ஆழ்ந்த அறிவும், மிகப்பெரிய மனிதவளமும் உள்ள இந்தியாவின் அடுத்த தலைமுறையை அழிப்பதற்குக் குறிவைத்து ஒரு பயங்கர சக்தி இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. அதன் பெயர் "மரபணு மாற்றப்பட்ட விதைகள்". இந்தியர்களின் உடல்நலனை, இனப்பெருக்கத்தை அழித்து, அதன் மூலம் மிகப்பெரிய லாபம் ஈட்டுவதற்காக பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு கால் பதித்துள்ளன. ஒவ்வொரு வீட்டு சமையலறையிலும், சாப்பாட்டுத் தட்டிலும் காத்திருக்கும் இந்தக் கண்ணுக்குத் தெரியாத "உணவு டைம் பாம்" நம் சந்ததிகளை கபளீகரம் செய்யக் காத்திருக்கிறது.

இந்த "மரபணு மாற்று விதை" பகாசுரனைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்னால் மரபணுக்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். மனித உடலில் உள்ள செல்கள் ஒவ்வொன்றிலும் 23 ஜோடி குரோமோசோம்களும், கிட்டத்தட்ட 20 ஆயிரம் மரபணுக்களும் உள்ளன. கைரேகை என்பது எப்படி ஒவ்வொரு மனிதனுக்கும் தனிப்பட்ட ஒன்றோ, அதைப்போல மரபணுக்களும் ஒவ்வொரு உயிருக்கும் தனிப்பட்டவை. ஒவ்வொரு இனத்துக்கும் பொதுவாக பல மரபணுக்களும், அவ்வினத்தின் ஒவ்வொரு உயிருக்கும் பிரத்தியேகமாக சில மரபணுக்களும் இருக்கின்றன.

இந்த மரபணுக்களே ஒரு உயிரின் உடல் அமைப்பு, உடல் இயக்கம், குண நலன்களைத் தீர்மானிக்கின்றன. இவற்றில் ஏற்படும் மாற்றங்கள் எல்லாமே (கூடுதல், குறைதல், மாறுதல், இடம்பெயர்தல்) அந்த உயிரினத்தின் அங்கம் அல்லது குணத்தில் குறைபாடுகளாகவோ அல்லது மாற்றங்களாகவோ வெளிப்படுகின்றன. மரபணுக்களின் மாற்றம் என்பது இயற்கையிலேயே - கதிரியக்கத்தாலும், வேதிப்பொருட்களாலும், மருந்து-மாத்திரை போன்றவற்றாலும், வேதி பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லிகளாலும், அதிக வெப்பம் போன்றவற்றாலும், இன்னும் உறுதிப்படுத்த முடியாத காரணங்களாலும் நிகழ்ந்துகொண்டுதான் உள்ளன. இவற்றால் ஏற்படும் நோய்கள் மருத்துவ உலகில் தீர்க்கமுடியாத பெரிய சவாலாகத் திகழ்கின்றன.

உதாரணத்திற்கு "டவுன் சின்ட்ரோம்" எனப்படும் உடல்-மன வளர்ச்சிக் குறைபாடு, குள்ள உருவம், சிறு வயதிலேயே முதுமை (பா திரைப்படத்தில் வருவதுபோல), பிறவி செவிட்டு ஊமை, தசை அழற்சி, ரத்த உறைதலில் குறைபாடு, தாலசீமியா ரத்தசோகை, ஆண்பெண் பாலினத்திரிபு (திருநங்கை), எலும்பு வளர்ச்சிக் குறைபாடு, கணையம் - கல்லீரல் மற்றும் சிறுநீரக நோய்களைக் கூறலாம்.

இந்நோய்கள் பெரும்பாலானவற்றில் உள்ள ஓர் ஒற்றுமை - இனப்பெருக்க உறுப்புகளில் உள்ள குறைபாடு. இது குறைந்தபட்சமாக பாலியல் தொந்தரவுகளாகவோ அல்லது அதிகபட்சமாக ஆண் மலட்டுத்தன்மை, ஆண்மைக் குறைபாடு, பாலினத் திரிபு (திருநங்கை), பெண் மலட்டுத்தன்மை போன்றவையாகவோ இருக்கலாம். இவையல்லாது சில மனசிதைவு நோய்களுக்கும் மரபணுக்களே காரணமாக அமைகின்றன.

மரபணுக்களின் ஆரோக்கியமும் இயல்புத்தன்மையும் எந்த அளவுக்கு முக்கியம் என்பதை இதிலிருந்து நாம் அறியலாம். இந்தச் சூழலில் வேளாண்மையில் அதிக மகசூல் பெறும் உத்தியாக மரபணு மாற்றப்பட்ட விதைகளை மான்சான்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் மஹிகோ போன்ற அதன் துணை நிறுவனங்கள் இந்தியாவில் திணிக்க முயல்கின்றன.

மரபணு மாற்றப்பட்ட பி.டி. கத்தரியில் பாசில்லஸ் துருஞ்ஜியென்சிஸ் என்னும் பாக்டீரியாவிலுள்ள விஷத்தை உருவாக்கும் தன்மையுடைய மரபணு எடுக்கப்பட்டு, கத்தரி விதையில் செலுத்தப்படுகிறது. கத்தரிச் செடியின் உடலில் உள்ள இந்த விஷம் (கிலோவுக்கு 17 மில்லிகிராம்) அதைச் சாப்பிடும் சிறிய புழு, பூச்சி, வண்ணத்துப்பூச்சி போன்ற சிறிய உயிர்களை அழிக்கிறது. கால்நடைகளுக்கும், மனிதனுக்கும் உடனடியாக சிறிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதில் நீண்ட நாளைய பாதிப்பு பற்றி போதிய ஆய்வுகள் இல்லை.

பொதுவாக மரபணு மாற்றப்பட்ட விதையிலிருந்து மரபணு மாறிய செடிகள், மரபணு மாறிய தானியங்கள், காய்கறிகள், பழங்கள் உண்டாகின்றன. இந்தச் செடிகளின் மகரந்தத்தை உட்கொண்ட வண்ணத்துப்பூச்சிகளும், மற்ற பூச்சியினங்களும் அழிந்தது கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் செடிகளின் காய்கறிகளையும், பழங்களையும் உட்கொண்ட காய்ப்புழுக்களும் அழிக்கப்பட்டுள்ளன. வேறு பல பூச்சியினங்கள், இந்த விஷத்தன்மைக்கு பயந்து அந்தப்பயிர் சாகுபடி செய்யும் பகுதியிலிருந்து வேறு பகுதிக்கு சென்றுவிட்டன.

மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்களை எலிகளுக்கு கொடுத்து ஆய்வு செய்ததில், எலிகளின் குடல்களில் விரும்பத்தகாத மாற்றங்கள் ஏற்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதைவிட முக்கியமாக மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்களை உட்கொண்ட மனிதர்களின் குடலில் உள்ள பாக்டீரியாவுக்குள் மாற்றப்பட்ட மரபணுக்கள் சென்று தஞ்சமடைந்ததும் தெரிய வந்துள்ளது. இந்த மரபணுக்கள் மனிதனிடம் இனப்பெருக்க குறைபாடுகளையோ அல்லது மரபணு மாற்றத்தால் சாதாரணமாக ஏற்படக்கூடிய கேன்சரையோ ஏற்படுத்தும் என்று இதுவரை நிரூபிக்கப்படவில்லை. ஏனெனில் இத்தகைய ஆய்வை மேற்கொள்வதற்கு 10 முதல் 20 வருடங்கள் தேவைப்படும். இது மட்டுமல்லாது, மரபணு மாற்று உணவுகளை உட்கொள்வதால் அலர்ஜி, வயிற்றுப்போக்கு, வாந்தியும் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

மரபணு மாற்றம் நிகழ்ந்த எந்த உணவையும் உண்ணக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு இந்தியாவில் தொன்றுதொட்டு உள்ளது. வாழைப்பழங்களில்கூட ஒட்டிப்பிறந்த பழங்களை இளைஞர்கள் உண்பதை அனுமதிப்பதில்லை. அவை இனப்பெருக்கத்தை பாதிக்கக்கூடும் என்ற அச்சம்தான் காரணம். இந்நிலையில் மரபணு மாற்று உணவுகளை சரமாரியாக உட்கொண்டு இனிவரும் இந்திய சந்ததியினரை ஆண்மைக் குறைபாடு உள்ளவர்களாகவோ, மலட்டுத்தன்மை உள்ளவர்களாகவோ, பிறவிக்குறைபாடு உள்ளவர்களாகவோ, மூளை மற்றும் உடல் வளர்ச்சிக் குறைந்தவர்களாகவோ ஆக்குவதற்கு நாம் அனுமதித்தால் அது மிகப்பெரிய வரலாற்றுப்பிழை ஆகிவிடும்.

மரபணு மாற்று உணவுப்பொருட்களின் பாதுகாப்பு குறித்து குறைந்தது 25 வருடங்களாவது ஆய்வு செய்து, ஆய்வின் முடிவுகள் பொதுவில் வைக்கப்பட்டு, மரபணு மாற்று உணவுப் பொருட்களால் மனிதர்களின் உடல்நலத்திற்கோ, சுற்றுச்சூழலுக்கோ எந்த பாதிப்பும் இல்லை என்று நிரூபிக்கப்பட்டால், அதன்பின் இந்தியாவில் மரபணு மாற்று உணவுப் பொருட்களை அறிமுகப்படுத்துவது குறித்து ஆலோசிக்கலாம்.

(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Pin It