குழந்தையாக இருந்தபோது வண்டுகளும் வெட்டுக்கிளிகளும் கூட்டங்கூட்டமாகப் பறந்து செல்வதைக் கண்டு வியந்திருப்போம். பின்னர் பறவைகளும் பூச்சிகளும் விலங்குகளும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு குறிப்பிட்ட காலங்களில் இடம்பெயர்ந்து செல்கின்றன என்று படித்துள்ளோம். பின்னர் விலங்குகள் இடம் மாறி, வேறிடத்துக்குச் செல்லும் பயணத்தை நாட் கணக்கில் காத்திருந்து படம்பிடித்து தொலைக்காட்சியில் காட்டியதைக் கண்டு வியந்துள்ளோம். ஆப்பிரிக்கக் காடுகளில் வரிக்குதிரைகள், மான்கள், யானைகள் கூட்டங்கூட்டமாக இப்படி பயணிப்பதையும் தென்னமெரிக்காவில் மேகக் கூட்டம் போல மன்னர் பட்டாம்பூச்சிகள் (Monarch Butterfly) பறந்து செல்வதையும் ஆப்பிரிக்க வயல்வெளிகளில் வெட்டுக்கிளிகள் பெரும்படையாக பறந்து வந்து அழிப்பதையும் அறிந்திருப்போம்.

இதெல்லாமே உலகின் வேறு பகுதிகளில் நடப்பவை. ஆனால் நாம் வாழும் பகுதிகளிலும் வண்ணத்துப்பூச்சிகள் இடம்பெயர்ந்து பறந்து வருவதை ஆச்சரியமாகப் பார்த்திருக்கிறேன். இந்த ஆர்வம் வளர்ந்து பல்வேறு வண்ணத்துப்பூச்சி வகைகள் ஒவ்வொரு பருவகாலத்திலும் கூட்டங்கூட்டமாகப் பறந்து செல்வதை கூர்ந்து கவனித்து பதிவு செய்யத் தொடங்கினேன். மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரிலிருந்து செல்லும் இவை, மைசூரைக் கடந்து செல்லும். ஒவ்வோர் ஆண்டும் குறிப்பிட்ட காலத்தில் இது நிகழ்வதைக் கண்டேன். ஆண்டுக்கு இரண்டு முறை அவை இப்படி இடம்பெயர்கின்றன.

வண்ணத்துப்பூச்சிகளின் இடப்பெய்வு பற்றி ஆராய்ச்சி செய்த அறிஞர்கள் (Lepidopterists), அவற்றை மூன்று வகைகளாகப் பிரித்துள்ளனர். 1. குறுகிய தூரம் பயணிப்பவை. இவை தங்கள் வாழிடத்தின் ஒரு பகுதியில் இருந்து அருகிலுள்ள மற்றொரு பகுதிக்கு செல்கின்றன. 2. நீண்ட தொலைவு பயணிப்பவை 3. குறிப்பிட்ட இலக்கின்றி பறந்து சிதறுபவை. இந்த மூன்று வகை இடப்பெயர்ச்சியையும் தென்னிந்தியாவில் நான் பார்த்திருக்கிறேன்.

Oak leaf, Albatross வண்ணத்துப்பூச்சிகள் குறைந்த தொலைவே பயணிக்கின்றன. இவை மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் காணப்படுகின்றன. Painted Lady Butterflies வகையை இந்தியாவில் எல்லா இடங்களிலும் பார்க்கலாம்.

இவை சிதறிப் பயணிக்கும் தன்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. Danaide வண்ணத்துப்பூச்சியை மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் பார்க்கலாம். ஆச்சரியமளிக்கும் வகையில் இவை 500 கிலோ மீட்டருக்கும் அதிகமான தொலைவு பயணிக்கின்றன.

நானும் எனது நண்பர்களும் கடந்த ஐந்து ஆண்டுகளாக மைசூர் பகுதியில் வண்ணத்துப்பூச்சிகளின் பயணம் பற்றி கவனித்து வருகிறோம். முதலில் அவை எங்கிருந்து வருகின்றன, எங்கு செல்கின்றன என்று புரியாமல் குழம்பினோம். பின் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு காலத்திலும் எத்தகைய வண்ணத்துப்பூச்சிகள் வருகின்றன என்பதைப் பதிவு செய்யத் தொடங்கினோம். குறிப்பிட்ட வகைப் வண்ணத்துப்பூச்சிகள் குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட வழியில் மட்டுமே பயணிக்கின்றன என்பதை கண்டுபிடித்தோம்.

மார்ச், ஏப்ரல் மாதங்களில் தென் மேற்கிலிருந்து வடகிழக்காக மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடருக்குக் கீழிருக்கும் சமவெளிகளை நோக்கியும், பின் மேல்நோக்கி கிழக்குத் தொடர்ச்சி மலை நோக்கியும் அவை பறக்கின்றன. சில இனங்கள் மலைகளைக் கடந்து கிழக்குக் கடற்கரை வரையிலும்கூட பறந்து செல்கின்றன.

மூன்று வகையான இடப்பெயர்ச்சிகளையும் ஒரே காலத்தில் நான் கண்டதுண்டு. கருநீல புலி வண்ணத்துப்பூச்சி ((Tirumala Sepantrionis), இரட்டை வரி காக்கை வண்ணத்துப்பூச்சி (Euploea Sylvester), இந்திய காக்கை வண்ணத்துப்பூச்சி (Euploea Core) ஆகிய மூன்று வகைகளில் முதல் வகை வரிகளுடனும் பின் இரண்டு வகைகளும் கருமையான நிறத்திலும் இருக்கும். புலி வண்ணத்துப்பூச்சி (Danaus Chrysippus), வரிப்புலி வண்ணத்துப்பூச்சி ஆகியவை கருப்பும் ஆரஞ்சு வண்ணமும் கொண்டவை. இவை தவிர வேறு வண்ணத்துப்பூச்சி வகைகளும் மைசூர் வழியாக இடம்பெயர்ந்து செல்வதைப் பதிவு செய்துள்ளேன். எலுமிச்சை பேன்சி (Junonia Lemonias), நீலப் புலி வண்ணத்துப்பூச்சி (Tirumala Liminiace), புலி வண்ணத்துப்பூச்சி, இடம்பெயரும் வண்ணத்துப்பூச்சி (Catopsillia Domond) ஆகிய வகைகள் மைசூரைக் கடந்து செல்வதைக் கண்டுள்ளேன்.

வண்ணத்துப்பூச்சிகள் ஏன் இத்தகைய நீண்ட, சிரமமான பயணத்தை மேற்கொள்கின்றன? அதற்கான அவசியம் என்ன? பல காரணங்கள் இருந்தாலும், இனப்பெருக்கத்திற்கு ஏற்ற இடத்தையும் நல்ல பருவநிலையையும் தேடிச் செல்வதே முதன்மையான காரணம். மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் கடுமையான அடை மழை, இவற்றின் இனப்பெருக்கத்துக்கு தடையாக இருப்பதால், மழை குறைவான கிழக்குத் தொடர்ச்சி மலையின் சமவெளிப் பகுதியைத் தேடிச் அவை செல்கின்றன. பனிக்காலம் வந்தபின் அங்கு அவை தொடர்ந்து வாழ முடியாது. எனவே, சமவெளிக் காடுகளை விட்டு அடர்ந்த மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் காடுகளை நோக்கி பயணிக்கத் தொடங்குகின்றன. கோடை காலத்தில் உயரம் குறைவான காடுகளில் வெப்பம் அதிகமாகும், உணவு தரும் செடிகளும் மலர்களும் காய்ந்து போகும். எனவே உயரம் அதிகமுள்ள, அடர்ந்த பசுமைக் காடுகளை நோக்கி அவை பயணிக்கின்றன. Danaidae வகைப் வண்ணத்துப்பூச்சிகள் இடம்பெயராமல் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் அடர்ந்த காடுகளில் தொடர்ந்து வாழத் தொடங்குகின்றன.

வண்ணத்துப்பூச்சிகள் கூட்டங்கூட்டமாக இடம்பெயர்ந்து செல்வதை கோயம்புத்தூர், உதகமண்டலம், முதுமலை, வால்பாறை, டாப் சிலிப், ஆனைமலை, மேல் பவானி, கொடைக்கானல், திண்டுக்கல், சென்னை, வேலூர், ஜவாதி மலை, தருமபுரி, சேலம், பெங்களூரு, தும்கூர், மாண்டியா, மைசூர், சாம்ராஜ் நகர், விராஜ்பேட், மடிகரா, பாலக்காடு, கண்ணூர், வயநாடு, சின்னாறு, திருப்பதி, வெங்கடேஸ்வரா சரணாலயம், ஹோர்ஸ்லே மலை, நந்தி மலை, பன்னர்கடா, மேலுக்கோட்டா, பந்திபூர், நாகரஹோளே, பிர்மகிரி ஆகிய பகுதிகளில் வண்ணத்துப்பூச்சிகள் கூட்டங்கூட்டமாகப் பறந்து செல்வதை பார்க்க முடியும்.

வண்ணத்துப்பூச்சிகளின் இடப்பெயர்ச்சி பற்றிய அரிச்சுவடிப் பாடங்களை இயற்கை ஆர்வலர்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். வண்ணத்துப்பூச்சிகள் நூற்றுக்கணக்கில் அல்லது ஆயிரக்கணக்கில் தென்மேற்கிலிருந்து வடகிழக்கு நோக்கி மார்ச்-, ஏப்ரல் மாதங்களிலும், வடகிழக்கிலிருந்து தென்மேற்கு நோக்கி செப்டம்பர்-, அக்டோபரிலும் இடம்பெயர்ந்து செல்வதைக் காணலாம். ஓர் இடத்தில் மணிக்கணக்காக ஆயிரம் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் வண்ண மேகக் கூட்டம் போல நகர்வது கண்கொள்ளாக் காட்சி. வெய்யில் வேளையில் இக்காட்சி இன்னும் சிறப்பாகத் தெரியும். லேசான மேகமூட்டத்துடன் வெள்ளிக் கோடிட்ட வான்வெளியில் கருநீல மேகக் கூட்டமாக அவை பறக்கும்.

இந்த வண்ணத்துப்பூச்சிக் கூட்டம் பள்ளிச் சிறுமிகள் போலக் காலை ஒன்பது மணியளவில் புறப்பட்டு பறந்து, மாலை 4 மணி அளவில் ஓய்ந்து அடங்கிவிடும். பருவநிலைதான் இதை நிர்ணயிக்கிறது. பட்டாம்பூச்சிகள் இவ்வாறு பறக்கும்போதே 4, 5 நாட்கள் ஓரிடத்தில் ஓய்வெடுக்கும். மழைக் காலமென்றால் நீண்ட நாட்கள் தங்கி விடுவதும் உண்டு. 300-500 கிலோ மீட்டர் தொலைவைக் கடக்க இவை இரண்டு மாதங்கள் எடுத்துக் கொள்ளக் கூடும். 2005 ஏப்ரல் முதல் ஜீலை வரை அதிகமாக மழை பெய்ததால், பெங்களூரு மாநகரிலேயே ஒரு வண்ணத்துப்பூச்சிக் கூட்டம் தங்கி, பல முறை போக்குவரத்தையே ஸ்தம்பித்து நிற்க வைத்ததைப் பார்த்தேன்.

இடம்பெயரும் அழகு தவிர களிமண் குழைப்பது, குவிப்பது, பாலுறவு கொள்வது, இனப்பெருக்கம் செய்வது என நாம் கண்டு ரசிக்க ஏராளமான வித்தைகளை அவை செய்து காட்டும். கண்டு ரசிக்கப் பொறுமையும் நேரமும் ஒதுக்கினால் போதும். களிமண் குழைப்பதை ஆண் பட்டாம்பூச்சிகளே பெரும்பாலும் செய்யும். ஆனால் புலிக் கூட்டம், காக்கைக் கூட்டம், ஆண்-பெண் இரண்டும் கூடி வேலையைப் பகிர்ந்து இதில் ஈடுபடுவது உண்டு. இந்த காலகட்டத்தில் அவை மண்ணில் உள்ள உப்பு, தாதுப் பொருட்களையும் சத்துணவையும் உறிஞ்சிப் பெறுகின்றன.

புலிக் கூட்டமும் காக்கைக் கூட்டமும் இடம்பெயர்ந்து பறக்கும் நேரங்களில் இன்பமாகக் கூடி மகிழும் தன்மை கொண்டவை. ஆண் பட்டாம்பூச்சி பெண்ணையும் சுமந்தபடி மகிழ்ந்து பறக்கும். ஒரு ஆணுக்கு மூன்று பெண் பட்டாம்பூச்சிகள் கூடிக்குலாவக் காத்திருக்கின்றன. ஆனால் காக்கைக் கூட்டத்தில் ஆண், பெண் இனங்களை  பிரித்தறிவது சற்று கடினம்தான்.

இவற்றின் பாலுணர்வைத் தூண்டவும் புணர்ச்சியை வளர்க்கவும், பாலுணர்வு சுரப்பிகளைத் தூண்டும் ஆல்கலாஸ்ட் பொருள் தாவர மலர்களின் தேனில் உள்ளது. Crotalari, Heliotropium வகைகளின் இனப்பெருக்கம் பிப்ரவரி, மார்ச், ஆகஸ்ட் மாதங்களில் நிகழ்கிறது. இவை பால் சுரக்கும் தன்மை கொண்ட தாவரங்களின் கிளைகளிலும், இலையின் அடியிலும் (Tylophora Indica, Watakaka Volubilis வகைகள்) கொத்துக் கொத்தாக வெள்ளையாக முட்டையை படியச் செய்கின்றன.

நாம் முன்னர் சொன்ன நான்கு இனப் வண்ணத்துப்பூச்சிகளும் ஒன்றாகவே இடம்பெயர்வதாக நினைத்தோம். ஆனால் பின்னர்தான் மூன்று வகைகள் மட்டும் ஒன்றாக இடம்பெயர, நீலப் புலி வண்ணத்துப்பூச்சி அவ்வப்போது பிரிந்தும் கூடியும் பறக்கின்றன. இந்திய காக்கை வகைப் வண்ணத்துப்பூச்சிகள் இடப்பெயர்ச்சி காலத்தில் சமவெளிகளில் பங்கேற்கவில்லை என்பதை பின்னர் அறிந்தோம்.

வண்ணத்துப்பூச்சிகளை பின்தொடர்ந்து செல்வதில் இயற்கை ஆர்வலர்கள் ஆர்வம் காட்டினால் பல அரிய தகவல்கள் கிடைக்கும். சில நிமிடங்களே தென்படும் அந்த அழகிய அணிவகுப்பைக் காண நாம் காத்திருக்க வேண்டும். லட்சக்கணக்கான வண்ணத்துப்பூச்சிகளின் அழகு அணிவகுப்பு, ஒவ்வோர் ஆண்டும் நடக்கத்தான் செய்கிறது. வலிமையற்ற அந்த மெல்லிய வண்ணத்துப்பூச்சிகளின் நீண்ட நெடும் பயணம் அணுவின் வலிமையை நினைவூட்டுகிறது. பறப்பதற்கான ஆற்றலை அவை எங்கிருந்து பெறுகின்றன. எப்படி அதை தன் உடலில் சேமித்து வைத்துக் கொள்கின்றன? லட்சக்கணக்கான மலர்களின் தேனை உண்ணும் வண்ணத்துப்பூச்சிகள் தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கும், இனப்பெருக்கத்துக்கும் செய்யும் ஒப்பற்ற சேவை கண்ணுக்குத் தெரியாத மகத்தான சேவை.

உணவுச் சங்கிலி அறுபடாமல், இயற்கையின் பயணம் தொடர வண்ணத்துப்பூச்சிகளின் பங்களிப்பு ஒப்பற்றது. எண்ணற்ற பறவைகள், சிலந்திகள், மீன் இனங்கள், சிறு பூச்சிகளின் பசி தீர தன்னை உணவாகத் தருகின்றன. இடம்பெயரும் வண்ணத்துப்பூச்சிகள், மண்ணைக் குழைத்து இனப்பெருக்கம் செய்ய முயற்சிக்கும்போது, நீரில் வாழும் மீன்களுக்கும் தவளைகளுக்கும் உணவாகின்றன. வானத்துப் பறவைகள் “விதைக்காமல், அறுக்காமல்” உண்ணக் கிடைப்பது இந்த வண்ணத்துப்பூச்சிகளே.

லட்சக்கணக்கான ஆண்டுகளாக இயற்கையின் அத்தனை சீற்றங்களையும் தாக்குதல்களையும் தாங்கி வாழ்ந்து வரும் வண்ணத்துப்பூச்சிகளுக்கு நவீன உலகமும் நாகரிக வேதி மனிதனும் சாவு மணியடிக்கின்றன. இயற்கையை அழித்து, வேதி நஞ்சைத் தூவி, உலகையே அழித்து வருகிறான் மனிதன். நாற்கரச் சாலைகளிலும் பறந்து செல்லும் வாகனங்களிலும் அடிபட்டு நசுங்கிச் சாகும் வண்ணத்துப் பூச்சிகளுக்காக கண்ணீர் விட யார் இருக்கிறார்கள்? யானைகளுக்கும் புலிகளுக்கும் சிறப்புப் பூங்காக்கள் அமைக்க நினைப்பவர்கள்கூட வண்ணத்துப்பூச்சிகளைப் பற்றி அதிகம் சிந்திக்கவில்லை.

வண்ணத்துப்பூச்சிகளைக் காப்பது என்பது வண்ணத்துப்பூச்சிகளுக்காக மட்டும் அல்ல. மலர்கள் கனிகளாகவும், பறவைகள் பூச்சிகள் வாழவும், நமது உணவை சுவையாக்கும் தேனுக்காகவும், இயற்கையின் வளமான எதிர்காலத்துக்காக மனிதகுலத்தின் எதிர்காலத்துக்காக வண்ணத்துப்பூச்சிகள் மீது நாம் அக்கறை செலுத்தியாக வேண்டும்.

வண்ணத்துப்பூச்சிகளின் அணிவகுப்பு பாதையை ராஜபாட்டையென பாதுகாப்போம். வேதி நஞ்சு விவசாயத்தை விட்டு இயற்கை வேளாண்மைக்கு மாறினால் வண்ணத்துப்பூச்சிகள் வாழும். நாம் வளர்க்கும் ஒவ்வொரு மரமும், மலரும், ஒவ்வொரு பூவும் வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்வின் ஆதாரமாகும். மனிதர்களையே மதிக்காமல் பறக்கும் அதிவேக வாகனங்கள் வண்ணத்துப்பூச்சிகளுக்கு கருணை காட்டி மெல்லக் கடக்கட்டும் என்று வலியுறுத்துவோம்.

நிறைய வண்ணத்துப்பூச்சிகளை எங்கு கண்டாலும் அவை எப்போது வந்தன, என்ன வகையென்று குறித்து வையுங்கள். அடுத்த ஆண்டும் அவற்றைக் காண நேர்ந்தால், உலகம் சுகமாக உள்ளதென மகிழுங்கள். கால் மணி நேரத்தில் 25 கிலோ மீட்டரில் எத்தனை வண்ணத்துப்பூச்சிகளைக் காண்கிறீர்கள் என்பது அவற்றை கணக்கெடுக்கும் முறை. நம் வாழ்விடத்தைச் சுற்றி வண்ணத்துப்பூச்சிகள் பாதுகாப்பாக பறந்து கடக்க ஏதாவது செய்ய முயற்சிப்போம். டோக்கியோவில் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தால் டெட்ராய்ட் நகரம் குலுங்குமாம், கேயாஸ் தியரி சொல்கிறது. சிறியது என்பது அழகு மட்டுமல்ல, வலுவானதும்கூட. வண்ணத்துப்பூச்சிகள் பாதுகாப்பாக பறக்கட்டும்.

- கே.ஆர். கிஷன் தாஸ்

தமிழில் டாக்டர் வெ. ஜீவானந்தம்

Pin It