ஆதிகாலம் தொடங்கி இன்றுவரை தன் பெரும்பாலான தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள மனித இனம் மரங்களையே நம்பியிருக்கிறது. தொடக்கத்தில் ஓடும் விலங்குகளை வேட்டையாட சிரமப்பட்ட மனித இனம், எந்த எதிர்ப்பையும் வெளிப்படுத்தாத மரத்திலிருந்து தன் உணவு, உடை, உறையுளை பெறமுடிந்தது. இயற்கை நிகழ்வுகளான இடி, மின்னல், மழை, நெருப்பு போன்றவற்றை பயத்தின் காரணமாக வழிபட்ட அவர்கள், அவற்றிலிருந்து தப்பிக்க மரத்தையே நாடினர். இந்த நன்றியுணர்வே பின் நாளில் மரத்தை வழிபட அவர்களைத் தூண்டியது.
மனித இனத்திற்கு சிந்தனையாற்றல் வளர்ந்தபின் மரத்திலே தெய்வம் வாழ்வதாய் எண்ணி வழிபாடு செய்தனர். பின்னர் மரத்தையே தெய்வமாக்கி வழிபட்டனர். உலகம் முழுவதும் “மர வழிபாடு” இருந்ததற்கு தொல்லியல் சான்றுகள் உள்ளன. பண்டைய பாரசீகம், எகிப்தில் பேரீச்சை மரங்களும், ஐரோப்பாவில் ஓக், ஆலிவ் மரங்களும், ஆப்பிரிக்காவில் பவோபாப் மரங்களும் வழிபடப்பட்டன.
பண்டைய தமிழகத்தின் மர வழிபாட்டை சங்க இலக்கியங்கள் அழகாய் பதிவு செய்துள்ளன. எம்மூர் வாயில் ஒண்டுறைத் தடைஇய கடவுள் முதுமரத்து... நற்றிணை 83, 1, 2
ஊர் பொது மன்றத்தில் இருக்கும் மரத்தில் வாழும் தெய்வம் தீயவரை அழிக்கும் என மக்கள் நம்பினர்.
மன்ற மராஅத்த பே எமூதிர் கடவுள்கொடி யோர்த் தெறூஉ மென்ப
குறுந்தொகை 87, 1-2
ஏதோ ஓரு காலகட்டத்தில் மரம், செடி, கொடிகளால் பெரு நன்மையடைந்த இனக் குழுக்கள் பின்னாளில் அந்த தாவரத்தையே தம் குலக்குறியாக்கிக் கொண்டன. பின்னர் அரசுகள் அமைக்கப்பட்ட போதும் இம்முறை தொடர்ந்தது, அரசுக்குரிய மரங்கள் பாதுகாப்புடன் பராமரிக்கப்பட்டன. இதனாலும், இம்மரங்கள் எதிரிகளிடம் இருந்து இந்த அரசுகளுக்கு பாதுகாப்பு கொடுப்பாதாக நம்பியதாலும் இவை கடிமரம் (காவல் மரம்) எனப்பட்டன. தமிழகத்தில் சேரனுக்கு பனை, சோழனுக்கு ஆத்தி (ஆர்), பாண்டியனுக்கு வேம்பு கடிமரங்களாய் இருந்தன.
மர வழிபாட்டில் நிலை பெற்ற தமிழினம் பின்னாளில் போரிலும், ஆநிரை கவர்தலை தடுக்கும் போதும், கால்நடைகளை கொல்ல வந்த புலியுடன் போரிட்டு வீரமரணம் எய்தும் வீரர்கள் நினைவாக ஊர் பொது இடங்களில் மரங்களின் கீழ் நடுகற்கள் வைத்தனர். இறந்துபட்ட முன்னோர் வழிபாட்டுக்குரியவர் ஆயினர். இவர்களுக்கு வழிபாடு தொடர்ந்த போது, மரங்களும் வழிபடு பொருளாயின. இவ்வழிபாடு படிநிலை மலர்ச்சியடைந்து கோவில்களாக உருமாறியது. அப்போது நடுகற்கள் தெய்வங்களாகவும், இதற்கு இயற்கை அரணாய் இருந்த மரங்கள் தலமரங்களாகவும் உருப்பெற்றன. இதுவரை சிறப்பிடம் பெற்றிருந்த அரசனை விடவும் உயர்ந்தவன் இறைவன் எனும் நிலை உருவானது.
மன்னர் அரண்மனைகள் கோயில்களாக மாறின. கோயில் எனும் சொல்லே ‘கோ+இல்’ என்ற அரசன் வாழிடம் எனும் பொருள்படும். மன்னர் மரபுகள் முழுவதும் இறைவனுக்கு பின்பற்றப்பட்டன. இறைவன் முதலில் தலமரத்தின் கீழேதான் அறியப்பட்டதாக கோயில் தலபுராணங்கள் கூறுகின்றன. சங்க இலக்கியங்களுக்கு பின்வந்த பக்தி இலக்கியங்களான தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்யப் பிரபந்தம் போன்றவை தலமரத்தின் பெருமைகளை பல பதிகங்களில் குறிப்பிடுகின்றன.
கி.பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் தனது திருமுறைகளில் இயற்கை வருணனையுடன் தலமரத்தைப் பற்றியும் அதிகம் குறிப்பிடுகிறார். சென்னை, மயிலாப்பூர் பற்றி கூறுகையில்
மட்டிட்ட புன்னயங்கானன் மடமயிலை 1384, 1.1 என்றும், நாகை மாவட்டம் திருமருகல் பற்றி கூறுகையில் வாழை காய்க்கும் வளர் மருகனாட்டு மருகலே 1528, 1,4 என்றும், மகேந்திரப்பள்ளி பற்றிய வருணனையில் கண்டலும் கைதையுங் கமலமார் வாவியும் வண்டுலாம் பொழிலணி மயேந்திரப்பள்ளி 46, 2,2-3 என்றும் கூறுகிறார். திருப்பெருந்துறையில் குரு இருந்த மரம் குருந்தை மரம் எனவும், மாணிக்கவாசகர் குருந்தை மரத்தடியிலே இறைவனிடம் ஞான உபதேசம் பெற்றார் எனவும் தன் வாக்கிலே கூறுவது நோக்கத்தக்கது. செழுமலர்க் குருந்தமே வியசீர் ஆதியே 459...466 திருவெற்றியூரில் சங்கிலியரை சுந்தரர் மணம் செய்வதற்கு முன், உன்னை விட்டுப் பிரியேன் என சபதம் செய்து கொடுக்க வரும்பொழுது இறைவன் தலமரத்திற்கு (மகிழம்) மாறுவதும், பின்பு அந்த மரத்தடியில் சுந்தரரிடம் சங்கிலியர் சத்தியம் வாங்குவதும், இறைவன் தலமரத்தில் உறைவதாக சைவம் மீண்டும் உரைக்கிறது.
மரவழிபாட்டில் நம்பிக்கைகள், சடங்குகள்
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பாரம்-பரியம் மிக்க இவ்வழிபாடு இன்றும் மக்கள் நம்பிக்கையாக வாழ்ந்து கொண்டு இருக்கிறது. மரவடிவில் இறைவன் இருப்பதாய் எண்ணி, அதனிடம் தங்கள் வேண்டுதல்களை மக்கள் பலவகைகளில் தெரிவிக்கின்றனர். திருமணமாகாத அல்லது தடைபட்ட இளைஞர்களும், இளம்
பெண்களும் தமது நாள், கோள்களுக்கு ஏற்ற தலமரத்திற்கு மஞ்சள் கொம்பு, கயிறு கட்டி வழிபாடு செய்கின்றனர். திருமணமாகி குழந்தையற்ற தம்பதியினர் தலமரங்களில் சிறு தொட்டில் கட்டி வழிபாடு நடத்துகின்றனர். பொதுவாக எல்லாக் கோயில் தலமரங்களிலும் காணப்படும் வழிபாடு இது.
திருவாரூர் தியாகேசர் கோயில் தலமரம் பூம்பாதிரியின் உலர்ந்து விழுந்த இலைகள், சிறு குச்சிகளை வீட்டின் நுழைவாயிலில் கட்டி வைத்தால் கெட்ட ஆவிகளும், கண்ணேறும் வீட்டில் நுழையாது என்பது சுற்றுவட்ட கிராமங்களில் காணப்படும் பரவலான நம்பிக்கை. இதே பொருட்களை விருத்தாசலம் பழமலைநாதர் கோயில் வன்னி மரத்திலிருந்து எடுத்து, தமது இல்லத்தில் பணப்பெட்டியில் வைத்தால் பணம் பெருகும் என்பதும் உள்ளூர் நம்பிக்கை. சென்னை அருகில் உள்ள திருவேற்காடு வேதபுரிசுவரர் கோயில் தலமரம் வேலாமரத்தில் வணிக துண்டு அட்டைகள் (Business cards) கட்டும் பொழுது வணிகம் பெருகும் எனும் நம்பிக்கை உள்ளது.
மதுரை மாவட்டம், திடியனில் உள்ள கைலசநாதர் கோயில் தலமரம் நெய்கொட்டாவின் அடியில் அமர்ந்து தியானம் செய்யும் பொழுது ஞானம் பிறக்கிறது என்கிறது தலபுராணம். சித்தார்த்தன் போதி மரத்தின் கீழ் அமர்ந்து புத்தர் ஆனது இங்கு நோக்கத்தக்கது.
பலவகை தடைகளும், தோசங்களும், முற்பிறவி பாவங்களும் தலமரத்திற்கு நீர்ஊற்றி வழிபாடு செய்வதன் மூலம் நீங்குகின்றன என்பது சோதிட நம்பிக்கை. உயிருடன் உள்ள மரத்திற்கு செய்யும் வழிபாடு உடனடியாக ஆண்டவனை அடைகிறது என்பதும் நம்பிக்கை. நாக வழிபாடு வளமை வழிபாட்டுடன் தொடர்புடையது, பெரும்பாலான கோயில் தலமரங்களின் அடியில் இச்சிற்பங்கள் அதிகம் உள்ளன. குழந்தையற்ற தம்பதியினர் தலமரங்களில் தொட்டில் கட்டிவிட்டு மரத்தடியில் இச்சிற்பங்களை வைக்கின்றனர். மேலும் பாம்புகள் பல கோயில்களுக்குள் பாதுகாப்பாக உள்ளன. திருவாரூர் மாவட்டம் திருபாம்பாபுரத்தில் உள்ள பாம்பேசுவர் கோயிலில் பாம்புகள் இறைவன் கருவறைக்குள் வருவதும், சட்டை உரிப்பதும் இன்றும் நடந்து வருகிறது.
சுற்றுசூழல் பாதுகாப்பில் தலமரங்கள்
பழம்பெருமை மிக்க இந்த தலமரங்கள் கோயில் வளாகத்தில் பாதுகாப்புடன் உள்ளதால் நிலைத்து வாழ்கின்றன. இதன் பயனாய் பல பூச்சி, பறவை, விலங்கு இனங்களுக்கு உணவும், உறையுளும் கொடுத்து அவை காத்துவருகின்றன. பலவகைப் பறவைகள் தலமரங்களில் உள்ள கனிகளை உண்டு, அவற்றிலேயே கூடுகட்டி வாழ்கின்றன. குறிப்பாக காக்கை, அண்டங்காக்கை, மயில் முதலியவை தலமரங்களிலும் மாடப்புறா, மைனா, ஆந்தை கோயில் கோபுரங்களிலும் சிட்டுகுருவி, கிளி கோயில் தூண்களில் உள்ள இடுக்குகளிலும் வாழ்ந்து வருகின்றன. பொதுவாக எல்லோராலும் வெறுக்கப்படும் வெளவாலுக்கு கடைசி புகலிடம் கோயில் என்றால் அது மிகையில்லை. கோயில் பிரகாரங்களில் தொங்கும் இவ்விலங்குகளுக்கு பழங்களும், பூச்சிகளும், இளைப்பாற இடமும் தந்து தலமரங்கள் உதவுகின்றன.
தமிழக கோயில்களில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட மர, செடி, கொடி, புல் வகைகள் தலமரமாக வழிபாடு செய்யப்பட்டு வருகின்றன. கோயில் வளாகத்திற்கு வெளியே அழிந்துவிட்ட பல தாவர இனங்கள் கோயிலுக்குள் பாதுகாப்புடன் இருக்கக் காரணம் தலமர வழிபாடும் இதைச் சார்ந்த நம்பிக்கைகளும்தான். பல கோயில்களில் தலமரங்கள் சிறப்பு பண்புகளைப் பெற்றுள்ளன.
திருப்புல்லாணியில் உள்ள அரசமரத்தின் கிளைகள் வளைந்து தரைத்தொடுவதும், ஆழ்வார்-திருநகரியில் புளியமரத்தின் இலைகள் இரவில் மூடாமல் இருப்பதும், அன்பில் ஆலந்துறையில் ஆலமரத்தில் விழுதுகள் இன்றி இருப்பதும், கொடுமுடியில் உள்ள வன்னிமரத்தின் ஒரு கிளையில் முட்கள் இருப்பதும், வேறு கிளையில் முட்கள் இல்லாமல் இருப்பதும் சில சிறப்பு பண்புகள். இயற்கையில் தோன்றும் பலவகை அற்புதங்களை தன்னகத்தே கொண்ட தலமரங்கள், தமிழக கோயில்களில் பாதுகாப்புடன் ஒன்றிரண்டு எஞ்சியுள்ளன.
இவற்றில் சில இனங்கள் அழியும் நிலையில் உள்ள பாதுகாக்க வேண்டிய தாவரங்களாகும். சில வகை தமிழகத்திலும் அதை ஒட்டிய மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் மட்டுமே காணப்படும் திணைத் தாவரங்களாகும் (Endemic). தமிழக மக்களின் நம்பிக்கைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பலவகைத் தாவர இனங்களை கோயில்களில் பாதுகாத்து வருகின்றன. இதற்குக் காரணம் பண்டைய தமிழனின் விவேகமும், அறிவியல் கலந்த ஆன்மிகக் கண்ணேட்டமும்தான்.