன்னுக்கு வந்துள்ள சமூக பிரச்சனைகள் ஆகியவை இப்படத்தின் மையக்கருத்தாக அமைந்திருக்கிறது.

இந்த படத்தின் தொடக்கத்தில், ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள பன்நாட்டு கம்பெனிகளின் போக்குவரத்திற்காக மதுரவாயில் முதல் துறைமுகம் வரை சாலைகள் அமைக்கும் திட்டத்தையும், அந்த திட்டத்திற்காக ஸ்டாலின் நகர் இடிக்கப்பட்டதையும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த காட்சி கட்டாய இடப்பெயர்ச்சி ஏற்படுத்தும் பேரபாயத்தை தெளிவாக கட்டுகிறது. தொடர்ந்து வரும எல்லா காட்சிகளும் பல்வேறு கோணங்களில் விவாதங்களை எழுப்பும் விதமாகவே அமைந்திருக்கிறது.

நந்தம்பாக்கம் அடையறு ஆற்றங்கரையோரம் வாழ்ந்து வந்த மக்களை அங்கிருந்து அகற்றி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கன்னடபாளையம் என்ற இடத்தில் தமிழக அரசு குடியமர்த்தியுள்ளது. இடப்பெயற்ச்சி செய்யப்பட்டவர்கள் அனுபவித்து வரும் துன்பங்களையும் துயரங்களையும் இந்த ஆவணப் படம் பதிவு செய்துள்ளது. “நான்கு நாட்களுக்கு ஒரு முறை ஒரு லாரி தண்ணீர், பஸ் வசதி கிடையாது , சாலைவசதி கிடையாது” என்று அவர்கள் படும் கஷ்டங்களை பார்க்கும் பொழுது நம் அனைவரையும் ஒரு நிமிடம் ஸ்தம்பிக்கச் செய்கிறது. “மழைக்காலத்தில் எங்கள் குடிசைகள் நீரில் மிதக்கிறது” என்று செல்லும் காட்சியை பார்க்கும் பொழுது, “தமிழக மக்களே, தமிழக மக்களே,நீங்கள் என்னை கடலில் தூக்கிப்போட்டாலும் நான் கட்டுமரமாக மிதப்பேன், அதில் நீங்கள் ஏறி பயணம் செய்யலாம்” என்று கூறியவரின் வார்த்தைகள் எங்கே போனது என்ற கேள்வியை நம் அனைவர் மத்தியிலும் எழுப்புகிறது.

அதே பகுதியில் வாழும் ஒருவரிடம் எந்த சாதியை சார்ந்தவர் என்று கேட்கும்பொழுது “நான் எஸ்.சி சார், இங்கு 108 வீடு இருக்கு எல்லோரும் எஸ்.சி சார்” என்று சொல்லும் காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த காட்சி “இப்ப எல்லாம் எங்க சார் அவங்க கஷ்டப்படுராங்க அந்த காலம் மாறிப்போச்சு சார் கல்வி, வேலை என்று எல்லாத்துலயும் அவங்களுக்கு இடஒதுக்கீடு இருக்கு நல்லா சம்பாதிக்காங்க சார்” என்று சொல்லும் நகரத்து நாகரீக மனிதர்களுடைய வார்த்தைகள் எவ்வளவு போலியானவை என்பதை அம்பலப்படுத்துகிறது. மறுபுரத்தில், இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக ஊருக்கு வெளியே குடியமர்த்தப்பட்டிருந்த தாழ்த்தப்பட்ட மக்கள், பல தொழில்நுட்ப வளர்ச்சி கண்ட இந்த காலகட்டத்தில் கூட ஊருக்கு வெளியே தள்ளப்படுவது நவீன தீண்டாமையின் வடிவம் என்ற தளத்தில் விவாதத்தை எழுப்புகிறது. மேலும், இந்த காட்சி இன்னும் ஆழமாக சென்று இந்திய சமூகத்தில் சாதியும் வர்க்கமும் எவ்வாறு ஒன்றோடு ஒன்று பின்னிப்பினைந்திருக்கிறது (எவ்வாறு தாழ்த்தப்பட்டமக்கள் பொருளாதார ரீதியாகவும்,சாதிரீதியாகவும் ஒடுக்கப் பட்டிருக் கிறார்கள்) என்பதை எதார்த்தமாக பதிவு செய்திருக்கிறது.

போரூர் ரெட்டேரி கரையோரம் இருந்த சேரியை ஆக்கிரமிப்பாக கருதி, ஏரி பாதுகாப்பு என்ற பெயரில் அரசு குடிசைகளை அகற்றியது. இந்நிகழ்வால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் பேட்டி இப்படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பெண் “காலையில் 20 புல்டோசர் 2000 போலீஸ் வந்தாங்க, ஏரியை அக்கிரமிச்சிருக்ககோம்னு சொல்லி எங்க குடிசையை இடிச்சாங்க, பூகம்பம் நடந்தா எப்படி இருக்குமோ அப்படிஇருந்தது, ஆனா இப்போ அதே இடத்துல இராமச்சந்திரா கல்வி அறக்கட்டளை மண்னைக் கொட்டி அவங்களோட பட்டா நிலம்னு போர்டு வச்சிருக்காங்க” என்று சொல்வதை பார்க்கும் பொழுது இந்த அரசு எந்த வர்க்கத்தினுடைய (பணக்கார அல்லது முதலாளி) நலனை பாதுகாக்கிறது என்பதை அனைவராலும் புரிந்துக்கொள்ள முடியும். மேலும் இந்த கருத்தை தெளிவுபடுத்தும் விதமாக “யாருக்காக அரசு நம்மை ஏறி மிதிக்கிறது? நாம் சிந்தும் கண்ணீர் பாருக்காக?” என்று இப்படத்தில் வரும் வார்த்தைகளும், ஸ்டாலின் நகரை இடிக்கும் பொழுது “46 வருசமா நான் பிறந்து வளர்ந்த இடத்தை இடிக்குறாங்களே என்னைக்கும் இப்படி நடந்து இல்லையே” என்று ஒரு பெண் கதறி அழும் காட்சியும் அமைந்திருக்கிறது.

ஒட்டு மொத்தமாக இந்த ஆவணப்படம் 1990களுக்கு பிறகு அரசு கடைபிடித்துவரும் புதிய பொருளாதார கொள்கை ஏழைமக்களுக்கு எந்த விதத்திலும் பயன்படவில்லை என்பதை தெளிவாக பதிவு செய்திருக்கிறது. மேலும் இதற்குமுன்னர் காட்டாய இடப்பெயர்ச்சி செய்யப்பட்டவர்கள், பள்ளிக்கூடம் இல்லாமை, சுகாதாரமின்மை, போக்குவரத்து வசதியின்மை, வேலையின்மை என கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் பொழுது தொடர்ந்து கட்டாய இடப்பெயர்ச்சி செய்வதை தடுத்து நிருத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

இந்த படம் சமூக மாற்றத்திற்க்கான படம் என்ற வகையில் அனைவரும் பார்க்க வேண்டிய படம். மேலும் குடிசையில் வாழம் மக்களுக்கான போராட்டத்திற்கு பேருதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இறுதியாக, இந்த படம் நம் அனை வரிடமும் ஒரு கேள்வியை எழுப்புகிறது.

இந்த அரசு யாருக்காக?

மக்களுக்காகவா? பெரும் முதலாளிகளுக்கா?

‘யாருக்காக சிங்காரச் சென்னை’ ஆவணப்படம் குறித்த விமர்சனப் பதிவு | தயாரிப்பு, இயக்கம் : குடிசை மக்கள் வாழ்வுரிமை இயக்கம்.

Pin It