மலைகளின் அரசி ஊட்டியில் வாழ யாருக்குத்தான் பிடிக்காது. சுட்டெரிக்காத வெயில், உடலுக்கு இதமான தட்பவெப்ப நிலை, காணும் இடமெல்லாம் பசுமை. அங்கு வாழ முடியாது என்று சொல்வதற்கு ஏதாவது காரணம் இருக்க முடியுமா? ஆனால் இதெல்லாம் பழைய கதையாகிவிட்டது. ஊட்டி அச்சனக்கல் பகுதியில் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றும் லூயிஸ் என்பவரின் கான்கிரீட் கட்டடம் மீது இரண்டு, மூன்று பாறைத்துண்டுகள் சாரிய, அந்த வீடே மண்ணோடு மண்ணாய் சிதைந்து ஏழு மனிதஉயிர்களை நொடியில் விழங்கிவிட்ட சம்பவத்தை அப்பகுதி மக்கள் விவரிக்கும்போது, நமக்கு நெஞ்சம் பதறுகிறது.

விஷயம் கேள்விப்பட்டு நான் நீலகிரிக்குச் சென்றிருந்தபோது மழை ஒய்ந்திருந்தது. சமாதானப்படுத்த முடியாத வலியாலும் துயரத்தாலும் துவண்டு கிடந்த அந்த மக்களை ஆற்றுப்படுத்துவதற்கு என்னிடம் ஆறுதல் வார்த்தைகள் இல்லை. வாழ்வாதாரங்களை இழந்து நிவராண முகாம்களில் நிர்கதியாய் நிற்கும் மக்களின் முகங்களில் மிரட்சி படிந்து கிடந்தது. மீட்புப்பணிகளால் இதை துடைத்தெறிந்துவிட முடியாது என்று தோன்றியது. ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர், நவம்பரில் பெய்யும் வடகிழக்குப் பருவமழை நீலகிரியையும், அங்கு வாழும் மக்களையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிடுகிறது. சமவெளிப் பகுதி மக்கள் அங்கு குடியேற ஆரம்பித்த காலமான 1865ஆம் ஆண்டு தொடங்கி 2009 வரையிலும் நூற்றுக்கணக்கான உயிர்பலியும் பொருள் நாசமும் இப்படி நிகழ்ந்துள்ளன.

புவி வெப்பமடைதலால் பருவகாலங்களிலும் பருவமழைப் பொழிவிலும்  ஏற்பட்ட மாற்றங்களுக்கும், நீலகிரியில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கும் தொடர்பு இருக்கிறது என்று சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை மூன்று நாட்களில் பெய்துவிட்டது - 630 மி.மீ. மழையால் 2000 வீடுகள் சேதமடைந்தன, 60 வீடுகள் முற்றிலும் மண்ணில் புதைந்தன, வீடிழந்த 1,100 பேர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனர். மாவட்டம் முழுவதும் 105 கி.மீ. சாலைகள் பாளம்பாளமாய் வெடித்து 543 இடங்களில் சரிவை ஏற்படுத்தியுள்ளன. 145 சிறு பாலங்களும் தடுப்புச்சுவர்களும் இருந்த இடத்தை விட்டு ஆயிரம் அடி தூக்கிவீசப்பட்டுள்ளன.

ஏன் இவ்வளவு கோபம்?

உலகின் செழிப்பான புல்வெளிப் பரப்பை கொண்ட நீலகிரி காட்டுப் பகுதியை இந்தியாவின் முதல் உயிர்க்கோள மண்டலமாக (பயோஸ்பியர்) யுனெஸ்கோ அறிவித்து கௌரவித்துள்ளது. உலகில் உள்ள புற்களில் 1,220 வகை இந்த காட்டுப் பகுதிகளில் உள்ளன. இந்த புற்கள்தான் மழைநீரை சேமித்தும், வடிகட்டியும் ஊற்றுக்களாய், ஓடைகளாய், சிற்றாறுகளாய், நதியாய் பெருக்கெடுத்து ஓடுகின்றன. செல்லும் இடமெல்லாம் பயிர்களையும், தாவரங்களையும் வளர்த்து செழிப்பை பரப்புகின்றன. ஆனால் அவை என்ன செய்து என்ன பிரயோசனம்? நூற்றாண்டுகளுக்கு மேலாய் தொடரும் காடழிப்பில் 30 விழுக்காடு நீலகிரி புல்வெளிப் பகுதிகள் அழிக்கப்பட்டு விட்டன. நீலகிரியின் தனித்துவமே நதிகளின் கருவறையாகத் திகழும் இந்த சோலைக்காடுகளும் புல்வெளிகளும்தான். ஆனால் அதை வைத்துக் கொண்டு கள்ளக் காசு சேர்க்க முடியாதே?

1815ஆம் ஆண்டிலிருந்து 1830 வரை கோவை கலெக்டராக இருந்த ஜான் சல்லிவன்தான் நீலகிரி மலைப்பகுதியில் கால் பதித்த முதல் அந்நிய மனிதர். அன்று அவர் தொடங்கி வைத்த விஷ சுழற்சியின் பின்விளைவுகளை நாம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். திப்பு சுல்தானும் நீலகிரி வனப்பகுதியை தமது ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக அறிவித்துக் கொண்டிருந்தார். அந்தக் காலத்தில் சமவெளியில் இருந்த யாருமே மலையேறும் துணிவையோ, உடல்பலத்தையோ பெற்றிருக்கவில்லை. ஆதிக்குடிகளான தோடர், கோத்தர், பளியர், சோளகர், இரும்பர் பழங்குடிகளே அங்கு வாழ்ந்து வந்தனர். இந்த ஆதிக்குடிகளின் நிலங்களை அபகரித்து, சில நூறு பேரை கொன்றழித்து அவர்களின் குருதியின் ஈரத்தில்தான் நீலகிரியின் முதல் கட்டிடம் எழுந்தது. சமவெளியில் வெயில் பொறுக்க முடியாமல் மலையேறிய ஆங்கிலேயர்கள் தொடங்கி வைத்த அழிவு வேலையை, விடுதலை பெற்ற பிறகு "நம் நாட்டை காப்பதையே முழு நேர வேலையாகச் செய்து வரும்" நமது ஆட்சியாளர்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்!

"நாட்டின் வளர்ச்சி" என்ற பெயரில் வெட்டுமரத் தொழிலும் தேயிலைத் தோட்டங்களும் எந்தக் கட்டுப்பாடும் இன்றி மலைத்தொடர் முழுவதும் பெருகின. தோட்டங்களைத் தொடர்ந்து செல்வந்தர்கள் குடியேறினார்கள், தங்களுக்கு ஊழியம் செய்ய கூடவே அடிமைகளையும் அழைத்துப் போனார்கள். செல்வந்தர்கள் சிரமப்படலாமா? சாலைகளும் குடியிருப்புகளும் பெருகின. நீலகிரி மாவட்டத்தில் தற்போது ஒன்பது லட்சம் பேர் வாழ்கிறார்கள். இதில் ஒரு லட்சத்து இருபத்து ஒன்பதாயிரம் பேர் ஊட்டி நகரில் வாழ்கிறார்கள். இன்றைக்கு பல ஆயிரம் ஏக்கர் பரப்பு தேயிலைத் தோட்டங்கள் பத்துப் பதினைந்து பணக்காரர்களின் கையில் உள்ளன. நீலகிரியின் மொத்த விவசாயப் பரப்பில் 80 விழுக்காடு தேயிலைத் தோட்டங்கள். அதில் லாபம் குறைவதை உணர்ந்தவுடன் இப்போது மலர் வணிகத்தில் இறங்கிவிட்டனர். அரசும் முதலாளிகளும் அத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை. மலைகளின் அரசியை, சுற்றுலாத்தலங்களின் அரசியாக மாற்ற கங்கணம் கட்டினார்கள். பக்கத்து ஊர்காரர்கள் முதல் பாலிவுட் திரைப்பட குழுக்கள் வரை ஊட்டியை மொய்த்தன. ஆண்டுக்கு 23 லட்சம் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகளுக்காக என்ற பெயரில் நவீன விடுதிகளும் உணவகங்களும் உல்லாச விடுதிகளும் கானகத்தின் பெரும்பகுதியை சூறையாடின. மலைகளின் அரசி காங்கிரீட் காடுகளின் அரசியானாள்.

"சுற்றுச்சூழலும் வளர்ச்சியும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாத நாணயத்தின் இரு பக்கங்கள். மட்டுமீறிய நுகர்வுப் போக்கு சாதாரண வாழ்க்கை முறையாகி விட்டதும், இயற்கைவளங்களை வரம்பின்றி சூறையாடும் அபத்தமும்தான் சுற்றுச்சூழலின் முதன்மையான எதிரிகள்" என்று கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ ரியோ பூமி மாநாட்டு அரங்கில் நிகழ்த்திய உரையை நீலகிரியுடன் பொருத்திப் பார்க்க வேண்டும். நாம் புரிந்துகொண்டிருக்கும் வளர்ச்சிக்கும் நிரந்தர வளர்ச்சிக்குமான வேறுபாட்டை புரிந்துகொண்டால் மட்டுமே, நீலகிரியின் காடழிப்புக்கும் இன்றைய நிலச்சரிவு அழிவுக்கும் இடையிலான தொடர்பை புரிந்து கொள்ள முடியும். தன் சூழலுக்கேற்ற புற்களையும் சோலைக்காடுகளையும் இழந்துவிட்ட நீலகிரி கொஞ்சம்கொஞ்சமாக மண்ணின் மீதான பிடிமானத்தையும் இழந்துவிட்டது. மண்ணுக்கு எந்தப் பலனையும் தராத தேயிலை, காய்கறி, பழத்தோட்டம், பணப்பயிர்கள் கெட்டிதட்டிய மண்ணை நெகிழச் செய்து விட்டன. காடழிப்பு, நகர்மயமாக்கம், வளர்ச்சிப்பணிகள், சாலைப் பெருக்கம் ஆகியவைதான் நிலச்சரிவுக்கும் நிலவெடிப்புக்கும் முதன்மை காரணங்கள்.

நீலகிரி மலைக்குன்றுகள் 70 விழுக்காடு மண்ணாலும் 30 விழுக்காடு பாறைபடிவங்களாலும் உருவானவை. மந்தாடா, மரப்பாலம், வேலிவியூ போன்ற பகுதிகள் மழைக்காலங்களில் சரியும் ஆபத்தில் இருப்பதாக ஆராய்ச்சி செய்து மண்ணியலாளர்கள் அறிவித்ததை ஆட்சியாளர்கள் உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை. அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இலவசப் பட்டாக்களையும் வீடுகட்ட 80 ஆயிரம் நிதியுதவியும் கொடுத்திருக்கிறது அரசு. தண்ணீரின் மேல் வீடு கட்டிக் கொடுத்து, முழுகிய பின் புதிய வீடு கட்டுவதற்கு காசு கொடுப்பது போலத்தான் இருக்கிறது இது.

கடந்த பதினைந்து ஆண்டுகளாக நீலகிரியில் இயற்கைப் பேரிடர் நிகழும் போதெல்லாம் செப்பனிடுவதற்காக பல கோடி மக்கள் பணத்தை அரசு செலவழித்துள்ளது. ஆனால் கட்டப்படும் தடுப்புச்சுவர், தடுப்பணை, சிறுபாலங்கள், சாலைகள் யாவும் அடுத்த ஆண்டு மழைக்காலத்தில் காணாமல் போகும் லட்சணத்தில்தான் கட்டப்படுகின்றன. அத்துடன் ஊட்டி நகரின் பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் வடிகால்கள் மறிக்கப்பட்டு கட்டடங்கள் அமைந்துள்ளன. பலபகுதிகளில் யானைகளின் வழித்தடங்களையும் காட்டுயிர்களின் வாழ்விடங்களையும் பறித்துக் கொண்ட கட்டடங்கள் ஏராளம். நிலச்சரிவில் இறந்த மக்கள் எத்தனை பேர் என்று கணக்கு இருக்கிறது. விலங்குகளோ அதிலும் ஒதுக்கப்பட்டு விடுகின்றன.

நீலகிரி மலையில் 30 டிகிரி சாய்வான இடத்தில் கட்டடம் கட்ட நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. தடைகளைப் பற்றி யாருக்குக் கவலை? லஞ்சத்துக்கு 70, 80 டிகிரி சாய்வெல்லாம் தெரியாதே. அதேபோல் கட்டட உயரம் 7 மீட்டரைத் தாண்டக் கூடாது என்கிற விதி இருந்தும் 87 வணிக வளாகங்களும் 15 மதக்கூடங்களும் 20 கல்வி நிறுவனங்களும் சேர்த்து 1,337 கட்டடங்கள் மலை விளிம்புகளில் சீட்டுக்கட்டுகளைப் போல் அடுக்கப்பட்டுள்ளன. ஆட்சியாளர்களின் கறைபடிந்த கரங்களும், அதிகார வர்க்கத்தினரின் அலட்சியமுமே இதற்கு அடிப்படைக் காரணம்.

இயற்கையின் பொதுச்சொத்தான மலையின் பாறைகளை பெயர்த்து விற்று காசு பார்க்கும் 120க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் நீலகிரியில் இயங்கி வருகின்றன. இவை பெரும் பாறைகளை வெடிவைத்து தகர்க்கும்போது மலையே அதிர்கிறது. அத்துடன் பாறைக்கும் மண்ணுக்குமுள்ள நுட்பமான உறவுமுறிந்து மழைக்காலங்களில் மலையே சரிந்து விழுகிறது. இப்படி ஒன்று மாற்றி ஒன்றாக தனிமனிதர்களின் சுயநல வேட்டைக்கு ஏதுமறியாத மக்களின் உயிரை பலி கொடுக்கும் அடாத செயல்களுக்கு அரசுத்துறைகளே பின்புலமாய் இருப்பதை அறியும்போது அதிர்ச்சியாக இருக்கிறது.

1889ஆம் ஆண்டில் மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட மலைரயிலின் பாதைகளும் பலவீனமாக உள்ளன. பல்சக்கரம் பொருத்தி ஓடும் அந்த "அப்ட்" வகை தொடர்வண்டியின் இயக்கத்தை நிறுத்தினால், எதிர்காலத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். மலைத்தொடர்வண்டி வரலாற்றுப் பெருமிதம் அல்ல, காடு அழிப்புக்கு துணைபோன அவமானச் சின்னம். இதன்மூலம் நீலகிரி சுற்றுலா சந்தையாக மாறிவருவதும் "டைம்பாம்" போன்றதுதான்.

நீலகிரி மாவட்டம் நிலநடுக்கப் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருப்பதால், நடுவண் அரசு ரூ. 900 கோடி செலவில் சிங்காரா காட்டுப் பகுதியில் அமைக்க இருந்த நியூட்ரினோ ஆய்வுக் கூடத்துக்கு மாநில அரசு அனுமதி மறுத்துவிட்டது.  நிலச்சரிவு நேர்ந்ததற்குப் பின்னால் எடுக்கப்பட்ட முடிவு இது.  இந்த ஆய்வகத்தை சுருளியாறு பகுதியில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் எந்தப் பகுதியிலும் இந்த ஆய்வகம் அமைக்கப்படுவது ஆபத்தே. மலைகளில் நடைபெறும் அனைத்து வளர்ச்சித் திட்டங்களும் இயற்கைக்கும் சூழலுக்கும் எதிரான செயல்தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நிலச்சரிவும் நிலவெடிப்பும் மலையில் வாழ்பவர்களை பாதிப்பதுடன் நின்றுவிடுவதில்லை. அங்கு உற்பத்தியாகும் சிற்றோடைகளை மூழ்கடித்தும் திசைதிருப்பியும் விட வாய்ப்புள்ளதால், சமவெளியில் பாயும் அனைத்து நதிகளும் சுருங்கிப்போகும். நாமும் பாதிக்கப்படுவோம். "போலியான வளர்ச்சி மீது கொண்ட மோகம் காரணமாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது. சுற்றுச்சூழலைப் பாதுகாத்தால் ஏழைகள் மட்டுமின்றி, அனைவரது வாழ்க்கை நிலைமையையும் மேம்படுத்த முடியும்" என்ற நோபல் பரிசு பெற்ற கென்யாவின் பசுமைப் போராளி வங்காரி மாத்தாயின் சிந்தனை நமக்கு பாடமாகத் திகழும். இதை உள்வாங்கிக் கொண்டு நேரம் கடத்தாமல் ஆக்கபூர்வமான செயல்களில் அரசு இறங்கவேண்டும்.

("சிட்டு", "மயில்" ஆவணப்படங்களை இயக்கியுள்ள கட்டுரையாளர், ஒரு கவிஞர், சூழலியல் எழுத்தாளர், கோவை ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் செயல்பாட்டாளர்)

Pin It