குருவிகள் கூடடையும் மரம்
ஒரு பறவை வந்து சேர பூவொன்று தரும்
ஆற்றங்கரையின் கொருக்குகளில் நீந்தி
அயிரை மீன்கள் விளையாடும்
சூரியன் பார்க்கும் மணல் திட்டுகளில்
கை அளைந்தால் நீர்பெருகி தாகம் தீர்க்கும்
கபடி பழகும் சிறுவனுக்கு
காலில்படும் காயத்துக்கு ஊதிப் புடைத்த
மண் மருந்தாகும்
நீர் பாய்ந்து வேர்களில் வாசம் கற்பிக்க
மறுநாள் மாலை மல்லிகைகள்
ஒப்புவிக்கும் வாசனைப் பாடங்களை
பூவரச மரங்கள் நிறைந்த கரையிலிருந்து
கூடைமுடையும் வேதரத்தினத்தின் குழந்தைகள்
மஞ்சள் பொழுதாய் விழுந்த சருகுகள்
சப்தமெழுப்ப ஒடி பீப்பிகளைச் செய்து ஊத

சிவப்பு வண்ண சிற்றெறும்புகள்
வரிசையாய் வந்து கேட்கும்
கரும்பும் தென்னையும் நிறைந்த நிலங்கள்
நிழல்களெங்கும் இனிப்பைத் தெளிக்க
நீர் நிறைந்த பச்சைக்கிணறுகள்
பால்கிண்ணங்களாய்ச் சுரக்கும்
பாலாற்றின் திருவிழாவில் கூடியிருக்கும்
மக்கள் கூட்டம்
குந்தியிருந்து அர்ஜூனன் கூத்து பார்க்கும்
மணலின் மடியில் துயில் பூண்டு
மறுநாள் காலை விழி திறக்கும்
அன்னை மடியென வாய்த்திருந்த
பாலாற்றை அறுத்தெறிந்து தொழில் வளர்த்தோம்
குடிக்கக்கூட தண்ணீரற்று
இன்று குடிமுழுகிப் போனோம்.

- யாழன் ஆதி

Pin It