நாம் எவ்வளவு மோசமான நிலைமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை கணக்கீடுகளும், எண்களுமே சில நேரம் தலையில தட்டிச் சொல்கின்றன.

- உலக சுகாதார நிறுவன அறிக்கையின்படி ஒவ்வோர் ஆண்டும் காற்று மாசுபாட்டால் இந்தியாவில் பலியாபவர்கள் எண்ணிக்கை 5,27,700. 

- உலக சுகாதார நிறுவன அறிக்கையின்படி இந்தியாவில் 21 சதவீத தொற்றுநோய்கள் மாசுபட்ட நீரால் பரவுகின்றன. இந்தியாவில் வயிற்றுப்போக்கால் (டயேரியா) மட்டும் ஒரு நாளைக்கு 1,600 பேர் இறக்கின்றனர்.

- இந்தியாவில் உருவாகும் கழிவுநீரில் வெறும் 22 சதவீதம் மட்டுமே சுத்திகரிக்கப்படுகிறது. எஞ்சிய 78 சதவீதம் ஆறுகளில் கலந்து கடுமையாக மாசுபடுத்துகிறது. தில்லி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் உருவாகும் கழிவுநீர், 19 வடிகால்களின் வழியாக யமுனை நதியில் கலக்கிறது. ஒரு நாளைக்கு 32,960 லட்சம் லிட்டர் கழிவு நீர் தில்லியில் உருவாகிறது. அதில் 6300 லட்சம் லிட்டர் மட்டுமே சுத்திகரிக்கப்படுகிறது.

- பெருநகரங்கள் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான டன் (ஆயிரம் கிலோ) திடக்கழிவை உருவாக்குகின்றன. இதில் பெரும்பாலானவை மக்காதவை. தில்லி மட்டும் ஒரு நாளைக்கு 4,000 டன் திடக்கழிவை உருவாக்குகிறது. எதையுமே கொட்ட இடமில்லாமல் போகும்போது, குப்பைகளை எங்கு கொட்டப் போகிறோம்?

- பழைய கணினிகள், மின்கலங்கள் போன்றவற்றை முறையற்று கழிவாகக் கொட்டுவதால், மண், காற்று நிலத்தடி நீர் ஆகியவை நச்சுத்தன்மை மிகுந்ததாகவும், புற்றுநோயை உருவாக்கும் வகையிலும் மாறுகின்றன. விரைவில் இந்தியாவில் 20 லட்சம் பழைய கணினிகள் அகற்றப்படும் என்பதால், 14,427,000 கிலோ பிளாஸ்டிக், 3,962,700 கிலோ காரீயம், 1,386 கிலோ பாதரசம் கழிவாக வெளியேற்றப்படும்.

- 20 ஆண்டுகளுக்கு முன்னதாகப் பெற்றதைவிட தற்போது 5 சதவீதம் குறைவான சூரிய ஒளியையே இந்தியா பெற்று வருகிறது. தொழிற்சாலைகள் வெளியிடும் நுண்ணிய மாசுத் துகள்கள் படர்ந்துள்ளதால் இந்திய துணைக்கண்டத்தைச் சூழ்ந்துள்ள மேகம், பூமி மீது சூரிய ஒளி படுவதைத் தடுக்கிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகள்: குறைந்த மழைப்பொழிவு, வேளாண் உற்பத்தி குறைவு, மரங்களின் பரப்பு குறைதல்.

- அதிவேகமாக அழிந்து வரும் காடுகளால் நமது காட்டுயிர்களின் உறைவிடங்கள் அழிந்து, அவை அழிவை நோக்கி தள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் 12,000 சதுர அடி கிலோ மீட்டர் பரப்பு காடுகள் அரசின் அனுமதியோடு அழிக்கப்பட்டுள்ளன!

- ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி) சுற்றுச்சூழல் மாசுபாட்டால் மட்டும் 4.5 சதவீதம் வீணாய் போகிறது. சீனாவைப் பொருத்தவரை அந்த நாட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.6 சதவீதமே மாசுபாட்டால் வீணாகிறது. இது வளர்ந்த நாடுகளைவிட 1-2 சதவீதம் குறைவு.

 

Pin It