tree birdsஉழவனின்
உள்ளங்கை யெங்கிலும்
நமது
ஆயுள் ரேகைகள்...

***

மீன் வற்றிய
குளமென்று
எழுதியவன்
பசியறியாக் கவிஞன்.

நீர் வற்றி
விதை மாய்ந்ததை
அறியாதவன்.

***

ஒரு பறவைக்கு
உணவு கொடுத்து
தன் இனம் தழைக்க
விதை பரப்புகிறது
மரம் !

சிட்டுக் குருவியைக் கொன்று
லேகியம் உண்டு
வம்ச விருத்திக்கு
வானம் பார்த்து
காத்திருக்கும் கிராதகா !

வானம்
வெறுமையாய் தானே
தெரிகிறது ?

***

நடனங்களின் முடிவில்
பாராட்டப்படுகிறாள்
அல்லது ஆசீர்வதிக்கப்படுகிறாள்
நடன தாரகை

தூரிகையோட்டத்தின் போதே
வியப்புக்குள்ளாக்கி இறுதியில்
தலைவணங்கச் செய்கிறான்
ஓவியன்

காலம் தெரியாத காலத்தில்
கலை செய்த சிற்பிகள்
பெருமையின்
அடிநாதமாகிவிட்டனர்
பெயர் தெரியாவிடினும்

விதை விதைத்து
உயிர் வளர்ப்பார் யாரும்
கலைஞனில்லையென்றாலும்
காலம் தாழ்த்தாமல்
மனிதனென்றாவது கொள்ளுங்கள்.

***

நதி பற்றி
என்ன
எழுதினாலும் தகும்.

எவ்வளவு
எழுதினாலும்
தீராது.

நதி பற்றி
பொருள் விளக்கம்
எழுதாமல்
என்ன எழுதினாலும்
பயனற்றுப் போகுமோ
இன்னுமோர்
தலைமுறை கடந்து!

***

அவன்
உயிர்த்தெழுந்தது
மூன்றாவது நாளா என்று
தெரியாது

ஆனால் அவன்
விதைத்து மாண்ட
மூன்றாவது நாள்
மழை பெய்தது

***

அனைத்தையும்
வெட்டி முடிக்கும் வரை
இளைப்பாறிட நீங்கள்
விட்டு வைத்திருக்கும்
அந்த
ஒற்றை மரத்தில் தான்
செதுக்கப்பட்டுள்ளது உங்கள்
சந்ததியின் பெயர்கள்!

***

அனல் காற்றில் சுவாசம்
சாம்பலை உதிர்க்கிறது

திசையெங்கும்
ஆலோசனைகள்.

கண்டன ஆர்ப்பாட்டங்கள்
நடத்தப்படுகின்றன.

Pin It