வண்ணப் புகைப்படங்களுடன் கூடிய சுற்றுச்சூழல் புத்தகங்கள் தமிழில் மிகக் குறைவு. அதுவும் மிகவும் அரிதான யாரும் தொட்டிராத இரவாடிகள் குறித்து புகைப்படக் கலைஞர் ஏ.சண்முகானந்தம், தடாகம் பதிப்பகம் கூட்டு முயற்சியில் தமிழின் தவிர்க்க முடியாத புத்தகமாக வெளிவந்துள்ளது. பொதுவாக இரவாடிகள் என்று சொல்லப்படும் ஆந்தை, தேவாங்கு, முள்ளம்பன்றி, கூகை போன்றவை சாதாரண மக்களின் பார்வையில் கெட்ட சகுணமாகவும் பார்க்கக்கூடாத உயிரினமாகவும் கருதப்படுகிறது. ஆனால் இரவின் உலகம் மிகவும் வியப்பிற்குரியது. எல்லா உயிரினங்களும் சுற்றுச்சூழல் கண்ணிக்குள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு இரவு பகல்கள் இல்லை. ஒன்று அழிந்தாலும் சமநிலை குலைந்துவிடும். இதைக் கவனமாகக் கொண்டு சண்முகானந்தம் இரவில் வலம்வரும் உயிரினங்கள் அனைத்தையும் புகைப்படங்களுடன் முறையாகத் தொகுத்துள்ளார்.

iravadikalஇந்தத் தொகுப்பு புதிதாக வாசிப்பவர்களுக்கு ஆச்சரியத்தைத் தரக்கூடியது. மேலும் இரவாடிகளை புகைப்படம் எடு¢ப்பதென்பது பகலில் புகைப்படம் எடுப்பதைவிட இரு மடங்கு கூரிய கவனத்தை வேண்டுகிறது. சண்முகானந்தத்தின் பொறுமை ஆமையை ஒத்தது. இது இரவாடிகள் குறித்து முதல் புத்தகமாக இருந்தாலும் உயிரினங்களின் ஆங்கிலப் பெயர்கள், ஒவ்வொரு உயிரினங்களின் குறிப்புகள், அறிமுகங்கள் ஆகியவை புத்தகத்தைச் செழுமைப்படுத்துகிறது.

பத்து விழுக்காட்டிற்கும் குறைவான இரவாடிகள் மீதி 90 விழுக்காட்டு உயிரினங்களைவிட மிகவும் முக்கியம் வாய்ந்தது என்பதை இப்புத்தகம் தெளிவாக முன்வைக்கிறது. ஆனால் நாம் மறுக்க முடியாத உண்மை என்னவெனில் நம்முடைய முன்னோர்கள் இரவாடிகளை அறிவின் குறியீடாகக் கருதினார்கள்.

மூங்ஙணத்தான், தேவாங்கு, கூகை, பக்கி, மரப்பாச்சை போன்ற சொற்கள் தமிழின் தொன்மையை உணர்த்து கின்றன. இந்தப் புத்தகம் பள்ளி மாணவர்களுக்கு பாடப் புத்தகமாக வைக்கப்பட வேண்டும். குறிப்பாக நகர மாணவர்கள் தங்களைச் சுற்றி இந்த இரவாடிகள் நகரின் புழுக்கத்திலும், மாசு நிறைந்த காற்றிலும், வாகனங்களின் அதீத ஒலிகளுக்கிடையிலும் இவை பதுங்கியிருப்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும். மேலும் இரவின் அமைதியில் அவை கொடுக்கும் சத்தங்கள் மனித இனத்திற்கு ஏதோ ஒரு செய்தியைச் சொல்கிறது.

இரவாடிகளின் பின்னால் அலைபவர்களுக்கு அச்செய்தி நன்றாகவே கேட்கிறது. நாங்கள் வாழ எங்களுக்கு மரங்களை விட்டு வையுங்கள் என்று அவை கதறுகின்றன. டீசல், பெட்ரோலின் மாசு எங்களை வாழவிடுவதில்லை என்று திரும்பத் திரும்பச் சொல்லுகின்றன. பறவைகளையும் விலங்குகளையும் பொறுத்தவரை மனித இனம் அவற்றை விரும்புகிறபோது அவர்களோடு அவை இணைந்துகொள்கின்றன.

மனிதன் விரும்பாதபோது அவை தொலைதூரத்திற்குச் சென்றுவிடுகின்றன. ஆறுதல் சொல்ல முடியாத பறவைகளின் அழுகைகளை மனிதன் புரிந்துகொள்ள அவன் பறவையாக வேண்டியிருக்கிறது, சிறகை விரிக்க வேண்டியிருக்கிறது, தன்னுடைய தேவைக்கதிகமான பளுவை விட்டுவிட வேண்டியிருக்கிறது. ஆனால் இது எதுவுமே மனிதனால் சாத்தியப்படாத உலகத்திற்கு வந்துவிட்டோம்.

மனிதன் பறவையாகும் காலம் வரும். அப்போது இரவுமில்லை; பகலுமில்லை. அது இரவாடிகளுக்காக மனிதன் வாழும் காலம்.

தமிழகத்தின் இரவாடிகள் ஓர் அறிமுகம்

ஆசிரியர்: ஏ.சண்முகானந்தம்,

வெளியீடு: தடாகம், 112, முதல் தளம், திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர், சென்னை 41, தொலைபேசி: 8939967179,

விலைரூ.300

Pin It