tree 350சென்னை, கடற்கரை அருகில் இருக்கும் ஒரு நகரம். அதனால் வெப்பமும், காற்றில் ஈரப்பதமும் அதிகமாக இருக்கும். வெப்பத்தின் உக்கிரத்தன்மை என்பது காற்றின் ஈரப்பதத்தினாலும் அதிகமாக இருக்கிறது. அதிகமாக வேர்க்கும். அதனால் நமது இயல்பு வாழ்க்கை பாதிக்கிறது.

மரங்கள் வெப்பத்தைக் குறைக்கின்றன. மரம் உருவாக்கும் நிழலானது சாலையிலிருந்து வெளிக் கிளம்பும் வெப்பத்தின் தன்மையைக் குறைக்கிறது. மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்கிறது. அடுத்து வாகனப்போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்களிருந்து வெளியாகும் கரி அமில வாயுவைச் சுத்தப்படுத்தும் ஒரே உயிரி மரமே.

மேலும் மற்ற உயிரினங்களான பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள் போன்றவற்றுக்கு மரம் என்பது வீடு. எனவே பல்லுயிரிகளைப் போற்றிப் பாதுகாக்கவும், வளர்க்கவும் மரம் நமக்குத் தேவைப்படுகிறது. மரப்பொந்துகளில் வசிக்கும் ஆந்தையாகட்டும், பச்சைக்கிளியாகட்டும், பழங் களை உண்ணும் பறவைகளாகட்டும் அனைத்துக்கும் மரம் ஒரு வாழிடமாகிறது. மேலும் வருங்காலச் சந்ததியினர் மரங்களைக் காண வேண்டுமானால் நாம் அவர்களை ஊட்டிக்கோ அல்லது மலைப் பகுதிகளுக்கோதான் அழைத்துச் செல்ல வேண்டி யிருக்கிறது. ஆனால் சென்னை போன்ற நகரத்தின் தெருக்களில் மரங்களை வளர்த்தால் அவர்களுக்கு எளிதாக இயற்கைக் கல்வியைப் போதிக்க முடியும்.

அடுத்து மிக முக்கியமான அம்சம் பண்பாடு. மரம் என்பது நமது பண்பாட்டோடு தொடர்புடையது. ஒவ்வொரு மரத்துக்கும் ஒரு வரலாறும் பண்பாடும் உள்ளது.

சென்னைப் பாரம்பரிய மரங்களின் வரலாறு:

சென்னையிலிருக்கும் மரங்களில், நூறிலிருந்து இருநூறு வருடங்களுக்கு முந்தைய மரங்கள் பாரம்பரிய மரங்கள் எனப்படும். ஒரு குறிப்பிட்ட வரலாற்று நிகழ்வோடு தொடர்புடைய அல்லது அரிதான மரங்களும் பாரம்பரிய மரங்கள் என்றே அழைக்கப்படுவதுண்டு.

அவற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மரம் யானைப் புளியமரம். இந்த யானைப்புளியமரங்களை சென்னையில் நட்டவர் கிளகான் என்ற ஆங்கிலேயர். இவர் அன்றைய சென்னை மாகாணத்தின் முதல் வன அலுவலர். அவருடைய காலகட்டத்தில் அவர் எங் கெல்லாம் இருந்தாரோ அங் கெல்லாம் இந்த யானைப் புளிய மரங்களை நட்டு வளர்த்திருக்கிறார். சென்னை மருத்துவக்கல்லூரி, அருங் காட்சியகம், பிரம்மஞான சபை (தியாசபிக்கல் சொசைட்டி) ஆகிய இடங் களில் ஒவ்வொரு மரங்களை நட்டு வளர்த்திருக்கிறார்.

Dr.kaegalon450யானைப்புளிய மரங்கள் அளவில் மிகப் பெரியவை. அதனுடைய அளவும், பிரம் மாண்டமும் பிரமிக்க வைக் கும். வயதைக் கணக்கிட்டால் 200 வருடங்கள் வரை இருக்கும். நம்மிடம் தற்போது எஞ்சியிருக்கும் யானைப் புளிய மரங்கள் இந்த மூன்று மட்டுமே. இந்த மரத்தின் பழம் புளிப்புச் சுவை கொண்டது. ஆப்ரிக்காவில் இந்த மரத்தின் பழத்தை புளியாகவே பயன்படுத்து கின்றனர். இம்மரம் ஆப்ரிக்காவிலிருந்து வந்ததால் யானைப் புளிய மரம் என்று அழைக்கிறோம்.

அது போல இன்னொரு மரம் சென்னையின் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே காணப்படுகிறது. அதன் பெயர் சிறுத்தைத்தோல் மரம். இதன் கிளைகள் தனக்குத்தானே ஒட்டுப் போட்டுக் கொள்ளும் விதமாக அமைந்து உள்ளது. இது ஒரு சுய ஒட்டு கொண்டது.

மற்றொன்று, அனோசைஸ் மரம். இதற்குத் தமிழ்ப் பெயர் இல்லை. சென்னை அருங்காட்சி யகத்திலும், எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை அருகிலும் இந்த மரம் காணப்படுகிறது. இது போல சைதாப்பேட்டை கல்வியியல் கல்லூரி அருகே மிகப்பெரிய வேப்பமரங்கள் உள்ளன. அதில் ஒரு வேப்ப மரத்தின் கீழ்தான் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணன் படித்தார் என்று சொல்லப்படுவதுண்டு.

இதுபோல உள்ள மரங்கள் எல்லாம் எந்நேரமும் வெட்டப்படலாம் என்ற சூழலே காணப்படு கிறது. உதாரணமாக அண்ணாநகர் வளைவின் அருகிலிருந்த சித்த மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான மரங்கள் இருந்தன. அவை வெட்டப்பட்டுவிட்டன.

வெளிநாடுகளில் மரம் வெட்டுவது என்பது தண்டனைக்குரிய குற்றம். ஆனால் நம் நாட்டில் நிலைமையே வேறு. நினைத்தவுடன் மரங்களை வெட்டுவதும் அப்புறப்படுத்துவதும் சாதாரணமாக நடக்கிறது.

மேலும் சென்னையின் பசுமை சதவீதம் இந்தியாவின் மற்ற நகரங்களைக் காட்டிலும் குறைவு தான். ஏறக்குறைய 4.5%&5% வரையே உள்ளதாக கணக் கெடுப்புகள் சொல்கின்றன. ஆனால் முந்தைய காலங்களில் சென்னை என்பது தோப்பு களை அடிப்படையாகக் கொண்ட நகரம். இன்றும் பல பகுதிகள் தோப்பு என்றே அழைக்கப்படுகின்றன. பலாத்தோப்பு, கொண்டித் தோப்பு, புளியந்தோப்பு என்று தோப்புகளின் பெயர்களைக் கொண்ட பகுதிகள் நிறைய உள்ளன.

முன்பு, கூவம் நதிக் கரையோரம் சிந்தாதறிப் பேட்டை, எழும்பூர் போன்ற இடங்களில் நிறைய தோப்புகள் இருந்தன. அவை தற்போது இல்லை. ஆவடி, மாதவபுரம் ஆகிய பகுதிகளைச்சுற்றி நிறைய காடுகள் இருந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன. ஆனால் தற்போது மிகச் சில இடங்களிலேயே பசுமை காணப்படுகிறது. பிரம்மஞானசபை, கிண்டி தேசியபூங்கா, நன்மங்கலம், செம்பியம் ஆகிய இடங்களில் மட்டுமே காடுகள் காணப்படுகின்றன.

தற்போது சென்னையில் தொடர்ச்சியாக தூங்குமூஞ்சி மரங்களே நடப்படுகின்றன. இதற்குப் பதிலாக, உள்ளூர் மரங்களை நடுவது முக்கியம். கிழக்குக் கடற்கரைச் சாலை முழுவதும் ஏராளமான கோவில் காடுகள் இருந்தன. தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும் திட்டுத் திட்டாக நிறைய காடுகள் இருந்தன. நிறைய மரங்கள் இருந்தன. காடுகளில் இருந்த மரங்கள் எல்லாமே கடற்கரைச் சூழலுக்கு ஏற்ற மரங்கள். மேலும் வறட்சியைத் தாங்கி வளரக் கூடியவை.

இது போல சென்னையில் நெடுஞ்சாலைகளின் நடுப்பகுதியிலும் சாலைகள் சந்திக்குமிடத்திலும் புற்கள் வளர்ப்பது அவ்வளவு சரியல்ல. புற்கள் நீரை அதிகம் விரயம் செய்யக்கூடியவை. அதற்குப் பதிலாக நிறைய மரங்களை நமது பண்பாட்டுக்கு உகந்த மரங்களை நடுவது நல்லது. குறிப்பாக, பனை மரங்களை குறிப்பிட்ட இடைவெளிகளில் நடுவது நல்லது. நமது கடற்கரைக்கு அருகில் வளரக்கூடிய மரங்கள் இவை.

எனவே, மரம் என்பது நகரங்களுக்கு அழகு தரக்கூடியது. சென்னையின் அழகு என்பது மாளிகை களிலோ, நியான் விளக்குகளிலோ இல்லை. அது, நல்ல பூ பூக்கக்கூடிய மரங்கள், நிழல் தரும் மரங்கள், ஓங்கி வளரக்கூடிய மரங்களிலேயே இருக்கிறது.

தொகுப்பு: தயாளன்

நன்றி: ரௌத்ரம் பழகு, புதிய தலைமுறை

Pin It