‘வேதாந்தா’ நிறுவனத்தின் உறுப்பு நிறுவனமான ஸ்டெர்லைட் தொழிலகம் அமைக்க முதலில் மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள இரத்தினகிரியில்தான் 12.12.1989இல் அடிக்கல் நாட்டப்பட்டது. லண்டனில் குடியேறிய இந்திய மார்வாடியான அனில் சந்தீப் அகர்வால் என்ற உலகப் பணக்காரனுக்கு சிவப்புக் கம்பளம் விரித்த இந்திய நடுவணரசும், மகாராஷ்டிர மாநில அரசும் இத்தொழிலகம் தொடங்க ஒப்புதல் அளித்தன. மக்களுடைய கடும் எதிர்ப்பாலும் போராட்டத்தாலும் நிலைகுலைந்த மகாராஷ்டிர அரசு 1.5.1994இல் ஸ்டெர்லைட் தொழிலகத்தின் கட்டுமானப் பணிக்குத் தடை விதித்து, அதற்காக இடப்பட்ட ஒப்பந்தத்தையும் விலக்கிக் கொண்டது. அதன்பின் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்ட இத்தொழில் நிறுவனத்தை தமிழகத்துக்கு வரவேற்று, தூத்துக்குடி சிப்காட் பகுதியில் 428 ஏக்கர் நிலத்தைத் தாரைவார்த்து, 30.10.1994 அன்று ஸ்டெர்லைட் “செம்பு உருக்குத் தொழிலக”த்தின் கட்டுமானப் பணிக்கு முதல்வர் ஜெயலலிதா அடிக்க நாட்டினார்.

அதன் கட்டுமானப் பணி மிக விரைவாக நடைபெற்று 1996ஆம் ஆண்டின் இறுதியில் “ஒரு சொட்டு நீரும், ஒரு பொட்டு மண்ணும் கெடாமல் தொழிலகங்களைத் திறப்போம்” என்ற வீராப்புடன் ஸ்டெர்லைட் தொழிலகத்தின் பொருள் உற்பத்திக்கு முதல்வர் மு. கருணாநிதி அனுமதியளித்தார்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பில் அரசியல் கட்சிகளின் பங்களிப்பு:

ஸ்டெர்லைட் தொழிலகத்துக்கு அடிக்க நாட்டப் பட்ட நாளிலிருந்தே அதற்கு எதிர்ப்பும் உருவானது. அரசியல் கட்சிகளால் உருவாக்கப்பட்ட எதிர்ப்புக் குழுவில் தி.மு.க, ம.தி.மு.க, வாழப்பாடி காங்கிரசு, இந்திய பொதுவுடைமைக் கட்சி, பாரதீய ஜனதா கட்சி என பல்வேறு கட்சிகளின் மாவட்டத் தலைவர்கள் இடம்பெற்றிருந்தனர். ஆனால் தொடக் கத்தில் இருந்தே இந்திரா காங்கிரசும் இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)யும் ஸ்டெர் லைட் தொழிலகத்தை ஆதரித்து வந்தன. அதன்பின் தி.மு.க.வும் வாழப்பாடி காங்கிரசும் சோரம் போய்விட்டன. இதர கட்சிகளோ அவ்வப்போது தங்கள் எதிர்ப்பை மட்டும் வெளிபடுத்தின.

ஏதோ பெயரளவுக்கு சில அடையாளப் போராட்டங் களை நடத்திய பாட்டாளி மக்கள் கட்சி, புதிய தமிழகம் சார்பில் அதன் தலைவர்கள், “50 ஆயிரம் பேரைத் திரட்டி முற்றுகைப் போராட்டம் நடத்துவோம்“ என்ற வாய்பேச்சோடு மாய மானார்கள். ஆனால் ‘ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம்’ 1995ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கப் பட்டு மக்கள் போராட்டம் தீவிரமடைந்த போது, ம.தி.மு.க தலைமையானது போராட்டக் களத்தில் குதித்தது. ‘உழுகிற நேரத்தில் ஊர்வழி போனவன் அறுக்கிற நேரத்தில் அறுவாளோடு வந்தது போல்’ தனது வாய்வீச்சை தீவிரபடுத்திக் காட்டியது. அது “ஸ்டெர்லைட் தொழிலகம் முற்றுகை” என்ற போராட்டத்தை சடங்குத் தனமாக, சந்தர்ப்ப வாதமாக நிறைவேற்றியது. தனிநபர் துதிபாடுதல், தனிநபர் வெற்றி- திறமையென மக்களின் போராட்ட உணர்வை சிறுமைபடுத்தியது.

மேலும், தேசிய சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கழகம் என்ற அமைப்புதான் ஸ்டெர்லைட் எதிர்ப்பை முதலில் தொடங்கியது. சுற்றுச்சூழல் அறிஞர் ரஷ்மி மயூரியை வரவழைத்து 1995ஆம் ஆண்டில் ஊர்வலம் நடத்தியது. ஆனால், ஸ்டெர்லைட் தொழிலகத்தால் ஏற்படும் பாதிப்புகளை மக்களிடம் எடுத்துச் சென்று வெகுமக்கள் போராட்டம் நடத்தத் தவறியது. ஒரு சில அடையாளப் போராட் டங்களை நடத்தியதோடு தனது பணியை நிறுத்திக் கொண்டது.

செம்பு உருக்காலையால் வரும் தீங்குகுள் குறித்தும் ஸ்டெர்லைட் உருக்காலை பற்றியும், அதற்கு எதிராக ரத்தினகிரியில் நடந்த மக்கள் போராட்டத்தையும், அங்கிருந்து துரத்தியடிக்கப்பட்ட வரலாற்றையும் தொகுத்து, ‘ஸ்டெர்லைட் தொழிற்சாலையும் அதனால் வரவிருக்கும் அபாயங்களும்‘ என்ற சிறு வெளியீடு மூலம் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சுற்றுச்சூழல் ஆர்வலர் மு. வசிகரனால் தூத்துக்குடியில் வெளியீடானது. மராட்டிய மண்ணி லிருந்து விரட்டியடிக்கப்பட்ட ஸ்டெர்லைட் நிறு வனத்தை தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடிப் போம் என்ற முழக்கத்துடன் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம், மக்களிடம் கருத்து பரப்பல் செய்வதற்கு உதவியாக இருந்தது.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் வளர்ச்சியும், அதன் பின்னடைவும்:

ஸ்டெர்லைட் எதிர்ப்பில் தேசிய சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கழகம், பல அரசியல் கட்சிகள் ஈடுபட்டாலும் வெகுமக்களை அணிதிரட்டி மாபெரும் போராட்டங்களை நடத்திய ஸ்டெர் லைட் எதிர்ப்பு இயக்கம், 1995ஆம் ஆண்டில் இறுதியில்தான் தோழர்கள் அமல்ராஜ் என்ற இறையரசு, ராஜேஸ் என்ற கடலரசன், செ.ரெ.வெனி இளங்குமரன், சி.சற்குணம் மற்றும் ம.சான்சன், ம.அன்வர், முத்துராஜ், அ.அருள்ராஜ் ஆகியோரின் துணையோடு போராட்டக் களத்தில் இறங்கியது. தெருமுனைக் கூட்டங்கள், அரங்கக் கூட்டங்களென தூத்துக்குடி, ஸ்டெர்லைட் ஆலை அமையும் சுற்றுப்புறக் கிராமங்களில் தொடர்ச்சியாக கருத்துப்பரப்பலில் ஈடுபட்டு, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

ஸ்டெர்லைட் தொழிலகம் அமையும் சுற்றுப்புறக் கிராமங்களான மீளவிட்டான், மடத்தூர், தெற்கு வீரபாண்டியபுரம், பண்டாரம்பட்டி, சில்லாநத்தம், சிலுக்கன்பட்டி மக்களையும் கடலோர மீனவ மக்களையும் அணிதிரட்டி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் கூர்மையடைந்தது. தூத்துக்குடி துறைமுகத் தொழிலாளர்கள், மீன்பிடித் துறைமுகத் தொழிலாளர்கள் என பல்வேறு உழைக்கும் மக்களும் அணி திரட்டப்பட்டு போராட்டக் குழுவும் செழுமையடைந்தது.

தூத்துக்குடி நகர வரலாற்றில் 2400 பேர் கலந்து கொண்ட மாபெரும் உண்ணாவிரதப் போராட்ட மெனத் தொடங்கி, வணிகர்களின் ஆதரவோடு ஒரு நாள் கடையடைப்பு - பேருந்து நிறுத்தம், சாலை மறியல், பள்ளி ஆசிரியர் - மாணவரென 10 ஆயிரம் பேர் கலந்து கொண்ட பேரணி, 5 கிலோ மீட்டர் நீளத்துக்கு மனித சங்கிலிப் போராட்டமென 25க்கும் மேற்பட்ட போராட்டங்களை நடத்துமளவுக்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பியக்கம் விரிவடைந்தது.

மேலும், தூத்துக்குடிக்கு முதல்வர் ஜெயலலிதா வருகை தந்த 18.3.1996 அன்று கருப்பு நாளாக அறிவிக்கப்பட்டு ‘செல்வி ஜெயலலிதாவே திரும்பிப் போ!’ என்று எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில்தான் 20.3.1996 அன்று எம்.வி.ரீசா என்ற கப்பல் ஸ்டெர்லைட் தொழிலகத்துக்கான செம்புத் தாதுப்பொருளோடு தூத்துக்குடி துறைமுகம் வரவிருந்தது. ஆழ்கடலில் நிறுத்தப்பட்டிருந்த அக்கப்பலை துறைமுகத்துக்குள் வரவிடாமல் தடுத்து, அக்கப்பல் கொச்சி துறைமுகம் செல்ல நேரிட்டது என்றால், அதற்கு மீனவர்களின் வீரஞ்செறிந்த போராட்டமே காரணம். தூத்துக்குடி துறைமுகத்தை முற்றுகையிட ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் வழிகாட்டியதால் 78 விசைப்படகுகள், 34 நாட்டுப்படகுகளில் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் படையெடுத்துச் சென்று தூத்துக்குடி துறைமுகத்துக்கு கப்பல்கள் வரும் நுழைவுவாயிலை 14 மணி நேரம் முற்றுகை யிட்டனர். இதனால் அரசுக்கு 25 இலட்சம் நட்டமும், பேரதிர்ச்சியும், அச்சமும் ஏற்பட்டது. எனவே, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும், துறைமுக அதிகாரிகளும் எம்.வி.ரீசா கப்பலை அனுமதிக்க மாட்டோம் என்று உறுதி கூறுமளவுக்கு அப்போராட்டம் வரலாற்றுச் சிறப்புமிக்கப் போராட்டமாய் அமைந்தது.

இப்போராட்டக் கட்டத்தில்தான் ஏப்ரல் 1996இல் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டது. அவ்வேளையில் 10.4.1996 அன்று 2 பெண்கள் உட்பட 16 பேர் பங்குபெற்ற காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் ஏற்பட்டப் பரபரப்பால் மாவட்ட ஆட்சியர் ஜோதி ஜெகராஜன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன்மூலம் ‘கழிவுநீரை கடலில் கலக்க ஸ்டெர் லைட் நிறுவனம் நிலத்தடியில் பதிக்கும் குழாய்த் திட்டத்துக்குத் தடைவிதிப்பதாக’ ஆட்சியர் உறுதி கூறினார். அதன்படி 18.4.1996லிருந்து 60 நாட்களுக்கான தடை விதிக்கப்பட்டு, அதுவே பின்னர் நிரந்தரத் தடையானது. இவ்வாறு மாவட்ட அரசு நிர்வாகமும் ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு நெருக்கடி தரும் நிலை உருவானது.

மக்களைத் துண்டாடிய ச(£)தி:

ஸ்டெர்லைட் எதிர்ப்பியக்கப் போராட்டத்தால் கடும் நெருக்கடிக்கு ஆளான ஸ்டெர்லைட் நிறு வனம், மதத்தால்  பிரிந்திருக்கும் பரதர், நாடார் மக்கள் தமிழராய் ஒன்றுபடுவதால் எதிர்ப்பியக்கப் போராட்டம் வலுப்பெறுவதால் எரிச்சலடைந்தது. எனவே, இந்த இரு பிரிவினரிலும் கைக்கூலியாக செயல்படும் தமிழினத் துரோகிகளைக் கொண்டு சாதிய மோதலை உருவாக்க ஸ்டெர்லைட் நிறுவனம் திட்டமிட்ட நேரத்தில் மே, 1996இல் தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் வந்தது. இதில் மீனவர் சார்பிலும் (ஸ்டெர்லைட் எதிர்ப்பு), தி.மு.க. சார்பிலும் (ஸ்டெர்லைட் ஆதரவாளர்) போட்டி யிட்டவர்கள் இரு சாதியப் பிரிவினராக இருந்ததால், தேர்தல் முடிவைப் பயன்படுத்தி, அதை ஒரு சாதிய மோதலாக உருவாக்கியது! எதிர்ப்பியக்கத்தின் கடின உழைப்பால் ஒன்றுபட்ட மக்களிடையே சாதிவெறி ஊட்டப்பட்டதால், அவர்கள் தமிழின உணர்வை இழந்து சாதிய காழ்ப்புணர்ச்சிக்கு ஆளாக நேரிட்டது. இவ்வாறு ஸ்டெர்லைட் நிர்வாகமும், சாதியப் பிழைப்பு வாதிகளும், நேர்மையற்ற அரசு அதிகாரிகளும் கூட்டாக திட்ட மிட்ட சாதிய வன்முறையால் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்துக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

எனவே, தொடர்ச்சியாக வளர்ந்து வந்த ஸ்டெர் லைட் எதிர்ப்புப் போராட்டம் குறிப்பிட்டக் காலக் கட்டத்தில் தேக்கமடைந்தது. ஆயினும் மக்களை ஒன்றுபடுத்தி மீண்டும் ஸ்டெர்லைட் எதிர்ப்பை வலுப்படுத்த மக்களிடையே நேரடி சந்திப்பு, கருத்துப் பரப்பல் பணிகளை எதிர்ப்பியக்கம் மேற் கொண்டது. தூத்துக்குடியில் 20.7.1996 அன்று நடத்தப்பட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு மாநாட்டின் மூலம் மக்களிடம் உண்மை நிலையை ஸ்டெர்லைட் எதிர்ப்பியக்கம் எடுத்துரைத்தாலும், சாதியப்பகை மாறாதப் போக்கே அன்று நிலவியது. மேலும், இச்சாதிய கலவரத்தின் ஊடாக போராட்டம் தேக்கமடைந்த 6 மாத காலத்துக்குள் ஸ்டெர்லைட் நிறுவனம் தனது தொழிலக கட்டுமானப் பணியை விரைவுபடுத்தி, கொச்சி துறைமுகத்தில் இறக்கி வைக்கப்பட்டிருந்த செம்புத்தாதுப் பொருளை லாரிகள் மூலம் ஸ்டெர்லைட் தொழிலகம் கொண்டு வந்து, தனது உற்பத்தியைத் தொடங்கியது.

அத்தோடு மீனவர்களின் எதிர்ப்பையும் சமாளிக்க மீனவர் சங்கத் தலைவர்கள் சிலரை, ஸ்டெர்லைட் நிறுவனம் தனது பணத்தால் அடிபணிய வைத்தது. சோரம் போன சிலரின் ஆதரவோடும், அரசின் படைப்பலத்தோடும் 19.10.1996 அன்று எம்.வி.பரங்கவி என்ற கப்பல் தூத்துக்குடி துறைமுகத்துக்குள் அனுமதிக்கப்பட்டு, தாதுப்பொருள் இறக்கும் பணியை விரைந்து நடத்தியது. இந்நிலையில் ஸ்டெர்லைட் எதிர்ப் பியக்கத் தோழர்கள் துறைமுகத் தொழற்சங்கத் தலைவர் சி.பசுபதி பாண்டியனையும், சரக்குகள் கையாளும் துறைகத் தொழிலாளர்களையும் சந்தித்து ஆதரவு கேட்டனர். அதை ஏற்றுக் கொண்ட சி.பசுபதி பாண்டியன் துறைமுகத் தொழிலாளர்களை நேரில் சந்தித்து அறைகூவல் விடுத்ததால் 20.10.1996 அன்று கப்பலில் இருந்து தாதுப்பொருளை இறக்க மறுத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். இதனால் மீன்பிடித் தொழிலாளர்களை ஸ்டெர்லைட் எதிர்ப்பியக்கம் வலுப்படுத்தி, அவர்களின் பேராதரவோடு கப்பல் வெளியேற எச்சரிக்கை விடுத்தது. ஆயினும், கப்பலை வெளியேற்ற அரசு மறுத்ததால் 24.10.1996 அன்று 152 விசைப்படகுகள், 36 நாட்டுப்படகுகள் மூலம் மீனவர்கள் துறைமுகத்துக்குள் நுழைந்து கப்பலை முற்றுகையிட்டனர். வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த, போர்குணமிக்க இப்போராட்டத்தால் அச்சமடைந்த அரசு நிர்வாகம் வேறுவழியின்றி எம்.வி. பரங்கவி கப்பலைத் துறைமுகத்திலிருந்து வெளியேற்றியது. இவ்வாறு கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சிதம்பரனார் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில் ஈடுபட்ட தூத்துக்குடியில், அவருக்குப் பின் கப்பலை விரட்டியத் தமிழர்கள் என்ற வீரவரலாறும் படைக்கப்பட்டது.

மக்கள் விரோத அரசின் நிலைப்பாடு:

ஸ்டெர்லைட் தொழிலகத்துக்குத் தடைவிதிக்கக் கோரிய போராட்டங்கள் எதையும் அரசு நிர்வாகம் பொருட்படுத்தாமல் இருந்ததோடு, சட்டவிரோதமாக ஸ்டெர்லைட் தொழிலகம் கட்டப்படுவதற்கும் துணையாக இருந்தது. சுற்றுச்சூழல், வனத்துறை விதிகளை மீறி ஸ்டெர்லைட் தொழிலகம் கட்டப் படுகிறது என எதிர்ப்பியக்கம் கேள்வி எழுப்பிய போதெல்லாம் பேச்சுவார்த்தைக்கு அழைத்து நாட்களை வீணடிப்பதும், நிபுணர் குழு ஆய்வு நடத்தும் என நாடகமாடுவதுமாக அரசு நிர்வாகம் செயல்பட்டு வந்தது.

மிகவும் பாதுகாக்கப்பட வேண்டிய, மிக நுட்பமான மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகம் என்ற உயிரியல் சூழல் பகுதியில் இருந்து (ணிநீஷீறீஷீரீவீநீணீறீ sமீஸீsவீtவீஸ்மீ கிக்ஷீமீணீ) 25 கிலோ மீட்டர் தொலைவைத் தாண்டி ஸ்டெர்லைட் தொழிலகம் அமைய வேண்டும் என தமிழ்நாடு மாசுக் கட்டுப் பாட்டு வாரியத் தலைவருக்கு சுற்றுச்சூழல், வனத்துறை அரசு செயலர் அனுப்பிய கடிதத்தில் (நாள்: 17.5.1995) தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிபந்தனையை மீறி ஸ்டெர்லைட் நிறுவனத்தின் பணத்துக்கு அடிமையாகிய தமிழ்நாடு மாசுக் கட்டுப் பாட்டு வாரிய அதிகாரிகள், தூத்துக்குடி மாவட்ட அரசு நிர்வாகத்தின் சட்ட விரோத ஒத்துழைப் புடன் ஸ்டெர்லைட் தொழிலகம் கட்டப்பட்டது.தமிழக அரசு அறிக்கையில் மன்னார் வளை குடாவை தேசிய கடல் வளப் பூங்காவாக அறிவித் துள்ளது. அத்துடன் நுண்ணுயிர் வாழ்வுப் பாது காப்புச் சட்டமோ (இந்திய நடுவணரசுச் சட்டம் 53/1972) தூத்துக்குடி கடல் பகுதியில் இருந்து இராமேசுவரம் வரையுள்ள கடல் பகுதியை மிக நுட்பமான, பாதுகாக்கப்பட வேண்டிய முகாமை யான பகுதியென்று அறிவித்துள்ளது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் அரசு அதிகாரிகள் ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு அப்பட்டமாக துணை போயுள்ளனர். (இவ்விதி மீறல் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் 28.9.2010இல் தீர்ப்பளித்த தனது அறிவிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது.) இவ்வாறிருக்க, தமிழக அமைச்சர்களும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு சாதகமாக அறிக்கை கள் வெளியிட்டு மக்களை ஏமாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டனர். மேலும், ஸ்டெர்லைட் ஆலையில் தொடர்ச்சியாக விபத்துகளும் உயிர்ப்பலிகளும் ஏற்பட்டதோடு, 5.7.1997இல் ஸ்டெர்லைட் நச்சுப் புகையால் அருகிலுள்ள ரமேசு பூ கம்பெனியில் வேலை பார்த்த 165 பெண் தொழிலாளர்கள் மயங்கியும், பலருக்கு கருச்சிதைவும் ஏற்பட்டப்போது ஸ்டெர்லைட் தொழிலகத்தை மூடுவது போல் நாடகமாடி, அதை மீண்டும் திறக்கவே அரசு வழி செய்தது.

மக்கள் உணர்வை மழுங்கடித்த மலிவான சலுகைகள்:

எது நடந்தாலும் ஸ்டெர்லைட் தொழிலகத்தைத் தொடர்ந்து நடத்தவே கு(வெ)றியாய் இருக்கும் வேதாந்தா நிறுவனம் தூத்துக்குடியிலும், சுற்றுப்புறக் கிராமங்களிலும் மக்களுக்குத் துரோகமிழைக்கும் அரசியல்வாதிகளையும், தன்னல பிழைப்பு நடத்தும் ஊராட்சி மன்றத் தலைவர்களையும் பணத்தால் அடிபணிய வைத்தது. அது மட்டுமல்லாமல் தூத்துக்குடியிலும், சுற்றுப்புறக் கிராமங்களிலும் தனிப்பயிற்சி நிலையம், மட்டைப்பந்து (கிரிக்கெட்) விளையாட்டுப் போட்டி, பள்ளிக்கூடம், விளை யாட்டு வீரர்களுக்கு நிதியுதவி, சில கிராமங்களில் குளங்கள் தூர்வார்ப்பு, இந்துக் கோயில்களைச் செப்பனிட்டு கும்பாபிசேகம், தூத்துக்குடியில் சில தெருக்கள், அரசு தலைமை மருத்துவமனை பராமரிப்பு, கடலோர வாழ்வாதார மையம் என பல மோசடி வித்தைகளை செய்து தனது குற்றங்களிலிருந்து தப்பிக்கவும், சுற்றுச் சூழலை சீரழித்து பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை இலாபமீட்டவும், சில சலுகைகளை வாரியிறைத்து மக்கள் உணர்வை ஸ்டெர்லைட் நிர் வாகம் மழுங் கடிக்கிறது.

சுற்றுச்சூழலைச் சீரழிப்பதில் முன்னணி வகிக்கும் தொழிலகம்:

ஸ்டெர்லைட் தொழிலகமானது புகைப்போக்கி யின் வழியாக கந்தக டை ஆக்சைடு எனும் நச்சுக் காற்றை அதிகளவு வெளியேற்றுவதால் அருகிலுள்ள மக்கள், கண் எரிச்சல், மூக்கரிப்பு, சளி, இருமல் ஆகியவற்றால் துன்பப்படுகின்றனர். பிறக்கும் குழந்தைகளுக்கு ‘பிரைமரி காம்ப்ளக்ஸ்’ என்ற ‘தொடக்கநிலை காசநோய்’ உடன்பிறப்பாகி விட்டது. ஆலையின் அருகிலுள்ள நாட்டு உடை ஆவாரை போன்ற மரஞ்செடிகள் கருகி வருகின்றன. தூத்துக்குடியில் கடும் வெப்பமும் அமில மழையும் அதிகரித்து வருகின்றன.

ஆலை வளாகத்துக்குள் தேக்கி வைத்திருக்கும் நச்சுக்கழிவு நீரால் நிலத்தடி நீரும், மழைக் காலத்தில் வெள்ளப் பெருக்கோடு ‘பக்கிள் ஓடை’ வழியாக வெளியேற்றப்படும் கழிவு நீரால் கடல் நீரும் நச்சுத் தன்மை அடைந்துள்ளது. ஸ்டெர்லைட் சுற்றுப்புறப் பகுதிகளில் வேளாண்மை அருகி போய் விட்டது. ஸ்டெர்லைட் ஆலைக்குள் குவியல்குவியலாக வைக்கப்பட்டிருக்கும் ‘பாஸ்போ ஜிப்சம்’ என்ற திடக்கழிவில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சால் புற்றுநோய்க்கு ஆளாகி சாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்போது சிறிய விபத்துகள் ஏற்பட்டு சில உயிர்களை மட்டும் பலி வாங்கும் ஸ்டெர்லைட் தொழிலகத்தில் மிகப்பெரிய  விபத்து ஏற்பட்டு மலிவாக மக்கள் சாகும் துயர நிலை வராமலிருக்க, இத்தொழிலகம் மூடப்பட்டு, அப்புறப் படுத்துவதே ஒரே வழியாகும்.

சுற்றுச்சூழலுக்கான வழக்கும் நீதிமன்றத் தீர்ப்புகளும்:

ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் பல்வேறுப் போராட்டங்களுக்கு நடுவில் வழக்குத் தொடுக்கவும் முன்வந்தது. அம்முயற்சியின்போது சென்னை வழக்குரைஞர் வி.பிரகாஷ் அவர்கள் எதிர்ப்பியக் கத்துடன் தொடர்புகொண்டு, இயக்கத்தின் சார்பாக ‘தூய சுற்றுச் சூழலுக்கான தேசிய அறக் கட்டளை’ என்ற பெயரில் 7.11.1996இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அவ் வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தபோது ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோ, இவ்வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டார். இவ்வழக்கில் பல்வேறு விசாரணைகளுக்குப் பிறகு, சென்னை உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி 1997ஆம் ஆண்டில் ஸ்டெர்லைட் தொழிலகம் அமைந்துள்ள சுற்றுப்புறப் பகுதிகளில் ‘நீரி’ (ழிணிணிஸிமி) குழு ஆய்வு மேற்கொண்டது. அக்குழு அளித்த அறிக்கைகள் மீதான விவாதத்தின் போதுதான் 23.11.1998இல் ஸ்டெர்லைட் தொழிலகத்தை மூட உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

மனசாட்சியோடு நேர்மையாக செயல்பட்ட நீதியரசர்கள் லிபரான், பத்மநாபன் ஆகியோரின் அமர்வு மன்றத்தில் தொடர்ந்து விசாரணை நடை பெற்ற சில நாட்களுக்குள், அவ்வழக்கின் விசாரணை அகர்வால் தலைமையிலான வேறொரு அமர்வு மன்றத்துக்கு மாற்றப்பட்டது. பல்வேறு காரணங் கள் சுட்டிக்காட்டப்பட்டு சில அறிவுறுத்தல் களின் பேரில் மீண்டும் ஸ்டெர்லைட் தொழிலகம் இயங்க 25.12.1998இல் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப் பளித்தது.

ஆனாலும், அவ்வழக்கு அன்றிலிருந்து 2010 வரை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறிருக்க உச்ச நீதிமன்ற ஆணையின்படி நியமிக்கப்பட்ட முனைவர் தியாகராஜன் தலைமையிலான கண்காணிப்புக் குழு 21.9.2004இல் ஸ்டெர்லைட் தொழிலகத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் ஆய்வு மேற்கொண்டு பல உண்மைகளை வெளியிட்டது.

- நச்சுக் கழிவுகளை நீதிமன்ற ஆணையின்படி முறையாக கையாள்வதற்குப் போதிய செயற்பாடுகள் இல்லை.

- பல இலட்சக்கணக்கான கிலோ ஆர்சனிக் கழிவு, கதிர்வீச்சுத் தன்மையுடைய ‘பாஸ்போ ஜிப்சம்’ சரியாக பாதுகாக்கப்படவில்லை. எனவே இது மக்களிடையே மூச்சுத் திணறலையும், புற்றுநோயையும் உருவாக்கும்.

- கந்தக டை ஆக்சைடு அனுமதி அளிக்கப்பட்ட அளவைவிட பல மடங்கு கூடுதலாக வெளியேற்றப் பட்டு வருகிறது.

இந்நிலையில் 70 ஆயிரம் டன்னிலிருந்து 1 இலட்சத்து 80 ஆயிரம் டன்னாக பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிலக விரிவாக்கத்தை ஸ்டெர் லைட் நிறுவனம் செய்து வருகிறது. ‘இவ்விரிவாக்கம் அறிவீனமானது. தீர்ப்பு வழங்கப்படும் முன் இதற்கு ஆதரவாக அந்த நிறுவனத்துக்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தடையில்லாச் சான்றிதழை வழங்கக்கூடாது. ஏற்கெனவே வழங்கியிருந்தால் அதை திரும்பப் பெற வேண்டும் என்று கண் காணிப்புக் குழு அறிவித்தது.

ஆனால், மாசுக் கட்டுபாட்டு வாரியம் பணத்துக்கு கட்டுப்பட்டு கிடந்ததாலும், “சுற்றுச்சூழல் கெடாமல் தொழிலகம் அமைப்போம்“ என்று வீராப்பு பேசிய வர்களாலும் இன்று தூத்துக்குடி சுற்றுச்சூழல் மிகப் பெரியளவில் சீரழிக்கப்பட்டிருக்கிறது.

நீரி குழு ஆய்வு செய்த அறிக்கையும், முனைவர் தியாகராஜன் தலைமையிலான கண்காணிப்புக் குழுவின் அறிக்கையும் ‘ஸ்டெர்லைட் தொழிலகத்தால் நிலம், நீர், காற்று என சுற்றுச்சூழலே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது’ என்பதை தெள்ளத் தெளிவாக பதிவு செய்துள்ளதால், அவ்வறிக்கைகள் மீதான விவாதம் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் கண்களைத் திறந்திருக்கின்றன. மனசாட்சியோடு செயல்பட்ட நேர்மையாளர்களான எலிப் தர்மராவ், என்.பால்வசந்தகுமார் அமர்வு மன்றம் 28.9.2010 அன்று ஸ்டெர்லைட் தொழிலகத்தை மூட தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஆனால் இந்திய அரசும் தமிழக அரசும் கள்ளமௌனம் சாதிக்கின்றன. பன்னாட்டு முதலாளிகளுக்கும் வெளிநாட்டுக் கொள்ளையர் களுக்கும் வாழ்வளிக்கின்றன.

ரூ. 750 கோடிக்கு மேலாக ‘கலால் வரி ஏய்ப்பு’ செய்த ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு ‘ஏற்றுமதிக்கான வரி விலக்கு’ என்ற பெயரில் ரூ. 350 கோடியை இந்திய அரசு சலுகையாக தாரைவார்க்கிறது. ரூ. 10 கோடிக்கான மின்கட்டணத் தொகையை கட்டாமலிருக்கும் ஸ்டெர்லைட் ஆலைக்குத் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்க தமிழக அரசும் ஆளும் கட்சிகளும் துணை போகின்றன.

இறுதியாக : ஸ்டெர்லைட் தொழிலகத்தை மூட வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் ஆணைக்கு இடைக்காலத் தடை விதித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். ‘எங்கள் தரப்பு வாதத்தை சொல்ல வேண்டும். அதற்காக கால இடைவெளி தேவை’ என்ற ஸ்டெர்லைட் நிறுவனத்தின் வேண்டு கோளை ஏற்ற உச்ச நீதிமன்றம் 18.10.2010 வரை தடை விதித்திருக்கிறது. ஆயினும், தூயச் சுற்றுச் சூழலுக்கான தேசிய அறக்கட்டளை சார்பில் இவ்வழக்கைத் தொடர்ந்து நடத்தவும் மக்கள் போராட்டங்களைத் தீவிரப்படுத்தவும் ஸ்டெர் லைட் எதிர்ப்பியக்கம் திட்டமிட்டுள்ளது. மேலும் மக்களுக்காகப் போராடும் நேர்மையான இயக்கங் களுடன் இணைந்து போராடவும் இருக்கிறது.

இந்திய அரசே! தமிழக அரசே!

நச்சு ஸ்டெர்லைட் தொழிலகத்தை தூத்துக்குடி யிலிருந்து அப்புறப்படுத்து!

நிலம், நீர், காற்று, கடல், மக்களின் உடல்நலம் ஆகியவற்றைப் பாழாக்கிய ஸ்டெர்லைட் தாய் நிறு வனமான வேதாந்தாவின் தலைவர் அனில் சந்தீப் அகர்வாலைக் கைது செய்!

சுற்றுச்சூழலைச் சீரழித்த ஸ்டெர்லைட் நிறு வனத்துக்கு அனைத்து வகையிலும் உடந்தையாக இருந்து செயல்பட்ட அரசு அதிகாரிகள் மீது குற்ற வியல் விசாரணை நடத்து!சீரழிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி வட்டாரத்தில் சுற்றுச் சூழலைச் சீர்படுத்தி சுத்திகரிப்பதற்கு பல்லாயிரம் கோடி ரூபாய் தேவை. அதற்குரிய செலவுகளுக்கு ஸ்டெர் லைட் நிறுவனத்தின் சொத்து களைப் பறிமுதல் செய்!

பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அனைவருக்கும் தலா ரூ. 5 இலட்சம் நட்ட ஈடாக வழங்கிடு!

இவ்வலுவான கோரிக்கைகளை முன்வைத்து மக்களை அணிதிரட்டவும், மக்கள் திரள் போராட் டத்தை வலுப்படுத்தவும் சமூகநல, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தமிழ்த் தேசிய இயக்கங்கள் இணைந்து கடுமையாக உழைக்க வேண்டும் என்பதே இன்றைய தேவையும் முகாமையான பணியுமாகும்.

 

ஸ்டெர்லைட் தொழிலகத்தில் நடந்த விபத்துகள்:

1. 2.1.1997 அன்று 7 சிலிண்டர்கள் வெடித்து 40 தொழிலாளர்கள் உயிர்தப்பினர்.

2. 3.5.1997 அன்று கந்தக அமிலக் குழாய் வெடித்து ஒருவர் உடல் வெந்து சாவு.

3. 5.7.1997 அன்று ஸ்டெர்லைட் நச்சுப்புகையால் அருகிலுள்ள ரமேசு பூ கம்பெனியில் வேலைபார்த்த 165 பெண் தொழிலாளர்கள் மயக்கம், பலருக்கு கருச்சிதைவு.

4. 30.8.1997 அன்று செம்புக் கலவை உலை வெடித்து பனை உயரத்துக்கு தீ. பெருமாள், சங்கர் என்ற இரண்டு தொழிலாளர்கள் எலும்புக் கூடாயினர். 3 பேர் படுகாயம்.

5. 14.2.1997 அன்று ஆலையில் தீ விபத்து. கரும்புகை பரவலால் சுற்று வட்டாரத்திலுள்ள மக்களுக்கு மூச்சுத் திணறல்.

6. 16.4.1998 அன்று நள்ளிரவில் பயங்கர விபத்து. 6 பேர் கருகினர். அதில் 3 பேர் நிகழ் விடத்தில் சாவு.

7. 19.11.1998 அன்று கந்தக அமில குழாய் வெடித்து 5 பொறியாளர்களும் ஒரு கூலித் தொழி லாளியும் உடல் வெந்து தனியார் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பெற்றனர்.

8. 26.12.1998 அன்று எண்ணெய் சேமிப்புத் தொட்டி வெடித்து தீ விபத்து.

9. 02.3.1999 அன்று நச்சுப் புகையால் அருகி லுள்ள வானொலி நிலையத்தின் அரசு ஊழியர்கள் 11 பேர் மயக்கம். அரசு மருத்துவமனையில் அவர் களுக்கு தீவிர சிகிச்சை.

 

Pin It